மற்றவர்களை மன்னியுங்கள் உங்களுக்காக!

– சிநேகலதா

தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம். ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?

உங்கள் மனம் லேசாகிறது:

ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது. உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது. கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:

எதிர்மறை உணர்வுகளிலிருந்து எழுகிற அலைகள் நோய்களை உருவாக்க வல்லவை. தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே ஆவியும் எழுகிறது. ஐஸ்கட்டியும் உருவாகிறது. அதுபோல, உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவே உங்கள் உடலும் மனமும் இருக்கிறது. ஒருவரை மன்னிப்பதால் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. அதனால் உங்கள் ஆரோக்கியமும் முகப்பொலிவும் கூடுகிறது.

மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள்:

மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை. முள்ளம்பன்றியின் முட்கள்போல் அவை சிலிர்த்தெழுந்து வறட்டுப் பிடிவாதத்தின் நுனிகளை நீட்டுபவை. உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள்.

நீண்டகாலத் துன்பம் முடிவடைகிறது:

ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்? அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.

உங்களையே எத்தனை நாள் தண்டிப்பது? :

ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை. திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம். அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.

எப்படி மன்னிப்பது? :

சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம். சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.

மற்றவர்களை மன்னியுங்கள்….. மற்றவர்களுக்காக அல்ல! உங்களுக்காக!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *