அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா

மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள்.

கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டியபோது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்!

கையாளச் சிரமமான காரியம் என்று கம்ப்யூட்டர் குறித்த கருதுகோளை உடைத்தது கூட, ஆப்பிள் செய்த அரிய சாதனைதான். வெற்றியின் உச்சத்தில் இருந்த ‘ஆப்பிள்’ விழுந்த கதைகூட, வெல்ல நினைப்பவர்களும் சொல்லும் பாடம்தான்.

ஆப்பிள் என்கிற அதிசயக் கனவு மலர அடித்தளமாய் விழுந்த விதைகளும், பிறகு வளர்ந்த நிலைகளும், வளர்ந்த நிலையில் எழுந்த விரிசல் களும், ஒரு நாடகத்தின் சுவாரஸ்யத்தோடு நடந்தேறின.

சான்பிரான்ஸிகோவிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சிலிகான் பள்ளத்தாக்கின் சிறிய நகரமொன்றில், தன் பட்டப்படிப்பை முடித்தபிறகு 1975-இல் என்ன செய்வதென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்தியாவில் கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அட்டாரியில், வீடியோ கேம் புரோகிராமராகப் பகுதி நேரப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

கம்ப்யூட்டரை ஒரு பயனுள்ள பொழுது போக்காகக் கருதிக் கொண்டிருந்த இளைஞர்கள் இணைந்து ‘ஹோம்ப் ரூ கம்ப்யூட்டர் கிளப்’ என்கிற பெயரில் ஒரு சங்கம் வைத்திருந்தார்க்ள். அதில் சங்கமித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஒரு கம்ப்யூட்டரை தானே உருவாக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஸ்டீவ் வோஸானியா என்கிற இளைஞரின் துணை மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி இருந்த வோஸானியா, கம்ப்யூட்டர் உருவாக்குவதில் கெட்டிக்காரராய் இருந்தார்.

இரண்டு கைகளும் இணைந்தன. ஸ்டீவ் ஜாப் தன் வோஸ்க்ஸ் வேகன் காரை விற்றார். வோஸானியா என்கிற வோஸ், தனது கால்குலேட்டரை விற்றார்.

கலிபோர்னியாவில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார்ஷெட்டில் இவர்களின் கம்ப்யூட்டர் பயணம் ஆரம்ப மானது. வோஸ் வடிவமைத்த ஐம்பது சர்க்யூட் போர்டுகளை விற்கத் தொடங்கினார்கள். ஒவ்வொன்றும் 500 டாலர்களுக்கு விலை போயிற்று.

பீட்டில்ஸ் இசைக் குழுவின் ரசிகராகிய ஸ்டீவ் ஜாப்ஸ், அவர்களின் ‘ஆப்பிள்’ இசைத் தொகுப்பின் நினைவாக, தன் நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயர் வைத்தார். 1976 ஏப்ரல் 6-இல் ‘ஆப்பிள்’ உதயமானது.

அப்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 21. வோஸ் வயதோ 26, வணிகத்தில் நல்ல அனுபவமுள்ள மூன்றாவது பங்கு தாரரை உள்ளே கொண்டுவர முடிவு செய்தார்கள். அப்போது அறிமுகமானவர்தான் மைக் மார்க்குலா.

இன்டெல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவை கவனித்துக்கொண்டிருந்தார் மார்க்குலா. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தார். அதன்மூலம் இலட்சக்கணக்கான டாலர்களுக்கு அதிபதியாகி விட்ட மார்க்குலாவிற்கு அப்போது வயது 33.

மார்க்குலா ஒரு நல்ல வணிகத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அமெரிக்க வங்கியிடம் கடனுதவி பெற்றுத் தந்ததோடு தானே 91,000 டாலர்களை முதலீடு செய்தார்.

வசீகரமான தோற்றத்தில் எளிய செயல் பாட்டு அம்சங்களுடன் வோஸ் வடிவமைத்த ஆப்பிள் ஐஐ பெரும் வெற்றி பெற்றது. 1980-க்குள் நான்கே ஆண்டுகளில் நிகரற்ற வளர்ச்சியைக் கண்டது ஆப்பிள்.

ஜாப்ஸின் கம்ப்யூட்டர் கனவுகளில் மேகின்டாஷ் முக்கியமானது. நவீன அம்சங்களும், விளையாட்டுத்தனமான வெளிப்பாடுகளும் கொண்ட மேக், கம்ப்யூட்டர் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தீர்மானத்தோடு உருவாகிக் கொண்டிருந்தது. மேக் உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் ஐஐ குழுவினரைத் தாழ்த்தும் விதமாக ஜாப்ஸ் செயல்பட்டு வந்தது பலரின் மனங்களையும் புண்படுத்தியது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வசீகர காந்தமாய் விளங்கியவர். தொழில்நுட்பத் தேர்ச்சி இல்லாதபோதும்கூட எல்லோரையும் ஈர்க்கும சக்தி இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால், தன் அலுவலர்களை சரிவர நடத்தத் தெரியவில்லை அவருக்கு. ஓர் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொல்வது பிடிக்காவிட்டல் மேசையின் மேல் தன் காலைத் தூக்கி வைத்து, அவர் முகத்துக்கு நேரே நீட்டுவார் ஜாப்ஸ்.

மேகின்டோஷ் உருவாகும் முன்னரே, ஆப்பிள் ஐஐ குழுவினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு நிர்வாகியை நியமிக்க முடிவு செய்தனர். மைக்ஸ் காட் என்பவரை நியமித்த மார்க்குலா இரண்டே ஆண்டுகளில் அவரைப் பணியை விட்டு நீக்கினார்.

பிறகு வந்தவர்தான் ஜான் ஸ்கல்லி, பெப்ஸி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக விளங்கியவர். ஜான் ஸ்கல்லி மீது ஜாப்ஸ் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஆப்பிள் வளர்ச்சியின் அசுர அத்தியாயங் களை உருவாக்கினார்கள்.

1984இல், மேகின்டோஷ் அறிமுகத்திற்காக அவர்கள் செய்த அதிரடி விளம்பரம் அமெரிக்காவை உலுக்கியது.

மேகின்டோஷ் எனப்படும் மேக், நவீன அம்சங்களை நிறையக் கொண்டிருந்தது. ஆனால் நவீன அம்சங்களே அதன் செயல்திறனுக்கு முட்டுக்கட்டை போட்டன.

இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாப்ஸ் அனாவசியத் தலையீடுகளை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. ஜாப்ஸின் அதிகாரங்களைப் பறிக்க ஸ்கல்லி முடிவு செய்தார். விரிசல் வலுத்தது.

1985இல் மே மாதம் 24ம் தேதி நடந்த போர்டு மீட்டிங்கில் தன் இயக்குநர் குழு தன்னை ஆதரிக்க வில்லை என்று அறிந்து கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த கால கட்டத்தில்தான், கம்ப்யூட்டர் துறை, தன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆளுமையும் வசீகரமும் ததும்பி வழிந்த ஸ்டீவ் ஜாப்ஸ், எதிரி நிறுவனம் ஒன்றில் தலையெடுக்கத் தொடங்கியிருந்த ஒரு சாதுவான இளைஞனை அலட்சியமாகப் பார்த்தார்.

விடலைப் பருவத்தில், கனத்த கண்ணாடிகளுடன், நடுவீதியில் சிக்கிய மான் போல் கூச்சமும் விலகல் மனோபாவமும் கொண்டு, அதேநேரம் தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனின் பெயர் – பில்கேட்ஸ்!!

அவரை வெகு துச்சமாக மதித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்போது ஆப்பிளின் வருடாந்திர விற்று வரவு 1.5 பில்லியன் டாலர்கள். மைக்ரோ சாஃப்ட்டுக்கோ வெறும் 98 மில்லியன் டாலர்கள்தான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய பிறகு ஜான் ஸ்கல்லி, நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார். தளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை “மளமள”வென்று வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார் அவர். ஸ்கல்லி ஒரு தேர்ந்த நிர்வாகி. ஆனால் தொழில்நுட்பப் பின்புலம் கிடையாது.

அதேநேரம், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆளுமைமிக்க தலைவராய் வளர்ந்த பில்கேட்ஸ், ஒரு தொழில்நுட்ப நிபுணராகவும் தலைசிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.

மிக வேகமாக வளர்ந்து வந்த ஆப்பிளின் தலைவர், தொழில்நுட்பப் பின்புலம் இல்லாதவ ராய் இருந்தார். எனவே, தொலைநோக்கோடு எடுத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை மறந்தார்.

இன்டர்நெட் – இதன் தாக்கம் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கவில்லை ஆப்பிள். வோஸானியா எடுத்த சில தொழில்நுட்ப முடிவுகளும் தவறாகிப் போயின. நிறுவனத்தில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.

இம்முறை ஜான் ஸ்கல்லி பலியிடப்பட்டார். 1993-இல் ஜூன் மாதத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பானார் ஸ்கல்லி. அதன்பின் அவர் வெளியேற நேர்ந்தது.
ஸ்கல்லியை நகர்த்திவிட்டுத் தலைமை நாற்காலிக்கு வந்தவர் ஸ்பின்ட்வர். ஒரு காலத்தில் ஸ்கல்லியால் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஸ்பின்ட்வரும் 1996-இல் அகற்றப்பட்டார்.

இன்டர்நெட்டை ஏற்பதில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பின் தங்கியது. இன்டர்நெட் கலாச்சாரத்தை மையப்படுத்தியே மைக்ரோசாப்ட் முன்னணிக்கு வந்திருந்தது.

அமெரிக்க முன்னணி இதழ்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. “ஒவ்வொரு சமூகமும் தத்துவத்தால் வளர்கிறது. தனிமனிதனால் அழிகிறது” என்றார் கவிஞர் வைர முத்து.

தனிமனித மோதல்களாலும் தொலை நோக்கை இழந்ததாலும் வெற்றியின் உச்சத்தி லிருந்து விழுந்தது ஆப்பிள். என்றாலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு கணினி என்னும் வரத்தை வழங்கிய மூலமூர்த்திகளில் முக்கிய மானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2005 ஜுன் 12இல், அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்வு குறித்தும் வந்திருக்கும் நோய் குறித்தும் பகிரங்கமாகப் பேசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

பதினேழு வயதிருக்கும்போது வாசகம் ஒன்றை வாசித்தேன். “இன்றுதான் உன் கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்திடு” என்பதே அந்த வாசகம். வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த வாசகம் எனக்குதவியது.

ஓராண்டுக்கு முன்பு எனக்குப் புற்றுநோய் என்பது உறுதியானது. அதை குணப்படுத்தவே முடியாதென்று மருத்துவர்கள் நினைத்தார்கள்.

மற்றுமொரு சோதனையில் வாழ்க்கை குறிப்பிட்ட காலம்வரைதான். வாழ்கிற நாட்களை வீணே கழிக்காதீர்கள். அடுத்தவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு உள்ளே ஒலிக்கிற குரலை புறக்கணிக்காதீர்கள். “உங்கள் குறிக் கோளுக்கே முதலிடம் கொடுங்கள்” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2011 அக்டோபரில் காற்றில் கலந்த அவரின் இறுதி சுவாசம், பூமிப்பந்தின் போக்கை திசை மாற்றிய அமைதியுடன் நிறைவடைந்திருக்கும் என்பதுதான் நம் பிரார்த்தனையும் நம்பிக்கையும்.

2 Responses

  1. Mohamed Nusry

    Excellent morale. This article would change many paradigms.

  2. S.JAGANNATHAN

    Sir, I want a sample copy of this magazine, so that I can read it & subscribe for it. Kindly give the shop details ( In Chennai ) where it is sold.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *