களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர் – 12

அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள்

இரண்டு ஆண்கள் வந்தார்கள். பேன்ட் சட்டையைப் பார்த்தவுடன் அவர்கள் அடங்கிப் போய்ப் பரக்கப் பரக்கப் பார்த்தார்கள்.

ஐயா, இங்க வாங்க
ஏதோ நீதிமன்ற வழக்குக்கு விசாரணை செய்ய இரகசியக் காவல் சாதாரண உடையில் வந்திருப்பார்கள் போலிருக்கிறது என்று மனத்திற்குள் நினைத்தவர்கள் போல், நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று முகத்தாலே பேசி மெதுவாக வந்தனர்.

‘நாங்க களஞ்சியம்னு ஒரு அமைப்புல இருந்துவர்றோம் இது ஏழை பாழைகளுக்குப் பெரிய உதவி செய்து அவுங்க வளர்ச்சிக்கு ரொம்ப உதவியிருக்கு, அரசாங்கத்துல…
‘ஓட்டுக் கேக்க வாரீகளா? அப்பைக்கு இப்பவே சொல்லி வைக்கணும்னு வாரீகளாக்கும்!
இது அதெல்லாம் இல்லைங்க! நாங்க எந்தக் கட்சிக்கும் ஓட்டுக் கேட்கவும் வரல்ல; எந்த மதத்துலயும் சேருங்கன்னு மதமாற்றம் செய்யவும் வரல்ல…

‘மொத மொதலா வரையில அல்லாரும் இப்டிப் பொத்தம் பொதுவாச் சொல்றாப்லதான் வருவாக. அப்புறமேட்டி, எங்க கோயிலுக்குள்ள செருப்பப் போட்டுக்கிட்டு வரலாம்; வேத்துப் பிரிப்புக் கெடையாது; கடல் தாண்டியுள்ள பணமெல்லாம் வருது; வெள்ளை வேட்டி சட்டை தருவோம், பசங்கள’ நாங்களே படிக்க வைப்போம்டு சொல்லுவாக; அப்புறம் பழைய குருடி கதவைத் தெறடி கதைதான்!குமாரும் பாலனும் வாய்விட்டுச் சிரித்தார்கள். இந்தச் சத்தத்தில ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. இதைத்தான் இவர்கள் எதிர்பார்த்தது!

‘முடிந்த வரை உங்களுக்கு நன்மை செய்ய வந்திருக்கிறோம், உங்கள் ஒத்துழைப்பு மட்டும்தான் தேவை. இப்பொழுது உங்களில் பலர் மூன்று வட்டி, ஐந்து வட்டி, ஏன் பத்து வட்டி கூட கொடுத்துப் பணம் கடன் வாங்கியிருக்கிறீர்கள். வட்டி கட்ட முடியாமல்…
‘ஆமாமா, சாரு சொல்றது நாயம்தேன்
‘கீழே இறங்கிப் பேசுப்பா!’ என்றான் பாலன்
‘ஒங்க வேல சோலிகளுக்கு எடைஞ்ச கிடைஞ்ச இல்லாம நேத்தைக்கு இருந்தத விட இன்னைக்கு வளர்றோம்
.’அது எப்டிப்பா, மந்திரமா மாயமா, அவனவன் பருக்கைய வெரட்டவே பலம் பத்தாமக் கெடக்கான்
‘இப்பய்யா, நம்ம கெராமத்துல, முக்கா வாசி, அண்ணன் தம்பி மாமன் மச்சினன் தான். மத்தவங்க காசுக்கு நாம ஆசைப்படுறது இல்ல!
‘ஆமளு! உள்ள மண்ணே ஒட்டல்ல, ஊரான் காசை ஒதுக்குறமாக்கும்; சொல்லு, சொல்லு; இன்னிக்குப் பொழுதாச்சும் நல்ல பொழுதா விரிஞ்சி மூடட்டும்!
‘ஆளுக்கு, ஒரு ஆளுக்குப் பத்தோ இருபதோ உங்க பேருல பேங்குல கட்டுறது. நம்ம வசதி போல, கூடக்குறைய, ஒரு வருசம் பன்னெண்டு மாசம் ஆன பெறகு இரு நூறு இருநூத்தம்பது ரூபா ஆகும்! அப்டி இருவது பேருக்கு ஐயாயிரம் ரூவா ஆகும்; அதைத் தேவை உள்ள ஆள் எடுத்துப் பேருக்கு ஒரு வட்டியக் கட்டிட்டுக் கடன் வாங்கிக்கிடலாம்! நம்ம பணம்தானே…
‘ஆமா சாரு, மாசாமாசம் எங்களுக்குப் பத்து இருவது மிஞ்சுதாக்கும்; என்னமோ பேங்கு கீங்குன்னு சொன்னீகளே, அழகர் ஆத்துல எறங்கையில பாத்திருக்கோம். எல்லா ஊருலயும் வெளிச்சம்தேன்; எங்கமாரி ஊருகள்ல இருட்டுதேன்!”இருட்டு எப்பயுமே இருட்டாவா இருந்திடும். இதப்பாருங்க! இப்ப மணி எட்டாகுது. நாலு மணி நேரத்துக்கு முன்னாடி இந்த இடத்துல தொட்டுத் தடவுறமாரி கரிக்கட்டை இருட்டால்ல இருந்திருக்கும். இப்ப கண் கூசறவெயிலு போடுதே”பேசுறதெல்லாம் படிச்ச புள்ள நல்லாத்தேன் பேசுற”அதுல்லய்யா, நாலாயிரம் ஐயாயிரம் சம்பாதித்துக் கடன்ல மூழ்கிறவுகளும் இருக்காக; நூறு நூற்றைம்பது சம்பாதித்துச் சேமிச்சு வாழ்கிறவுகளும் இருக்காகளா இல்லையா? சொல்லுங்க”சாரு சொல்லது நாயந்தேன்”மிச்சம் புடிக்கணும், சேமிக்கணும்னு நெனைச்சா பெரிசில்லய்யா. திங்கிறசோத்துல, குடிக்கிற சாராயத்துல, பாக்குற சினிமாவுல, தனியாய்ப் போய் ஓட்டல்ல திங்கிறதுலன்னு எதுல வேணாலும் மிச்சம் புடிக்கலாம்; அம்மா! நான் சொல்றது பொய்யா?
மகமாயி, ‘சாரு மாரு செரியாத்தேன் சொல்லுதீக வேலைக்கிப் போனமா, உள்ள காச வூட்டுல குடுத்தமான்டு இல்லாம, தனித் தீனி திங்கிறதுலயும் புளிச்சக் கள்ளுக் குடிக்கிறதுலயும் சம்பாத்தியத்த உட்டுட்டா? அங்கிட்டுப் பாரு, விடியல்ல நல்லா, அதுக்குள்ள நாலு பேரு வந்து பாய விரிச்சிச் சீட்டுப் போட ஆரம்பிச்சாச்சு; இத்தினி பேரு இங்ஙன நின்னு எதையோ பேசறோமேன்னு எதாவது இருக்கா? விடிய விடிய கௌாவரப் பாரு இசுப்பேத்தப் பாருன்னு, சண்டையும் சச்சரவும்தேன்’ என்று வருந்திப் பேசினாள்.’எல்லோருக்கும் வணக்கம், வருகிற ஞாயிற்றுக்கிழமை பகல் பதினோரு மணிக்கு நாங்க பழையபடியும் வர்றோம்; எல்லாம் உங்க நன்மைக்குத்தான். இப்ப விடை பெறுகிறோம்’ இருவரும் புறப்பட்டனர்.
இரண்டு முறை மூன்று முறை வந்து விட்டார்கள். ஒரு சிலர் கூடக் களஞ்சியத்தில் சேரவில்லை. புல்லுசேரி மாரியம்மன் கோவில் முன் உள்ள மந்தையில் அரச மர மேட்டில் ஒரு சிறு கூட்டம். பழைய காலத்து வரிக்கல்லில் பாலனும் குமாரும் உட்கார்ந்தார்கள். ஊரில் உள்ள பெரும்பாலான ஆணும் பெண்ணும் கூடியிருந்தார்கள்.’களஞ்சியத்தின் நோக்கத்தைப் பற்றி நாங்கள் சில தடவை உங்களிடம் விளக்கியிருக்கிறோம். கடனில் உழல்பவர்களுக்குத்தான் வட்டித் தொல்லையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வெறி இருக்கும். சேமிப்பே இல்லாதவர்களுக்குத்தான் சேமிப்பின் அருமை தெரியும். படிப்பறிவு இல்லாத ஒருவருக்குத்தான் படிப்பின் மேன்மை தெரியும். இவற்றையெல்லாம் ஓரளவு உணர்ந்திருக்கிறீர்கள். நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்வதைவிட உங்களில் ஒருவர் உங்களுக்குச் சொல்வதே சிறப்பாக இருக்கும். ஆகவே அக்காள் சின்னா அவர்கள் உங்களிடம் இவை பற்றிப் பேசுவார்குமார் இப்படிக் கூறியதும் கூட்டம் கைதட்டியது. சின்னாவுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. ‘நாலு ஆம்புளைக மத்தியல எப்டி நாக்கு எடுத்துப் போசுறது?’பேசுங்க, பேசுங்க
வணக்கோம். எனக்கெல்லாம் பேசவராது. தம்பிக சொல்றமாரி, இது நல்லதுதேன், நேத்துத் தின்னது இன்னைக்கி இல்ல; ஆனா நேத்து சேமிச்சது இன்னிக்கு ஒதவும்’. கிடுகிடு என்று ஆடுகிற ஒரு கையைக் கொண்டு இன்னொரு கையைப் பிடித்துக்கொண்டாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்த்துக் கொட்டியது. கூட்டத்தில் பாலன் கையைத் தட்டி விட்டான். கூட்டமே கை தட்டியது; அது ஒரு உத்தி.’நான் படிக்கல; எங்க குடும்பத்துல யாரும் படிக்கல; நம்ம மக்க சனம் படிச்சாத்தேன் ஊரு ஒலகத்துல மதிப்பு. நம்ம ஊருல யாரு படிச்சா? பணம் வேணும். அரசாங்கம் நெறைய ஒதவி செய்யுதாம்; தம்பிக சொல்லுதுக. அந்த ஒதவி வாங்கிப் படிக்கலாம். அதுக்கும் மேச்செலவுக்கும் காசு பணம் வேணுமா இல்லையா? எத்தினி காசு வருதோ அதுல ஒரு பகுதிய சேப்போம். நாலணாவா, எட்டணாவா எதாச்சும் நம்ம எல்லோரும் நம்பிக்கையோட களஞ்சியத்துல சேர்வோம்.எல்லோரும் கை தட்டினார்கள் ‘இருபது பேர் சேர்ந்த குழுவுக்கு ஒரு தலைவி – முதல் இருபது பேருக்கு யார் தலைவி?
‘சின்னா தான்! எல்லோரும் கை தட்டினார்கள். புல்லுசேரியில் நான்கு குழுக்கள் சேர்ந்தன.மிகக் குறுகிய காலத்தில் மாத்தூர், செட்டிகுளம், குருத்தூர், சோதியாப்பட்டி, லெட்சுமிப் பட்டி, துக்களப் பட்டி, சின்னமாங்குளம், பெரியமாங்குளம், பூசாரிப் பட்டி, கீழக்கள்ளந்திரி, மேலக் கள்ளந்திரி, தொக்குளம் பட்டி, ஆமாந்தூர், மஞ்சப் பட்டி, வெள்ளியாங்குன்றம், அப்பன் திருப்பதி போன்ற பல ஊர்களில் களஞ்சியம் வேர் விட்டது.
‘அக்கா உங்களுக்கு விண்ணப்பம் நிரப்பாமலேயிருக்கு; ஊரு புல்சேரி, பேரு சின்னா, அப்புறம்…’பேரு சின்னப் பிள்ளை’ என்று சொல்லிவிட்டு நின்றாள். நினைந்தாள். தன் தந்தையின் நினைவில் தோய்ந்தாள்.
‘பிறந்த நாள்?
‘தெரியாது
‘படிப்பு?
‘கிடையாது
‘நஞ்சை, புஞ்சை, நில புலம்?
‘கிடையாது
இப்படியே பலருடைய விவரங்களைக் குமார் எழுதினான்.
‘எக்கா, உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலல்ல?’
‘…ம்?…
‘உங்கள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கிற வேலை வெட்டியக் கூட விட்டுட்டுக் களஞ்சியத்துல உறுப்பினர் சேர்க்கிறதுக்கு எங்களோட அலையறீங்களே!
‘ஏந்தம்பி, உங்களோட சின்ன அக்கா ஓய்வொளிச்ச இல்லாம ரவ்வா பகலா அலையுதே அதுக்கு நீங்களாப் பாத்து ஒரு சம்பளம் போட்டுக் குடுக்கலாமில்லியா?’ என்று ஒருவர் சொன்னார்.’வேண்டாம்பா, செய்யாத வேலைக்குச் சம்பளம் வாங்கப்படாது’
குமாரும் பாலனும் சின்னாவை அண்ணாந்து வியப்போடு பார்த்தார்கள்.இப்போது களஞ்சியத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் ஏதோ பெரு மதிப்பிற்குரியவர்கள் போலவும் அல்லாதவர்கள் குறைந்தவர்கள் போலவும் அவர்களாகவே ஒரு எண்ணத்திற்குள் தள்ளப்பட்டு விட்டனர். ஆனாலும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால், ‘அவள் சேர்ந்திருக்கும் களஞ்சியத்தில் நான் சேர மாட்டேன்’ என்ற சிறு பிள்ளைச் சண்டைக்கும் குறைவில்லை.
‘அம்மா, சின்னா! கொத்தனார் கூப்பிட்டார்,
‘என்னண்ணே?
‘நாலஞ்சு மாசத்துக்கு முன்னால தங்கி அறுப்புக்குப் போலாமான்னேனே போகலாந்தானே? ஊரையும் பாரு ஒன்னையும் பாரு!
சின்னாவுக்கும் அவளது குடும்பத்திற்கும் மூன்று வேளை பசிக்கின்ற வயிறுகள் இருந்தன. படிப்பை அறியாத மூத்தவன். படிப்பை மாடு மேய்ச்சலுக்குப் பலி கொடுத்த இளையவன், ஆக இருவரும் அவ்வப்போது சிறு சிறு வேலைகளுக்குப் போய் ஒரளவு வயிற்றுத் தீயை அணைத்தனர். குடியானவர் வீடுகளுக்கு முன்பு போல் நெல் அவிக்க, நெல் குற்ற, அரிசி புடைக்க, தவிடு அரிக்க எனத் தொடரான வேலைகள் விடாமல் பார்த்துக் குறணை அரிசி வாங்கி வந்து வயிறு காயாமல் பார்த்து வந்தாள். இவற்றுக்கிடையே களஞ்சிய வேலை!

பெருமாள் மீண்டும் மது குடிக்கவும் பீடி பிடிக்கவும் ஆரம்பித்து விட்டான். நீர்க் குளத்திற்குள் தீப்பந்தத்தைக் கொண்டு எதையாவது தேட முடியுமா? அப்படியே எவர் சொல்லும் அறிவுரையும் பெருமாளைத் தேற்றவில்லை.

குடி வயிற்று வலியையும், பீடி இடையறாத இருமலையும் கொண்டு சேர்த்தன. மருந்து தெரிந்ததுதான் – அவற்றை விட்டுவிட வேண்டும்; ஆனால் பெருமாள் புகைக்குள் புகைந்து குடியில் குடியிருந்தான்!

‘நான் வர்றதுக்கு ஒரு வாரம் பத்து நாளாகும்; இளமதியையும் மல்லிகாவையும் நல்லா பாத்துக்குங்கய்யா, இளமதி! ஒழுங்கா பள்ளிக் கொடத்துக்குப் போணும்மா. அய்யா சொல்றபடி கேக்கணும். மழை தண்ணிலல்லாம் ஆடப்பிடாது என்ன?’நீ போயிட்டு வா, நான் பாத்துக்கேன்’ என்றான் பெருமாள்.அமெரிக்காவுக்குப் போகிறவர்கள் வீட்டில் ஒரு வருட ஏற்பாடு செய்வது போல பத்து நாள் தங்கி அறுப்புக்குப் போகிற சின்னா பெரிய ஏற்பாடெல்லாம் செய்தாள்.
ஆணும் பெண்ணுமாக இருபது பேர், கொத்தனார் தலைமையில் புறப்பட்டனர். உச்சி வெயிலுக்குக் கம்பம் வந்து சேர்ந்தாயிற்று, கொத்தனார் பேசி வைத்து இருந்த வீட்டில் எல்லோரும் போய் இறங்கினர். பெரிய பண்ணையார் போல, பெரிய தொழுவம், பின்கட்டு என, இருபது என்ன? எழுபது பேர் தங்கலாம். பெண்களுக்குத் தனி இடம்.

சமையலுக்கு, மகமாயி தலைமையில் இரண்டு பேர், அறுவடைக்குக் கொத்தனார் தலைமை என்றாலும் பொறுப்பு, முழுவதும் சின்னாவுக்குத்தான். இரண்டு நாள் மூன்று நாள் ஆனதும் கொத்து நெல்லை வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு சோணைக்கு, போக்கு வண்டியில் ஏற்றி ஊர் கொண்டு சேர்ப்பது கடுமையான வேலை.
பகல் இரண்டு மணி அளவில் எல்லாம் முடிந்தது.இருட்டில் இருட்டு புகுந்தது பெருமாளின்; குடும்பம் திசையறியாது திக்கு முக்காடியது. சின்னாவுக்கு முற்றிலும் ஒரு வெறுப்பு வந்து விட்டது.கணவனின் நோய், சின்னாவுக்கு மஞ்சள் கயிற்றைத் தந்து தாலித் தங்கத்தை எடுத்துக் கொண்டது; கொழுந்தனின் மாடுகள் மகனின் படிப்பை அழிந்துவிட்டன; குழந்தையின் சாவு குடும்ப மகிழ்ச்சியைப் பறித்துக் கொண்டது.

சின்னா இப்போதெல்லாம் மிகவும் சோர்ந்து விட்டாள். களஞ்சிய வேலைகளில் ஈடுபாடாக இறங்கி இருந்தாள். இப்போது சின்னா இருபது பேர்கள் கொண்ட இருபது குழுக்களுக்கும் சேர்த்துத் தலைவி.’விடிஞ்சாப் போறவ அடைஞ்சா வர்றா; குடும்பம் கிடும்பம்னு இருக்க நெனப்பு எங்க இருக்கு? களஞ்சியம், களஞ்சியம்! வேற வேலக் கழுத கிடையாது’ என்று பொருமிக் கொண்டே இருந்தான் பெருமாள்.

இடையிடையே நாற்று நடவு, சித்தாள் வேலை, சின்ன வியாபாரம், நெல் அவித்தல் என்ற பலமாதிரியான வேலைகளையும் விடாமல் பார்த்துக் களஞ்சியம் வேலைகளிலும் கண்ணும் கருத்துமாக இருந்து ஒரு கையில் குடும்பத்தை இழுத்துக் கொண்டும் இன்னொரு கையில் களஞ்சியப் பணியை இழுத்துக் கொண்டும் சென்றாள் சின்னா!

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *