யாரோ போட்ட பாதை

– தி.க.சந்திரசேகரன்

“கடவுள் உங்கள் திறமையைக் கேள்வி கேட்கவில்லை
உங்கள் நேரத்தை மட்டுமே கேட்கிறார்”
மனத்தை சுண்டியிழுத்த இந்த வரிகளைச் சொன்னவர் பெயர் தெரியவில்லை.
God does not question your ability
He demands only your availability.

‘யார் வேண்டு மென்றாலும், எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம், அதற்காக நேரத்தை செலவழித்தால்!’ என்றுகூட நாம் மேற்கூறிய கூற்றிற்குப் பொருள் கொள்ளலாம்.

நம்மில் பலர் ‘எனக்கு அது தெரியவில்லையே, இது தெரியாதே’ என்று புலம்புவதைப் பார்க்கிறோம். ஆனால் நம் கேள்வி, ‘அதைத் தெரிந்து கொள்வதற்காக, நாம் என்ன முயற்சி எடுத்தோம், எவ்வளவு நேரம் செலவழித்தோம்?’

ஒரு முயற்சியும் செய்யாமல், நேரமே ஒதுக்காமல் ஏதாவது நடக்கும் என்றால், எப்படி நடக்கும்? விதையே நடாமல், தண்ணீரே ஊற்றாமல், உரமே இடாமல் எந்த மாமரம் வளர்ந்து கனிதரும்?

யாருமே எந்த வேலையையும் தொடங்கும் போது 0-வில்தான் தொடங்குகிறார்கள். அவர்கள் எடுக்கின்ற முயற்சியும், செலவழிக்கின்ற நேரமுமே அவர்களுடைய ஆற்றலை, சாதனையைத் தீர்மானிக்கிறது.

முதல் நாள் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் மட்டையைத் தொட்ட போதே, சிக்சரும், பவுண்டரியுமா அடித்திருப்பார்! அல்லது யுவராஜ் சிங் முதல் நாள் விளையாடிய, முதல் ஓவரிலேயேவா ஆறு சிக்சர் அடித்தார்?

சாதனையை புரிந்தவர்கள் அனைவருமே, சாதனை செய்வதற்காக நேரத்தை செலவழித்தவர்கள். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க செலவழித்தது 19-1/2 ஆண்டுகள்* 3200 தோல்விகள்! அதன் பின்னரே மின் விளக்கைக் கண்டு பிடிக்கும் ஆற்றல் அவருக்கு வந்தது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

தெரியும் – செய்வார்கள் (முதல் நிலை)

தெரியாது – செய்யமாட்டர்கள் (இரண்டாம் நிலை)

தெரியாது – செய்வார்கள் (மூன்றாம் நிலை)

தெரியும் – செய்யமாட்டார்கள் (நான்காம் நிலை)

முதல் நிலை மனிதர்களைத் தட்டிக் கொடுத்தால் போதும். இதனை செய்யுங்கள் என்று கூறிவிட்டால் அவ்வேலையை சிறப்பாக செய்துவிடுவார்கள்.

இரண்டாம் நிலை மனிதர்களுடைய மனப்பான்மையை மாற்றவேண்டும். சிரிக்க வைக்கவேண்டும்; சிந்திக்கவைக்க வேண்டும். ஏதோ மனத்தாங்கலால் முடங்கியிருந்தால் அந்த சிக்கலைத் தீர்க்கவேண்டும். பின்னர் அவர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

நம்முடைய கவலையெல்லாம் மீதி இருவகை மனிதர்கள்மேல்தான். ஒரு வேளை நீங்களோ, நானோ கூட அந்த நிலையில் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஒருவருக்குக் கார் ஓட்டத் தெரியாது; ஆனாலும் கொஞ்சம் அரைகுறையாகத் தெரிந்ததை வைத்துக் கொண்டு ஓட்டினால், அதாவது ‘தெரியாது – செய்வேன்’ என்ற தோரணையில் செயல்பட்டால், ‘அவர் என்ன ஆவார், கார் என்ன ஆகும், சாலையில் எதிரே வந்த மனிதர்கள் என்ன ஆவார்கள்?

இந்த எடுத்துக்காட்டு காருக்கு மட்டுமா? தொழிற்சாலைகளில், மருத்துவமனைகளில், பயிற்சி நிறுவனங்களில், கல்விக் கூடங்களில் இப்படி ‘தெரியாது – செய்வேன்’ மனிதர்கள் இருந்தால் என்ன ஆகும்?

ஒருவகையில் இந்த மனிதர்களைப் பாராட்டவேண்டும்! காரணம், அவர்களுக்கு ‘செய்ய வேண்டும்’ என்ற ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக செய்கிறாரோ இல்லையோ, ஏதோ ஒரு ஆர்வம் அவர்களிடம் உள்ளது. அந்த ஆர்வத்தை முதலீடாக்கிவிட வேண்டும்.

இந்த இடத்தில் தான் பயிற்சிகளின் தேவை இடம் பெறுகிறது. நிறுவனங்கள் நேரம் ஒதுக்கி சில நாட்கள் முதல் ஓரிரு வருடங்கள்வரை அவர்கட்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கி அவர்களுடைய திறமைகளை வளர்க்கின்றன.

நான்காம் வகை மனிதர்களால் ஒரு பயனுமில்லை. காரணம் அவர்களுக்குத் தெரியாது, செய்யவும் மாட்டார்கள்.

ஒன்று – அவர்களிடம் கட்டளையிட்டு, அதிகாரம் செலுத்தி தெரிந்து கொள்ள வைத்து, வேலை செய்ய வைக்கலாம்.

இரண்டு – இத்தகைய மனிதர்களை வைத்துக் கொண்டு, தண்ட சம்பளம் தருவதைவிட வேலையை விட்டு அனுப்பியே விடலாம்.

மூன்று – வேலை தெரியாததால் தானே அவர்கள் செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு என்ன வேலை தெரியுமோ, அந்த வேலையைக் கொடுக்கலாம். அந்தச் செய்யக்கூடிய தெரிந்த வேலையையும் செய்யாவிடில் வேலையைவிட்டே அனுப்பிவிடலாம்.

ஆக மொத்தத்தில், ‘தெரியாமல்’ – ஒன்றும் நடக்காது. இது தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சி.

தனிமனிதனான நம்மை எண்ணிக் கொண்டு, நாம் எந்த வகையில், எந்த துறையில் வளர வேண்டும் என்று சிந்தித்தால் புதிய உலகம் தெரியும்.

எதற்கெல்லாம் நேரம் செலுத்துவது என்றே தெரியாமல், எதற்கோவெல்லாம் நேரம் செலுத்திவிட்டு, வாழ்க்கையே வீணாகிவிட்டதே என்று அங்கலாய்ப்பதைவிட திட்டமிடுவது நல்லதல்லவா?

உங்கள் முன்னால் இரண்டு கூடைகள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கூடையின் பெயர் ஆசைக்கூடை (Wish Basket). இன்னொன்றின் பெயர் சரியான கூடை (Right Basket).

இந்த ஆசைக்கூடையில் நீங்கள் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? எவற்றையெல்லாம் அடைய விரும்புகிறீர்கள்?’ – என்று எழுதிப் போடுங்கள்.

எடுத்துக் காட்டாக,

தியானம் செய்ய வேண்டும்.

எனக்கு கார் ஓட்டத் தெரிய வேண்டும்.

பிரெஞ்சு மொழி தெரியவேண்டும்.

ஜெர்மன் கற்றுக் கொள்ளவேண்டும்.

கொரிய மொழி தெரியவேண்டும்.

பியர்ட்ஸ் ஆட வேண்டும்

கால்ப் விளையாட வேண்டும்

கவிதை எழுத வேண்டும்

கதைகள் எழுதவேண்டும்.

தன்முனைப்பு நூல்கள் எழுதவேண்டும்.

மாஜிக் செய்யவேண்டும்.

சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடவேண்டும்.

நடனமாட வேண்டும்.

ஓவியங்கள் வரையவேண்டும்.

கைரேகை பார்க்க வேண்டும்.

வாஸ்து சோதிடம் கற்க வேண்டும்.

யோகா கற்றுக் கொள்ள வேண்டும்.

– இவையெல்லாம் தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆசைகள். ஆசைக் கூடையில் நாம் போடும் ஆசைக் கனவுகள்.

இதே போல் அடையத் துடிக்கும் ஆசைக் கனவுகளும் ஏராளம். இவற்றையும் எழுதி ஆசைக் கூடையில் போடலாம்.

எடுத்துக்காட்டாக,

பெரிய பங்களா கட்ட வேண்டும்.

பண்ணைவீடு வேண்டும்

கார் வாங்கவேண்டும்.

குடும்பத்தோடு அயல்நாடு செல்ல வேண்டும்.

ஏற்றுமதி செய்ய வேண்டும்.

தொழிற்சாலையை பெரிதாகக் கட்ட வேண்டும்.

புதியதாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும்.

முதியோர் இல்லம் கட்டவேண்டும்.

இவையெல்லாம் செய்யத் துடிக்கும் ஆசைகள். இப்படி நம் மனத்தில் தோன்றும் ஆசைகளையெல்லாம் எழுதிப் போட்டால் ‘ஆசைக் கூடை’ நிரம்பி வழியும்.

இப்போது ஆசைக் கூடையில் உள்ள ஒவ்வொரு ஆசையையும் எடுத்துப் பார்த்து அது நமக்கு உகந்ததாக இருந்தால் ‘சரியான கூடையில்’ போடலாம். ஏற்றதாக இல்லாவிடில் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு மறந்துவிட வேண்டியதுதான். திரும்பவும் தவறிக்கூட நினைக்கக்கூடாது.

எடுத்துக்காட்டாக,

பியார்ட்ஸ், கால்ப் விளையாடவேண்டும். ஓர் ஆசை. நீங்கள் இருக்கும் நகரில் இவையிரண்டும் விளையாட வாய்ப்பே இல்லை.

கற்றுக்கொள்ள வெளியூர் செல்ல வேண்டும். பல நாட்கள் கற்றுக்கொள்ள செலவிட வேண்டும். அதற்குப் பிறகு விளையாட வாய்ப்பே இல்லை.

எனவே அந்த ஆசைக் கனவைக் குப்பையில் போடலாம்.

அடுத்து கொரியன் மொழி கற்க வேண்டும்.

ஏன் கற்க விரும்புகிறீர்கள்?

பல கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன. மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. கொரிய நாட்டோடு ஏற்றுமதி வணிகம் செய்ய ஆவல்.

– இப்படி சரியான காரணங்கள் இருந்தால் நியாயமாக உட்கார்ந்து கொரிய மொழி கற்கலாம். இந்த ஆசையை இப்போது ‘சரியான கூடையில்’ போடலாம்.

மனத்தில் ஆசைகள் தோன்றுவதில் தவறுமில்லை; வியப்புமில்லை. ஆனால் அந்த ஆசைகள் சரியான ஆசையாக இல்லாவிடில் அவற்றிற்காக உழைப்பது முட்டாள்தனமாக இருக்கும்.

இப்படித்தான் கொஞ்ச நாள் பிரெஞ்ச் வகுப்பு, கர்நாடக வகுப்பு, யோகா வகுப்பு – பிறகு பார்த்தால் எதுவுமே நிலைக்காது.

ஆனால் ஒருமுறை ஓர் ஆசைக் கனவு, சரியான கனவு என்று தெரிந்து விட்டால் ‘அடுத்த கேள்வி அதற்காக அன்றாடம் எவ்வளவு நேரம் நிச்சயமாக ஒதுக்கமுடியும்? நேரம் ஒதுக்கமுடியாவிட்டால் அந்தக் கனவும் வீண்தான். அதையும்விட வேண்டியதுதான்.

ஆக இரண்டு செய்திகள்.

ஒன்று நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை சரியானது தானா?

அதற்காகப் போதுமான நேரத்தை ஒதுக்கி உழைக்க முடியமா?

இரண்டுக்கும் ‘சரி’ ‘முடியும்’ என்று விடையளித்துவிட்டு, இறங்கி உழைத்தால் உங்கள் திறமை நிச்சயமாக வளரும். பெரிய திறமைசாயாக வளருவீர்கள்!

அதே போன்று, செய்ய விரும்பும் தொழில் – அடைய விரும்பும் வசதிகள் – அங்கேயும் ஆராய வேண்டும். குவைத் நாட்டைச் சேர்ந்த பெரும் வணிகர் திரு. சுரேஷ் அவர்களை என் நண்பர் ஒருவர் அணுகி, தான் ஓர் ஈமூ பறவைப் பண்ணை நடத்தும் ஆவலைக் கூறி நடத்தலாமா? என்று ஆலோசனை கேட்டார். அவர் கேட்ட கேள்விகள்.

‘உங்கள் வயது என்ன?’

– 61

‘எத்தனை ஆண்டுகள் கழித்துப் பலன் கிடைக்கும்?

– இன்னும் 10 ஆண்டுகள்….

– உடல் வியாதி…

– சர்க்கரை.

– இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருப்பீர்கள் என்று உறுதியாகக் கூறமுடியுமா?

– கூறமுடியாது.

– ஈமு பண்ணைக்கு தினம் சென்று பார்த்துக்கொள்ள முடியுமா?

– நேரமில்லை; மாதம் இரண்டு நாள் ஒதுக்கலாம். யாரையாவது பார்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

– நண்பரே, இது வேண்டாத வேலை; இதை விட்டுவிடுங்கள். ஆசைக்காக எதையும் செய்யாதீர்கள். ஒழுங்காக செய்ய முடிந்தால் நேரம் ஒதுக்க முடிந்தால் செய்யுங்கள்.

நண்பர் சற்று சிந்தித்த பின் திரு. சுரேஷின் கூற்றை ஏற்றுக்கொண்டார்.

நீங்கள் எந்த திறமையையும் வளர்த்துக் கொள்ளலாம். எதையும் அடையலாம். அவற்றுக்காக நிச்சயம் போதுமான நேரத்தை ஒதுக்கி உழைத்தால்.’

– வளரும்

  1. vasanth ruban

    தெரியாது – செய்யமாட்டர்கள் (இரண்டாம் நிலை)

    தெரியும் – செய்யமாட்டார்கள் (நான்காம் நிலை)

    நான்காம் வகை மனிதர்களால் ஒரு பயனுமில்லை. காரணம் அவர்களுக்குத் தெரியாது, செய்யவும் மாட்டார்கள்.

    pls clrarify this second and 4th satge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *