– சி. வாணி
ஒரு மொட்டுக்கு மலர்கிற துணிச்சலில் ஏற்படும் வலியைவிட இறுக்கமாக மூடிக்கிடப்பது மிகவும் வலியைத் தருவது” – இது ஓர் அறிஞரின் வாசகம். “அந அ ஙஅச பஏஐசஓஉபஏ” என்ற நூலில் இடம்பெற்ற சிந்தனை இது. மூடிக்கிடக்கிற மொட்டின் இதழ்கள் உதிராது. காற்றிலோ மழையிலோ சேதமுறாது. ஆனால் ஒரு மொட்டின் முழுமையை மலர்ச்சியில்தான் அடைகிறது. மலர்ந்தபிறகு ரோஜாவின் இதழ்கள் மீண்டும் மூடிக்கொள்ள முடியாதுதான்.
மனிதனின் இளமைப்பருவத்தை இது குறிக்கிறது. இளமைப் பருவம் எவ்வளவு இனியதாய் இருந்தாலும், காலம் அதனைக் கடந்து செல்லும்படிதான் நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது. வளர வளர, உள்ளம் மலர மலர வாழ்க்கையின் ஆழமும் ஆனந்தமும் புரிகிறது.
மூடிக்கிடக்கிற மொட்டு, தனக்குத் தானே ஒரு புதிர்போல இருக்கிறது. விரிகிறவரையில் – தனக்குள் என்ன இருக்கிறது என்று அதுவே அறிவதில்லை. ஆனால் மலர்ந்த பிறகோ அதன் இதழ்களின் மென்மை, நாசியை வருடும் வாசம், வண்டுகளுக்கு வைக்கிற விருந்து என்று அதன் உச்சகட்ட சாத்தியங்களை உணர்ந்து கொள்கிறது.
அச்சத்தாலோ, பாதுகாப்பு உணர்வாலோ மொட்டுக்கள் போல் மூடியே கிடக்கிற மனிதன் சராசரியாய் வாழ்ந்துவிட்டுப் போகிறான். அவன் மலர்கிறபோதுதான், அவனில் இருக்கிற அனைத்தையும் இந்த உலகம் பார்த்து வியக்கிறது. பொருளாதார எழுச்சியில் தொடங்கி – சமூக வளர்ச்சி ஆன்மீக வளர்ச்சி என்று எதுவாக இருந்தாலும், பொதுவாகச் சொன்னால் இறுக்கம் தளர்த்திய இதயம் மலர்கிற பொழுதுதான் நிகழ்கிறது.
மூடிக்கிடப்பதன் வலி, திறந்து கொடுக்கும் இயல்பைவிடவும் வலிமிகுந்தது என்று சும்மாவா சொன்னார்கள்!!
Leave a Reply