நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.
பதட்டத்தின் காரணமாக வேகமாகவும் தெளிவின்றியும் நீங்கள் வார்த்தைகளை உச்சரிப்பதால் இந்த சிரமம் ஏற்படலாம். அல்லது, மனதில் இருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதமாய் சொல்ல முடியாவிட்டாலும் இந்த நிலை ஏற்படலாம்.
இவை இரண்டும் தனித்தனி காரணங்களா? இல்லை. ஒன்றைத் தெளிவாக சொல்ல முடியாது என்கிற அச்சம் உள்மனதில் உள்ளதாலேயேகூட நீங்கள் பதட்டமடையக் கூடும்.
அப்படியானால், பதட்டத்தின் காரணம் பயிற்சியின்மை. எந்தக் குறையையும் பயிற்சியாலும், முயற்சியாலும் மாற்றமுடியும் என்பது பாலபாடம். பயிற்சியை உற்சாகமாக, உடனே தொடங்குங்கள்.
உதாரணமாக, சரளமாக ஆங்கிலம் பேசுவதில் தடை ஏற்படுகிறதா? எளிய ஆங்கிலத்தில் உள்ள புத்தகம் எதையாவது படியுங்கள். இரண்டு பக்கங்கள் படித்துவிட்டு, நீங்கள் படித்ததன் சாரத்தை உங்கள் நடையில் உங்கள் வார்த்தைளில் சொல்லிப் பாருங்கள். அந்தப் புத்தகத்தைப் படிக்க முடியாத ஒருவருக்கு, நீங்கள் படித்துச் சொல்வதான பாவனையில் நிதானமாக சொல்லுங்கள். பிறகு, உங்கள் நடையில் எழுதிப் பாருங்கள். நாளுக்கு ஒரு மணி நேரமாவது இந்தப் பயிற்சி மேற்கொள்வீர்களென்றால் மிக விரைவிலேயே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
மொழி ஆளுமை கைவரத் தொடங்கியதுமே பலர் நீளமாகவும் அடர்த்தியாகவும் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். எந்த மொழி பேசினாலும் இந்த எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தவறில்லாமல் நம்பிக்கையோடு பேசவேண்டுமென்றால் சின்னச் சின்ன வாசகங்களாகப் பேசவேண்டும். “நான் அமெரிக்கா செல்வதற்காக சென்னை போனபோது ரமேஷை சந்தித்தபோது உங்களைப் பற்றி விசாரித்தவுடன் உங்கள் எண் கிடைத்தது”. இதில் யார் விசாரித்தார்கள், யாருக்கு எண் கிடைத்தது என்பதை ஆராய்ச்சி செய்துதானே அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்குப் பதிலாக, “அமெரிக்கப் பயணத்திற்காக சென்னை போய்க் கொண்டிருந்தேன். வழியில் ரமேஷைப் பார்த்தேன். உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டேன். கொடுத்தார். உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்”. இப்படிச் சொல்கிறபோது விஷயம் தெளிவாகிறது. சொல்ல விரும்புவதை மனதுக்குள்ளே ஒழுங்குபடுத்திக் கொள்ளும்போது துல்லியமாகவும் தெளிவாகவும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.
எதிரே இருப்பவர் சொல்வது நமக்கு சரியாகப் புரியாத போதும்கூட அவர் கேட்பது ஒன்றாகவும் நாம் சொல்வது ஒன்றாகவும் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. சொல்வதை முதலில் நிதானமாகக் கேளுங்கள். கேட்ட அடுத்த விநாடியே பதிலைக் கொட்ட வேண்டிய அவசியமில்லை. விஷயத்தை நன்றாக உள்வாங்கி, சரியான கோணத்தில் சிந்தித்து, தெளிவான பதிலை சொல்லுங்கள்.
ஒரு விஷயத்தை விளக்க வேண்டும் என்றதுமே அதற்காக ஏராளமான தகவல்களைத் திரட்டிக் கொள்ள விரும்புவது இயற்கை. ஒன்று விரிவாக விளக்குவது என்பதைவிட, சுவாரசியமாக எடுத்துச் சொல்வது என்பதே முக்கியம். இதற்கு ஆரம்ப காலத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயத்தை நண்பர்கள் மத்தியில் விளக்குங்கள். உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கலையை ஆர்வத்துடன் செய்யுங்கள்.
எல்லாவற்றையும்விட, கலகலப்பான மனிதனாக, பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிற மனிதராக இருங்கள். இயல்பாக உங்கள் கவனத்திற்கு வருகிற விஷயங்களை சிரத்தையுடன் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவற்றைப் பொருத்தமான நேரங்களில் சொல்லுங்கள்.
சரி…. ஆரம்பிக்கலாமா? இந்தக் கட்டுரையில் படித்த விஷயங்களை, பக்கத்தில் இருக்கிற நண்பரிடமோ உறவினரிடமோ சொல்லுங்கள் பார்க்கலாம்!!
Leave a Reply