உங்களது இளமைப் பருவம் பற்றி…..
எனது தந்தையார் பெயர் திரு. குழந்தைசாமி. தாயார் பெயர் சுப்புலட்சுமி. நான் 07.10.1958-ல் பிறந்தேன். எனது கல்வி அரசு ஆரம்பப் பள்ளியில் துவங்கியது. வெள்ளக்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தது. அங்கு இரண்டாம் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பிறகு 1975ல் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். 180 மாணவர்களில் 172வது இடத்தை
மதிப்பெண் பட்டியலில் பெற்றேன். அப்பொழுது நான் நினைத்தேன், ஆரம்பப்பள்ளியில் முதல் மாணவனாகவும், உயர்நிலைப்பள்ளியில் இரண்டாவது மாணவனாகவும் வந்த நான் கல்லூரியில் மாறுபட்டு பின்தங்கிய நிலையில் இருந்ததை உணர்ந்தேன். என்னால் அதை சகித்துக் கொள்ள இயலவில்லை. மற்றவர்களால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தபோது, நான் ஏன் எடுக்க முடியாது என்ற எண்ண நிலை ஏற்பட்டு, ஒரு குறிக்கோளை வைத்து, இந்த ஆண்டில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற வேண்டுமென்று கடினமாக உழைத்து, கணிதத்தில் நூறும், இயற்பியல், வேதியியலில் 96, 93ம், என்கிற மதிப்பெண்களைப் பெற்றேன்.
மிக முக்கியமாக எஸ்.கே. நடராஜன் என்கிற வேதியியல் ஆசிரியர் என்னை மிகவும் ஊக்குவித்து, ‘மற்றவர்களால் முடியும்போது என்னால் ஏன் முடியாது’ என்கிற ஒரு நெருப்பை என் மனதில் கொட்டினார். அந்த நெருப்பு ஜுவாலையை பற்ற வைப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமானவர், எனது கணித ஆசிரியர் கே.எஸ். கோபால்.. ‘அப்பு குட்டி’ என்றழைக்கப்படுகிற அந்த ஆசிரியரின் அரவணைப்பினால், கடுமையான உழைப்பால் நான் நினைத்ததை அடைய முடிந்தது. 1975ல் தமிழ்நாட்டிலேயே நாச்சிமுத்து பாலிடெக்னிக் முதன்மை பெற்றபோது, நேரடியாக இன்ஜினியரிங்கில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்த 19 மாணவர்களில் நானும் ஒருவன்.
குவைத்தில் என்ன செய்கிறீர்கள்?
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில்(CIT) கிடைத்தது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நல்ல முறையில் படித்ததினால் எம்.இ. ஸ்காலர்ஷிப்புடன் மாதம் ஒன்றுக்கு 600 வீதம் இரண்டாண்டுகளுக்கு கிடைத்தது. எம்.இ. முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, CIT சாண்ட்விச் பாலிடெக்னிக்கில் ஆசிரியராகப் பணியை ஏற்று, 1983லிருந்து 1995 வரை தேர்வு பெற்ற பேராசிரியராகப் பணியாற்றி, 1995லிருந்து வெளிநாட்டிற்குச் சென்று இன்றுவரை குவைத்தில் உள்ள பல நிலைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். தற்போது குவைத் நேஷனல் பெட்ரோலியம் கம்பெனி என்கிற அரசு நிறுவனத்தில் ஹீட்டிங் வென்டிலேசன் அண்ட் ஏர்கண்டிஷனிங் இன்ஜினியராகப் பணிபுரிந்து, டிசைன், மெய்ன்டெனன்ஸ் என்கிற இரண்டு நிலையை ‘சொய்யா ரீபைனரி’ என்கிற அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இது கல்வியும், எனது கல்வியின் மேம்பாட்டில் இருக்கக்கூடிய தன்மையின் நிலைப்பாடும்.
கோவையில் பேராசிரியராக இருந்தபோதே பல தொழில்கள் செய்தீர்களாமே?
தொழிலைப் பொறுத்தவரை நான் கோவையிலிருந்த போது 1983லிருந்தே சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் பியர்லெஸ் என்கிற நிதிநிறுவனத்தின் ஏஜெண்டாக ஏற்று, பீல்டு ஆபீசராக மாறி, 1981ல் 97 லட்சம் பாலிஸியை எடுத்து ஒரு லட்சம் 64 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து நான் பெற்ற நிலையானது, தமிழகத்தின் முதல்வனாகவும், தென்னிந்திய அளவில் இரண்டாம் நிலையிலும், இந்திய அளவில் நான்காம் நிலையையும் பெற்றேன். அதற்குக் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் பெற்ற தொகையை என் தாய்க்கு தாலிக்கொடி வாங்கிக் கொடுத்தேன். காரணம் என்னவென்றால், 1981ல் ஒரு தொழிலை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் எமது ஊர்க்காரரும், பி.எஸ்.ஜி. டெக்னாலஜி திரு. ஜெகதீஸ் அவர்களுடன் சேர்ந்து தொழில் செய்ய முதலீடுகளுக்காக கொடுக்கப்பட்ட விலை எனது தாயின் தாலிக்கொடி.
எம்.இ. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோதே, ஒரு நிலையில் தொழிலும் மறுநிலையில் படிப்பும் மூன்றாம் நிலையிலும் பியர்லெஸும் செய்து கொண்டிருந்தேன். முதலில் அதில் பெற்ற வருமானங்களை அம்மாவிற்கு தாலிக்கொடியும் அப்பாவிற்கு பவர்லூம் பேக்டரியும் போட்டுக் கொடுத்ததன் காரணம். தாசம நாயக்கன்பட்டி என்கிற எனது சொந்த ஊரில் எனது சொந்த பந்தங்களும் அப்பாவின் நேரடி தம்பிகளும் தொழிலில் மேன்மைபெற்ற நிலையில் இருந்தபொழுது, சமூக அந்தஸ்து கிடைக்காமல் அவர் உற்றார் உறவினர்களாலும் பல இடங்களில் மனத்தாக்குதலுக்கு ஆட்பட்டதை என்னால் உணர முடிந்தது. ஆக என் தந்தை உயர்நிலையை அடைய வேண்டுமென்பதற்காக அவருக்கு போட்டுக் கொடுத்த பவர்லூம் பேக்டரி இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு தொழில்களை சரிவர செய்ய முடியாமல் பல நிலைகளிலும் விரயங்களை ஏற்படுத்தியதனால், சமாளிக்க முடியாமல், கடனை அடைக்க வேண்டுமென்பதற்காக எனது மனைவியின் 100 பவுன் நகையையும் மூன்று கார்களையும், பல்வேறு ஊர்களிலிருந்த 9 மனைகளையும் விற்று கடனை அடைத்தேன். இருந்தாலும்கூட முழுமையாக என்னால் கடனை அடைக்க முடியவில்லை. 52 லட்சம் கடனாளியாக இருந்த பொழுது கல்லூரியில் பணியாற்றி இந்தக் கடனை அடைக்க முடியாது என்ற சூழலில் வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாட்டில் மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்கள்….?
30.05.1995ல் வெளிநாடு சென்று 17.07.98ல் மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தேன். காரணம் இந்தியத்தாய் மண்ணைவிட்டுப் பிரிந்தபோது செய்த சத்தியம் எப்போது நான் கடனை அடைக்கின்றேனோ அப்போதுதான் திரும்பி வருவேன் என்கிற தன்மையில். தளராத மனம், விடாமுயற்சி, கடுமையான உழைப்பின் காரணமாக முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வந்தாலும்கூட ஐயாயிரம் ரூபாய் அங்கே செலவாகிவிடும். இதை வைத்து எப்படிக் கடனை அடைப்பது என்கிற ரீதியில் ‘2, ‘1 மாணவர்களுக்கு டியூசன் எடுத்து மாதம் ஒரு லட்சம் ரூபாயும் ஈட்டினேன். முப்பத்தாறு மாதத்தில் 52 லட்சம் ரூபாய் கடனை அடைத்த பிறகுதான் இந்தியா வந்தேன்.
நான் சிறு வயதில் பெற்ற கல்விக்காக தேவைப்படும் டியூசன் பீஸ், புக் வாங்குவதற்கு, பள்ளிக்குச் சென்று வருவதற்கு சைக்கிள் இல்லாத காரணத்தினால், வாடகைக்கு எடுத்து, பல அவமானங்களும் , சிரமங்களும், வேதனைகளும் எனது இளமைக் காலத்தில் வந்ததினாலே இன்று நாம் பொருளாதார ரீதியில் சிறப்புப் பெற்றிருக்கிறோம். இனி இருக்கக்கூடிய காலகட்டங்களில் இந்தியத்தாய் நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற உணர்வு உண்டாயிற்று. இந்திய மக்களுக்கு, பொதுவாக தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு உதவ வேண்டுமென்கிற உணர்வு ஏற்பட்டு, 1997லிருந்து ஏழைக்குழந்தைகளை கண்டறிந்து ஒவ்வொரு வருடமும் எனக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தில் 5 சதவீதத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்கிற ரீதியில் 2007 வரை 22 குழந்தைகளுக்கு கல்விக்காக எனது வருமானத்தில் (70 லட்சம்) அதில் 5 சதவீதமான 3 1/2 லட்சத்தைக் கொடுத்து வருகிறேன். இதற்கு மேலும் ஏதேனும் செய்ய வேண்டுமென்கிற நிலையில் யோசித்து நண்பர்களிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். 03.03.08ல் நான்கு நண்பர்கள் 7 குழந்தைகளுக்காக உதவிகளைச் செய்ய முன் வந்தார்கள். அப்பொழுது என் மனத்தில் உதித்த தன்மையானது நாம் ஏன் ஒரு பாலமாக இருந்து இரண்டு நிலையிலும் வறுமையிலிருப்பவர்களும், வசதியாக இருப்பவர்களையும் இணைத்து செயல்படக்கூடாது என்கிற உணர்வு ஏற்பட்டது. ஆக 2008ல் டிசம்பர் முடிவதற்குள்ளாக ஒரு நூறு குழந்தைகளுக்கு உதவ வேண்டுமென்கிற ஆர்வம் என்னுள் எழுந்தது. அது கடவுள் அருளால் ஒரே மாததில் நூறு பேரும் இரண்டாம் மாதத்தில் இருநூறு பேரும், மூன்றாம் மாதத்தில் 309 பேரும் முன் வந்து உதவி செய்ய வந்தார்கள். ஆனால் என்னிடமிருந்த குழந்தைகளோ 187 தான். ஆக 10.07.2008ல் இந்தியா வந்தவுடன் அப்போது என்னிடம் கார் வசதி இல்லாத காரணத்தினாலே இனோவா என்ற காரை எடுத்து ஜுலை 10ல் ஆரம்பித்து 1.08.08 வரை தமிழ்நாடு முழுவதும் ஆறாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 69 அனாதை இல்லங்களைச் சந்தித்து 18 மட்டும் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்ததற்கான தகுதி, வெளிநாட்டின் உதவியில்லாத நிறுவனம், நன்முறையில் இருக்கக்கூடிய, கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய நிறுவனம் என்ற நிலைகளில் மொத்தம் 1100 பேரை தேர்ந்தெடுத்தும் கோவையில் எனது நண்பர் திரு. கணேஷ் அவர்கள் கண்டறிந்த குழந்தைகள் 48 பேரும் 1148 குழந்தைகள் விபரங்களைச் சேகரித்துக் கொண்டு 2.08.2008ல் குவைத் சென்றேன். அங்கு ஒவ்வொரு நாளும் வேலை 6 மணியிலிருந்து 4 மணி வரையிலும் ஒரு மணி நேரம் எனது சுய தொழில் என்று சொல்லக்கூடிய கன்சல்டன்ஸியை வைத்துக்கொண்டு 7 மணிக்குப் புறப்பட்டு ஒவ்வொரு நாளும் 10 மணி வரை நண்பர்களைச் சந்தித்து இந்த நல்ல காரியத்திற்காகக் உதவுங்கள் என்று சொல்வேன். 21.01.09ல் ‘அரவணைப்பு’ என்கிற இந்த நற்காரியத்திற்காகப் பயன்படக்கூடிய நிறுவனத்தை கோவையில் ஏற்படுத்தினோம்.
உதவும் எண்ணம் உதயமாக என்ன காரணம் என்று எண்ணுகிறீர்கள்?
உதவும் எண்ணம் வந்தததற்குக் காரணம், ஏழைகளுக்கு உதவ வேண்டும், பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும். படிக்கும்போது சிரமப்பட்ட நான் அந்த சிரமமும், வேதனையும் துயரமும் என்னவென்று தெரியும். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை நான் செருப்பு போட்டதில்லை. பேண்ட் என்பதை அணிந்ததே கல்லூரிக்கு வரும்முன். அதற்குமுன் பல நிலைகளில் சிரம சங்கடங்களைப் பெற்றபோது மனோரீதியாக, மனோ வலிமையின் காரணமாக வாழ்க்கையில் உயர்ந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோள் வந்தபோது கல்வி மட்டுமே எனக்கு இருந்தது. பல தொழில்களைச் செய்து நஷ்டம் ஏற்பட்டபோதும் கல்வி மட்டுமே என்னுடன் இருந்தது. பணம், காசு, பதவி, அந்தஸ்து எல்லாமே எனக்கு இல்லாத போதும் கல்வி மட்டுமே எனக்கு கை கொடுத்து உயர்நிலைக்கு வந்த காரணத்தினாலே இந்தக் கல்வியை அனைவருக்கும், பாதிக்கப்பட்ட வறுமையில் இருக்கக்கூடிய, இல்லாத இயலாத மாணவ மணிகளுக்கு செய்யவேண்டுமென்கிற காரியத்தில் ஈடுபட வைத்தது.
பெற்றோர் இல்லாத குழந்தைகளை குறிப்பாக தேர்வு செய்தது ஏன்?
இப்போது நீங்கள் பார்த்தீர்களென்றால் யார் சமூகத்திற்கு பாதகம் செய்கிறார்கள் என்றால் சிறுவயதில் இருக்கும் குழந்தை, தாய் தந்தையற்றோர், அந்தக் குடும்ப நிலையிலிருந்து பிரிந்து வந்த குழந்தைகள், பசிக்காக, சிறு ரொட்டி போன்றவற்றை திருடுகிறார்கள். அதுவே தொழிலாக மாறும். அந்தக் குழந்தையை நாம் கவனித்து ஆரம்பத்திலேயே கல்வியைக் கொடுத்து, நீ செய்யும் காரியம் தவறென்று உணர்த்தும்போது சமுதாய விரோதியாக வருவதில்லை. ஆக சமுதாய சீர்கேடுகளுக்கும், பயம் , திருட்டு என்று சொல்லக் கூடிய நிலைகளில் கல்வியில்லாத காரணத்தினால் அது இருக்கிறது என்பது என் மனதிற்கு உறுத்துகிறது. ஆக முப்பது கோடி மக்களுக்கும் ஒவ்வொரு குழந்தையை எடுத்து படிப்பதற்கான முயற்சிகளை செய்வோமேயானால் கண்டிப்பாக பாரத நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலைக்கு வரும். வரவேண்டும். அதற்கான முயற்சிகளை உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பிலும் செய்வோம்.
சிரமம் வந்தபோதெல்லாம் எப்படி கடந்து வந்தீர்கள்?
நான் எப்பொழுது சிரமம், சங்கடங்கள் வந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்வது எனக்கு சிரமத்தைக் கொடுக்காதே என்று எப்பொழுதும் வேண்டுவது இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரமத்தைக் கொடு ஆண்டவரே. அதை சமாளிக்கக் கூடிய வல்லமையும் எனக்குக் கொடு என்றுதான் ஒவ்வொரு நிமிடமும் கேட்பேன். தோல்விகளைக் கண்டு துவள்கிற பொழுது நம்மால் ஏன் முடியாது இறைவன் ஒன்றைக் கொடுக்கிறார் என்றால் அதை நம்மால் சமாளிக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் கொடுப்பார். சிரமங்களைக் கண்டு சலிக்கக் கூடாது. கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கண்டிப்பாக ஒருவரை மேல்நிலைக்கு கொண்டு வரும்.
உதவி பெற்று படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நீங்கள் தரும் வழிகாட்டுதல் என்ன?
என் வாழ்க்கையே இதற்கு உதாரணம். என்னுடைய தந்தைக்கு நெஞ்சில் ஒரு புண் காரணமாக வலி தாங்காமல் துன்பப்படுவார். எனவே, என் தேவைகள் எதையும் அவரிடம் சொல்லமாட்டேன். என்னுடைய அன்னை ஓர் ஆடும் ஓர் எருமையும் மேய்ப்பார்கள். மாலையில் பால் கறந்து விற்பார்கள். இரவு 1 மணி வரை இராட்டை சுற்றுவார்கள். அந்த பணத்தில்தான் நான் கல்லூரியில் படிக்க முடிந்தது.
என் கல்லூரித் தோழர்கள் மாலையானால் தேநீர் பருகவும் நொறுக்குத் தீனி சாப்பிடவும் புறப்படுவார்கள். நான் இவர்கள் அழைப்பைத் தவிர்ப்பதற்காக முன் கூட்டியே புறப்பட்டு மைதானத்திற்கு சென்றுவிடுவேன். இரவு உணவின் போதுதான் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன். நம் சூழலை உணர்ந்து அதற்கேற்ப பொறுப்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ள மாணவர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
வறுமையிலும் உறுதியுடன் இருந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
1993ல் சித்ரா பௌர்ணமி அன்று பொள்ளாச்சி சென்று திரும்பி வரும்போது என்னுடைய பைக்கில் பெட்ரோல் இல்லை. பெட்ரோல் இல்லாத காரணத்தினால் குப்புறக் கவிழ்த்து வந்த போது ஒரு நண்பர் என்னைக் கூப்பிட்டார், ஜாதகம் பார்க்கவேண்டும் என்று. நான் சொன்னேன். இப்போதெல்லாம் நான் Free ஆக பார்ப்பது கிடையாது. அதற்கு சார்ஜ் செய்துவிட்டேன் என்று. அதற்கான சார்ஜ் என்னவென்று கேட்டார்கள். ஆக பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வரவேண்டும் அதற்காக 100 ரூபாயைப் பெற்றுக்கொண்டு 1993ல் சித்ரா பௌர்ணமியன்று சுவாதி நட்சத்திரமான அந்தப் பெண்ணுக்கு ஜாதகம் சொன்னேன்.
காலத்தின் கட்டாயத்தில் நான் இன்று உலக அளவில் 1,19,000 ஜாதகங்களைப் பார்த்து விட்டேன். இதிலிருந்து நான் சொல்ல வருகிற கருத்து, எப்பொழுதும் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிவதால் நமக்கு சிரமங்கள் ஏதுமில்லை. ஏதேனும் காலகட்டத்தில் அது நமக்கு உதவும்.
உங்களுக்கு உந்து சக்தியாய் இருந்த எழுத்துக்கள்.
கவிஞர் வைரமுத்துவின் எழுத்துக்கள்தான். அவர் சொல்வார், ‘ஜன்னலைத் திறந்துவை. காற்று நன்று வரட்டும். ஆக்சிஜனின் அளவு உன் நுரையீரலின் அடிவரை செல்லட்டும். அப்போது உன் அறிவுக்கூர்மை பலப்படும் என்று. அது மட்டுமில்லாமல் 25க்கு பிறகு புத்தகங்களை பின்னால் எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா. உன்னின் திறமையை நீ உணர்ந்துகொள்ள நீ உழை. கடுமையாக உழை! உனது நாற்பதுகளில் நிலைகொள்ள வேண்டும். ஐம்பதுகளில் யாரென்று இருக்க வேண்டும். அறுபதுகளில் நீ வாழ்ந்த வாழ்க்கைக்கே அச்சாரமாக ஏதேனும் ஒன்று செய்யவேண்டும். அப்படி இருந்தால்தான் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது.
என்னில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டுவர இந்த வார்த்தைகள் எனக்கு அவ்வப்போது உதித்துக்கொண்டே இருக்கும். கவிஞரின் வார்த்தைகள் என்னை நிலைகொள்ள வைத்தது. உயர வைத்தது என்றே நான் சொல்ல வேண்டும். என்னுடைய மானசீக குருவாக ஐயா வைரமுத்து அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளேன். சந்திக்கக்கூடிய வாய்ப்பு இதுவரை கிடைக்க வில்லையென்றாலும் அவர் தத்துவத்தில், அவருடைய கவிதைகளில் பல உண்மைகளைப் பெற்றுள்ளேன்.
அரவணைப்பின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி?
ஒவ்வொருவரும் தன் வருமானத்திலிருந்து 5 சதவீதத்தை அரவணைப்பு போன்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். அரவணைப்பு பல புதிய திட்டங்களை உருவாக்கி வசதியில்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி நல்ல சூழலை ஏற்படுத்த விரும்புகிறது. ஆதரவற்ற முதியவர்களுக்கு அவரவர் உடல் நிலைக்கேற்ற பத்திய உணவைத் தந்து பராமரிக்கவும் திட்டம் உண்டு.
அயல்நாட்டில் வசிக்கிற இந்தியர்களின் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. அவர்களுக்காகவே 500 வீடுகள் கட்டி காலையில் கண்விழிக்கும்போது சுப்ரபாதம் ஒலிக்கச் செய்து, இரவில் தூங்கச் செல்கையில் மிளகுப்பால் கொடுப்பது வரை எல்லா நிலைகளிலும் பராமரிக்கிற எண்ணம் அரவணைப்பிற்கு உண்டு. நல்ல உள்ளங்களின் நல்லாதரவோடு இந்த நற்பணிகள் நிறைவேறும் என்று நம்புகிறேன்.
Leave a Reply