இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும்

திரு. சுந்தர்லால் பகுகுணா
சுற்றுச்சூழல் போராளி

சுந்தர்லால் பகுகுணா – எண்பது வயதான சுற்றுச்சூழல் போராளி. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் விஷயங்களை எதிர்த்து காந்தீய வழியில் அறப்போராட்ட முறையில் வீரியத்துடன் போராடுபவர். டெஹ்ரி அணையை எதிர்த்து 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். தனக்குத் தரப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதினை வேண்டாம் என்று மறுத்து விட்டவர். இந்த வயதிலும் இந்தியா

முழுவதும் பயணம் செய்து விழிப்புணர்வை வளர்த்து வருபவர். சமீபத்தில் கோவை வந்திருந்த இவரை சாந்தி ஆசிரமத்தில் சந்தித்தோம். இதோ கூப்பிய கைகளும், மலர்ந்த முகமும் கண்களில் – இதழ்களில் – பொங்கும் சிரிப்புமாய் வருகிறார் பகுகுணா.

இன்று இந்தியாவின் இயற்கைச் சூழல் எப்படி இருக்கிறது?

இயற்கை, மனித குலத்தின் பேராசைக்கு இரையாகி வருகிறது. மனிதனின் பேராசை என்கிற கசாப்புக் கடையில் கண்டதுண்டமாய் கூறு போடப்படுகிறது இயற்கை. 1972-ல் யுனெஸ்கோ கூரியரில் ஒரு கேலிச்சித்திரம் வெளியாகியிருந்தது. ஒரு குள்ளன், தன் கக்கத்தில் மரமொன்றை இடுக்கிக்கொண்டு வேக வேகமாக ஓடிக் கொண்டிருப்பான். ஒருவர் தடுத்து நிறுத்தி “எங்கே போகிறாய்?” என்று கேட்பார். “இந்த மரத்திற்கு ஆபத்து! இதைப் பத்திரமாக வைக்க இடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்பான். “என்ன ஆபத்து?” என்று கேட்கும்போது, “சிமெண்ட் சாலை துரத்திக் கொண்டு வருகிறது” என்பான் அவன்.

சிமெண்ட் சாலை என்பது இந்த நுகர்பொருள் கலாச்சாரத்தைக் குறிக்கிறது. இன்று எங்கு பார்த்தாலும் மனிதர்கள் மட்டுமே தென்படுகிறார்கள். மனிதர்களுக்கு சேவகம் செய்யக்கூடிய சில விலங்குகளும், சில பறவைகளும் மட்டுமே உள்ளன. மற்ற உயிரினங்களை மனிதன் அழித்து விட்டான். பலவகைத் தாவரங்கள் காணாமல் போய்விட்டன. நம் தேவைக்கான மரங்களைப் பார்க்கிறோம். இயற்கையான மரங்களைக் காணவில்லை. நதிகள் சுருங்கிக் கொண்டு இருக்கின்றன. 2025-ல் கங்கை காணாமல் போகும் என்று அஞ்சப்படுகிறது.

கங்கை உருவாகக் கூடிய இடம் கோமுகி. அங்கே பகீரதக்கல் என்று ஒன்று இருக்கிறது. கங்கையைக் கொண்டு வர பகீரதன் அமர்ந்து தவம் செய்த இடமாம் அது. அங்கேயிருந்து கங்கை 18 கி.மீ. தள்ளிப் போய்விட்டது.

நான் ஹிமாலய மலையிலிருந்து வருகிறேன். அதை இனி நாம் எத்தனை நாட்களுக்கு “ஹிமாலயம்” என்று சொல்ல முடியுமோ தெரியவில்லை. “ஹிம்” என்றால் பனி. அங்கே பனிப் பொழிவையே காணோம். இதற்கு உஷ்ணப் பெருக்கம் மட்டும் காரணமல்ல. மனிதகுலத்தின் தவறான நடவடிக்கைகளும் காரணம்.

எத்தகைய நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறீர்கள்?

அரசியல்வாதிகளின் அலட்சியம் இதற்கு முக்கியக் காரணம். மேம்பாட்டுத் திட்டங்கள் என்கிற பெயரில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. குறுகிய காலத் திட்டங்களை அவசரம் அவசரமாகக் கொண்டு வந்து அதன் மூலம் மக்களைக் கவரப் பார்க்கிறார்களே தவிர, அதனால் எதிர்காலத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை அவர்கள் உணர்வதில்லை. மக்கள் இந்த விழிப்புணர்வைப் பெறவேண்டும். “நாங்கள் பூமியில் சொர்க்கத்தை உருவாக்குகிறோம்” என்று சொல்கிற அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள், “உங்களால் எவ்வளவு பிராண வாயுவை உருவாக்க முடியும்” என்று கேட்க வேண்டும். அடிப்படைத் தேவையான பிராண வாயுவுக்குப் பற்றாக்குறை ஏற்படும்படி நடந்துகொண்டு எத்தனைத் திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன்?

எழுத்தாளர்களும், கவிஞர்களும் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான புரட்சிகள் எல்லாமே கவிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் தான் முன் மொழியப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்கள்தான் தீர்க்க தரிசிகள் “கவிக்ராந்தி தர்ஷி”. எனவே, அதிகாரத்தில் இருப்பதைப் புகழ்வதல்ல கவிஞர்களும் எழுத்தாளர்களும் செய்ய வேண்டியது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

தண்ணீர் இந்த தேசத்தில் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. இப்போது பாய்கிற கங்கை நதியின் அளவு 1949-ல் பாய்ந்ததை விடவும் 50% குறைவு. தங்கச் சுரங்கம், வைரச் சுரங்கம் மாதிரி தண்ணீரைச் சுரங்கம் அமைத்துத் தேட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நன்றாக மழை பெய்கிற போதுகூட நீரைப் பாதுகாக்க, பராமரிக்க நமக்குத் தெரியவில்லை.

ஒருமுறை அலகாபாத்தில் காந்தியடிகள் ஒரு குவளைத் தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டிருந்தார். அவரிடம் நேரு விளையாட்டாகக் கேட்டார், “பாபுஜி! நம் நாட்டில் கங்கையும் யமுனையும் பிரவாகமெடுத்து ஓடுகிறது. ஆனால், நீங்கள் ஒரே ஒரு குவளைத் தண்ணீரை வைத்துக்கொண்டு முகம் கழுவுகிறீர்களே” என்று. காந்தியடிகள் உடனே திருப்பிக் கேட்டார், “கங்கையும் யமுனையும் எனக்காக மட்டுமா ஓடுகிறது” என்று.

இதற்கு என்ன விதமான தலைமை தேவைப்படுகிறது?

இன்று நம் நாட்டில் மக்கள் தலைவர்கள் இல்லை. அதிகாரத் தலைவர்கள்தான் இருக்கிறார்கள். உலக வரலாற்றில், சுதந்திரப் போராட்டத்தின் முடிவில் அதிகார பீடத்தில் ஏறாமல் வாழ்ந்த ஒரே தலைவர் காந்தியடிகள்தான்.

மக்கள் தலைவர்களால்தான் சுயநலமின்றி, ஒரு இலட்சியத்திற்காகப் பணியாற்ற முடியும். சுதந்திரம் வந்தவுடனேயே காங்கிரசைக் கலைத்துவிட்டு தலைவர்கள் எல்லாம் மக்கள் பணிக்குச் செல்லவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். “பாரம்பரியப் பெருமைமிக்க காங்கிரஸ் இயக்கத்தைக் கலைக்கலாமா?” என்று தலைவர்கள் கேட்டார்கள். “அதன் பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்று வதற்காகத்தான் கலைக்கச் சொல்கிறேன்” என்றார் காந்தியடிகள்.

அன்று அவரின் ஒரேயொரு அறிக்கைக்கு மதிப்பளித்து மக்கள் தங்கள் வேலைகளையும், குடும்பங்களையும் விட்டு விட்டுப் போராட்டத்தில் குதித்தார்கள். இன்று அத்தகைய மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவராவது நம்மிடம் இருக்கிறாரா என்று பாருங்கள்.

இதற்கு அரசியல் ரீதியாக என்ன தீர்வு?

உண்மையான இந்தியா உயிர்வாழ்வது கிராமங்களிலும் சிறு நகரங்களிலும்தான். டெல்லியில் ஆட்சியை நடத்த ஒரு சில துறைகள் இருந்தால் போதும் என்று காந்தி சொன்னதில் அர்த்தமிருக்கிறது. கிராம நிர்வாகத்திற்குக் கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய அதிகார வர்க்கம் வளர்ந்திருக்காது. இன்றைய நம் நிர்வாகச் செலவில் பெரும் பகுதி அதிகார வர்க்கத்திற்கே போதவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைவர்கள் ஏசி அறைக்குள் அமர்ந்து கொண்டு நிர்வாகம் செய்கிறார்கள். மக்களை சந்தித்து சேவை செய்யவேண்டிய அதிகாரிகள் கோப்புகளுக்குள் மூழ்கி விட்டார்கள். எனவே கிராமங்களில் கூடுதல் நிர்வாகம், அதிகாரம் ஆகியவை ஏற்பட வேண்டும்.

காந்தியடிகள் சுடப்படுவதற்கு முதல் நாள் அவருடன் இருந்தீர்களாமே?

ஆமாம்! ஜனவரி 29-ம் தேதி அவரைச் சந்தித்தேன். எங்கள் மாநிலம் அரச நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்தது. அந்த அரசர், தன்னை “பத்ரிநாத்தின் மறுவடிவம்” என்றும், “போலார்னா பத்ரிநாத்” (பேசுகிற பத்ரிநாத்) என்றும் பிரகடனம் செய்து மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கினார். அவரை எதிர்த்து நாங்கள் கிளர்ச்சி செய்தோம். என் தாயார்கூட என்னிடம், “இறைவனின் அம்சமான அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே. உன்னைத் தொழுநோய் பிடிக்கும்” என்றார். நாங்கள் காந்தீய வழியில் அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டோம்.

அந்தக் கிளர்ச்சியை அடக்க வந்த அலுவலர்கள் மேல் மக்கள் கோபம் கொண்டார்கள். அந்த அலுவலர்களை நாங்கள் காப்பாற்றினோம். அந்த அலுவலர்கள் பாதுகாப்புக்காக சுட்டதில் எங்கள் தொண்டர்கள் இருவர் இறந்தார்கள். ஆனால், நாங்கள் அந்த அதிகாரிகளைத் தாக்காமல் எங்கள் போராட்டத்தை நிகழ்த்தி வெற்றி பெற்றோம்.

இந்தத் தகவலை காந்தியடிகளிடம் தெரிவிக்கச் சென்றோம். அவர் மனமகிழ்ந்து “என் அகிம்சைக் கொள்கையை நிலை நாட்டியுள்ளீர்கள். உங்கள் பணி இமாலயப்பணி. அதற்குத் தலை வணங்குகிறேன்” என்று சொல்லி எங்களை ஆசிர்வதித்தார். அவரிடமிருந்து விடைபெற்றுத் திரும்பும் வழியில், மறுநாள் அவர் சுடப்பட்ட செய்தியறிந்தோம். அந்தச் சம்பவம் நம் தேசத்தின் மிகப்பெரிய துரதிருஷ்டம்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்கள் பற்றி?

தொழில்கள், அதில் ஈடுபடுகிற மக்கள் தன்னிறைவு பெறுகிறவிதமாக இருக்க வேண்டும். வேளாண் பொருட்களாகட்டும், வர்த்தகப் பொருட்களாகட்டும், அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதில் தான் பெரிய செலவு ஆகிறது. அந்தப் போக்குவரத்துச் செலவு நுகர்வோர்களின் தலையில்தான் விழுகிறது. பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் பெரிய முறைகளைப் பின்பற்றி பயனில்லாத செலவுகளைப் பெருமளவு குறைத்தாலே ஏழ்மையை அகற்ற முடியும்.

நதிநீர் இணைப்புக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள். இதுபற்றி விளக்க முடியுமா?

முதலில் நதி என்ற ஒன்று இருந்தால்தானே இணைப்பீர்கள். இருக்கிற நதிகளே சுருங்கிக் கொண்டிருக்கிற போது நதிநீர் இணைப்பு பற்றிப் பேசி என்ன பயன்? நதிகளை இணைப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிரான விஷயம். மீன்கள் உங்களைப்போல் கோடைக்காலத்தில் மலைவாசஸ் தலங்களுக்குப் போய்விட்டு மறுபடியும் நதிக்குத் திரும்புகிறதா என்ன?

நதிநீர் இணைப்பால் பல எதிர்மறையான அம்சங்களும் உண்டு. அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனிதன் சுயநல அடிப்படையில் திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருக்கக் கூடாது.

தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்துவது, தண்ணீர் அதிகம் தேவைப்படுகிற இடங்களில் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது, மரங்களை வளர்ப்பது ஆகியவைதான் நீர்வளத்தை மேம்படுத்த மிகவும் சரியான வழிகள்.

இன்று இந்தியா நான்கு தூண்களில் நின்று கொண்டிருக்கிறது. அதிகாரம், பணம், ஆயுதம், அறிவு.

அதிகாரத்திற்குத் தரும் இடத்தை சேவைக்குத் தரவேண்டும். பணத்திற்குத் தரும் இடத்தை சிக்கனத்திற்குத் தர வேண்டும். ஆயுதத்திற்குத் தரும் இடத்தை அமைதிக்குத் தர வேண்டும். அறிவுக்குத் தரும் இடத்தை நல்லெண்ணங்களுக்குத் தர வேண்டும்.

சுற்றுச் சூழலைக் காப்பதற்காக, கடும் உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொண்டுள்ளீர்கள், அது குறித்து?

என் பிறப்பிடமாகிய டெஹ்ரி அருகில் அணை கட்டுவதை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த இயக்கத்தில் இணைந்தேன். 1989-ல் இருந்து இந்த விஷயத்தில் அரசு தலையிட வேண்டித் தொடர் போராட்டங்களை மேற்கொண்டோம்.

1995-ல் 45 நாள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது அரசு, அணை கட்டும் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாய் சொன்னதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால், அரசு தன் உறுதிமொழியைப் பின்பற்றாததால் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். இந்த உண்ணாவிரதம் 75 நாட்கள் நீடித்தது. அப்போதைய பிரதமர், என் கோணத்தில் இந்தத் திட்டத்தை முழுதாக மறுபரிசீலனை செய்ய தனிப்பட்ட உத்திரவாதம் தந்ததால் அந்தப் போராட்டம் 75 நாட்களுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்திய அரசு சுற்றுச் சூழலைக் காக்க உரியவற்றைச் செய்யவில்லை என்பதற்கான என் கண்டனத்தை உணர்த்தும்விதமாக ‘பத்மஸ்ரீ’ பட்டத்தை ஏற்க மறுத்தேன்.

உண்ணாவிரதத்தில் என்னுடன் இணைந்து பங்கேற்கப் பலரும் முன்வந்தனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது ஒரு கோரிக்கைக்கான போராட்டம் மட்டுமல்ல, உள்நிலை வளர்ச்சிக்கான ஆத்ம சாதனையும் கூட. எனவே, பலரை ஈடுபடுத்துவதன் மூலம் அந்தப் புனிதமான விஷயத்தை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்ற விரும்பவில்லை. எனவே, மற்றவர்களைப் பங்குபெற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

நீங்கள் ஈடுபட்டு, இயங்கிக் கொண்டிருக்கிற ‘சிப்கோ’ இயக்கம் பற்றி?

‘சிப்கோ’ என்ற சொல்லுக்குத் தழுவுதல் என்று பொருள். உத்திரப் பிரதேசத்தில் இமாலய மாவட்டங்கள் பலவற்றில் பரவிய இயக்கம் சிப்கோ. மரங்களை வெட்ட வந்தபோது மக்கள் மரங்களைத் தழுவிக் கொண்டு போராடியதால் இந்த இயக்கத்திற்கு ‘சிப்கோ’ என்று பெயர். 1980-ல், இந்த இயக்கத்தின் போராட்டங்களால், அப்போதைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி, இமயமலைக் காடுகளில் 15 ஆண்டுகளுக்கு மரங்கள் வெட்டுவதைத் தடை செய்தார்.

பின்னர் இமாசலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பீஹார், என்று இந்தியாவின் அத்தனை திசைகளிலும் இந்த இயக்கம் பரவி மக்கள் இயக்கமாக நிலைபெற்று நிற்கிறது.

அங்கே வந்த தன் துணைவியாரை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பகுகுணா. “இவர் பெயர் விம்லா. நாங்கள் இருவரும் காந்தியடிகளின் நேரடி சீடர்களின் சீடர்கள். நான் கொடி என்றால், என்னைத் தாங்குகிற கொடிக்கம்பம் விமலா” என்றபடியே எழுந்து கொள்கிறார் பகுகுணா.

“Uncle! What is your message for youth?” (இளைஞர்களுக்கு உங்கள் செய்தி என்ன?) என்று கேட்கிறார் வினு அறம்.

பகுகுணாவின் கண்களில் சுடர் பொங்குகிறது. முகம் தீவிரமாகிறது. ஒரு மந்தகாசப் புன்னகையும் மலர்கிறது. தன் இரண்டு கைகளின் முஷ்டிகளையும் உயர்த்திக் கொண்டு உரத்த குரலில் சொல்கிறார் பகுகுணா “You know? They must revolt!” (அவர்கள் புரட்சி செய்ய வேண்டும்).

வினுவின் வெடிச்சிரிப்பு அறை முழுவதும் எதிரொலிக்கிறது. காந்தீயம் என்கிற காலப் பறவையில் இருந்து உதிரும் இறகு போல் மெல்ல… மிக மெல்ல… அசைந்தசைந்து அறையிலிருந்து வெளியேறினார் பகுகுணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *