பொழுது போக்குவதற்கா? ஆக்குவதற்கா?
மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும்போது பார்க்க லட்சணமாக இருக்கும்; ஆனால் சிரிக்கத்தான் மாட்டார்கள்!
சிலருக்கு நகைச்சுவையே பிடிக்காது. நகைச்சுவையாக பேசவும் வராது. அடுத்தவர் நகைச்சுவை சொன்னால், அதை ரசித்து சிரிக்கவும் தெரியாது. சிரிப்பவரைப் பார்த்து, “என்ன….? சும்மா பல்லை பல்லைக் காட்டிக் கொண்டு….?” என்று எரிச்சல்படவும் செய்வார்கள். பேசும்போதே நகைச்சுவையாக பேசுபவர்களுடனும் வாய்விட்டு சிரிப்பவர்களுடன் எவரும் மகிழ்ச்சியாக பழகுவார்கள்.
நகைச்சுவையில் ஓர் உளவியல் கருத்து உண்டு. எந்த நகைச்சுவைக்கு ஒருவர் சிரிக்கிறார் என்பதே. அவர் யார் என்பதைக் காட்டிவிடும்! ஒவ்வொருவர் சிரிக்கும்போதும், சிரிப்புக்கான காரணத்தை அல்லது கருத்தை கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். எளிமையாக புரிவதற்கு ஒன்று சொல்லலாம்! குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று கூடி, ஓடியாடி விளையாடும். அப்போது ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால், மற்றவை விழுந்து விழுந்து சிரிக்கும். குழந்தைப் பருவத்தின் இந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வயதான பருவத்தில் இருக்கும் ஒருவர் தவறிவிழுந்தால். உடன் இருக்கும் நண்பர்கள் பதறிவிடுவார்கள்.
குழந்தையாக இருந்தபோது நகைச்சுவையாக இருந்த நிகழ்வு பக்குவப்பட்ட நிலையில் வருத்தத்திற்குரியதாகி விடுகிறதல்லவா? அந்த நிலையிலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?
வாழ்வில் நகைச்சுவை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது. தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிக் கிடந்த நமக்கு முழுக்க சினிமாவுக்காகவே ஒரு தொலைக்காட்சி வந்து ‘non stop கொண்டாட்டம்’ என்கிறது. ஒரு F.M.ரேடியோ, “கேளுங்க; கேளுங்க; கேட்டுக்கிட்டே இருங்க.” என்றது. இவர்களையெல்லாம் தூக்கியடிக்க ’24 மணி நேரமும் சிரிச்சுக்கிட்டே இருங்க’ என்று தொலைக்காட்சிகள் வந்துவிட்டன, கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.
மறுபிறவியே எனக்கு வேண்டாம்’ என்று எல்லா ஆன்மிகச் சிந்தனையாளர்களும் சொன்ன நிலையில், ‘ நான் மீண்டும் மனிதனாகவே பிறக்க விரும்புகிறேன் இந்த மனிதகுலத்துக்கு நான் ஆற்றவேண்டிய பணிகள் இன்னும் நிறையவே உள்ளன”. என்றார் வீரத்துறவி விவேகானந்தர். உழைப்பதற்கும் கடமையைச் செய்வதற்கும் வாழ்நாள் போதவில்லை என்றேஎல்லா சாதனையாளர்களும் எண்ணுகிறார்கள். பொழுது போதாமல் தவிக்கிறார்களேயன்றி பொழுது போகாமல் தவிக்கவில்லை. ஆனால் வளரும் தலைமுறைக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்?
பொழுது என்பது போக்குவதற்கா? உழைத்துக் களைத்தவனுக்கு தேவைப்படுவது கூட ஓய்வுதான். அவன் தொலைக்காட்சி பார்ப்பதோ; பாட்டு கேட்பதோ; இதழ்கள் படிப்பதோ அல்லது தூங்குவதுகூட, வேலை அழுத்தத்திற்கிடையில் ஒரு மாற்றத்திற்குத் தானே தவிர, பொழுதைப் போக்க முடியாமல் செய்யும் காரியமல்ல.
‘காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது’ என்று பள்ளிகளில் சொல்லித் தருகிறோம். கடிகாரத்தில் ஒவ்வொரு நொடிக்கும் நகரும் முள் நம் வாழ்நாட்கள் கரைந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. நாள்காட்டியில் தினமும் கிழிக்கப்படுவது காகிதமல்ல; நமது வாழ்நாட்கள்தான். நேரத்தை மதிக்காதவனை நேரம் மதிப்பதில்லை. அவனைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, அது போய்க்கொண்டே இருக்கிறது.
இத்தனை மணிக்கு வகுப்புகள் தொடங்கும்; இத்தனை மணிக்கு இடைவேளை பிறகு உணவு நேரம்; இத்தனை மணிக்கு வகுப்புகள் முடியும்’ என்றெல்லாம் பள்ளிகளில் வகுத்து வைத்ததின் நோக்கமே நேரத்தின் அருமையை இளமையிலேயே புரிய வைக்க வேண்டும். என்பதற்குத்தான், ‘5 நிமிடங்கள் தாமதமாகப் பள்ளிக்கு வந்தாலும் தண்டனை’ என்றவிதி வைத்திருப்பதும் அதனால்தான்.
ஒரு பக்கம் நேரத்தின் அருமையை சொல்லிக்கொண்டே அதை வீணடிப்பதற்கான சூழல்களை இளைஞர்களுக்கு உருவாக்கி விட்டோம். ‘சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்றவிளம்பரம் அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டிக்குள், அடைக்கப்பட்டே சிகரெட் விற்கப்படுறது. அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டேதான் சிகரெட் பிடிக்கிறார்கள். ‘மதுப்பழக்கம் உடல் நலத்துக்கும் நாட்டுக்கும் கேடு’ என்று சாராயக் கடைக்கு வெளியே எழுதிவைத்து விட்டே தடபுடலாக சாராய வியாபாரம் நடைபெறுகிறது. அதேபோன்று ‘நேரத்தை வீணடிக்கக் கூடாது’ என்று சொல்லிக் கொண்டே பொழுதை வீணடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு நடந்துவிட்டன..
நாடு முழுக்க இருக்கும் F.M. ரேடியோக்களின் எண்ணிக்கை அதிகம். சென்னையில் மட்டுமே இதன் எண்ணிக்கை பத்தினைத் தொட்டுவிட்டன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியார் வானொலிகள் நிறையவே இருக்கின்றன. இவை எந்த நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன? 24 மணி நேரமும் திரைப்பட பாடல்கள் ஒலிக்கின்றன. “எங்களுக்கு இந்த பாட்டு போடுங்கள்” என்று 24 மணி நேரமும் மக்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
பாட்டுக்களுக்கிடையில் பேட்டிகளும் நடக்கும். யாரைப் பேட்டி காண்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அப்போது புதிதாக வந்த ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரில் தொடங்கி ‘லைட்மேன்’ வேலை செய்தவர் வரை அந்தத் திரைப்படம் தயாரிக்கும் போது நிகழ்ந்த அனுபவத்தை சொல்வார்கள். நமது தமிழ்நாட்டுச் செல்வங்களும், அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசி மகிழ்ந்து, பிறந்த புண்ணியத்தை அடைகிறார்கள்.
‘ரேடியோவில் வேறு எதுவும் வருவதில்லையா?’ என்று கேட்காதீர்கள். இடையிடையே உலகில் எங்கேயாவது எவராவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், அவர்கள் எடுத்த விக்கெட் மற்றும் ஓட்டங்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக கூறுவார்கள்.
குறுந்தகடுகளில் வரும் திரைப்பாடல்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஓடும் பேருந்துகளில் அலறுகின்றன. வெயிலின் உக்கிரத்தால் வியர்வையில் குளித்து, கசகசத்து உடல் சலித்து பசியால் களைத்து சோர்ந்து நின்றவாறு கூட்ட நெரிசலில் பயணிக்கும் மக்களின் காதுகளில் ‘நிலவு குளிர் நான் நீ போர்வை’ என்றெல்லாம் அலறல் சத்தம் விழுந்து கொண்டேயிருக்கிறது.
பாடலின் பொருள் உணர்ந்து ரசிப்பது என்பதெல்லாம் கண்ணதாசனோடு போயிற்று. வைரமுத்துவின் வைர வரிகள் மீது இசைக்கருவிகளின் கூச்சல் வந்து உட்கார்ந்து விட்டது. அதனால்தானோ என்னவோ பாடலாசிரியர்கள் தங்களை அதிகம் சிரமப்படுத்திக் கொள்வதேயில்லை. சில பாடல் வரிகளின் பொருளை அறிந்தபோது “இசை கருவிகளின் ஆதிக்கமே நல்லதுதானோ…..” என்றேஎண்ணத் தோன்றியது.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு கொலை, மக்களை உலுக்கியது. காலையில் தனது மாமியார் மற்றும் குழந்தையுடன் கடைக்குச் சென்றஇளம்பெண் அவர்கள் இருவரையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் முற்பகலில் வீடு திரும்பினார். நண்பகல் நேரத்தில் வீடு திரும்பிய மாமியாருக்கும் குழந்தைக்கும் பேரதிர்ச்சி. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். கிடந்த கோலம் பாலியல் வன்முறைக்கு அவள் ஆளானதைக் காட்டியது.
ஓரிரு நாட்களில் கொலையாளியைக் கண்டுபிடித்துக் கைது செய்ததாகக் காவல் துறைசொன்ன விபரம் செய்தித்தாள்களில் வந்தது. கொலைச் செய்தியில் மனத்துயர் கொண்டிருந்த மக்கள் கொலைக்கான காரணத்தையும் சூழலையும் காவல்துறைசொன்னபோது வேறுவிதத்தில் கவலையும் அதிர்ச்சியும் கொண்டார்கள். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்னரே வேறு ஒருவனுடன் தொடர்பு இருந்தது; திருமணத்திக்கு பின்னர் அவனை எங்கோ ஒரு பொது இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உறவு புதுப்பிக்கப்பட்டது. வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருக்கும்போது, தன் வீட்டுக்கே அவனை வரவழைத்தாள். உறவு மேலும் வலுப்பட தான் மட்டுமே வீட்டில் தனியாக இருக்கும் சூழல்களை அவளே வலிந்து உருவாக்கிக் கொண்டாள். அப்படிப்பட்ட ஒரு நாளின் நிகழ்வுதான் கொலையில் முடிந்துள்ளது.
செய்தித்தாளில் இந்த செய்தியைப் படித்தபோது மனம் சங்கடப்பட்டது. அன்று மாலையே, தற்செயலாக கேட்க நேர்ந்த ஒரு திரைப்படப்பாடல், திகைத்து ஒரு கணம் செயலிழக்க வைத்தது. “டாடி மம்மி வீட்டில் இல்ல! தடைபோட யாரும் இல்ல!? விளையாடலாமா? உள்ள வில்லாளா…..?” என்று அந்தப்பாட்டு தொடங்கியது. முறையற்றஉறவுக்கு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக பெண் அழைப்பதே பாடலின் பொருள். சமூகத்தில் நடக்கும்போது தண்டனைக்குரிய குற்றம் ஒன்று திரைப்படத்தில் பாடலாக்கப்பட்டு நடிக்கப்படும் போது நியாயமாகி விடுமா? இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்; நடித்தவர்; தயாரித்தவரையெல்லாம் விடுங்கள்! இந்தப் பாடலை எழுதியவருக்குக் கூடவா இதன் பொருள் தெரியாது? இல்லை, பொருள் தெரிந்தும் பொறுப்பு தெரியாமல் இப்படி எழுதுகிறார்களா? மேலே கூறிய கொலை நட.ந்த சூழலுக்கும், இப்பாடலின் அழைப்புக்கும் என்ன வேறுபாடு உள்ளது? இந்த குறிப்பிட்ட பாடலின் அடுத்தடுத்த வரிகளும் மிகக் கொச்சைதான். இந்த அழகில் பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் செல்பேசிகளில் ‘ரிங்டோ’னாகவே இந்தப் பாடல் ஒலிக்கிறது.
இந்த ஒரு பாட்டு ஓர் உதாரணத்துக்குத்தான். இத்தனைக்கும் இந்தப் பாடலின் ராகம் மிக நன்றாகவே இருக்கிறது. பொருளும் காட்சி அமைப்பும் கண்ணியத்துடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்படி எத்தனை பாடல்கள்….? ‘நீங்க ஏன் சார் பாட்டுக்கு அர்த்தத்தையெல்லாம் பார்க்கிறீங்க….?’ என்று நம்மைக் குற்றவாளியாக்கி நமக்கே வருகின்றன. இந்த பாடல்கள்தான் தெருவெங்கும் ஒலிக்கின்றன; குடும்பங்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் ஒலிக்கின்றன; ஆண்களும் பெண்களும் நண்பர்களாக பயணிக்கும் கார்களில் ஒலிக்கின்றன; செல்பேசிகளில் ஒலிக்கின்றன; ஆஸ்கார் தமிழனைத்தந்து பெருமைகண்ட இனம்தான் நாம்; ஐயமில்லை. அப்பாவித் தமிழர்கள் பலியாவதும் கவலை தருகிறது. வீட்டுக்கு வீடு 24 மணி நேரமும் இந்தப் பாடல்கள் ஒலிப்பதோடு, கவர்ச்சியான உடைகளோடு (ஆபாசம் என்று இதை சொல்லக் கூடாதாம். சொன்னால், நமக்கு பார்வை சரியில்லையாம்!) அருவறுக்கத்தக்க அங்க அசைவுகளோடு நாயக நாயகிகள் வரைமுறையின்றி குதிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாவதை எண்ணி வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும்? எந்த நேரமும் இப்படிப்பட்ட காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் தோன்றுகின்றன. தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், வயதில் மூத்துத் தளர்ந்தோர்களும் இருக்கும் வீடுகள் என்ன கதியாகும்?
தமிழில் இப்போது எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளன என்று எண்ணுவதே சிரமமாக இருக்கிறது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு தொலைக்காட்சி வந்து விட்டிருக்கும். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு தொலைக்காட்சி தொடங்க ஆசை வந்துவிட்டது. தொலைக்காட்சியில் தோன்றுபவர்களுக்கு அரசியல்வாதியாக ஆசை வந்துவிட்டது!
‘கனவு காணுங்கள்’ என்று இளைஞர்களை அழைத்தார் அப்துல்கலாம். நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே, இப்படியும் சொன்னார்; “நீ தூங்கும் போது காண்பதல்ல கனவு. உன்னை எது தூங்க விடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு”.
தனது எதிர்காலத்தைப் பற்றி; தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றி; தனது நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி ஒவ்வொரு இளைஞரும் தூக்கமின்றி எண்ண வேண்டும் என்பது அவரது அறிவுரை.
“தூங்காமல் இரு, ஆனால் எதையும் சிந்தித்து விடாதே; 24 மணி நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்து, நாயக நாயகியாக உன்னை எண்ணி கனவுலகிலேயே இரு!” என்பதுதான் இளைஞர்களுக்கு இன்று நாம் தரும் செய்தி.
நம்மை மீட்டெடுக்கும் மேய்ப்பன் எப்போது வருவான்…..?
Leave a Reply