உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான மனநல மருத்துவச் சிந்தனைத் தொடர்…
டாக்டர். எஸ். வெங்கடாசலம்
டாக்டர். V.ஆவுடேஸ்வரி
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், “உன்னையே நீ அறிந்துகொள் (Know Thyself)” என்றார். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்துகொண்டால் அதுவே தலை சிறந்த ஞானம் என்று கருதினார். இயற்கைமுறை மனநலச் சிகிச்சையாக உலகில் பிரபலமாகி வரும் ‘பிரிட்டன் மலர் மருத்துவத்தின்’ தந்தையான டாக்டர். எட்வர்டு பாட்ச் அவர்கள்,
“உன்னை நீயே நலமாக்கிக் கொள் (Heal Thyself)” <p align=”right”><!–more>>மேலும்…–></p>என்றார். மனிதனின் பல பிணிகளுக்கு அடிப்படைக் காரணம் மனமே என்றும் மனதின் எதிர்மறைப் போக்குகளே என்றும் கண்டறிந்தார். எனவே, அவரவரின் ஆரோக்கியமற்ற மனநிலைகளை அவரவரே அறிந்து சரி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவ்விரு சான்றோரின் மொழிகளும் விருப்பங்களும் ஒரே அலை வரிசையில் அமைந்துள்ளதை நாம் அறிந்துணர முடியும்.
உடலும், உணர்வுகளும், அறிவும் முதிரும் போது நம்மை நாமே அலசி ஆராய்ந்து அறியவும், நம்மை நாமே நலமாக்கிக் கொள்ளவும் இயலும். மனித நந்தவனத்தின் வண்ண மலர்களாய் பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் தம்மைத் தாமே அறிய முடியுமா? தம்மைத் தாமே நலமாக்கி கொள்வது சாத்தியமா? முடியாது நண்பர்களே! மனதின் ஆழ்கடல் மர்மங்களை, புதிர்களை, மனதின் விசித்திர இயல்புகளை, மனதின் நுட்பமான செயல்பாடுகளை பெரியவர்களே அறியமுடியாமல் திணறும்போது பிஞ்சுக் குழந்தைகள் என்ன செய்யும்?
குழந்தைகள் பள்ளிப்படங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில் அக்கறை செலுத்தும் பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும் சிறந்த மனநலத்தை, பண்புகளைப் பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். படித்த பாடங்கள் வாழ்க்கைக்கு பயன்படுகிறதோ இல்லையோ, சிறந்த பண்புகள் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்யும்.
வளரும் குழந்தைகளிடம் எதிர்மறையாய் காணப்படும் குணங்களும் செயல்பாடுகளும் என்ன என்பதை பெற்றோரே உற்று அறிய முடியும். பயம், பிடிவாதம், பொறாமை, சுயநலம், கண்மூடித்தனமான கோபம், கீழ்ப்படியாமை என எண்ணற்ற எதிர்மறை குணங்கள் குழந்தைகளிடம் அமைந்திருக்கக்கூடும். அவற்றைச் சீர்படுத்த பெற்றோரும் ஆசிரியர்களும் அன்புடன் கூடிய பக்குவமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
‘ஐஸ்வர்யா’ என்னும் சிறுமிக்கு 6 வயது. 2 1/2 வயது முதல் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி என்று பெரிய பெரிய படிப்புகளை எல்லாம் படித்து முடித்து முதலாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறாள். மூன்றாண்டுகளாகச் சென்று அந்த பள்ளிக்கு இப்போது போக மறுக்கிறாள், பயப்படுகிறாள், அழுகிறாள், அவளது மாற்றத்துக்கு காரணத்தை அவளால் கூற முடியவில்லை. வற்புறுத்தி அவளைக் கூட்டிச் சென்று வகுப்பு வாசல் வரை உடன் சென்று விட்டு விட்டுத் திரும்பும் அப்பாவிடம், “சீக்கிரமா வந்து என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கப்பா!” என்று விழிகள் கலங்கி மனம் உடைந்து கூறுகிறாள். அப்பாவின் தைரிய அறிவுரைகள் அவள் செவிக்குள் விழவில்லை. “சரிம்மா, நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்” என்ற அப்பாவின் கடைசி சொற்கள்தான் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கிறது.
இதை வீட்டு நினைவுத் துயர் (Home sickness) என்று எடுத்துக் கொள்வதா? கோடை விடுமுறையில் விருப்பம் போல உல்லாசமாக இருந்து விட்டுப் பள்ளிக்குச் செல்வதால் ஏற்பட்ட இயல்பான மனத்தடை என்று கருதுவதா? அல்லது அவள் மனதை அச்சுறுத்திய வேறு சூழல் பள்ளியில் உள்ளதா? இப்படி பலகோணங்களில் சிந்தித்து அப்பாவிடம் விசாரிக்கும்போது ஒரு செய்தி துருப்புச் சீட்டாய் கிடைத்தது.
பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் ரிஷிகேஷ் செல்லத் திட்டமிட்டு, ஐஸ்வர்யாவிற்கு 10 நாட்கள் விடுமுறை கேட்டுத் தலைமையாசிரியரை அவளது அப்பா அணுகியிருக்கிறார். அவர் கோபத்துடன் மறுத்து விட்டார். இதைக் கேட்டதும் அப்பாவின் அருகில் பதுமை போல நின்று கொண்டிருந்த சிறுமி ஐஸ்வர்யா கலக்கமடைந்து விட்டாள். அப்பா தலைமையாசிரியரிடம் மிகவும் மன்றாடுகிறார். “இவளது அண்ணன்……….மெட்ரிகுலேசன் பள்ளியில் 6ஆம் வகுப்புப் படிக்கிறான். அங்கு பிரின்சிபாலைச் சந்தித்து விடுமுறை கேட்டபோது அவர் சம்மதித்துவிட்டார். அதற்குப்பின் தான் நாங்கள் டிக்கட் ரிசர்வ் செய்தோம். இவளுக்கு நீங்கள் அனுமதி மறுத்தால் இவளை மட்டும் எப்படி வீட்டில் விட்டு விட்டு நாங்கள் போக முடியும்? அவசியம் எங்களோடு அழைத்துத்தான் போக வேண்டியிருக்கும். முழு ஆண்டு தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே திரும்பி அவள் தேர்வுக்கு தயாராகக் கூடிய அளவுக்கு செய்து விடுகிறோம். தயவு செய்து குழந்தைக்கு அனுமதி தாருங்கள்”.
சிறுமியின் தந்தை கெஞ்சிக் கேட்டும் பயனில்லை. தலைமையாசிரியர் மீண்டும் உறுதியான குரலில் மறுத்ததோடு, “நீங்கள் இவளைக் கூட்டிக் செல்வதால் ஏற்படும் பின்விளைவுகளுக்காக வருத்தப்படவேண்டியிருக்கும்” என்று கடுமையாக எச்சரிக்கிறார். அவரது எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு ரிஷிகேஷ் பயணத்தை இனிதே முடித்துத் திரும்பினர் ஐஸ்வர்யா குடும்பத்தினர்.
ஆயினும் தலைமையாசிரியரின் அறையில் நடந்த சம்பவம் சிறுமியின் மனதில் ஆழப்பதிந்து மிகவும் பாதித்திருக்கிறது. பள்ளிக்கு வரும் போதெல்லாம், தலைமையாசிரியர் எதிர்ப்படும் போதெல்லாம். ஒருவித பயமும், பீதியும் கவ்விக் கொள்கிறது. இதிலிருந்து மீள மிமுலஸ், (MIMULUS) ராக்ரோஸ் (ROCK ROSE) என்ற இரண்டு மலர் மருந்துகள் சில நாட்கள் கொடுக்கப் பட்டது. அதன்பின் அவளது மனநிலையில் நல்ல மாற்றம் காணப்பட்டது. பயமும் பீதியும் வெயில் பட்ட பனிபோல நீங்கிவிட்டது. புத்துணர்வோடும், உற்சாகத்தோடும் பள்ளிக்குப் போகிறாள்.
இத்தகைய குழந்தைச் செல்வங்களுக்கு முன் மாதிரியாக (ROLE MODEL) வாழ்ந்து காட்ட வேண்டிய பெரியவர்களிடம் எதிர்மறை மனோபாவங்கள் அமைந்திருக்குமானால் அவர்களை சீர்செய்யவும் மலர்மருந்துகள் அற்புதமாய் பயன்படும். மனிதர்களுக்காகத் தான் விதிமுறைகளே தவிர விதிமுறைகளுக்காக மனிதர்கள் இல்லை. விதிமுறைகளை எந்திரமயமாய் கடைப்பிடிக்கும் தலைமையாசிரியர் போன்ற இறுக்கமான நபர்களுக்கு ‘ராக்வாட்டர்’ (ROCK WATER) என்னும் மலர்மருந்து தேவைப்படும். அன்றாட வாழ்வில் சில விதிமுறைகள் சடங்கு சம்பிரதாயங்களைக் கறார் தன்மையோடு கடைப்பிடிப்பதால் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுபவர்களுக்கு ‘ராக்வாட்டர்’ உதவும். அதிகார மனோபாவத்தோடும், முரட்டு சுபாவத்தோடும் அடக்குமுறைகளைக் கையாள்வது தங்கள் எண்ணத்தைப் பிறரிடம் திணித்து ஆதிக்கம் செலுத்துவது போன்ற மேலாதிக்க மனப்பான்மையை மாற்ற ‘வைன்’ எனும் மலர்மருந்து பயன்படும். அதிகார மனப்பான்மையும், அகம்பாவமும் வைன் மலர்மருந்து மூலம் மாற்றப்பட்டு அன்பான, கனிவான மனநிலை மலரும்.
ஒரு தெருவில் பாம்பு புகுந்துவிட்டதாக யாரோ சொல்லி தெரு முழுவதும் பரபரப்பாகி விட்டது. ஒரு வீட்டிலுள்ள பெண்மணி தன் காலில் ஏதோ கடித்தது போல உணர்ந்ததும், பாம்புதான் கடித்துவிட்டது என்று நம்பி பயந்து அலறினார். எல்லோரும் திரண்டு வந்தனர். பாம்பு தென்படவில்லை. அப்பெண்ணின் கால்பகுதியில் கிள்ளிப் பார்த்தனர். வலிக்கவில்லை. மிளகாயைக் கொடுத்துக் கடிக்குமாறு கூறினார்கள். மிளகாயின் காரமும் தெரியவில்லை. அப்படியென்றால் பாம்பு விஷம் ஏறிவிட்டதோ எனப்பயந்து அவளை மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றனர். உண்மையில் பாம்பு கடிக்கவுமில்லை. ரத்தத்தில் நஞ்சு கலக்கவுமில்லை என்பது மருத்துவமனை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மனதில் ஏற்பட்ட பயம், பீதி, திகில் உடலையும் பாதித்து நிலைகுலையச் செய்து விட்டதால் உடல் இயக்கம் சமநிலையை (HOMOEOSTASIS) இழந்து, கிள்ளும்போது வலிக்காமலும், காரம் உண்ணும்போது காரம் தெரியாமலும் இருந்துள்ளது. மனம் பாதித்ததால் உடலும் பாதிக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. பயம் எனும் நோய் பெரியவர்களையே படாதபாடுபடுத்தும்போது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
பயம் எனும் நஞ்சு குழந்தை மனங்களில் கலக்கும் (கலக்கப்படும்) போது மனநலம் சீர்குலைந்து பின் உடல்நலமும் பாதிக்கிறது. எண்ணற்ற குழந்தைப்பருவ நோய்களுக்கு மருத்துவ உலகம் காரணம் கண்டறிய முடியாமல் திகைத்து நிற்பதன் காரணம் இதுதான். மருத்துவமனைச் சூழலை, மருத்துவர்களை, ஊசி மருந்துகளைப் பார்த்தாலே பீதியுறும் குழந்தைக்கு அதே மருத்துவமனை எப்படி முழுநலம் தரமுடியும்?
பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் உணர்வு எழுச்சிகள், மன அழுத்தம், பயங்கள், குற்ற உணர்வுகள், எரிச்சல், கோபதாபங்கள், அவமானங்கள் எல்லாம் ஏற்படுகின்றன. இத்தகைய மனநலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் மலர் மருந்துகளுக்கு உண்டு.
நம்மில் பெரும்பாலோர் மரணத்தைவிட வாழ்க்கையைப் பற்றியே, வாழ்வின் சிலபல நிகழ்வுகளைப் பற்றியே, மிகவும் அச்சம் கொண்டவர்களாய் இருக்கிறோம். “மனித மனதின் மிக மோசமான அழிவுசக்தி, பயம்” என்றார் அறிஞர் டோரத்தி தாம்சன் (The most dangerous element in human mind is fear – Dorthy Thomson) புயல்வீசும்போது கூட மனம் கலங்காமல் வாழ்க்கைக் கப்பலைச் சரியான திசையில் செலுத்தக் கூடியவர்களாய் இருப்பவர்களே வாழத் தகுதியானவர்கள். நம் மனங்களையும் நம் பிள்ளைகளின் மனங்களையும் வலிமையாக்கவும், நலவாழ்வு மற்றும் நல்வாழ்வுக்கான தகுதி பெறவும் மலர்மருந்துகளைத் துணைகொள்வோம். பயங்களைப் பயந்தோடச் செய்வோம்.
(சிந்தனைகள் தொடரும்)
Leave a Reply