களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்

-அமரர். பூ. சொல்விளங்கும் பெருமாள்

ஒருவருக்கு நாலணா என்று தொடங்கிய சந்தா, சிறிது சிறிதாக வளர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூபாய் இருபது என வளர்ந்துவிட்டது. பலர் இப்போது சின்னாவைப் பார்த்துப் பேச, அறிவுரை கேட்க வர ஆரம்பித்து விட்டார்கள். கடைக்குப் புறப்பட்டுப் போனபோது எதிர்த்தாற்போல் சோணை வந்தான்.தம்பி ஓரளவு எல்லாரும் களஞ்சியத்துல சேந்து சின்னச் சின்னச் நன்மையடைஞ்சிக் கிட்டிருக்காங்க, உன் வீட்டுக்காரி ஏன் ஒதுங்கியிருக்கா?

விடுக்கா, நான் படுறபாடு நாய் படாப்பாடு, அஞ்சு வட்டிக்குக் கடன வாங்கிக்கிட்டு அஞ்சி அஞ்சி ஓடிட்டுக் கெடக்கேன். அவ சொன்னாக்கா, ஆனா முடியல”ஏன் தம்பி, நான் படுறபாட்டவிடவா நீ பட்டுடற. அரை வவுத்தக் கழுவுனாலும் மூச்சு முட்டத் திண்ணாலும் நம்ம கதைய ஓட்டிட்டுத்தான் இருக்கோம். கொஞ்சம் கையப்பிடிச்சு, குடிக்காம கொள்ளாம இருந்தியன்னா ரொம்ப நல்லா வந்திரும் தம்பி!

அப்டீங்கறே?
முதல்ல ரொம்ப கொறைஞ்ச வட்டிக்குக் கடன் வாங்கி, அஞ்சி வட்டி, மூணு வட்டிக் கடன அடை; கொஞ்சம் மூச்சு விடுற மாரித் தெரியும். மாசா மாசம் சேமிக்கிறோம்கிறது கட்டாயமான உடனே, நம்ம அறியாமலே தொகை வளரும்ல; இம்புட்டுத் தண்ணி ஊத்துறோம் எம்புட்டு உசரம் வளருது தென்னமரம்?’சேந்துருவம்க்கா; கடன் என்ன கடன், எப்பவும் இருக்க சனியந்தான; நூத்தியொண்ணு; அம்புட்டுதேன்

சோணை, இதுல சேந்தவுடனே கோபுரத்துல எறி கொடியக் கட்டிருவோம்னு கனவு கண்டிராத; நான் அதே குடிசையிலதான் இருக்கேன்; பாடு பட்டாத்தான் கஞ்சி
ஆனா ஒரு நம்பிக்கை; நமக்குத் தொணையா நூறு பேரு இருக்காகன்னு ஒரு தெகிரியம்; மித்த ஆளுக மத்தியில ஒரு மருவாதி; மூஞ்சிக்கி நேர கேவலமா சாதி பேசாத ஒரு கவுரவம்; நாலு மக்க மனுச பழக்கம்; சில்லறை சில்லறையா கடன் அடைஞ்சி வர்ற சந்தோசம்; எல்லாத்துக்கும் மேலா ஒத்துமை’எக்கோ, அடுத்தாப்ல நீ ஓட்டுக்கு நிக்கலாமுக்கோ!’ என்று கூறிக்கொண்டு சோணை போனான். ஆனால், அத்தனை விதைகளும் அவனது இதய வயலில் விழுந்தன.
எக்கோ உன்னைத் தேடி டகுடு மோட்டாருல ரெண்டு பேர் வர்றாங்க விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று எண்ணிய அவள் பக்கத்தில் வெள்ளை பேண்ட் சட்டை போட்ட இரண்டு பேர் வந்தார்கள்.
அம்மா, சின்னப்பிள்ளை?
நாந்தான், வாங்கய்யா
மருத்துவ சோதனைக்குன்னு சொன்னீங்களாம்
ஆமாய்யா, இங்கிட்டு எல்லாம் குடிசைகதான்; ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில வச்சிப் பாத்துக்கலாம். கொழுவங்குளத்துல பண்ணுனமாரி பண்ணணும்’
இங்க இருக்கிற வீடுகள்ல சொல்லி, நாளைக்குப் பத்து மணிக்கு இந்த வீட்டுத் திண்ணையில கூட வச்சிப் பாத்திடலாம். டாக்டர், இரண்டு நர்ஸ் வருவாங்க; நீங்க எல்லாருட்டையும் சொல்லிடுங்க’மறுநாள் காலை ஒன்பது மணிக்கே மந்தையில் கைக்குழந்தைகளோடு பெண்ணும் ஆணும் குழுமிவிட்டனர். ஒரு வேனில் டாக்டர் குழுவினர் வந்தனர்.
‘சின்னப் பிள்ளை?
‘நாந்தான்யா’
டாக்டருக்கு வியப்பாக இருந்தது. கழுத்தில் கையில் காது மூக்கில் நகை என ஒன்றுமில்லை. கசங்கிய கண்டாங்கிச் சேலை கரண்டைக் காலுக்கும் மேலே நின்றது; அள்ளி முடிந்த கொண்டை, பாறிய, எண்ணெய் அறியாத தலை; முகப் பூச்சோ ஒப்பனையோ இல்லாத சமூகத் தொண்டர்!’அம்மா, உங்க வீடு?’
‘அதோ’ என்று சிரித்தார்.
டாக்டருக்கு வியப்பு! நான்கு பக்கமும் கையினால் பதைத்து வைத்த மண்சுவர்; சுவரைத் தாங்கக் கருவேலங் கம்புகள்; அரையடி உயர இரண்டடி நீள ஒட்டுத் திண்ணை; படலைக் கதவு உள்ள குடிசை! இந்த அம்மையாருக்குக் கீழ் எத்தனை நூறு உறுப்பினர்கள்!
‘டாக்கிட்டர் சாரு, நீங்க வந்து வைத்தியம் பாக்கது சந்தோசம்; ஆனா எங்க புள்ளைகளுக்குச் சின்னச் சின்ன பயிற்சி குடுத்தீகன்னா, ஒரு ஆத்திர அவசரத்துக்கு மொத ஒதவின்னு அன்னைக்கு களஞ்சியத்துல சொன்னாக, அந்தமாரி பண்ணிட்டு, முடியாத லெக்குல ஒங்கள்ட்ட கூட்டியாரலாம்”கண்டிப்பா செய்வோம்மா, நீங்க சொல்லும்போது உறுதியா, இங்க உள்ள பிள்ளைகளுக்கு முதலுதவிப் பயிற்சியும், சிறு சிறு மருந்து கொடுக்கிற பாதுகாப்பான பயிற்சியும் கொடுப்போம்”.மருத்துவ முகாம் தொடங்கிவிட்டது. தோல் வியாதி, கண் நோய்கள், சுற்றுப்புறச் சூழல் கேட்டால் வரும் தொற்று நோய்கள், போன்ற பலவகையான நோய்களுக்கு டாக்டர் ஆலோசனை வழங்கினார்.பெண்களின் சிக்கல்களுக்கு கூட வந்த நர்சுகள் நல்ல விளக்கங்கள் கூறினர்.மூன்று மணியளவிற்கு முகாம் முடிந்தது. ‘தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இதே இடத்திற்கு ஒவ்வொரு மணி நேரம் வருவோம். நீங்கள் ஒரு கவலையும் கொள்ள வேண்டாம். ஏதாவது சிக்கல் என்றால் திருமதி சின்னப்பிள்ளை அம்மாவிடம் சொல்லுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்றார் டாக்டர். வந்த குழு வேனில் ஏறிப் போய்விட்டது.
சின்னாவுக்கு நல்ல பெயர். ‘எம்புட்டு பெரிய டாக்கிட்டரு பக்கத்துல சரிக்குச் சமமா இருந்து பேசுறான்னா சொம்மாவா?’
‘நம்ம கெராமத்துக்கே ஒரு கெத்து தானே’
ஆளாளுக்கு இப்படிப் பேசப்பேச, அரை குறையான சந்தேகத்தோடு இருந்த பலர் களஞ்சியத்தில் சேர்ந்தனர்.
சின்னா வீட்டுக்கு வந்தாள். இளமதி மண்ணெண்ணெய் விளக்கில் படித்துக் கொண்டிருந்தாள்.’இளமதி! இன்னிக்குப் பாத்தேல்ல அந்த டாக்கிட்டரு மாரி நீ படிச்சி மேல வரணும் என்ன? உன்னைத் தானம்மா நம்பியிருக்கேன். நம்ம ஊரு சனங்களுக்கு ஓசியிலேயே மருந்து பாக்கணும்”நல்லா படிக்கேன்மா, இந்தக் கணக்குத்தேன் செத்த டக்கடிக்குது; மித்தபடி நல்லா படிக்கேன்’
‘அதெல்லாம் சரியாயிடும்’ என்று மகளின் தலையைத் தடவிக் கொடுத்தாள் சின்னா.அப்பப்பா! எத்தினி ஊரு, எத்தினி பஞ்சாயத்து? அத்தினி எடங்களிலயும் போயி மையங்க அமைப்பாளாம்; தலவரு, செயலாளருன்டு போடுவாளாம். அறுகம் புல்லு வேர் விட்ட கணக்கா ஊருக்கு ஊர் களஞ்சியம் வந்துட்டுது.
அரைகுறையா ஆடிக்கிட்டிருந்தவங்கல்லாம் தெளிஞ்சிடிச்சிங்க. கடன் தொல்ல குறையுது; வட்டி வாசி பிடுங்கல் இல்ல; நல்ல நாளும் பொழுதுக்குக் கோடித் துணி மணி எடுத்துக்கலாம். கண்ணு கயந்தலகள நாலு கோண எழுத்துப் படிக்க வச்சுக்கலாம். சூது கீதுன்ன ஆட்டம் போட்டவிங்க, தண்ணி கிண்ணின்டு நாசமாப் போனவிங்க எல்லாம் பொழைக்கிற வழியப் பாக்குறான்ல.ஊரு ஒலகத்துக்கு இம்புட்டு வழியக் காட்டுறாளே சின்னா, அவளுக்குக் கையெழுத்துப் போடத் தெரியுமா? படிக்கத் தெரியுமா? கூட்டப் பெருக்கத் தெரியுமா?

ஊரு ஒலகத்தப் பாக்குற கண்ணு தன்னப்பாக்க முடியுதான்டுவை. ஆனாலும் களஞ்சியத்து ஆபீசர்க சொல்லிக்கில்லி, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன்மாரி கையெழுத்தப் போடுவா! விடிய விடிய ஒண்ணுரண்டு பக்கம் படிப்பா! ஆனாலும் பாரு. காலுல ஒரு டயர் செருப்புப் போட்டோம், ஒரு ரப்பர் செருப்புப் போட்டோம்டு உண்டா? பெரிய பெரிய மனுசங்க வர்ற, பத்து நூறு சாதி சனங்க வர்ற எடங்களுக்குப் போறமே, அதுக்கு மக்க மனுசங்க மதிக்கிறாப்ல கலர் கலரா சேலை துணி மணி உடுப்போம்டு உண்டா?

அன்னு கண்ட மேனி அழியாமக் கெடக்குது. வடிச்ச காத வெட்டுவோம்னு இல்ல, ஒரு தண்டட்டி பாம்படம் போடுவோம்டு உண்டா? ஊரு ஒலகத்துப் பொண்டுக மாரி தலைய வாரி வாழைப்பூ கொண்ட போடுவோம, பின்னிச் சடை முடிஞ்சி போடுவம்டு உண்டா? கலக்டர் ஆபீசு, தாசில்தார் ஆபீசுன்டு, ஊர் மக்க வெவகாரத்துக்குப் போறமே, அதுக்கு ஒரு தோள்ல தொங்குமே தோல் பை, அது உண்டா? அதே மஞ்சப் பை மகராசி தாம்மா!
தொலைவெட்டுல களஞ்சியச் செயலாளரு குமாரு டகுடு மோட்டாருல வந்தாரு, சின்னாவைத் தேடித்தேன்.’வணக்கம்மான்டு சிரிச்ச குமாரு, ‘அம்மா நாளைக்கு வரிச்சூர் போறம். களங்சியக் கிளை ஒண்ணு ரெண்டு தெறக்கணும்னு சொல்லி உட்டுருக்காக; போலாமா?’வரிச்சூர் செழிப்பான ஊருல்ல; பரவாயில்லய்யா, நல்ல காரியம்னு மக்க மனுசங் களுக்குத் தெரிஞ்சிச்சின்னா, எல்லோரும் வர்றாங்க; போவம்யா’ன்னு செயலாளர அனுப்பிட்டா.வரிச்சூருக்கு இருநூறு முன்னூறு பேரு வந்துட்டாங்க. எல்லாரும் முகத்துலயும் கலியாண சந்தோசம். அந்தக் கிளையில பத்துப் பசுமாட வாங்கி ஒரு பால் பண்ணை தெறக்காங்க!’எத்தினி பெரிய சாதனை! சின்னாவுக்கு இது கினாவா நெசமான்டே தெரியலைன்டு வை. எல்லாம் குடியானவங்க ஊட்டுச்சனங்க. களஞ்சியத்துல உறுப்பினராகதுக்குச் சாதி மதம்டு வேத்துப் பிரிப்புக் கெடையாதுல்ல! இந்த மாரிப் பாகுபாடுல்லாம் களஞ்சியம் வந்த பெறகாட்டி இல்லைன்டே சொல்லலாம். அப்டி ஒரு இது.

ஒத்தப் பால்மாடு ரெட்டைக் குடும்பத்து வவுத்தக் கழுவும். பத்துப் பால்மாடுன்டா? பத்துக்கு ஒண்ணு அரசாங்கம் சும்மா மானியமா குடுக்குதாம்ல?அல்லாரும் சேர்ந்து கூடன லெக்குல மந்தையில பொங்க வச்சாங்க. பொங்க முடிஞ்சி அஞ்சாறு நாளு ஆச்சிங்கிறது நெசந்தேன். ஆனாலும் பொங்க வச்சி, சாமி கும்பிட்டு வந்த சனம் அத்தினிக்கும் பந்தி போட்டாங்க.மகபதி ஊடு ஊருல பெருசு, ஒரு திருவிழா கூட்டம் திருமணக்கோலம்டு வை. ஊட்டுக்கு உள்ளாற மேசை போட்டு நாற்காலி போட்டு சின்னாவையும் களஞ்சியத்துக் குமாரு இன்னும் உள்ள பொறுப்பு ஆளுகளையும் உக்கார வைச்சு பெரிய இல போட்டுப் பொங்கலு, வெண்பொங்கலு, வடைன்டு வகையா பரிமாறினாங்க மகபதி ஊட்டு ஆளுக.

என்னதேன் சொதந்திரம் கெடைச்சாலும், என்னதேன் ஊரு ஒலகம் வெளில மின்னேறினாலும், ஏராப்பிளேன் ராக்கெட்டுன்னு பறந்தாலும் மனுசன் மனுசன்தானேய்யா?இவுகள உள்ள மேசை நாற்காலில உக்கார வச்சு ஆளுக, ஊட்டுக்கு வெளிய சாதி பாத்து பிரிச்சி வெச்சிட்டாக, மனசுக்குள்ள அழுதாலும் இதுலயே பழகிப் போயிட்ட சனங்க வெளிய சொல்லல்ல. மேல் சாதிக்கு ஒரு பந்தி மித்தவங்களுக்கு ஒரு பந்தின்டு வச்சிட்டாக.கழுகுக்கு மூக்குல வேர்க்கிறாப்ல தெரிஞ்சுதோ, யாரும் மூக்குல காதுல ஓதுனாங்களோ விருட்டுன்ன வெளியே வந்தா சின்னா! ‘என்னய்யா கொடுமை இது. எனக்கு மட்டும் மேசை நாற்காலி போட்டு எலை வச்சீகளே நான் என்ன ராவோட ராவா மேச்சாதி ஆயிட்டனா? என்கூட வந்தவுகள்ல கால் வாசிப் பேரு எங்க ஆளுக தானே. அவுகள் மோந்து மோந்து கண்டுபிடிச்சிக் கையில இலையக் குடுத்து அவமானப்படுத்திட்டியளேய்யா. அப்புறம் என்னய்யா களஞ்சியம்? களஞ்சியத்துல சேந்தா பொருள் லாபம் வருதுன்னா அது வேணும், சாதி வேற்றுமை கூடாதுண்டா, அது வேண்டாம்டா எப்டிய்யா? அப்ப நானும் இங்க இவுகளோடயே இருக்கேன். நானும் இவுக ஆளு தானே!’ ன்டு கையில இலைய எடுத்துட்டு உட்கார்ந்துட்டா!

வந்த சனம் ஆடிப்போச்சி, மகபதி ஊட்டு ஆளுக நல்லவுகதானே. அவுகளுக்கு உண்மை யிலேயே ஆத்திரம் வந்துட்டது. ‘எவன்டா அவன் இப்டிப் பண்ணுனது. அவிங்க ஊட்டு ஆளு காக்கிச் சட்டையப் போட்டு வந்தான்டா சலாம் போட்டுட்டு காலு கழுவுற; அவிங்க ஆளு தாசில்தாரா வந்தா, கலக்கிட்டரா வந்தா ஓடோடிப் போயி செருப்புத் தூக்குற, ஆனா ஊருப் பக்கம் ஊட்டுப் பக்கம்னா முருங்க மரத்துல ஏறிக்கிறியே! தெரியாம, எங்களுக்கும் தெரியாம நடந்து போச்சி தாயி! பொறுத்துக்குங்க; கண்ணு எமைக்கதுக் குள்ளாற இந்தா, எல்லாத்தையும் அவங்க அவுங்களுக்குள்ள மருவாதைய செய்திடறேன். நீங்கல்லாம் எங்க விருந்தாளி தாயி. வந்த விருந்தாளிகளுக்கு மருவாதி செய்யதுக்கு தலயக் கூட வெட்டி வச்சிருவோம் தாய்?கொதிக்கிற பதனில ஆமணக்கு விதை விழுந்த கணக்கா சுத்தமா கொதிப்பு அடங்கிக் போச்சி. எல்லாரு மொகத்திலயும் வெளிச்சம் குமாருக்குக் களஞ்சிய நோக்கம் நிறைவேறுனதுல பரம திருப்தி. கலங்கின பின்னாடி தெளிஞ்சது கணக்கா அரைகுறையா மக்க மனுசக மனசில இருந்த சந்தேகமுத் தீந்து போச்சி.பால்மாடும் பால் பண்ணையும் ஒண்ணுக்குப் பத்தா பரந்திச்சி, விரிஞ்சிச்சி, களஞ்சியமும் கிளை பரப்பிச்சி; உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கா சேந்தாங்க.

‘நம்மல்லாம் படிச்ச பரம்பர இல்ல; ஆனா படிக்கணும், எனக்கு சொல்லதுக்கே வெக்கமாத்தேன் இருக்கு; படிப்பு இல்ல; நாமுத்தேன் துன்னுறோம் ஒறங்குறோம்; இந்த மாடுகளும்தேன் துன்னது ஒறங்குது; என்ன வேத்துமை? படிப்பு! என் மகன் படிப்பு; மாடு மேய்ச்சலுக்காப் போச்சி; எம் பொண்ணு ஒருத்தி படிக்கா; அவள நல்ல படிக்க வெக்கணும்; அவளத்தேன் எங்குடும்பம் நம்பி இருக்கு. இந்த படிச்ச புள்ளகளப் பாரு; நாகரீகமா சட்டை துணிமணி போட்டிருக்கு; குமாரு தம்பி சிரிக்காரு; தஸ் புஸ்ஸ÷ டாம் டீம்டு இங்கிலீசுலயும் தமிழ்லயும் பேசுது; நாலு பேருகிட்ட தெகிரியமாப் பேசுது. அமுக்கெல்லாம் எம்புட்டு மகிழ்ச்சியா இருக்கு! நம்ம புள்ளகளயும் படிக்க வெக்கணும்; களஞ்சியம் ஒதவும். படிக்க வையுங்க. மேல கீழன்ற வேத்துப் பிரிப்பு இல்லாம ஒத்துமயாப் படிச்சு உழைச்சு முன்னேறுவம். சரி’.அடடே! சின்னா என்னமா பேசிப்புட்டா! பின்ன இருக்காதா?! ஊரு ஊருக்குப் போயி நூத்துக்கணக்கா களஞ்சியத்து ஆளுகளப் பாத்துப் பேசுதாளா இல்லியா? பேசுதா? பேசுதா! வூட்டுக்காரன் திட்டுனாத்தான், வாயே தொறக்க மாட்டா!

கொமாரு எந்திரிச்சாரு; கழுத்துல என்னமோ கோமணம்மாரி துண்டு துணி ஒண்ணக் கட்டிக்கிட்டு, வெள்ளக்காரன்மாரி காலுல உறைச் சுத்திக்கிட்டு, ஆளு சோக்காத்தான் இருக்காரு.’சின்னப் பிள்ளை அம்மா, நம்ம களஞ்சியத்துக்கு ஒரு தூணு, வீடு வாசலக் கவனிக்காம, சொத்து பத்தைப் பாக்காம…ம்… ஏது சொத்து பத்து? களஞ்சியத்துக்காவச் சுட்டியே ஒழைக்காக. தம்பிடி காச எதிர்பாக்காம, தான் வறுமையாக் கெடந்தாலும் ஊரு வளமா வாழணும்டு நெனைக்காக. அவுகளும் களஞ்சியமும் வளரணும்டு வாழ்த்துதேன்’கூட்டம் முடிஞ்சி அதது காக்கா குருவி கூடு சேர்றாப்ல ஊடு போய்ச் சேந்தது. அதுவும் கழுத ஒரு மாசம் ஓடிப் போச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *