களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்

– அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள்

களஞ்சியம் இயக்குநர் குமார் கையில் வைத்திருந்த தாளில் உள்ள செய்தியை எல்லோருக்கும் கூறிக் கொண்டிருந்தார்.

இந்தியா முழுவதும் இருந்து, சக்தி புரஸ்கார் விருதுக்கு நூற்றுக்கணக்கான விண்ணப்பம் வந்திருக்கும் போல இருக்கு. தமிழ் நாட்டுல இருந்தும் பல போயிருக்கலாம்; விளக்கம் கேட்டிருக்காங்க.நரேந்திரன், இந்தியா முழுக்க ஐந்து பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுறாங்கன்னா போட்டி கடுமையாத்தான் இருக்கும். நம்ம வட்டாரக் களஞ்சியத்துல இருந்து சின்னப்பிள்ளை, பாத்திமுத்து இரண்டு பேரையும் நாம சொல்லலாம்; அப்புறம் மத்திய அரசாங்கம் பாத்து முடிவு செய்யட்டும். நமக்கு நல்ல நம்பிக்கையிருக்கு. நம்ம களஞ்சியம் செய்திருக்கிற சேவை நல்லாத்தான் இருக்கு’.பல தடவை கூடிப் பல தடவை பேசி, சின்னப் பிள்ளை பாத்திமுத்து ஆகியவர்களது விவரங்களடங்கிய விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர். நாளும் மாதமும் ஓடிவிட்டன.

சினிமாப் படம் புடிக்க வாறாங்க டோய் னு குஞ்சும் குறுமானுமா கொந்தாங் கொள்ளையா ஓடிக் கொள்ளை சனத்தைக் கூட்டிட்டானுங்க.புல்லுசேரி மந்தையில வேப்ப மரமும் அரசமரமும் பிணைஞ்சி நிக்குற எடத்துல பாத்தா, அத்தீ! காரு, ஜீப்பு, போட்டாப் படம் புடிக்க கேமரான்டு, கோட்டும் சூட்டுமா அது எறங்கியிருக்குப்பா ஒரு கருதறுப்புச் சனம்!சின்னப் புள்ள வந்து, ‘என்னா’ங்கிற மாரி பாத்தா, அவளுக்குச் செத்த வெளங்கிப் போச்சி, பத்துப் பதினஞ்சி நாளைக்கி மின்னாடியே கொமாரு சொன்னாராம். மேல இருந்து ஆபீசர்மாருங்க வந்தாலும் வருவாங்கன்னு சொன்னாராம்.

சின்னாவைப் பாத்த குதிரவாலு பொம்புள, நாங்க சின்னப்புள்ளங்கிற சமூக சேவகியப் பாக்க வந்திருக்கோம்; இவங்கள இல்ல’ன்டா.சின்ன கழுக்கின்டு சிரிச்சா, நெருக்கியடிச்சி இடிச்சிக்கிட்டு நின்ன பொம்புளைப் புள்ளைகளும் இவுக தேன்டு கிரிச்சாளுகளா அவளுக்கு என்னன்டு சொல்றதுன்னு புரியல.

அவ,சாரின்டா. சின்னா சாரிய கண்டுச்சா வேட்டியக் கண்டுச்சா. சின்னாவைப் பாத்த அந்தப் பொண்ணு அசந்து போச்சி.

கோதி முடிச்ச கொண்டை, வடிஞ்சு வீழ்ந்த காது, வெத்திலக்கற வாயி; கசங்கிப் போன கரண்டக் காலு மேலு எகிறி நிக்கிற சேலை; கொசுவம் மடிச்ச முந்தி, செருப்பு அறியாத காலு, ஒத்தப் பொட்டு தங்கம் இல்லாத மேனி; காது மூளி, கழுத்து மூளி; பகுடர் போடாத மூஞ்சி – இப்டி ஒரு மனுஷிய அவ இந்த ஜென்மம்னு இல்ல ஏழேழு ஜென்மத்துக்கு பாத்திருக்க மாட்டா.

இவுகதேன் சின்னப்பிள்ளைன்னு தெரிஞ்சாங் காட்டியும் அவளும் கூட வந்தவுகளும் அம்மாங்கிறாங்க; ஆத்தாங்கிறாங்க; கையில தாங்கிப் பல்லக்குத் தூக்காத குறைதான்டு வை.

அம்மா மாரும் ஐயா மாரும் யாரு? என்ன விசயமா வந்திருக்கியன்’டு சின்னப்பிள்ளை கேட்டாங்க.

அம்மா, நாங்க டில்லி கெவ்ருமென்டு சொல்லி வர்றோம். உங்க நிலவரத்தத் தெரிஞ்சி படம் புடிச்சிட்டுப் போவ வந்திருக்கோம். உங்க ஊட்டக் காட்டுங்க போவம்’ன்டாங்க.
ஊடு எங்க ஊடு; குடிசை! மண் குடிசை. எட்டுக்கு எட்டு; நாலரை அடி உயரம்; பதைச்ச மண் சுவரு; சுவரு சாஞ்சிராம ஆறேழு எடத்துல கருவேலங்க கட்டையத் தாங்குக் கட்டையா குடுத்திருக்கு. காய்ஞ்ச பனை ஓலைய மேய்ஞ்சிருக்கு; அதுக்கு மேல சம்பங் கோரைய பரசியிருக்கு. நாலடிக்கி இரண்டரை அடியில ஒரு படலைக் கதவு; மூட முடியாத கதவு; உள்ள போனா இருட்டு; காத்தடிச்சா மேக்கூரை பறக்கும்ல, அப்ப வெளிச்சம் வரும். ஊட்டுக்குள்ளாற அடுப்பு வைக்க முடியாதில்லியா, அதுனால வெளிய நடைபாதையிலதேன் முக்கூட்டு அடுப்பு.அந்த அம்மாவும் ஆபீசர்களும் பாத்து வேத்துப் போனாகன்டு வை.திடீர்னு அழுதுட்டாக! ஏ!ஏ! ஏன்? எதுக்கு?

ஒண்ணுமில்லை, இந்த மாரி நேரத்துல இதப்பாக்கத் தன் ஊட்டுக்காரர் பெருமாள் இல்லையேங்கிற ஏக்கம்தேன்.’ கண்ணீரைத் தொடச்சிக் கிட்டாக.
எங்க ஊருல ஐயா, சாலை, நடைபாதை, ரோடுன்டு ஒண்ணுமில்லை; செத்த மழை பேய்ஞ்சாலும் சேறுஞ் சகதியுமாப் போயிடும். மழை நின்னு போச்சின்டா குப்பக்காடா ஆயிடும்’டு வந்தவுக கிட்ட சொன்னாக!

அழகு சவுந்திரியமா இருந்த அந்தக் குதிரவாலு பொண்ணு வந்து சின்னா கையை புடிச்சித் தன் உச்சந் தலையில வெச்சி என்னென்னமோ சொல்லிச்சு. அந்தப் பொண்ணுக்குக் கண்ணு கலங்கிப் போச்சி. அல்லாரும் வந்து சின்னப் புள்ள கிட்டயும் மித்த ஊர்க்காரங்கிட்டயும் வழியனுப்பிகிட்டுப் பொறப்புட்டாக.காரும் வண்டியும் சர் சர்னு பொறப்புட்டு நகர்ந்தது. ஊருல உள்ள ரவப் பயலுக வண்டிக்கிப் பின்னாலேயே குதியாட்டம் போட்டுக்கிட்டு ஓடுறானுவோ. சவலயில பொறந்த பய புள்ளைக சொன்னாக் கேக்குதுகளா? தாமரைக் குளம் தண்டியும் வெரட்டி விட்டுட்டுதேன் திரும்பினாகன்டு வை!
சின்னா, மொதல்லயே தெரிஞ்சிருந்தா நம்ம வீட்லயே வச்சி இதை எடுத்திருக்கலாம், கொஞ்சம் கவுரதையா இருந்திருக்கும் ன்டு கடோசிக் கல்லு வூட்டுகாரரு சொன்னாரு.
ஆமளு! கெவ்ரு மென்டுல இருந்து சின்னா வூட்டப் போட்டா படம் பிடிக்க வந்தாளா, இல்ல கல்லூடு எங்க இருக்கு? கரடு வூடு எங்க இருக்குன்னு தேடி வந்தாவுளா? சும்மா வேலையத்த பேச்சப் பேசிக்கிட்டு ன்னாரு கொத்தனாரு.சாஞ்ச நேரம் கொக்கு குருவிக கூடு நோக்கிப் பறக்குறாப்ல, கூடுன மொத்தமும் அதது குடிசை நோக்கிப் பறந்துட்டுது.
படம் புடிச்சிட்டுப் போனவக பேச்சையே காணோம். கிணத்து போட்ட கல்லு கணக்க சத்தமில்ல; ரெண்டு மூணு மாசம் பேச்சுமில்ல மூச்சுமில்லைன்டா?

திடீர்ன்டு குமாரு குதிக்காரு. ‘வாங்க வாங்கன்டு’ அத்தினி பேரையும் கூப்பிடுறாரு. வைகை வட்டாரக் களஞ்சயமே ஆடுது பாடுது. விசயம் என்னா?சின்னப்புள்ள அம்மாவ சக்தி புரஸ்கார் விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்காங்களாம்; எழுத்து வந்திருக்காம். இந்தியா முழுக்க இருந்து அஞ்சே அஞ்சி பேருதானாம்; அஞ்சில ஒரு ஆளு நம்ம வைகை வட்டாரக் களஞ்சியத்துச் சின்னப் பிள்ளைன்டா லேசா. மக்க மனுசங்க என்ன? மாடு ஆடுந்தேன் துள்ளாட்டம் போடும்; காக்கா குருவியுந்தேன் காச்சு மூச்சுங்கும்!சின்னாவைக் கூப்பிட்டாக. கையைப் புடிச்சிக் குலுக்குக் குலுக்குன்டு குலுக்காங்க; ஆணும் பெண்ணும் சின்னாவ அந்தத் தூக்குத் தூக்குறாங்க. ‘டே கீழ ஈழ போட்டுராதீங்கப்ப, டெல்லிக்கு போணும், பிரதமர் கையால அவார்டு வாங்கணும்ணு ஆயிரம் சோலி கெடக்கு; வேலயக் கெடுத்துப் புடாதீக’ன்டு குமாரு சிரிச்சிக்கிட்டே சொல்றாரு.

ஏழை எளியதுகளுக்கு சமூகப் பொருளாதார அந்தஸ்து ஒயர்றதுக்காவ பாடுபடுற தொண்டு நிறுவனங்க கெழக்க மேக்க தெக்க வடக்கன்டு நெறைய இருக்கு. மத்திய அரசாங்கம் இந்தத் தடவ நம்ம வைகை வட்டாரக் களஞ்சியத்தத் தேர்ந்து எடுத்திருக்கு. அதிலயும் நம்ம அம்மா சின்னப்பிள்ளையத் தேர்ந்து தெடுத்திருக்காங்க. அந்த அவார்டு – விருதுக்குப் பேரு ‘ஸ்திரீ சக்தி புரஸ்கார்’ விருது. ஒரு லட்சம் ரூபாவும் ஒரு பெரிய சான்றிதழும் கொடுப்பாங்கா அம்மாவுக்கு. இந்தியா முழுக்க கன்னா பின்னான்னு பேரு பரவிடும்; புகழ் கிடைச்சிடுச்சிடும் நமக்கெல்லாம் சந்தோச மகிழ்ச்சிதானே?கேட்டாரோ இல்லியோ கட்டடமே இடியறமாரி ஒரே கைதட்டல்தாம் போ.

டெல்லியில் இருந்து நாள் குறிச்சி தந்தி வந்துட்டுது. உடனே சரூரா வேலை தொடங்கிட்டுது.
சின்னாவைக் கூப்பிட்டாரு குமாரு. ‘அம்மா, ஒங்க கூட டெல்லிக்கு நம்ம நரேந்திரன் வருவாரு; ஒங்களுக்கு ஒரு கவலை கெடையாது. மருதயிலருந்தே ஏரோப்பெளேனு தேன்; இங்கிருந்து சென்னை; அங்கிட்டுருந்து டெல்லி; வெவரம் எல்லாம் அங்க கூடவே இருந்து பாத்துக்குவார். நீங்க நேராப் போயி பிரதம மந்திரிக்கிட்ட விருது வாங்கணும், வரணும் அவ்வளவுதேன்
‘அஞ்சுகோயில் சாமி காப்பாத்து! ஏரோப்பெளேனு எம்புட்டு ஒசரத்து டர்ருன்டு அம்புட்டு பீடா போவுமே, அத்தீ! நான் எப்டிப் போயி, எப்டி வாங்கி? மொகப் பழக்கம் இல்லாத அந்நிய மக்க மனுச மின்னாடி நான் எப்டி? சின்னாவுக்கு மனசுக்குள்ள திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது.

‘ஏரோப்பெளேன்லதேன் போவணுமா? ஏன் ஒரு ரயிலு. பஸ்ஸ÷? ஆமா ஒத்த நாளைக்கி ஒம்பது வட்டம் போயிட்டு வாரதும் நம்ம கொத்த ஆளுக தானே! போவம்’
ஏரோபெளேனு, அது நிக்குது ஆயிரம் திமிங்கலம் தண்டி; உள்ள பாத்தா அஞ்சு டவுன் பஸ் ஆளு ஒக்காரலாம் போல; இருக்க சீட்டுகளப் பார்த்தா சோப்பு நுரை மாரி அம்புட்டு மெல்லிசா இருக்கு! எல்லாம் முடிச்சி ஒக்காந்தா அழகு சௌந்திரியமான பொண்ணுக, நாலஞ்சு வருசம் மொகப் பழக்கம் உள்ளதுக கணக்கா சிரிச்சிக்கிட்டே வந்து ஒவ்வொருத்தங்க கிட்டயும் என்னமோ கேட்குதுங்க.ஒரு பொண்ணு வந்து மெத்த நாற்காலில இருந்த ஒரு பெலிட்டை எடுத்து இடுப்போட வச்சி கட்டிப் போட்டுட்டு, அப்பதேன் சின்னாவுக்கு எலும்புக் கூட்டுக்குள்ள நடுக்கம் எடுத்தது. ‘மேல பறக்கையில அப்டியும் இப்டியும் சாயும்; நாம இந்த நாற்காலில தொங்கி நாறி நசுவழியப் போறம்’டு ஒரு எண்ணம்.
பஸ் ஓடுறாப்புல, …ம்…டு பீடு எடுத்து ஓடுது பெளேனு. அத்தீ இது போறபீடுக்குக் காரியப்பட்டி அறுதி ஓடித்தேன் திரும்புறாப்லன்டு நெனைக்கதுக்குள்ள விருட்டென்று எம்பிடுச்சி. ஒத்த ஆலமரத்து ஊஞ்சல் ஆடையில மேலே ஏறையில அடிவவுத்தக் கலக்கும் பாரு அப்டி ஒரு நெஞ்சடைப்பு வந்தது. அப்புறம் களஞ்சியத்துல ஒக்காந்திருக்கிறாப்புலதேன்; ..ம்…டு ஒரு சத்தம்; அம்புட்டுதேன். இரயிலிலயாவது கடக் மடக் கடக் மடக்குன்டு ஒரு ஆட்டம் இருக்கும். இங்க ஒரு அலுங்கல் குலுங்கல் இல்லியே. பெளேன்டா சும்மாவா?சிரிச்சுக்கிட்டே ஒரு பொண்ணு வந்து தட்டு நெறய முட்டாய் கொடுத்தது. பேரப்பயல்க இந்த மாரி முட்டாய்கள என்னிக்குப் பாத்தாங்க? அல்லாத்தையும் எடுக்க சின்னாவுக்கு ஆசைதேன். பக்கத்து ஆளுக ஒண்ணு ரெண்டு எடுத்ததைப் பாத்துட்டு ரெண்டு மட்டும் எடுத்துக்கிட்டாங்க. இத்தினி பேரு மத்தியில எப்டிப்பா திங்கது?

டெல்லி வந்திடிச்சாம். நெஞ்சுக்குள்ளாற மரணக் கிணத்துல டகு டகு மோட்டாரு ஓட்றாப்ல ஒரு படபடப்பு. விருது! அவார்டு! அம்மன்னத்தக் கண்டோம். ஆத்துல எறங்குனமா அழகரைச் சேவிச்சமாங்கிற கதையா அம்மன்னத்தக் கண்டம். அம்மாவுக்கு மனசுக்குள்ள என்னல்லாமோ நெனைப்பு; ஆனாலும் சந்தோசம்தேன்!இறங்கியாச்சி. இது என்னப்பு? பெரியாரு நெலையத்துல டவுன் பஸ் நிக்கிறாப்புல பெளேனுக நிக்குது! ஆத்தாடீ! தலைநகருண்டா சும்மாவான்னு நெனப்பு ஒரு பக்கம் ஓடுது. கூட்டம்டா கூட்டம்! எல்லாம் மெத்தப் படிச்ச மேதாவிகதேன். ‘இளமதிய இப்டில்லாம் பெரிய படிப்பு படிச்சவுக மாதிரிக் கொண்டு வரணும்டு நெனச்úன்; ம்… எல்லாம் கொடுத்து வைப்பினை வேணும்ல…

மொக்க பெருச்சாளிமாரி ஒரு காரு, மாருதி காராம்ல, அரசாங்க ஆளுக வந்து இவுக ரெண்டு பேத்தையும் கூட்டிட்டுப் போனாக. காரு போகையில ரெண்டு சைடு பக்கத்துலயும் பாத்தா அம்மடீ! கோபுரங் கணக்கா கட்டடம்! தீப்பெட்டி அடுக்கி வச்சாப்புல வீடுக… சோத்துக் கடைக; சாப்பாட்டுக் கௌப்புக; செழிச்ச வயக்காடுக மாரி தோட்டங்க!நூறு மருதய விரிச்சி வெச்சாலும் எட்டிப் புடிக்குமா? புல்லுசேரியில குண்டும் குழியுமா கெடக்க மண்ணுச் சாலை எங்க? நட்ட நடு ரோட்டுல சோத்துப் போட்டுப் பெசைஞ்சி வழிச்சிச் சாப்பிடலாம்கிற கணக்குல இருக்கு இந்த ரோடு எங்க?அந்த அறையில பாத்தா அறை இல்ல! பெரிய ஊடுன்டு வை. ஒக்காந்தா உள்வாங்கிற மெத்தை நாற்காலி; படுத்தாப் பொதையறாப்ல உள்ள மெத்தைக் கட்டுலு. குளிருப் பொட்டி, ஏழெட்டுப் பேரு இருக்காப்ல சுத்திச் சுத்தி வடிவமான நாற்காலிக! இந்தியாவுல இப்டி ஒரு உலகம் இருக்கப்பா!டிவி பொட்டி, மூணு நாலு காது போனுக; குளிக்க கொள்ள உள்ள அறை இருக்கே, அப்டி ஒரு சொகமான மணம்! தேவலோகம் மாரி இருக்குண்டு வை. ஆமா! தேவலோகத்தைப் போய்ச் செத்தமிந்தி பாத்துட்டு வந்தம் பாரு! விடு கழுதைய! ஒண்ணும் சொல்லதுக்கு இல்ல!நாலஞ்சு பெரிய போலீஸ்காரங்கமாரி வாட்ட சாட்டமான ஆளுக வந்தாக. ரெண்டு மூணு பொம்புளகளும் வந்தாக. சின்னபுள்ள அம்மாவ பார்த்துப், பாத்துப் பதினஞ்சு வருசம், முகம் பழகினாப்ல, சொந்தங்கள்மாரி அன்பாச் சிரிச்சாங்க. அம்மாவுக்கு நல்ல தெகிரியம் வந்திருச்சி.குளிருதேன் தாங்கல்ல. ஏழெட்டுக் காருக வருது. அம்மா பக்கத்துல அந்த ஊருப் பொண்ணு ஒருத்தி. அப்டி சௌந்தரியமா இருக்கு! துணிமணியா, நகையா நட்டா, உதட்டுச் சாயமா, மூஞ்சில ரோசாப்பு நிறத்துல பகுடர் திட்டு திட்டா அப்பியிருக்கிறதா? நல்லா இருந்தது. சிரிச்சிக்கிட்டே பேசுது, ஒண்ணும் விளங்கல்ல! நம்ம ஊரு நாயக்க மாரு பேசுறாப்புல இருக்கு!

ஆனா என்ன சொல்லுதாங்கங்கிறத நரேந்திரன் சாரு அம்மாகிட்ட எடுத்துச் சொன்னாரு.
‘நரேந்திரன் சாரு, இம்புட்டு பெரிய பட்டணத்துல எனக்கு எந்த மாரி தமிழ்ல பேசறதுக்கு ஒத்த பொம்புள ஆளு கொடைக்கலையா?”ஏம்மா கவலைப்படுதீங்க; உங்க கூடவே கவசம்மாரி இருக்கேன்டு’ நரேந்திரன் சிரிச்சிக்கிட்டே சொன்னாரு.

அந்த ஆபீசர் பொண்ணு என்னன்டு கேட்டதோ? நரேந்திரன் சாரு மாத்திக் கீத்தித்தேன் சொல்லியிருப்பாரு; நேராச் சொன்னா அந்தப் பொண்ணு பாவம் பூழாப் போயிடாது?
இடம் வந்துட்டுது. எறங்கி ஒரு பெரிய மண்டபதுக்குள்ள கூட்டிப் போனாக. நரேந்திரன் சாரு இப்டி இப்டி, இப்டி இப்டின்னு வெவரமா அம்மாகிட்ட அப்பாலேயே சொல்லிட்டாரு.நம்ம ஊரு கலியாண மண்டபம் நாலுக்குத் தேறும், அந்த ஒத்த மண்டபம் என்ன அழகு! எத்தினி தொங்கு விளக்கு? எத்தினி எத்தினி சட்டி விளக்கு, சர விளக்கு, வாழைத் தண்டு விளக்கு! சினிமாப் படம் பாக்குறமாரி, அடேங்கப்பா! என்னத்தச் சொல்ல எழுத ஓலையில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *