புதியதோர் உலகம் செய்வோம்

– இரா.கோபிநாத்

நமது மூளை, பிறக்கும் போது தகவல் பதிவு செய்யப்படாத ஒரு வெற்று குறுந்தட்டு போன்றது. தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தகவல்கள் மாத்திரமே அதில் பொதிந்திருக்கும். பிறகு நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதில் பதிவாகின்றன. இந்தத் தகவல்கள்தான் நமது சிந்தனைத் திறனை வடிவமைக்கின்றன.

இனி இந்த மனம் செயல்பட வேண்டிய விதத்தை இந்த அனுபவங்களின் தொகுப்பு நிர்ணயிக்கின்றது. ஒரு மனிதன் தனது அனுபவங்களின் ஒரு தொகுப்புதான். அதனால்தான் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்களைத் தேர்ந்துதெடுத்த நல்ல பழக்கங்களாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனாலும் கூட நமது முயற்சியால் நமது அனுபவங்களுக்கு மாறுபட்ட ஒரு சிந்தனையை நமது மனதில் கொண்டு வர முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

மாற்றங்கள் வாழ்க்கையில் இயல்பான ஒன்றுதான் என்று புரிந்துகொண்ட பிறகு கூட நிலைமைகள் மாறாமலே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எப்பொழுதும் மனம் விரும்புகிறது. மாற்றங்களை முன்கூட்டி எதிர்பார்த்து அதற்குத் தகுந்த அளவில் முன்னேற்பாடுகள் செய்து கொண்டால் பெரிய தாக்கம் இல்லாமல் தப்பிக்கலாம்.

மாற்றத்தில் இன்னொரு பரிணாமம் அது ஏற்படும் துரித கதிதான். என்ன நடந்தது என்று விளங்கிக் கொள்ளும் முன்பாகவே மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.பிரான்ஸ் நாட்டில் ஒருவர் தனது மனைவிக்காக புதிய உடை ஒன்றை வாங்கினார். அதை வாங்கிய உடனே ஓடிச்சென்று எக்ஸ்பிரஸ் பஸ் பிடித்து மீண்டும் ஒடி வேகமாக மெட்ரோ ரயில் பிடித்து துரித கதியில் வீடு வந்து சேர்ந்தார். உடன் வந்த நண்பர், “ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் உடைதான் வாங்கியாகிவிட்டதே” என்று கேட்டார். இவர் சொன்னார், “என் மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார். அதில் லேட்டஸ்ட் பேஷன் என்று வேறு உடையைக் காண்பித்து விட்டால் பிறகு இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதற்கு முன்பாக அவர் கையில் இதைக் கொடுக்க வேண்டும். அதற்குத்தான் இவ்வளவு வேகமாக ஒடிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

இது வேடிக்கையான நிகழ்ச்சிதான் என்றாலும் தற்காலத்தில் மாற்றங்கள் எந்த கதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இது விளக்குகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி என்றால் வணிகத்துறையிலோ கேட்கவே வேண்டியதில்லை.மாற்றங்கள் ஏற்படாது, எப்பொழுதும் நிலைமை இப்படியேதான் இருக்கும், என்று மூடத்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கையில் தோற்றுப்போவார்கள். மாற்றங்களை எதிர்பார்த்து, ஆயத்தத்துடன் இருப்பவர்கள் பெரிய சேதம் இல்லாது தப்பித்து வாழ்கிறார்கள்.

ஆனால், மாற்றங்களை உருவாக்குபவர்கள், தோற்றுவிப்பவர்கள் அபரிமிதமான வெற்றியை அடைகிறார்கள். சரித்திரம் படைக்கிறார்கள்.தென்னிந்தியாவில் ஷாம்பூ விற்பனையில் பெரும் போட்டி நிலவிய காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது ஷாம்பூ எவ்வளவு சிறந்தது என்று போட்டா போட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்தனர்.ஷாம்பூ சந்தை மிகவும் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் பெருவாரியான நடுத்தர வர்க்கத்தினர் ஷாம்பூ பயன்படுத்த இன்னும் தயாராகவில்லை. காரணம் விலை கட்டுபடியாக வில்லை. பாரம்பரியமாக உபயோகத்தில் இருந்து வந்த சீயக்காயும், சோப்பும்தான் அவர்கள் கேசத்துக்கு ஒரே வழி. போட்டா போட்டியில் விலை எவ்வளவோ குறைந்திருந்தது.

இன்னமும் குறைப்பது சாத்தியம் இல்லை என்ற நிலையில்தான் ஒருவர், சரி விலையைக் குறைக்க முடியவில்லை என்றால் அளவை குறைத்தால் என்ன என்று சிந்தித்தார். சிறிய பிளாஸ்டிக் உறைகளில் (ள்ஹஸ்ரீட்ங்ற்) ஷாம்பூ அறிமுகப் படுத்தினார். ஒரு ரூபாய்க்கு ஒன்று என்று விற்பனை செய்தார். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போயிற்று.

நடுத்தர வர்க்கத்தினர் சீயக்காயை விட்டு ஷாம்பூவிற்கு மாறினார்கள். அமோகமான வரவேற்பு கிடைத்தது. தென்னிந்தியாவில் இப்படி ஒரு புரட்சி ஏற்படுத்திய வெல்வெட் ஷாம்பூ நாட்டின் பல பகுதிகளில் விஸ்தரிப்புச் செய்தது.இந்த மாற்றம் ஷாம்பூ அளவில் நிற்கவில்லை. பல பண்டங்கள் எண்ணெய், பருப்பு, போன்றவை கூட இதுபோன்ற பிளாஸ்டிக் உறைகளில் அறிமுகப் படுத்தப்பட்டன. பொருள்களைப் பெரிய அளவில் வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு தேவைப்படும் போது உபயோகிப்பது என்ற நிலை மாறி, தேவைப் படும்போது அந்த அளவிற்கு மாத்திரம் வாங்கிக் கொள்வது என்ற நிலை ஏற்பட்டது.

போட்டிச் சூழ்நிலையில் இதுபோன்ற சில யுக்திகள் வெற்றிக்கு வழிவகுக்கும். தற்சமயம் எந்த ஒரு நிறுவனமும் தனது நிர்வாகத் திறமையினாலோ தயாரிப்பு உன்னதத்தால் மாத்திரமோ ஒரு சிறப்பான நிலையை அடைந்துவிட முடியாது. சிறப்பு நிலையை அடைவதற்குத் தேவை புதுமை, புதுமை யான கருத்துக்கள் மற்றும் அக்கருத்துக்களை உருவாக்கும் படைப்புத்திறன் மிக்க பணியாளர்கள்.

ஆழ்ந்த சிந்தனையுடன் தீட்டப்பட்ட ஒரு திட்டத்தைக்கூட போட்டி நிறுவத்தினர் ஒரு சிறிய யுக்தி மூலமாகத் தகர்த்துவிட முடியும்.காலத்தை அதன் போக்கிலேயே விட்டு விடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து இப்படி வெற்றி கண்டவர்கள் நமது மண்ணிலே பலர் உண்டு. இவர்களால் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் நாட்டிற்கே பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கிறது.

டாக்டர் வர்கீஸ் குரியன், திரு.நாராயண மூர்த்தி, டாக்டர் அஞ்சி ரெட்டி போன்றவர்களால் நம் சமுதாயம் அடைந்த லாபத்திற்கு அளவே இல்லை. இவர்கள் வாய்ப்புக்களுக்காகக் காத்துக் கொண்டில்லாமல் துணிகரமான மாற்றங்களைத் தங்கள் செயல்முறைகளில் உருவாக்கி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.தற்போது நமது பிரதமராக இருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் முன்பு நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் நம் நாட்டின் பொருளாதார இதிகாசத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அப்பொழுது கூட்டாட்சியாக அமைந்த ஒரு அரசாங்கம் இப்படிப் புரட்சிகரமான ஒரு திட்டத்தை அமல் செய்யும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இன்று உலக அளவிலே இந்தியா பெருமதிப்புப் பெற்ற நாடாகத் திகழ்வதற்கு இந்தத் திருப்புமுனைதான் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.இந்த படைப்புத்திறன் என்பது, நம் அனைவருள்ளும் பொதிந்து கிடக்கும் ஒரு ஊற்று. நமது பிறப்பிலேயே நமக்கு ஆண்டவன் அளித்த வரப்பிராசாதம். கட்டுப்பாடான வளர்ப்பு முறையினாலும், சமுதாயத்தின் சில மரபுகளினாலும் நாளடையில் நம்முள்ளே புதைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷம். இதனை வெளிக்கொணர்ந்து, மெருகுபடுத்தி, நமக்கும் சமுதாயத்திற்கும் பயன்படச் செய்வதற்கு சில பயிற்சிகள் செய்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *