1950ல், மெல்போர்னில் நடந்த சம்பவம் இது. ஒரு நிறுவனம், தன் ஊழியர் ஒருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதற்குத் தெரியுமா? அந்த ஊழியரின் தாடை எலும்பு பணிநேரத்தின் போது பிசகியதற்காக!! எப்படிப் பிசகியது? அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அந்த ஊழியர் கொட்டாவி விடும்போது பிசகியது.
வேலை சுவாரசியமாக இல்லாததாலேயே ஊழியர் கொட்டாவி விட்டார் என்றும், அதனால், தாடை எலும்பு பிசகியதற்கு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டதாம்! இதென்ன கலாட்டா!
————————————————அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. நாய்களுக்கான உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று. நூற்றுக்கணக்கானவர்கள் பணிபுரிந்தார்கள். இலட்சக்கணக்கான டாலர் முதலீட்டில் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் விற்பனை சரியாக இல்லை. எனவே, விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டுவதற்காக ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் அழைக்கப்பட்டார்.
விற்பனைப் பிரதிநிதிகள் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டி, விற்பனையைப் பெருக்க வேண்டும் என்று அந்தப் பயிற்சியாளர் திட்டம் தீட்டினார்.
எனவே, கேள்விகள் கேட்டு பதில்பெறுகிற உத்தியைக் கையாண்டார்.
“அமெரிக்காவில் நாய் உணவுத் தயாரிப்பில் மிகப் பெரியவர்கள் யார்?”
பதில் வந்தது. “நாம் தான்”.
நாய் உணவுத் தயாரிப்புக்கு அதிக விளம்பரம் செய்பவர்கள் யார்?
பதில் வந்தது. “நாம் தான்”.
விரிவான விநியோகத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் யார்?
‘பதில் வந்தது’. “நாம் தான்”.
விற்பனைக்கு வசீகரமான சலுகைகள் தருபவர்கள் யார்?
பதில் வந்தது “நாம் தான்!”
பயிற்சியாளர் கேட்டார். “அப்படியானால், ஏன் நாம் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை”
பலத்த அமைதி. பிறகு ஒரே ஒரு குரல் எழுந்தது.
“அய்யா! நாய்களுக்கு இந்தப் புள்ளி விவரங்கள் தெரியாது. அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிப்பதில்லை. முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்து விடுகின்றன”.
தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?
————————————சிரிப்பு என்பது சூர்யோதயம். ஒரு நாளுக்கு வேண்டிய வெளிச்சத்தை அது வழங்குகிறது.
-ஜார்ஜ் சன்டன் யா
Leave a Reply