சென்னிமலை தண்டபாணி
இதுவரை
இதுவரை என்று
இலக்குகள் வைத்தால்
எதுவரை
எதுவரை எனினும்
எட்டிப் பிடிக்கலாம்.
இலக்குகள் எல்லாம்
விளக்குகள்…
ஏந்திக் கொண்டால்
பயணப் பாதையில்
பவுர்ணமி பொழியலாம்.
முதலடி வைக்கவே
மூச்சுத் திணறினால்
இலக்குகள்
எப்போதும்
எட்டவே நிற்கும்.
“எட்டிப் பிடிப்பேன்
இதோ,” என்று
முன்னடி வைத்தால்
அருகில் வந்து
புன்னகை பூக்கும்
ஓடும் குருதிக்குள்
உற்சாகம் ஊட்டும்
இலக்குகள்…
இளமையைக் காக்கும்
காயகற்பங்கள்…
இலக்கில்லாத
வாழ்க்கையை
எந்தக் கணக்கில்
கொண்டு போய் எழுத…
மூச்சுக்கு
நிரந்தர முகவரி
இலக்கைத் தொட்டால்தான்
எப்போதும் கிட்டுகிறது…
மனிதனின் மதிப்பு
அணிந்து கொண்டிருக்கும்
ஆடையில் நகைகளில்
அளவெடுக்கப் படுவதில்லை.
எண்ணிக் கொண்டிருக்கும்
இலக்குகளில்
இருக்கிறது.
விழுந்தும் எழுந்தும்
நடை பயின்றால்
“ஊன்றுகோல் வேண்டாம்”
என்று உலகம்
உற்சாகம் ஊட்டும்
விழாமலும் எழாமலும்
படுத்தே கிடந்தால்
“வாழ்க்கையா இது?”
என்று
வினாவைத் தொடுக்கும்…
இலக்குகள்…
மனிதனை…
இலக்காய் வைத்து
ஒளிர்கின்றன…
நீங்கள்…
ஒளிர வேண்டாமோ
இலக்குகளோடு?
Leave a Reply