ராஜ்கவி கவிதை

எல்லாம் உனக்குள்…

– ராஜ்கவி

ஓதன் வாழ்வின் உயர்வும் தாழ்வும்
உனக்குள் ளேதான் இருக்கிறது!
எந்த நிலையை எட்ட வேண்டும்

என்பதும் உன்னால் நடக்கிறது!

இந்த மண்ணில் என்ன ஆவோம்
என்றகேள்வி பிறக்கட்டும்!
சிந்த னைகள் இலட்சியத் தேரைச்
சீராய் முயற்சியில் இழுக்கட்டும்!

வந்த வாய்ப்புகள் சொந்தம் போலவே
வாசல் கதவினைத் தட்டாது!
முந்தி முயன்றால் எந்த உச்சியும்
முத்த மிடுமுனைத் தட்டாது!

அந்த மென்பதும் இல்லையே வானில்
அண்டம் கடந்திடும் எல்லையே
சிந்தும் வியர்வையின் துளிகள் இல்லையேல்
சொல்லும் வெற்றியிங் கில்லையே.

உழைப்பில் ஆழ்ந்திடு உன்னைத் தோய்த்தெடு
உறவுகள் உறவெனக் கூறிவரும்!
விழைவு யாவுமே வரங்களாகிடும்
வளமென நிலைமையும் மாறிவரும்!

உயிரின் நாதமாய் உனது செயல்களில்
உறுதி யிருந்தால் அதுபோதும்!
அயர்வில் லாமலே பயணம் செய்திடு
அதுதான் வாழ்வினைச் சுகமாக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *