பொதுவாச் சொல்றேன்

புருஷோத்தமன்

யாராவது நல்ல குணங்களோட இருக்கார்னு வைச்சுக்குங்க, “பழக்கம்னா அப்படிப் பழகணும்பா” அப்படீன்னு பாராட்டிச் சொல்றது பழக்கம். இல்லீங்களா!
நான் பொதுவாச் சொல்றேன், நல்லதா ஒண்ணைக் கத்துக்கணும்னா அதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு.

இப்ப, மேலை நாடுகளிலே ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காங்க. என்ன தெரியுங்களா? ஒரு பழக்கம் நம்மகிட்டே படியணும்னா குறைஞ்சது 21 நாட்கள் ஆகும் அப்படீங்கிறாங்க.
உதாரணமா, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பறாங்க இல்லியா? அப்போ, முதலிலே எரிபொருள் அதிகம் செலவாகுது. ஆனா போகப்போக அவ்வளவு ஆகறதில்லே. அதாவது ஒரு காலகட்டத்துக்குப் பிறகு எரிபொருளைக் குறைவா பயன்படுத்தினா போதும்ங்கிற பழக்கம் ராக்கெட்டுக்கு ஏற்படுது.

மனிதர்களும், ஒரு நல்ல பழக்கத்தைப் பழகணும்னா அதுக்குன்னு கொஞ்சம் பயிற்சி தேவைப்படுது. நான் பொதுவாச் சொல்றேன், காலையிலே உடற்பயிற்சி பண்ணறதுன்னு ஆரம்பிச்சா, குறிப்பிட்ட காலகட்டம் வரை விடாம செய்தாத்தான் அது ஒரு பழக்கமா மாறும்.

மேலை நாடுகளிலே ஒரு பழக்கம் படிய 21 நாள் ஆகும்னு இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நம்ம முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிங்க தெரியுமா? மனம் அவ்வளவு சீக்கிரம் படிஞ்சு வரும்னு அவங்க நம்பலை. அதுக்காக “ஒரு மண்டலம்” அப்படீங்கிற காலகட்டத்தை விதிச்சாங்க. சிலர் அதை 41 நாளுன்னு சொல்லுவாங்க. சிலர் 48 நாளுன்னு சொல்லுவாங்க. மருந்து, பத்திய உணவு, யோகப் பயிற்சி, எதுவாயிருந்தாலும் ஒரு மண்டலம் விடாம செய்யணும் அப்படீங்கிறது பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே நம்ம முன்னோர்கள் வகுத்து வைச்ச முறை.நான் பொதுவாச் சொல்றேன், புதுசா எதைப் பழகினாலும் ஆரம்ப சூரத்தனம் அப்படீன்னு ஒண்ணு நமக்கு ஏற்படும்.

ரொம்ப உற்சாகமாகத் தொடங்கறது, போகப்போக சுருதி குறையறது அப்படீன்னு. இதை கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாகிற கதைன்னு சொல்லுவாங்க.
நான் பொதுவாச் சொல்றேன், ஒரு பழக்கம் உறுதியாகணும்னா அதிலே மூணு முக்கிய அம்சங்கள் உண்டு. பழக்கம் முதல்லே உடம்பிலே பதியணும். அப்புறம் மனசுலே படியணும். பிறகு புத்தியிலே படியணும்.

உடம்பு, மனசு, புத்தி மூணும் ஒத்தாப்பிலே ஒண்ணைப் பழகினா அது வாழ்க்கை முறையிலே இடம் பெறுது. அதுதான் நிலையான முறையான வளர்ச்சிக்கு வழி செய்யுது.

வளர்ச்சிப் பாதைக்கு பழக்கங்கள் வேண்டும்
பழக்கம் படிந்திடப் பயிற்சிகள் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *