சிந்தனை செய் மனமே….

– இரா.கோபிநாத்

“நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவி விடுகிறது. அதனால் நாம் எடுத்த முயற்சியில் வெற்றியும் நம்மை விட்டு நழுவிவிடுகிறது. நமக்குத் திறமை இருந்தும் அது சமயத்திற்குக் கை கொடுக்காமல் தவிக்கிறோம்”.

மனம் போன போக்கிலே, கால் போகலாமா? மனம் போன போக்கிலேதான் கால் போகும். வேறு வழியே இல்லை. அந்த அளவிற்கு நமது மனம் நமது நடவடிக்கைகள் மீது ஆதிக்கம் செய்கிறது. மீண்டும் சொல்கிறேன், மனம் போன போக்கிலேதான் கால் போகும்.

இந்த மனம் எந்த அளவிற்கு நமது செயல்களை நிர்ணயிக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். எனக்கு ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்கான பயிற்சிக்காக திருச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னோடு சேர்ந்து இன்னும் நூறு பேர் பயிற்சிக்காக வந்திருந்தார்கள்.

அனைவரும் ஒரு விடுதியில் தங்கினோம். வரிசையாக 50 படுக்கைகள் இரண்டு பக்கமும் போடப்பட்டிருந்தன. எல்லோரும் தங்கள் தங்கள் படுக்கையைத் தேர்ந்தெடுத்து, பக்கத்தில் இருந்த அலமாரியில் பொருட்களை அடுக்கினோம். அப்போது அந்தப் பயிற்சி நிலையத்தின் முதல்வர் வந்தார். நாங்கள் இந்தப் பயிற்சிக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். விடுதியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் சொன்னார். நாங்களும் கவனமாகக் கேட்டுக்கொண்டோம்.

இறுதியில் சொன்னார், “ஒரு எச்சரிக்கை நீங்கள் இரவில் தூங்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இங்கு தேள்கள் நிறைய இருக்கின்றன. கூறையிலிருந்து சில சமயங்களில் மேலே விழலாம். ஜாக்கிரதை” என்று சொன்னார்.

அவர் என்னமோ சாதாரணமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால், அவர் சொல்லிப்போன செய்தி கேட்டதிலிருந்து எங்களுக்குத் தூக்கமே இல்லை. சிறிது சத்தம் கேட்டாலும் போதும் அனைவரும் விழுந்தடித்துக் கொண்டு எழுந்துவிடுவோம். தேள் பயத்தினால் தூக்கமே இல்லை.

இப்படியே இரண்டு இரவுகள் கழிந்தன. மூன்றாம் நாள் புதிதாக ஒரு மாணவன் பயிற்சிக்காக வந்து சேர்ந்தான். அவனுக்கு இந்தத் தேள் சங்கதி தெரியாது அல்லவா, அவன் அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினான். இதைப் பார்த்த சிலருக்குத் தாங்கவில்லை. நாமெல்லாம் தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இவன் மாத்திரம் தூங்குகிறானே என்று அவனை உலுக்கி எழுப்பினார்கள். அவனும் அலறி அடித்துக்கொண்டு எழுந்தான். அவன் எழுந்தவுடன் பார்த்தால் அவனது தலையணை அடியிலிருந்து ஒரு தேள் திணறிக்கொண்டே வெளிவந்தது.அதாவது தேள் மேலேயே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான். அவனுக்குத் தலைக்கு வெளியே தேள் இருந்தும் அவன் தூங்குகிறான். எங்களுக்குத் தலைக்கு வெளியே தேள் இல்லை. ஆனால் தலைக்குள்ளே (மனதில்) தேள் இருந்தது அதனால் நாங்கள் தூங்கமுடியவில்லை.
நமது மனம் நம்மீது எத்தனை ஆதிக்கம் செய்கிறது பாருங்கள். மனதில் ஒரு எண்ணம் வந்துவிட்டால் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது பாருங்கள். அதனால்தான் அறிஞர்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள்.

மனதைக் கட்டுப்படுத்துவது என்ன சுலபமா? எந்த நினைவு வரக்கூடாது என்று கடுமையாக முயற்சி செய்கிறோமோ அதே நினைவு தான் மீண்டும் மீண்டும் வந்து படுத்துகிறது. எதை நினைவில் நிறுத்தவேண்டும் என்று விழைகின்றோமோ சில வேளைகளில் அது நிற்பதில்லை. மறந்துவிடுகிறோம். இப்படி இருக்கையில் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? கட்டுப்படுத்தத்தான் முடியுமா?

கண்டிப்பாக முடியும். கட்டுப்படுத்துவது மாத்திரம் இல்லை அதை நல்வழிப்படுத்தி நமக்குச் சாதகமாக அதன் அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். இதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் சில முறைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

அரிதரிது மானிடராதல் அரிது. மனிதனால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மனித சக்திக்கு ஈடு இணையே இல்லை. மனிதன் இறைவனின் அம்சம். அப்படிப் பலரும் போற்றும் மனித இனத்தின் மேன்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையான காரணம், மனிதனின் சிந்திக்கும் திறமைதான்.

அதனால்தான் இந்தச் சிந்தனைகள் உருவாகும் (உருவாக்கும்) மனம் என்ற அந்தக் கருவறை குறித்து ஞானிகள் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். பண்டைய காலங்களிலிருந்தே இந்த மனம் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல அரிய தகவல்களை நாம் இப்போது அறியப் பெற்றிருக்கின்றோம். இந்த சிந்தையாற்றலால்தான் தம்மை விட சக்திவாய்ந்த மிருகங்களையும் மிகவும் அனாயசமாக மனிதன் ஆட்டிப்படைக்கிறான்.

நமது உடலில் புதைந்து கிடக்கும் இந்த மனம், உடலோடு இணைந்திருக்கிறது. அதனால் தான் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் மனம் பாதிக்கப்படுகின்றது. மனதில் ஏற்படும் சில எண்ணங்களால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதைத் தெளிவுபடுத்துவதற்கு ஒரு பயிற்சி இப்போது செய்வோம் வாருங்கள்.

சற்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் வீட்டில் தனியாக அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மதியம் 11 மணி இருக்கலாம். உங்களுக்கு சற்று அலுப்பாக இருக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்கள்.

வெள்ளை சலவைக்கல் சமையல் மேடை பளிச்சென்று சுத்தமாக இருக்கிறது. அருகில் இருக்கும் நீல நிற ப்ரிட்ஜ், உங்களை ஈர்க்கின்றது. தின்பதற்கு என்ன கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டே ஆவலோடு அதைத் திறக்கிறீர்கள். சிலீரென்று குளிர் காற்று முகத்தில் அடிக்கின்றது. வெளியிலிருந்த வெய்யிலுக்கு அது இதமாக இருக்கின்றது.
ரசித்துக்கொண்டே கண்களால் உள்ளே பார்க்கிறீர்கள். ஒரு பெரிய எலுமிச்சம்பழம் கண்ணில்படுகிறது. நல்ல மஞ்சள் நிறத்தில் ஒரு பந்து அளவிற்கு உருண்டையாக இருக்கும் அதைக் கண்டதும், அதைப் பிழிந்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகின்றது. அதைக் கையில் எடுத்தால், அப்பா ‘சிலீர்’ என்று கையில் உரைக்கின்றது. பொறுத்துக்கொண்டு, நறுக்குவதற்காக அதை மேடையில் வைத்துவிட்டு, கத்தி ஒன்றைத் தேடி எடுக்கிறீர்கள்.

வெள்ளையான அந்த மேடையில் மஞ்சள் நிறத்தில் இந்தப் பழம், ஒரு கையால் பழத்தைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் கூராக இருக்கும் கத்தியால் பழத்தை அறுக்க, வீச்ச் என்று சாறு முகத்தில் லேசாக தெரிக்கின்றது. அந்தப் புளிப்பு சுவையும், காற்றில் பரவிய அதன் சுகந்தமும் சேர்ந்து.. வாயில் ஜலம் வந்துவிடுகிறது.
என்ன நிஜமாகவே வாயில் நீர் ஊருகிறதா? எங்கே பழம்? எங்கே கத்தி? மனத்தில் நினைத்த அளவிலேயே வாயில் நீர் ஊருகிறதே பாருங்களேன்.

உடலிற்கும் மனதிற்கும் உள்ள மிக நுணுக்கமான பந்தம்தான் இந்த விளைவை ஏற்படுத்துகிறது. சரி இந்தப் பிணைப்பினால் நமக்கு என்ன லாபம்? மிகுந்த லாபம் இருக்கின்றது. மனதில் ஏற்படும் சில எண்ணங்களால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது என்றால், உடலின் சில அசைவுகளால் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

மனநிலை சற்று கவலையாக, தொய்வாக இருக்கும் நேரத்தில், தலையைக் கவிழ்த்திக் கொண்டு, சற்றுக் கூன் போட்டு, கைகளைத் தொய்வாக விட்டு அமர்ந்திருந்தால், கவலை இன்னமும் கூடிவிடும். மனம் இன்னும் பாரமாகி விடும். ஆனால், அதே நிலையிலும், சற்று நிமிர்ந்து நின்று, தலையை உயர்த்தி, கைகளை இடுப்பில் வைத்து, சற்று ஆழமாக மூச்சு விட்டுப்பாருங்கள். மனம் சற்று லேசானது போலத் தோன்றும்.இப்போது நான் ஙர்ர்க்ல் இல்லை. அவருக்கு இப்போது ஙர்ர்க் சரியில்லை என்றெல்லாம் கேள்விப் படுகிறோம். இந்த ஙர்ர்க் எனப்படும் அந்த மனநிலை தான் நமது முயற்சிகள் வெற்றியடைவதற்கு முக்கிய காரணம்.

ஆங்கிலத்தில் இதை ஸ்டேட் ஆஃப் மைன்ட் (நற்ஹற்ங் ர்ச் ஙண்ய்க்) என்பார்கள். நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவிவிடுகிறது. அதனால் நாம் எடுத்த முயற்சியில் வெற்றியும் நம்மை விட்டு நழுவி விடுகிறது. நமக்குத் திறமை இருந்தும் அது சமயத்திற்குக் கை கொடுக்காமல் தவிக்கிறோம்.

இதனையே நாம் வெற்றி மனநிலை என்றும், தோல்வி மனநிலை என்றும் பாகுபடுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு நிலைகளுமே தற்காலிகமானவைதான். ஆனாலும் நமது வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றங்கள் இதனால் ஏற்பட்டுவிடும். வாய்ப்புகள் வாழ்க்கையில் வரும் வேளையில் அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பைப் பற்றி கூறுகையில் வள்ளுவர் சொல்வார்.ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
காலம் கனிந்த அந்த வேளையில், நமது மனமும் ஒத்துழைக்க வேண்டுமே. அதற்கு நமது மனத்தைத் தயார்ப்படுத்திக் கொள்வது எப்படி?

ஒரு விற்பனையாளர், ஒரு முக்கியமான நபரைச் சந்திக்கப் போய்க்கொண்டிருக்கிறார். நீண்ட நாட்களாக முயற்சி செய்து இப்போதுதான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைந்திருக்கின்றது. இந்த உரையாடலின்போது எப்படியாவது அவரைக் கவர்ந்து விட வேண்டும். ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று எண்ணி நல்லபடி தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் முன்பே ஒத்திகை பார்த்து வைத்திருந்தார். வழியில் தொலைபேசியில் அவருக்கு ஒரு ஏமாற்றமான செய்தி வருகிறது. உடனடியாக அவர் மனம் தொய்ந்து போகிறது. சற்று முன்பு இருந்த வெற்றி மனநிலை மாறி இப்போது ஒரு தளர்ந்த மனநிலை ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது இருக்கும் மனநிலையில் அவர் தனது விற்பனை முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவுதான். என்ன செய்வது? இந்த வாய்ப்பைத் தள்ளிப் போடவும் முடியாது.

இப்படி ஒரு தொய்வான மனநிலையில் இருந்து உடனடியாக ஒரு உன்னத மனநிலைக்கு மாறமுடியுமா? இந்த மனநிலை என்பது நமது கட்டுக்குள் இருக்கின்றதா? வெளிப்புறச் சூழ்நிலைகளின் காரணமாக இந்த மனநிலை பாதிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பல நேரங்களில் இந்த வெளிப்புறச் சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை அல்லவே. அப்படி இருக்கும் பட்சத்தில் நமது மனநிலையைத் திருத்தி அமைப்பது எப்படி? இதற்கு ஏதாவது வழியிருக்கிறதா? ஆம் இருக்கிறது. சில பயிற்சிகள் மூலம் அப்படி ஒரு உன்னத மனநிலையை உடனடியாக அடையமுடியும்.

முந்தைய காலங்களில் போர் துவங்கும் முன்பாக “பள்ளிப் பாட்டு” என்று வீரம் பொங்கும் பாடல்களைப் பாடி வீரர்களை உற்சாகப்படுத்து வார்கள். அந்தப் பாடல்களை கேட்ட உடனேயே அவர்கள் நரம்புகள் முறுக்கேறி எதிரிகளை வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று கிளம்பி விடுவார்கள். அப்படி ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்தவை இந்தப் பாடல்கள்.

இதுபோலவே நமது மனநிலையை மாற்றக்கூடிய உபகரணங்கள் பல இருக்கின்றன. இவற்றை மூன்று வகைகளாகப் பிரித்தறியலாம். இந்த மூன்று வழிமுறைகளையும் வரும் பகுதிகளில் விவரமாக பார்ப்போம். சற்றுப் பொறுத்திருங்கள்.
அதற்கும் முன்பாக இந்த மனம் எப்படி வேலை செய்கிறது. இதற்கும் நமது புலன்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மகாகவி பாடினான்,

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்;- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

உங்கள் எண்ணமும் இதுபோன்ற ஒரு அக்கினிக் குஞ்சுதான். இதில் சிறியதென்றும், பெரியதென்றும் ஒன்றும் இல்லை. உங்களைத் தகித்து, எதையும் செய்ய, சாதிக்கக்கூடிய ஒரு வெறியை ஏற்படுத்தும் சக்தி கொண்டது இந்த எண்ணம். ஒரு தேளின் நினைப்பில் தூங்க முடியவில்லையென்றால் பாருங்களேன்! இந்த எண்ணங்கள் எப்படி உற்பத்தியாகின்றன? அடுத்த இதழில் இதைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *