எளிது… எளிது… வெல்வது எளிது!

– முகில் தினகரன்

நாளை மறுநாள் சாவித்திரி அந்த ஊருக்குப் புறப்படுகிறாள்.முன்னதாக இன்றே மேஜை, நாற்காலி, கண்ணாடிகள், அலமாரிகள், மற்றும் ஒரு மகளிர் அழகு நிலையத்திற்குத் தேவையான அலங்கார வஸ்துகள், எல்லாவற்றையும் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு இப்போதுதான் அறைக்குத் திரும்பினாள். வந்தவள் உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தொப் பென்று படுக்கையில் விழுந்து சோம்பல் முறித்தாள்.

மனதின் நினைவுச் சிறகுகள் அந்த ஊரை நோக்கி… அந்த நாளை நோக்கிப் பறக்கத் துவங்கின.

அந்த ஊர் என்பது வேறெதுவுமில்லை. சாவித்திரி பிறந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினோரு வயது வரை வளர்ந்த ஊர்தான். பதினேழு வருடங்களுக்கு முன் அந்த ஊரை விட்டு வந்தவள் இப்போதுதான் திரும்பப் போகிறாள். அதுவும் வெறுமனே இல்லை. மிக மிக நவீனத்துவம் வாய்ந்த மகளிர் அழகு நிலையமொன்றை அந்த ஊரில் துவங்குவதற்கான சகலவிதமான ஏற்பாடுகளுடன்.

அய்யய்ய… போயும் போயும் அந்த ஊரிலா ப்யூட்டி பார்லர் ஓப்பன் பண்ணப் போறே?… சரியான கிராமம்டி அது! சக தோழிகள் சொல்லிய போதெல்லாம் அதை அலட்சியம் செய்தாள்.

காரணம்?

அவள் வாழ்வின் லட்சியமே அந்த ஊரில் ஒரு அழகு நிலையம் உருவாக்குவதுதான். அதற்குத்தானே அந்த அழகுக்கலை கோர்úஸ படித்தாள்.கீழ் சாதிப் பிறப்பு என்கிற ஒரே காரணத்துக்காக பதினேழு வருடங்களுக்கு முன் அவள் பட்ட ஒரு அவமானம்தான் அவளுக்குத் தூண்டு கோலாயிருந்தது, அவளுக்குள் ஒரு நம்பிக்கைத் தண்டவாளத்தைப் பதித்தது என்றால், அது சத்தியமான உண்மை. ஆனால், அவளது தந்தையோ, பாட்டனாரோ, முப்பாட்டனாரோ யாருமே அந்த அவமானங்களை அவமானங்களாய்க் கருதாத மனித ஜடங்களாக காலங்காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்களே, என்பதை நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு கோபத் தீ மூளும்.

பல வருடங்களுக்கு முன் அப்படித்தான் ஒரு நாள் கோபத்தீ மூண்டது. அப்போது சாவித்திரிக்கு வயது பத்து… அல்லது பதிணொன்று இருக்கும். ஊர்ப் பெரியவரும்… மேல்சாதி மக்களின் தலைவருமான பொன்னுரங்கய்யா வீட்டு மாட்டுக் கொட்டிலில் எடுபிடி வேலைக்கு அவளை விட்டிருந்தார் அவளது அப்பா. அந்த வேலைக்குப் போக மாட்டேனென்று அடம்பிடித்த சாவித்திரியை இழுத்து வந்து பொன்னுரங்கய்யா முன் நிறுத்தி,
“சாமி… பாருங்க சாமி இந்தக் கழுதையை… வேலைக்குப் போக மாட்டேன்… இஸ்கூலுக்குத்தான் போவேன்’னு அடம்பிடிக்கறா சாமி… நீங்க ரெண்டு போடுங்க சாமி… அப்பத்தான் கேப்பா!வயதில் பெரியவர்களைக் கூட ஏலேய் என்று எகத்தாளமாய் விளிக்கும் பொன்னுரங்கய்யா அந்தக் கீழ்சாதிச் சிறுமியை விடுவாரா? ஒரே எட்டில் அவள் தலைமுடியைப் பற்றி வெறி கொண்ட மட்டும் இழுத்து,ஏலே… சவஞ்சோடிக்கற சாதிக் கழுதைக்கு படிப்புக் கேக்குதாலே! என்றபடி ஒரே தள்ளாய்த் தள்ளிவிட எகிறிப் போய் விழுந்தாள் சாவித்திரி.விழுந்தவள் அதே வேகத்தில் எழுந்து பொன்னுரங்கய்யாவை முறைக்க, பதறியபடி ஓடிவந்தான் அவளைப் பெற்றவன்.
பய புள்ள… சாமியையே மொறைக்கறியா? என்று சொல்லி தன் பங்குக்கு அவனும் பளாரென்று அறைய,
ச்சீய்… பெத்த மகளை இன்னொருத்தன் அடிக்கறதைப் பாத்துட்டு நிக்கறியே… நீயும் ஒரு அப்பனா?ஏலேய்… என்ன… என்னடி பேசுறே நீ?… உங்கொப்பனென்ன கலெக்டரா?… ஊருல எங்க சாவு வுழுகுது… போய் சவத்தைக் குளிப்பாட்டி… ஜோடிச்சு… காசு வாங்கலாம்னு குந்திக்கிட்டிருக்கற கூறு கெட்டவன்!”இருக்கட்டும்… எங்க பரம்பரையே பொணத்தை சோடிக்கற பரம்பரைதான்… அதுக்காக நான் படிக்கக் கூடாதுன்னு யாரு சொன்னது?” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கேட்டாள் சாவித்திரி.

அவளின் தைரியத்தில் ஆவேசமுற்ற பொன்னுரங்கய்யா கையை ஓங்கிக்கொண்டு அவளை நெருங்க,த பாருய்யா… பொணஞ் சோடிக்கற வேலையெல்லாம் எங்கப்பனோட சரி… நான் படிக்கத்தான் போறேன்… படிச்சுக் காட்டத்தான் போறேன்!

கத்தலாய்ச் சொல்லிவிட்டு, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் அன்று புறப்பட்டு வந்தவள் இன்று… பதினேழு வருடங்களுக்குப் பிறகு நாளை மறுநாள் அந்த மண்ணை மிதிக்கப் போகிறாள்.

ஒரு குழந்தை விமர்சனப் புகையில் வளர்ந்தால் அது புறம் பேசப் பழகும். அதிகார வெப்பத்தில் காய்ந்தால் அது கோழையாகும். வெறுப்புகளுக்கிடையே வளர்ந்தால் குற்ற உணர்வுகளைச் சுமக்கும். ஊக்குவிப்புத் தென்றலில் தவழ்ந்தால் நம்பிக்கை பெறும்.
ஆம்! கிராமத்திலிருந்து கிளம்பி, நகரத்தில், திக்குத் தெரியாமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சாவித்திரிக்கு அடைக்கலம் கொடுத்த புனித இம்மானுவல் சர்ச் ஃபாதர் அவளுக்கு ஊக்குவிப்புத் தென்றலாய் இருந்து, சர்ச்சுக்கு சொந்தமான அனாதை இல்லத்தில் அவளைச் சேர்ந்துக்கொண்டு கல்வி பயிற்றுவித்தார்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் அவளுக்குள் வளர்ந்த நம்பிக்கைத் தூண், இறுதியில் ப்யூட்டிசியன் கோர்ஸில் அவளை நிபுணத்துவம் பெறவைத்தது.
அன்று, அந்த ஊருக்கு வந்திறங்கியதும், சொந்த மண்ணில் கால் பதித்ததில மேனி சிலிர்த்தது சாவித்திரிக்கு.

முதல் வேலையாய் தன் தந்தையைப் பற்றி நாசூக்காய் விசாரித்தாள்.ஆரூ.. அந்த சவஞ்சோடிக்கற சடையனையா கேக்கறீங்க? அவஞ் செத்துப் போயி வருசமென்னாச்சு இப்ப வந்து கேக்கறீங்களே!”தந்தையின் மீது வெறுப்பு மிகுந்திருந்தாலும் தன் பிறப்புக்கு காரண கர்த்தா அவர், என்கிறஆதார பாசம் அவளைச் சற்று அசைக்க, மௌன அழுகையில் சோகத்தை மென்றாள்.

அந்த ஊரில் அவள் துவக்கிய மகளிர் அழகு நிலையத்திற்கு ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என வருகை தந்த அவ்வூர்ப் பெண்கள் ஒரு கட்டத்தில் எந்தவிதத் தயக்கமும்… எந்த வித அச்சமுமின்றி வாடிக்கையாக வந்து போக ஆரம்பித்தனர்.

தான் எதிர்பார்த்ததை விட அங்கு தன் அழகு நிலையத்திற்கு ஆதரவு கிட்டிவிட, மணப்பெண் அலங்காரத்தில் தன் தனித்திறமையைக் காட்டி, பெயர் வாங்கினாள். தொடர்ந்து அவ்வூரில் நடைபெறும் திருமணங்களிலும் சாவித்திரியின் மணப்பெண் அலங்காரம் சிறப்புச் சீராக சேர்த்துக் கொள்ளப்படுமளவுக்கு பிரசித்தி பெறத் துவங்கியது.
“பெண்ணுக்கு நீங்க எது செய்யறீங்களோ இல்லையோ… கல்யாணத்துல பொண்ணோட அலங்காரம் மட்டும் சாவித்திரியம்மாவோடதாத் தான் இருக்கணும்… கண்டிப்பாச் சொல்லிப் போட்டோம்! என்று மாப்பிளை வீட்டார் குறிப்பிட்டுக் கேட்கும் அளவிற்கு கொடி நாட்டினாள் சாவித்திரி.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள்காலை பதினோரு மணியிருக்கும். வாசலில் யாரோ அழைப்பது போல் குரல் கேட்க, எழுந்து சென்று பார்த்தாள் சாவித்திரி.தலையில் முண்டாசுடன் ஒல்லியான தேகத்துடன் ஒருத்தன் நின்று கொண்டிருந்தான்.
அம்மாவ பெரிய வூட்ல கூட்டியாரச் சொன்னாங்க! அவன் குரலில் பயம் கலந்த பவ்யம்.பெரிய வீடா…?ஆமாம்மா!… மேல் சாதிக்காரங்க தலைவரு வூடு!”பொன்னுரங்கய்யா…?அவரு பெரியவரு… அவர் போய்ச் சேர்ந்துட்டாரு!… இவரு சின்னவரு… பரமேஸ்வரய்யா!சரி… நீ போ!… நான் வர்றேன்!

பதினேழு வருடங்களுக்கு முன், தான் அவமானப் படுத்தப்பட்ட அதே பண்ணை வீட்டின் பெரிய கேட்டுக்குள் நுழையும் போது சாவித்திரி உள்ளம் உற்சாகத்தில் கூவியது.
அன்று, அவளை வெளியில் நிறுத்தி, அசிங்கப்படுத்திய அந்த வீட்டு மனிதர்கள் இன்று அவளை போட்டி போட்டுக்கொண்டு வரவேற்றனர்.முன்புற ஹாலின் நடுமத்தியில் தொங்கிய ஊஞ்சல் பலகையில் அமர்த்தலாய் உட்கார்ந்து கொண்டு அவளை வரவேற்ற பரமேஸ்வரய்யாவின் முகத்தில் தந்தையின் சாயல் தாராளமாய்,
வாம்மா… உட்காரு!உட்கார்ந்தவள், சொல்லுங்க!… எதுக்காக என்ன வரச் சொன்னீங்க? கேட்டாள்.இதோ… இவ… என் மக… செண்பகம்!… அடுத்த வாரம் இவளுக்கும் சேவூர் சேர்மன் மகனுக்கும் கல்யாணம்!… அதென்னமோ தெரியல… கல்யாணத்துல பொண்ணுக்கு நீங்கதான் அலங்காரம் பண்ணனும்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்தக்கால்ல நிக்கறாங்க!… என்ன சொல்றீங்க?

சரி என்று சொல்லிவிட வாயெடுத்தவள், பொன்னுரங்கய்யாவை ஒரு விநாடி நினைத்துப் பார்த்துவிட்டு, அது… நான்… எப்படி… உங்க… பொண்ணுக்கு…?ஏன்… எங்க பொண்ணுக்கு நீங்க செஞ்சா என்ன?” ஆவேசமாய் சொன்னவரைக் கையமர்த்திய சாவித்திரி, தன் பழைய வாழ்க்கையை… தன் பரம்பரையினர் காலங்காலமாய் செய்து வந்த அந்த தொழிலைப் பற்றி சொல்லிவிட்டு,பிணத்தை ஜோடிக்கற பரம்பரைல வந்த கீழ்சாதிக்காரி நான்… மேல்சாதிக்கார மணப் பொண்னை ஜோடிக்கக் கூடாதுங்க!… என்னைய மன்னிச்சிடுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *