என் அமெரிக்கப் பயணம்

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு. இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
பொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மாக்கடல் ஓதநீர் ஆடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே என்கிறார் திருநாவுக்கரசர் வெவ்வேறு இயல்புடைய மனிதர்கள் – பண்பாடுகள் – மொழிச் சூழல்கள் – வாழ்க்கை முறைகள் அத்தனையும் தரும் பட்டறிவு, பத்து பல்கலைக் கழகங்களின் படிப்பறிவுக்குச் சமம்.
அந்த வகையில் என் சமீபத்திய அமெரிக்கப் பயணம் எனக்குப் பரிசாகத் தந்த புதிய அனுபவங்களின் பகிர்தலாய் இந்தக் கட்டுரைத் தொடர்.வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாகிய அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் மாவட்டத்தில் நடத்திய “தமிழர் திருவிழா 2005″ என்னும் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தேன்.கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மாநாட்டுக் குழுவினருக்கு என் பெயரை முன்மொழிந்திருந்தார்.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் இருப்பு, பல விஷயங்களில் அதன் நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் அமெரிக்கா பற்றிய ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த தேசத்துக்குள் செல்வது ஒருவகை.அமெரிக்க சமுதாயம் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிற விதம், அதன் வளர்ச்சி முறை, குடிமக்களுக்கு தேசத்தின் மீதிருக்கும் நேசம் போன்றவற்றைக் கண்டு, அதன் காரணங்களை ஆராயும் கண்களோடு அமெரிக்காவைப் பார்ப்பது இன்னொரு வகை.

இந்த இரண்டாவது மனநிலையில்தான் என் பயணம் இருந்தது. டாக்டர் கு. ஞானசம்பந்தன் உடன் பறந்த காரணத்தால் பயணம் கலகலப்பாக இருந்தது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தென்னகத்திலிருந்து சென்று ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளவருமான திரு. பால் பாண்டியன், மாநாட்டின் போக்குவரத்துக் குழு பொறுப்பாளர் திரு. பழனிச்சாமி ஆகியோர் டல்லாஸ் விமான நிலையத்தில் எங்களை வரவேற்றனர்.

அமெரிக்காவில் கோடைக்காலம் இது. கொளுத்துகிற வெய்யிலில் கொஞ்சம் கூட வியர்க்கவில்லையே” மனது முதலில் மகிழ்ந்தது. பிறகுதான் நினைவு வந்தது – வெளியே தராத செல்வமும் வியர்வை தராத வெய்யிலும் ஆபத்து என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் பொருத்திய குளிர்சாதன ஏற்பாடு வியர்வை. வெளியிலுள்ள சீதோஷ்ணத்திற்கேற்ப சமன்பாட்டை வியர்வை செய்யும். வியர்க்காத பட்சத்தில் நீர்ச் சத்து குறையும். சோர்வு கூடும்.அமெரிக்காவின் வெய்யிலுக்கு ஈடுகொடுக்க நிறைய தண்ணீர், பழரசம் பருகுங்கள் என்று கார் பயணத்தில் சொல்லிக்கொண்டே வந்தார் பழனிச்சாமி.

கோபிக்குப் பக்கத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். அமெரிக்காவில் கால் வைத்து அரை மணிக்குள்ளாகவே காது குளிரக் கொங்குத் தமிழ் கேட்டதும் உற்சாகமாகி விட்டேன்.

கடந்த நூற்றாண்டில்தான் அமெரிக்காவில் அடுக்கு மாடிகள் ஆச்சரியம். இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் ஆச்சரியம் அடுக்குப் பாலங்கள் தான்.
தூரத்திலிருந்து பார்க்கும் போது பின்னிப் பிணைந்த பாம்புகளாய்த் தெரியும் பாலங்கள், பக்கத்தில் நெருங்க நெருங்க துல்லியமான கோடுகளாய்ப் பிரிகின்றன.

ரெனய்ஸன்ஸ் ஹோட்டலில் நாங்கள் நுழையும்போது எங்களை வரவேற்றார் திருமதி. விஜி ராஜன். இவர் மாநாட்டுக் குழுவின் தலைவர். வாமன வடிவம். செயலாற்றலில் விசுவரூபம்.

இரவு விருந்துக்கு திரு. பால் பாண்டியன் இல்லம் செல்லத் தயாராகுங்கள் என்று முன்பே தெரிவித்திருந்தார்கள்.சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு எங்களை அழைத்துச்செல்ல கார் வந்தது. இப்படி வெய்யில் கொளுத்துகிறதே என்று நேரத்தை விசாரித்தால் வட அமெரிக்கா நேரப்படி இரவு எட்டுமணி.

குளிர்காலத்தில் ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி விடுகிற அமெரிக்காவில் கோடைக் காலமென்றால் சூரியனுக்கு ஓவர் டைம் – இரவு ஒன்பதரை மணி வரை.
வாரத்திற்கு நாற்பது மணி நேரமே பணி நேரம் என்கிற வரையறை கண்டிப்பாகப் பின்பற்றப்படும் அமெரிக்காவில் சூரியனுக்கு மட்டும் அந்தச் சுதந்திரம் கிடையாது.
இரவு விருந்து, இந்தியாவின் இன்றைய நிலை பற்றிய கலந்துரையாடலின் களமாக இருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களில் பலருக்கும் தாயகத்தின் இன்றைய நிலை குறித்துத் தெளித்த பார்வை இருக்கிறது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய், ரவி தமிழ்வாணன் அங்கு வந்திருந்தார்.சினிமா நடிகர்களுக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும், அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழிலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி பற்றியும் கவலையோடு பேசினார்கள்.

தமிழகத்தின் மரபு சார்ந்த அம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்து விளக்கேற்றி, கண்கவரும் கலை நிகழ்ச்சிகளோடு “தமிழர் திருவிழா 2005” துவங்கியது.உரைவீச்சு, கருத்தரங்கள், விவாத மேடை, கவியரங்கம், கலந்துரையாடல் செம்மொழி – ஆய்வரங்கம், நடனம், இசை, நாடகம் என்று விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பற்றி எழுதத் தொடங்கினால் அது தனியொரு புத்தகமாகிவிடும்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் இருக்கிற டல்லாஸ் மாநகரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிற தமிழர்கள் வந்து திரண்டிருந்தார்கள். அமெரிக்கத் தமிழர்களின் குழந்தைகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன.

பட்டுப் புடவைகளும், வெள்ளை வேஷ்டிகளும், மல்லிகைச் சரங்களுமாய் கல்யாண வீடு போல் கலகலப்பாய் இருந்தது.மூன்று நாள் மாநாட்டின் நிறைவு அம்சமாக ஊடகங்களில் தமிழ் என்கிற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. அறிவியல் தமிழறிஞர் அனந்த கிருஷ்ணன், இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளிவரக் காரணமான அருட்தந்தை கேஸ்பர், கவிஞர் கனிமொழி, டாக்டர் கு. ஞானசம்பந்தன், ஆகியோருடன் நானும் பேசிய அந்த நிறைவு அமர்வு சூடு கிளப்பியது.அர்த்தமுள்ள விவாதங்கள் அரங்கேறின. ஐந்தாம் வகுப்பு வரையாவது தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி ஆதங்கத்துடன் கையெழுத்திட்டனர் அமெரிக்கத் தமிழர்கள்.இது மாநாட்டு நிகழ்ச்சிகளின் சாரம். இனி அமெரிக்காவை வலம் வருவோம் வாருங்கள்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *