– இரா. கோபிநாத்
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது செயல்களைக் கட்டுப்படுத்தலாம், செயல்கள் மூலமாக விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம், வெற்றியடையலாம்.
மனம் நம் மீது எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பார்த்தோம். இந்த மனம் என்ன வேலை செய்கிறது என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
இந்த மனம் ஒரு தொழிற்சாலை போன்றது. இந்தத் தொழிற்சாலையில் எண்ணங்கள் தயார் செய்யப்படுகின்றன. இது 24 மணி நேரமும் ஓயாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. உட்கார்ந்திருக்கும் போது, நடக்கும்போது, நிற்கும் போது ஏன் தூங்கும் போது கூட எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
இந்த எண்ணங்கள் நம்முடைய நடவடிக்கைகளுக்குக் காரணமாக அமைகின்றன. அந்த நடவடிக்கைகளின் காரணமாக விளைவுகள் ஏற்படுகின்றன. முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. ஆனால், அந்த முயற்சியே எண்ணங்களைப் பொறுத்துத்தான் அமைகின்றது.
வெற்றி பற்றிய சிந்தனை மனதில் எழும்போது அதை அடைய வேண்டும் என்று முயற்சி செய்கின்றோம். அந்த முயற்சியின் பயனாக வெற்றி கிடைக்கிறது. ஆனால், அப்படி ஒரு நினைவே மனதில் வராவிட்டால் அதற்காக நாம் சிரமப்படப் போவதில்லை. வெற்றியாளராகும் வாய்ப்பும் இருக்காது. அதனால்தான் “பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே என்றார் கவிஞர்.
நல்ல வலிமையான எண்ணங்கள் மனதில் ஏற்படும்போது கடினமான செயல்களைக் கூட செய்யத் துணிந்து விடுகிறோம். அதுவே பலகீனமான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது சிறு முயற்சிகள் செய்வதற்குக் கூட பயப்படுகிறோம். இதே காரணத்தினால் வள்ளுவர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றார். சரி இதெல்லாம் நமக்குத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் இந்த எண்ணங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை. அப்படி இருக்கையில் எப்படி உள்ளுவது உயர்வாக உள்ளுவது?
இந்த மனம் ஒரு தொழிற்சாலை, அதில் உற்பத்தியாவது எண்ணங்கள் என்று மேலே பார்த்தோம். இந்தத் தொழிற்சாலையில் முடிவுப் பொருள் எண்ணங்கள் என்றால் இந்த உற்பத்திக்கு வேண்டிய மூலப்பொருள் என்ன என்பதை ஆராய்வோம். ஏனென்றால் முடிவுப் பொருள் தரமானதாக அமைய வேண்டுமென்றால் மூலப்பொருள் தரமானமாக இருக்கவேண்டும் அல்லவா? நூலைப்போலத்தான் சேலை.
இந்த மனம் என்னும் தொழிற்சாலையின் மூலப் பொருளாக அமைவது தகவல்கள். அதாவது ண்ய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய். இந்த மனம் என்பது தகவல்களை சேகரித்து அதிலிருந்து எண்ணங்களை உருவாக்குகிறது. அதனால் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் இந்தத் தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
நல்ல எண்ணங்கள் வளர வேண்டுமென்றால் இந்த மனதிற்கு நல்ல தகவல்கள் சென்று அடைய வேண்டும். எதிர்மறையான தகல்கள் வந்து அடையும்போது இந்த மனம் என்னும் தொழிற்சாலை பாகுபாடு இல்லாமல் அதையும் பதப்படுத்தி எதிர்மறை எண்ணங்களாக வெளியிடுகிறது.உதாரணத்திற்கு ஒரு திடுக்கிடும் மர்ம நாவல் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி மணி அடித்தாலும், என்ன செய்தியாக இருக்குமோ என்று மனம் ஒரு வினாடி பதைத்துப் போகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் கூட ஒரு கவலை தற்காலிகமானவேனும் மனதில் உருவாகிறது. தகவல்களைப் பொருத்து எண்ணங்கள் அமைகின்றன.
சில நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்டிக்கும் நேரம் சில எதிர்மறைத் தகவல்களைத் திணிப்பதுண்டு. ஒரு தந்தை பிள்ளையை ‘நீ முட்டாள், உதவாக்கரை’, என்றெல்லாம் சொல்லும்போது அந்தப் பிள்ளை இந்தத் தகவல்களைப் (மூலப்பொருள்களாக) பெற்றுத் தனது மனதிற்கு எடுத்துக் கொள்கிறான். முடிவு எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள்.சில ஆசிரியர்களும் கூட இது போன்ற தவறான தகவல்களைப் பலநேரங்களில் பிள்ளைகளுக்கு வழங்குகிறார்கள். இவர்களின் நோக்கம் மேன்மையானதாக இருக்கலாம். பிள்ளையை நெறிப்படுத்த வேண்டுமென்கிற ஆதங்கத்தினால் இவ்வாறாக நடந்து கொள்ளலாம். ஆனாலும் கூட அந்தப் பிள்ளையின் மனதில் இந்த தகவல் சென்றடையும் போது அதன் விளைவு எதிர்மறையாக அமைகிறது. சில நேரங்களில் பெரியவர்கள் தங்களின் பொறுமையின்மை காரணமாகத் தங்களையும் அறியாமல் இப்படி ஒரு இழப்பினை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர்களின் அறிவாற்றலில், இந்த மூளை வேலை செய்யும் விதத்தில் அதிகமான வித்தியாசம் இருக்காது. இதில் புத்திசாலியென்றும், முட்டாள் என்றும் பாகுபாடு கிடையாது. அந்தக் குழந்தையின் மூளை (மனதின் இருப்பிடம்) ஒரு வெற்றுப் பலகை போன்றது. பதிவு செய்யாத ஒலி நாடா போன்றது. உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சில தகவல்கள் பதிவாகிறது. மனம் இந்தத் தகவல்களை உட்கொண்டு, பதப்படுத்தி எண்ணங்களாக உருவாக்குகிறது. இந்தப் பதப்படுத்துதல் மின்னல் வேகத்தில் (அதைவிட வேகமாக) நடக்கிறது. இதனால் தகவல் வந்தடைந்ததற்கும், எண்ணம் உருவானதற்கும் இடைவெளி தென்படுவது இல்லை.
இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஐம்புலன்கள் மூலமாக நமது மனம் தகவல்களைச் சேகரிக்கின்றது. இதுவும் இடைவிடாது 24 மணி நேரம் நடந்துகொண்டே இருக்கின்றது. சில வேளைகளில் நாம் உணராத போது கூட இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.”பொறிவாயில் ஐந்தவித்தான்” என்று அழகாக விளக்குவார் வள்ளுவர். பார்வை, கேள்வி, உணர்வு, சுவை, நாற்றம் என்று இந்தப் புலன்கள் நமக்குத் தகவல் மையமாக அமைந்து தகவல்களைச் சேகரித்து மனதுக்குத் தருகின்றன. மனம் இந்தத் தகவல்களைப் பதப்படுத்தி எண்ணங்களாக உருவாக்குகிறது.
நமக்கு ஐந்து புலன்கள் ஆண்டவன் கொடுத்திருந்தாலும் நாம் இவை ஐந்தையும் சரிசமமாக உபயோகிப்பதில்லை. அதாவது தகவல்கள் ஒவ்வொரு புலன்களிலும் 20 சதவிகிதக் கணக்கில் நமது மனதைச் சென்றடைவதில்லை.அதிகப்படியான தகவல்கள் பார்வை, கேள்வி, உணர்வு, ஆகிய இந்த மூன்று புலன்களின் வாயிலாகச் சேகரிக்கப்படுகிறது. ஏறத்தாழ 85 சதம் தகவல்கள் மனதை இந்த மூன்று புலன்களின் வாயிலாகச் சென்றடைகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்தப் புலன்களை செவ்வனே கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும். நல்ல தகவல்களையே நமது மனதிற்கு அனுப்பிக் கொண்டிருந்தால் மனம் நல்ல எண்ணங்களையே தயார் செய்யும். அதனால் நாம் படிக்கும் புத்தகங்கள், பார்க்கும் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் தரமானவையாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஊக்கப்படுத்தும் புத்தகங்களைப் படிக்கும் பொழுது அதிலிருக்கும் தகவல்கள் நமது மனதைச் சென்றடைந்து வெற்றிக்குத் தேவையான எண்ணங்களைத் தயார் செய்கின்றது.வைணவ சமயத்தில் ஆண்டாள் மிகவும் போற்றப்பட்ட ஆழ்வார்களில் ஒருவராக வணங்கப்படுகின்றார். இந்த உலகில் பெண்ணாகப் பிறந்து தனது அன்பினால் ஆண்டவனையே தனது கணவனாக அடைந்தவள். தான் மட்டுமல்லாது தனது தோழியர்களையும் ஆண்டவனுடைய பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தப் பல பாசுரங்களை இவர் இயற்றியிருக்கின்றார்.
கடவுள் பக்தியில் மூழ்கி உலகில் வேறு எந்த நினைவுமில்லாமல் நோன்பிருந்தாள். அப்படி நோன்பு இருக்கும் காலத்தில் பாடியிருக்கும் ஒரு செய்யுள் “வையத்து வாழ்வீர்கள்…” நோன்பு இருப்பதற்கு வேண்டிய கட்டுப்பாடுகளை விளக்கும் வண்ணமாக இந்த பாட்டு அமைகிறது. “நெய்யுண்யோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்…” அதாவது நல்லவை அல்லாத புத்தகங்கள் ஓதமாட்டோம் என்கிறார். இதைத்தான் நாம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றவேண்டும். நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்களைப் போல் நமக்குத் துணை நிற்கும்.
மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்ததாக மூன்று குரங்குள் சிலையைக் கூறுவார்கள். தீயன பாரோம், கெட்டவை கேளோம், வசை பேசமாட்டோம் என்று ஒன்று கண்ணை மூடிக்கொண்டு ஒன்று காதை மூடிக்கொண்டு இன்னொன்று வாயை முடிக்கொண்டு இருப்பதாக அமைந்திருப்பது இந்தப் பொம்மையின் விசேஷம். இதில் எவ்வளவு பெரிய கருத்து அடங்கியிருக்கிறது பாருங்கள்.
நமது டேப் ரெக்கார்டர், வானொலி போன்ற பல சாதனங்கள் ஊடாகவும் பல தகவல்கள் நமது காதிற்கு வந்தடைகின்றன. நல்ல பாடல்கள், ஊக்கமளிக்கக் கூடிய பாடல்கள், செம்மையான கருத்துள்ள பாடல்கள் மாத்திரம் நாம் கேட்டு வந்தால் மனதிற்கு உரமிட்டது போல் இருக்கும். எதிர்மறையான தகவல்கள், தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் பாடல்கள், கீழ்த்தரமான உரைகள் நம் காதை எட்டினால் அது மனதிற்கு விஷமிட்டது போல் இருக்கும். நமது மனதிற்கு என்னவிதமான தகவல்கள் தேவை என்பதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் இந்தத் தகவல்கள் கிடைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது வாழ்க்கையில் நமது நண்பர்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். நல்ல நண்பர்கள் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் சுலபமாக உயர முடியும். அதுவே கெட்ட சகவாசம் ஏற்பட்டால் எப்படிப்பட்ட வல்லவனும் தனது நிலையிலிருந்து சரிந்து விடுவான். இதற்கான காரணமும் மேலே கூறியதைப்போல் இவர்கள் மூலமாக நம் மனதை வந்து அடையும் தகவல்கள் தான்.நாம் எப்பொழுதும் ஒரு நல்ல நண்பர் குழுவில் இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும். அவ்வைப் பிராட்டி விநாயகரிடம் கூடும் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி என்று தன்னை இறைவனின் தொண்டர்கள் கூட்டத்தில் சேர்த்து விடும்படி வேண்டிக் கொள்கிறார்… நல்ல ஒரு குழுவில் நாம் இருக்கும் பொழுது நல்ல தகவல்கள் மாத்திரமே நம் மனதை அடைகிறது. அதன் விளைவாக நல்ல எண்ணங்கள் மனதில் ஏற்படுகின்றது.
“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயனத்தின அல்லற் படுப்பதூஉம் இல்என்றார் வள்ளுவர். அதாவது நல்ல இனத்தை விடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை என்றார். இனம் என்பது நாம் சேரும் (சேர்த்துக் கொள்ளும்) கூட்டத்தைக் குறிக்கின்றது.மகாபாரதத்தில் அதிபராக்கிரமசாலியான கர்ணனின் வீழ்ச்சிக்கு அவன் தேர்ந்தெடுத்த தீய நட்புதான் காரணம். திருக்குறளில் சிற்றினம் சேராமை என்ற ஒரு முழு அத்தியாயம் இந்தக் கருத்தை வலியுறுத்த ஒதுக்கப்பட்டிருப்பது இதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
சரி இனிமேல் வாழ்க்கையில் நல்ல தகவல்களையே சேகரிப்போம் என்று எடுத்துக் கொண்டாலும், மனதில் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைத் தகவல்களை (ய்ங்ஞ்ஹற்ண்ஸ்ங்ள்) என்ன செய்வது? அதுமட்டுமல்ல, நம்மையும் மீறிச் சில நேரங்களில் இதுபோன்ற தகவல்கள் நம்மை வந்தடையும் போது என்ன செய்வது?.
இதற்கு இரண்டு விதமாக தீர்வு காணலாம். ஒன்று, நாம் இப்படிப்பட்ட தகவல்கள் நம்மை வந்தடைந்தாலும் உட்கொள்ளாமல் தடுத்துவிட வேண்டும். எப்படி ரிமோட் கன்ட்ரோலில் ம்ன்ற்ங் போட்டுவிடுகிறோமோ அதுபோலத்தான். அல்லது, அதிகப்படியான நல்ல வலிமையான தகவல்களை மீண்டும் மீண்டும் சேகரிக்க வேண்டும்.
நல்ல தகவல்கள் அதிக அளவில் உட்கொள்ளும் போது, எதிர்மறைத் தகவல்களுக்கு இடமில்லாது, வலுவிழந்து அகன்று விடுகின்றன. இதை நீங்கள் நடைமுறையில் பழகிப் பார்க்கலாம். இதற்கு நான் நூறு சதவீதம் உத்தரவாதம் அளிப்பேன். உங்களுக்குத் தேவையான வெற்றி எண்ணங்களை உங்களால் உருவாக்க முடியும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம், எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது செயல்களைக் கட்டுப்படுத்தலாம், செயல்கள் மூலமாக விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம், வெற்றியடையலாம்.ஐம்புலன்கள் மூலமாக மட்டுமல்ல, வேறு ஒரு வழியிலும், நமது மனதிற்குத் தகவல் வந்தடைகின்றது. அது எப்படி? மனப்பான்மை என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகிறது? நம்பிக்கைகளை மாற்றியமைக்க முடியுமா? இவையெல்லாம் நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை எல்லாம் இனி வரும் இதழ்களில் பார்ப்போம். அதுமட்டுமல்ல நாம் சென்ற இதழில் விட்டு வந்த மனநிலை திருத்தி அமைக்கும் நுணுக்கத்தைக் குறித்தும் விரிவாகப் பார்ப்போம் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பயிற்சி
தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பு மனதிற்கு ஊக்கமளிக்கக்கூடிய ஒரு பாடலை ரசித்து, ஈடுபாடுடன் கேட்டுவிட்டுப் படுங்கள். உதாரணத்திற்கு “உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் போன்ற பாடல்கள், அதேபோல் காலையில் மிகவும் அமைதியாக உட்கார்ந்து ஒரு ஐந்து நிமிடம் இது போன்ற ஒரு கருத்துள்ள, ஊக்கத்தை அளிக்கும் பாடலை ரசித்து, ஈடுபாடுடன், வேண்டுமென்றால் கூடவே பாடிக்கொண்டு கேட்டு மகிழுங்கள் அல்லது ஆன்றோர் கூறியிருக்கும் மிகவும் சக்திவாய்ந்த சில கருத்துக்களைப் படித்துப் பாருங்கள். கண்டிப்பாக ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை வளரும், வலுவான எண்ணங்கள் பிறக்கும்.
Leave a Reply