உங்கள் குழந்தைகளுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள்

வீட்டிற்குள் வெற்றி – 8

– கிருஷ்ண வரதராஜன்

ஒரு நாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்தேன். அதற்கு காரணம் அதிகாலை 5.50க்கு வந்த போன் அட்டென்ட் செய்ததுதான்.

“வீட்டிற்குள் வெற்றி” தொடரில் பெற்றோர்கள் பெற வேண்டிய வெற்றிகள் பற்றி பல்வேறு விஷயங்களை எழுதத் தீர்மானித்திருந்தாலும் என்னை சந்திப்பவர்களில் 90 சதவீதம்

குழந்தைகளின் கல்வி மேம்பாடு குறித்தே விவாதிப்பதால் இத்தொடரிலும் குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் பெற வேண்டிய வெற்றி பற்றி அதிகம் எழுதி வருகிறேன்.

சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எங்கள் மீது காட்டும் மதிப்பால் நாங்கள் சொன்னால் நிச்சயம் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் பல்வேறு பிரச்சனைகளுக்காக பெற்றோர்கள் எங்களை அணுகுவதுண்டு. பிரச்சனை எதுவாக இருந்தாலும் எங்களிடம் அழைத்து வந்தது, பிரச்சனை அவர்களின் கல்வியை பாதித்துவிடக்கூடாது என்பதாகத்தான் இருக்கும்.

தங்கள் குழந்தைகள் காதலிப்பதாகவும் அதிலிருந்து அவர்களை எப்படியாவது மீட்டுத்தர வேண்டும் என்றும் சில பெற்றோர்கள் எங்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இந்த வயதினர்தான் காதல் கவுன்சிலிங்கிற்காக அழைத்து வரப்படுவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. மூன்றாவது படிக்கும் மாணவன் தன் வகுப்பில் உடன் படிக்கும் மாணவியிடம் ஐ லவ் யூ சொன்னான் என்பதற்காக அதிர்ச்சியோடு பெற்றோரால் அழைத்து வரப்பட்டிருக்கிறான்.

யாருமே தன்னை காதலிக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்ற 16 வயது பள்ளி மாணவிதான், நான் இந்த பிரச்சனை தொடர்பாக சந்தித்த முதல் குழந்தை. தன்னுடைய கறுப்பு நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் ஏற்கனவே அவள் பாதி இறந்திருந்தாள். தன் வகுப்பில் உள்ள எல்லா தோழிகளுக்கும் ஒரு பாய் பிரண்டு அல்லது லவ்வர் இருக்கிறான். ஆனால் எனக்கு மட்டும் யாருமில்லை. என் நிறத்தால்தான் என்னை தவிர்க்கிறார்கள் என்ற எண்ணம் அவளது மீதி உயிரையும் துறக்கும் துணிவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதன் பிறகு காதலிக்கிறார்கள் என்று அழைத்துவரப்பட்ட எல்லா குழந்தைகளுக்குமே ஏறத்தாழ அவர்களை யாருமே காதலிக்கவில்லை என்பதுதான் பிரச்சனை என்பது அவர்கள் மனம் திறந்து பேசும்போது கற்றுக்கொண்டேன். இதில் யாருமே என்பது முக்கியமாக அவர்கள் பெற்றோரை குறிக்கிறது.

காதல்

இது இயற்கையான ஒன்றுதான். ஒரு ஆணுக்கு, பெண் மீது ஈர்ப்பு ஏற்படுவதும், பெண்ணுக்கு, ஆண் மீது ஈர்ப்பு ஏற்படுவதும் இயற்கை. என்றாலும், இது மீடியாக்களால் சீக்கிரமே வரவழைக்கப்படுவதும், கட்டாயம் காதலித்தே ஆகவேண்டும் என்று பலர் அலைவதும்தான் ஆபத்து.

கல்லூரிக்கு சேர்ந்ததும் முதலில் கற்க வேண்டியது காதல்தான் என்றிருந்த சினிமா, வளர்ச்சி அடைந்து, ஸ்கூலுக்கு போவதே கூட காதலிக்கத்தான் என்ற மாயையை மாணவர்களிடம் உண்டாக்கிவிட்டது.

காதலிப்பது ஹீரோக்கள் வேலை என்றாகிவிட்ட பிறகு, தன்னை ஹீரோவாக நினைக்கும் எல்லோரும் வலுக்கட்டாயமாகவாவது காதலை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

காதல் என்பது சக மனிதனை நேசித்தலின் விளைவு என்பது போய், உடல் கவர்ச்சி என்று சினிமாவால் கற்றுத்தரப்படுகிறது. அழகான ஒருத்தரை பார்த்தவுடன் காதலி என்பதும் அவர் சம்மதம் பெற எந்த அளவுக்கும் போகலாம் என்பதும்தான் சினிமா கற்றுக்கொடுத்திருக்கிற காதல் பாடம்.

நேசிப்பது என்ற அர்த்தத்தில், காதல் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், படிக்கிற வயசில் அது எந்த அர்த்தமாக இருந்தாலும் தவறுதான்.

நான் மாணவர்களிடம் பேசும்போது அவர்களுக்கு புரிகிற மாதிரி இதை விளக்குவதுண்டு.

‘உன்னுடன் ‘2 படிக்கும் பையன் திடீரென்று கல்யாண பத்திரிக்கையுடன் வந்து அடுத்த வாரம் எனக்கு கல்யாணம், வந்துவிடுங்கள் என்று அழைப்பிதழ் கொடுத்தால் என்ன சொல்வாய்?’ என்று கேட்பேன்.

என்னடா அதுக்குள்ள கல்யாணம், இன்னும் நீ ‘2வே முடிக்கவில்லை. ஏன்டா அவசரப்படுற?’ என்று சொல்வேன் என்று பதில் வரும்.

ஏன் இப்படி சொல்கிறோம்? ஒவ்வொன்றிற்கும் ஒரு வயசு இருக்கிறது. படிக்க ஒரு வயது. திருமணம் செய்து கொள்ள ஒரு வயது. வயது என்பதை விட அதற்கென்று சில தகுதிகள். அதை அடைந்த பிறகுதான் அடுத்த நிலைக்கு போக முடியும். இல்லையா? ‘2 படிக்கும்போது கல்யாணம் மட்டுமல்ல, காதல்கூட அவசரம்தான்.

காதலிக்க சரியான வயது 24 என்பது என் கருத்து. காரணம், மூளையில் முடிவெடுக்கும் திறன் தொடர்பான பகுதிகள் தன் முழு வளர்ச்சியை, இந்த வயதில்தான் எட்டுகிறது.

காதல் என்பது புரிதலினால் வரவேண்டும். ஈர்ப்பினால் அல்ல. பசியோடு இருக்கிறோம், உணவென்று எதை பார்த்தாலும் சாப்பிடத் தோன்றும். இது ஈர்ப்பு. மாணவ பருவத்தில் வரும் காதல் பெரும்பாலும் இந்த ஈர்ப்பு தான்.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணம் நாம் இன்னும் நம் குழந்தைகளுக்கு அன்பை கற்றுத்தரவுமில்லை. அன்பை அவர்களிடம் காட்டுவதுமில்லை.

வீட்டுக்கு வரும் குழந்தைகளின் நண்பர்களிடம் காட்டும் அன்பில் பாதியைகூட தங்கள் குழந்தைகளிடம் காட்டுவதில்லை. இது நம் பெற்றோர்களுக்கும் நம்மை பிடிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்திவிடுகிறது.

என்னிடம் வந்த இன்னொரு பிரச்சனை காதல் கவர்ச்சி என்பது மாணவ மனங்களில் எந்த அளவுக்கு ஆழமாக வேர்விட்டிருக்கிறது என்று காட்டியது.

3வது படிக்கும் பையன் சக மாணவியிடம், ‘ஐ லவ் யூ! சொல்லியிருக்கிறான். அந்தப் பெண் அழுது கொண்டே டீச்சரிடம் சொல்ல, பிரச்சனை பல கட்டங்களைக் கடந்து, பல பஞ்சாயத்துக்கள் முடிந்து என்னிடம் வந்தது.

சொன்னவனைவிட, அதற்கு அர்த்தம் புரிந்து அழுத பெண் குழந்தை மேல்தான் எனக்கு ஆச்சரியம் அதிகம். அர்த்தம் புரியாமல் கூட அந்த வயதில் இதை சொல்லியிருக்கலாம். ஆனால் அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் அழுதிருக்க முடியாது.

இப்பொழுது பையன் இப்படி இருக்கிறானே எதிர்காலத்தில் இவன் ஒரு காதல் மன்னனாக வந்துவிடுவானோ என்று அவன் பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள்.

மிரண்டு போய் இருந்த அந்த 3ஆம் வகுப்பு பையனை நான் அள்ளி அணைத்துக் கொண்டேன். உன் வகுப்பில் உள்ள எல்லா பெண்களிடமும் ‘ஐ லவ் யூ’ சொல் என்றேன். அவனுடன் வந்திருந்த பெற்றோர்கள் மிரண்டு விட்டார்கள்.

நான் மேலும் தொடர்ந்தேன். உன் வகுப்பில் உள்ள மாணவிகளோடு நின்றுவிடாதே, உன் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களிடமும் சொல். உன் வகுப்பில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்ற வகுப்பு மாணவர்களிடமும் சொல். உன் ஆசிரியர்களிடம் சொல். உன் பெற்றோர்களிடம் சொல்.

பிறகு நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை அந்தக் குழந்தைக்கும், பெற்றோருக்கும் விளக்கினேன். “அன்பை விரிவு செய். அகண்டமாக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.”

“உன்னிடம் உள்ள அன்பை எல்லோரிடமும் காட்டு. எல்லோரையும் நேசி. நேசிக்கத்தக்க விஷயங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. எனவே உன் நேசத்தை ஒருவரோடு நிறுத்திக்கொள்ளாதே நீ சந்திக்கும் ஒவ்வொருவரையும் நேசி” என்றேன்.

மலரின் மணம் போன்றதுதான் காதலும். அதன் மூலமாகிய அன்பும், எந்த வித ஏற்றத்தாழ்வும் வேறுபாடுமின்றி மலரின் அருகில் வரும் அனைவருமே மலரின் வாசத்தை பெற முடிவது போல உன் அன்பும் மணம் வீசட்டும். உன் அருகில் வரும் எல்லோரும் அதை உணரட்டும் என்றேன். அந்தக் குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ, அவன் பெற்றோர்களுக்கு புரிந்தது.

இந்த அறியாக் குழந்தைக்கு மட்டுமல்ல, காதல் கவர்ச்சியில் சிக்கியிருக்கிற எல்லோருக்குமே இது புரிய வைக்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் பெற்றோர்கள் பங்கு என்ன என்பதையும் பார்த்துவிடுவோம்.

காதலிக்க என்ன தேவை? என்று ஒரு பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் படித்தது. இன்னும் பதில் பளிச்சென்று நினைவில் நிற்கிறது. காதலிக்க தேவை ஒரு பேனா, கொஞ்சம் பேப்பர், பொறுப்பில்லாத பெற்றோர்கள்.

இந்த பதிலை இது தொடர்பாக என்னை சந்திக்கும் எல்லா பெற்றோர்களிடமும் நான் வழி மொழிவதுண்டு.

நாம் கவனிக்க வேண்டிய உண்மை. பெற்றோர்களால் காதலிக்கப்படாத குழந்தைகள்தான் சீக்கிரமே காதலிக்க துவங்குகிறார்கள். டீன் ஏஜ்ஜில் ஏற்படும் இனக்கவர்ச்சிக்கு காதல் என்று பெயர் அல்ல என்றாலும், அவர்கள் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலே அல்ல அல்ல என்கிறார்கள்.

உங்கள் குழந்தைகள் அன்பின் அர்த்தத்தை வீட்டில் உணர்ந்துவிட்டால் வெளியிலும் அதே அர்த்தத்தோடுதான் நடந்து கொள்வார்கள்.

வீட்டில் அன்பு கிடைக்காமல் ஆதரவாக பேச ஆள் இல்லாமல் வளரும்போதுதான் வெளியில் பரிவோடு யாராவது பேசும்போது அது பெரிய விஷயமாக தோன்ற ஆரம்பிக்கிறது.

எனவே, அன்பென்றால் என்னவென்று நீங்கள் காட்டுங்கள். பெற்றோர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதை பார்த்துத்தான் குழந்தைகள் முதலில் அன்பை கற்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள் தவறுகள் செய்யும்போது சுட்டிக்காட்டுங்கள். சுட்டிக்காட்டிய பின்பும் வெறுப்போடே இருக்காதீர்கள். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு குழந்தைகளிடம் நடந்து கொண்டாலும் இன்னொருவர், “உன்னிடம் கோபப்பட்டது சரியில்லை. ஆனால் உனக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கம்தானே தவிர உன் மேல் வெறுப்பு இல்லை” என்று எடுத்துச் சொல்லி ஆதரவு காட்டுங்கள். குழந்தைகளுக்கு அன்பைப் பற்றி கற்றுக்கொடுங்கள். மதித்தல், விட்டுக்கொடுத்தல், எதிர்பார்ப்பின்றி நேசித்தல் – என அதை விரிவாக அர்த்தப்படுத்திக் கொடுங்கள்.

தன் குழந்தை காதலிப்பது தெரிந்தவுடன் பெரும்பாலான பெற்றோர்கள் அவமானமாக உணர்கிறார்கள். தன் குழந்தையை சரியாக வளர்க்காததாக உணர்கிறார்கள்.

தந்தையாக இருப்பவர் குழந்தையின் தாயிடம் சினிமாவில் வருவது போல ‘என்ன குழந்தை வளர்த்திருக்க’ என்று ஆத்திரப்படுகிறார். பிறகு இருவருமாக சேர்ந்து குழந்தையை ஒரு வழி செய்துவிடுகிறார்கள். திட்டுகிறார்கள். மிரட்டுகிறார்கள், கெஞ்சவும் செய்கிறார்கள். ஒரு மாற்றமும் தெரியாதபோது கவுன்சிலிங்கிற்கு அழைத்து வருகிறார்கள்.

இப்ப அக்கம் பக்கம் நடக்கிற காதல் கதைகளை பார்த்துவிட்டு முன்னெச்சரிக்கையாகவோ அல்லது சந்தேகத்தாலோ தன் குழந்தையை யாரோடும் பேசாமல் பழகாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் கூண்டுக் கிளிபோல பாதுகாக்கும் பெற்றோர்களும்கூட உண்டு. காதல் பறவைகளை எந்த வேலியும் கட்டுப்படுத்த முடியாது என்று பிறகு அவர்களும் உணர்கிறார்கள்.

எல்லா பெற்றோர்களும் இந்த விஷயத்தில் புரிந்து கொள்ள வேண்டிய பொது விதி:

மறுக்கப்படும் எதுவும் மனித மனதிற்கு கவர்ச்சியானது. காதலை கண்டிக்க கண்டிக்க அதன் மீதான ஈர்ப்புதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இப்போது நான் போலீஸ் ஸ்டேஷன் போன கதைக்கு வருவோம். அதிகாலை 5.50க்கு வந்த அழைப்பு எனக்கு தெரிந்த ஒரு பெற்றோருடையது. அவருடைய உறவினரின் 18 வயது பெண், முதல் நாள் காதலனோடு வீட்டை விட்டு ஓடிவிட்டாள். எப்படியோ தேடிப்பிடித்து விட்டார்கள். ஆனால் காதலனை விட்டு வர மறுக்கிறாள். போலீஸ் ஸ்டேஷனில் இரவு முழுவதும் நடந்த எந்த பஞ்சாயத்தும் எடுபடவில்லை. நான் பேசினால் ஒரு வேளை அந்த பெண் மனம் மாற வாய்ப்பிருக்குமோ என்றுதான் எனக்கு அழைப்பு.

இந்த வயது முடிவெடுக்க முடியாத வயது. பொறுப்பில்லாத வயது. அவனுக்கு வேலை இல்லை. அவன் ஜாதி. என காதலனை விட்டுவிட்டு வர அவர்கள் நிறைய காரணங்களை முன்வைத்தார்கள். எதுவுமே அவளிடம் எடுபடவில்லை.

ஒரு நாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே இருந்தேன். அந்த பெண் 18 வயதுக்கும் மீறிய தெளிவோடும் உறுதியோடும் இருந்தாள். எதைப்பற்றியும் விவாதிக்க தயாராக இருந்தாள்.

அவன் இல்லாமல் எனக்கு வாழ்க்கையில்லை என்றாள். நான், “அவனைப் பார்ப்பதற்கு முன்னாலும் நீ வாழ்ந்து கொண்டுதானே இருந்தாய்” என்றேன்.

அவளுக்கு இருந்த உறுதி அவள் காதலனுக்கு இல்லை. அவனுக்கு 19 வயது. நான் பேச பேச அவன் பின் வாங்க ஆரம்பித்தான். அவனது உறுதி குலைந்த பின், அவள் உடனே காதலனை உதறினாள்.

நிறைய பேசிய பின் சில விஷயங்கள் புரிந்தது. அவளை யாருமே நேசிக்கவில்லை. ஏன் அவளை அவளே நேசிக்கவில்லை. அதனால் ஒருவன் காட்டிய அன்பு நேசம் அவளுக்கு அவன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவுக்கு பேச வைத்துவிட்டது.

சரி, குழந்தைகள் காதலிப்பது தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தை யாரை காதலிக்கிறார் எனத் தெரிந்து அவர்களை அழைத்து பேசுங்கள். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப்போல அவர்கள் சும்மா இருந்தாலும் மீடியாக்களும் நண்பர்களும் முக்கியமாக அவர்கள் வயதும் அவர்களை விடுவதில்லை. எனவே காதல் என்றாலே பதறாதீர்கள். காதல் என்பது நேசித்தல்தானே. அன்பு செலுத்துதல்தானே. இதற்கு பதற்றமடைய வேண்டியதில்லை.

பதின் பருவத்தில் இது இயல்பான ஒன்றுதான் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இதற்கு அன்பு என்று பெயர் கொடுக்கச் சொல்லுங்கள். இதற்கு காதல் என்று பெயரிடுவதால்தான் அத்தனை குழப்பங்களும் என்பதை உணர்த்துங்கள்.

இந்த காதல் (?) நெருப்பில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கும் நண்பர்களை அழைத்துப் பேசுங்கள். நண்பர்களால்தான் வளர்கிறது. எனவே, காதல் பற்றிய தெளிவை உங்கள் குழந்தைக்கு மட்டுமல்ல, அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படுத்துங்கள். மாதம் ஒரு நாள் உங்கள் குழந்தைகளின் நண்பர்களோடு ஒரு ஜாலி சந்திப்பை அமைத்து உங்கள் வீட்டை கலகலப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காதலிக்கக் கற்றுக்கொடுங்கள். ஒரு ஆணையோ பெண்ணையோ அல்ல. ஒட்டு மொத்த உயிர்களையும்.

.
இது நீங்கள் வீட்டிற்குள் பெற வேண்டிய முக்கியமான வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *