ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி

பிறரைப் புண்படுத்தாமல் நமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள சில குறிப்புகள்

* ஆளுமைத்திறனுடன் செயல்பட வேண்டிய அடுத்த வார, மாத நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவு செய்து, அந்நிகழ்வுகளின் போது எவ்வாறெல்லாம் சிறப்புடன் செயலாற்றலாம் என யோசித்து வைப்போம்.

*எவ்வளவு ஆளுமைத்திறனுடன் செயல்படப் போகிறேன் என்பதை எனக்கு நானே ஆராயப்போகிறேன் என்கிற உறுதிமொழியை நமக்கு நாமே கூறிக்கொள்வோம்.

* எப்போது, எவருடன் பேசினாலும் ஆளுமைத்திறனுடன் பேசுவோம். தீவிர மனப்போக்கின்றி, வளைந்து கொடுக்கும் தன்மையின்றி, கம்பீரமாய் எப்போதும் நேரடியாக விஷயங்களை உறுதியுடன் பேசுவோம்.

* நமக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்துகொண்டு, உரியவர்களிடம் எவ்விதக் கெஞ்சலுமின்றி, தயக்கமின்றிக் கேட்டுப் பெறுவோம்.

* நமது கோரிக்கை மறுக்கப்பட்டால், அது எப்போதும் நமக்கு எதிரான தனிப்பட்ட எதிர்ப்பாக விரோதமாக எடுத்துக் கொள்ளாதிருக்கப் பழகுவோம். அச்சமயங்களில் நிதானமுடன் மெல்லிய சமரசத்திற்கு தயாராகி விடுவது நல்லது.

* கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமெனில், மாற்று முயற்சிகளைத் திட்டமிட்டு வைப்போம்.

* நமது உணர்வுகளை எப்போதும் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

உரிமைக்காகப் போராடுவோம்

நமது உரிமை என்ன? என்பதைப் புரிந்து கொள்வதும், அதனைப் பெறுவதற்காக முயன்று, வெற்றி பெறுவதும் ஆளுமைத்திறன் ஆகும். நமக்கென்று சில பிரத்யேக உரிமைகள் உண்டு. அவசியம் நாம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

* பூரண சுதந்திரத்தோடு பேசவும், வாழவும் நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

* மகிழ்ச்சியாய் இருக்க நமக்கு உரிமை உண்டு.

* சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை நமக்கு உண்டு.

* அமைதியாய், பாதுகாப்பாய் வாழும் உரிமை நமக்கு உண்டு.

நாம் வாழும் சமூகம் இவ்வுரிமைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. நம்மில் பலருக்கும் இவ்வுண்மை தெளிவாகத் தெரியவில்லை.

நாம் நமது உரிமைகளை எந்த அளவு பயன்படுத்துகிறோம் என்பதை அளவாய்க் கொண்டே நமது எல்லாவித குணாதிசயங்களும் அளவிடப்படுகின்றன.சென்ற மாதத்தில் ஒருநாள் மாலை உயர்தர உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். சுமாரான கூட்டம். காலியாய் இருந்த மேசையில் அமர்ந்தேன். அப்பகுதிக்குரிய சேவகர் இரண்டு மேசைகள் தள்ளி மூன்றாவது மேசையில் அமர்ந்திருந்த நால்வருக்கு உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.சேவகருக்கும், உணவு அருந்துவோருக்கு மிடையே ஒரு நெருக்கம் தெரிந்தது. அவர்களின் கலகலப்பு என்னையும் ஈர்த்தது. நான் பொறுமையாய்க் காத்திருந்தேன். ஐந்து மணித்துளிக்கு மேல் ஆகியும் சேவகர் என் மேசைக்கு வருவதாய் தெரியவில்லை.

நானும் ஒரு வாடிக்கையாளர்தானே! என்னையும் அவர் கவனிக்கக் கடமைப்பட்டவர் தானே! வாடிக்கையாளர் என்கிற எனது உரிமை என்னை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. ஆனால், எனது கோபத்தை நான் சற்றும் வெளிக்காட்டாது மிகுந்த பொறுமையோடு அவரை அழைத்து என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்” என கொஞ்சம் நகைச்சுவை தொனிக்கக் கூறினேன். சட்டென தன் தவறைஉணர்ந்த சேவகர் என்னிடம் மன்னிப்புக் கோரினார். சற்று அதிகப்படியாகவே என்னை கவனித்துக் கொண்டார்.

ஒரு வாடிக்கையாளர் காத்திருக்க, மற்ற வாடிக்கையாளர்களை மிகையாகக் கவனிப்பதும் தவறு. அல்லது நானும் வாடிக்கையாளன்தானே! என்னையும் மதிக்காமல், வீணே காத்திருக்கச் செய்த உன்னை என்ன செய்கிறேன் பார்” என அவரது சட்டையைப் பற்றி இழுப்பதும் தவறு. நமது உரிமையே என்றாலும், அதனை முறையற்ற வகையில் வெளிக்காட்டுவது சரியான ஆளுமைத் திறனன்று.

இதுவே ஒருவர் உரிமையில் அடுத்தவர் தலையிடுவது – ஒருவர் மற்றவர் உரிமையை அவமதிப்பது. என்னைச் சரியாகக் கவனிக்க வேண்டியது சேவகரின் கடமை. அதே போல் கனிவோடு அவரை அழைத்து, முறையாக எனது உரிமையை அவருக்கு உணர்த்தி, எனக்குரிய சேவையை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியது எனது கடமை.
நாம் கேட்கப்பட வேண்டியவர் என்பதும், நமது கருத்துக்குப் பிறர் செவிசாய்க்க வேண்டும் என்பதும் நமது தார்மீக உரிமை. இவ்வுரிமையை அறியாத போது நம்மால் ஆளுமையுடன் செயல்பட இயலாது. நம்மைப் போலவே சக மனிதர்களும் புரிதலோடும், உரிமையோடும் மதிக்கப்பட வேண்டியவர்களே. இதனையும் நாம் புரிந்து கொள்வது, சக மனிதர்களுடனான நமது தொடர்பை வலுப்படுத்தும் – உறவை மேம்படுத்தும்.

வன்முறையாலோ, அச்சுறுத்தலாலோ அல்லது அடக்குமுறையாலோ எவருடைய விருப்பத்திற்கு எதிராகவும் எவரும் நடத்தப்படலாகாது.

நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான மனித உரிமைகள்:

* எவரும் தரக்குறைவாகவோ, அவமதிப்பாகவோ நடத்தப்படக் கூடாது. அடக்கியாளப்படுவதும் கூடாது.

* தவறிழைத்தல் மனித இயல்பு.

* சராசரி மனிதருக்குரிய மதிப்போடு, எவருடைய கருத்துக்களையும் எவரையும் மதித்தல் வேண்டும்.

* நமக்கு என்ன வேண்டும்? என்பதை நாமே முடிவு செய்ய நாம் அனுமதிக்கப்பட வேண்டும். நமது முடிவுகள் மிகவும் தன்னிச்சையானதாயும், பிறர் தலையீடற்றதாயும் இருக்க நாம் அனுமதிக்கப்பட வேண்டும்.

உரிமை கோரலும், ஆளுமைத்திறனும்

நாம், நமது எந்தெந்த உரிமைகளை இழந்து நிற்கிறோம் என்பது பற்றி யோசிப்போம். உரிமைகளை இழந்து எங்கெல்லாம் சமரசம் செய்து கொள்கிறோம்?நமது வாழ்க்கை நிறைய சமரசங்கள் நிறைந்ததாய் ஏன் ஆகிப்போனது? யோசிப்போம். இழந்த உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறோமா?உரிமைகள் கோருவதே நமது தார்மீக உரிமை. இதனை முழுமையாய் உணர்கிற நொடியிலிருந்து, நமது ஆளுமைத்திறன் வெளிப்படத் துவங்குகிறது. அதுவே தொடக்கப் புள்ளி.

பிறர் மட்டுமே உரிமை பெற்றவர்கள் என்று எண்ணுவது ஆளுமைத்திறன் அற்றவர்களின் தவறான எண்ணம். ஆளுமைத்திறன் என்பது எவர் உரிமைகளையும் மறுக்காமல், அதே நேரம் நமது உரிமைகளுக்காக நாம் உறுதியுடன் போராடுவதே ஆகும்.
நமது உரிமைகள், நமது அடிப்படை சுதந்திரம். நாம் விரும்புகிற வகையில் செயலாற்றும் எல்லா உரிமையும் நமக்கு உண்டு. பிறரை எவ்வகையிலும் காயப்படுத்தாமல், பிறரோடு திறந்த மனதோடும் நேர்மையோடும் இணைந்து இருப்பதே முழு சுதந்திரம். அத்தகைய பூர்ண சுதந்திரத்தோடு நாம் வாழ்வதாய் உணர்ந்தால், நிச்சயம் நாம் ஆளுமைத்திறன் பெற்றவர்களே.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *