நமது நம்பிக்கை மாத இதழும், பி..எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘வெற்றிப் பாதை’ பயிலரங்கின் இரண்டாம் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் சென்டர் அரங்கில் கடந்த 21.08.2005 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் ஈரோடு திரு. சக்சஸ் ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ‘வெற்றிக்கு ஒரு திட்டம்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
2010-ம் ஆண்டில் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள், எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள்.
உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவான திட்டம் இப்போது உங்களிடம் இல்லாமல் போகலாம். ஆனால், இலக்கு சரியாக இருந்தால், அதை அடைவதற்கத் தேவையான எல்லா வழிகளையும் காட்ட உங்களுக்குள்ளே ஒரு அற்புத ஆற்றல் இருக்கிறது. அதனைச் சரியாக கண்டுபிடித்து முறையாகப் பயன்படுத்தினால் நீங்கள் விரும்புவதை எல்லாம் அடைய அந்த ஆற்றல் உங்களுக்கு வழிகாட்டும்.
நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆழ்மனம்தான் அந்த அற்புத ஆற்றலைக் கொண்டுள்ளது.
நமது மனம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று நினைவு மனம். அது பலவீனமானது. மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போன்று நம்முடைய விருப்பங்கள் அடிக்கடி மாறுவதற்கு அதுதான் காரணம். இந்த பலவீனமான நினைவு மனத்தின் துணையோடு நாம் செயல்படுவதால்தான் துன்பங்கள் தோல்விகள் போன்றவை நமக்கு வருகின்றன.
இரண்டாவது: ஆழ்மனம். இது இதயத்துடிப்பு, செரிமானம், ரத்த ஓட்டம் போன்றவற்றை கவனித்துக்கொள்ளும் வலிமையான மனம். நீங்கள் உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் செயல்படும் தன்மை கொண்டது. உங்கள் வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து இன்று வரை நடந்த சம்பவங்களை பதிவு செய்து வைத்திருக்கும் வலிமையான அந்த மனத்தின் உதவியோடு செயல்பட்டால் முடிவுகள் சிறப்பானதாக அமையும்.
இந்த ஆழ்மனம் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளையும்விட அதிக சக்தி மிக்கது. இந்த ஆழ்மனம் தன் எஜமானனுக்கு நூற்றுக்கு நூறு பங்கு விசுவாசமாக செயல்படும் தன்மை மிக்கது. அப்படிப்பட்ட விசுவாசம் மிக்க ஆழ்மனத்திற்கு என்ன கட்டளை கொடுக்கிறீர்களோ அதை அப்படியே நிறைவேற்றித் தரும் ஆற்றல் உடையது இந்த ஆழ்மனம். நீங்கள் ஏழையா, பணக்காரரா என்பதுபற்றி இழ்ற்கு அக்கறையில்லை. நீங்கள் படித்தவரா, படிக்காதவரா என்பது பற்றி அதற்குக் கவலையில்லை. நீங்கள் குட்டையா, நெட்டையா என்பது பற்றி அதற்குக் கவலையில்லை. ஆனால் அதற்கு சரியான முறையில் கட்டளை கொடுத்து பயன்படுத்தினால் நீங்கள் விரும்பியதை எல்லாம் அடைய அது உங்களுக்கு வழிகாட்டும்.
மூன்றாவது: பிரபஞ்ச மனம். பிரஞ்ச மனம் ஒரு சக்திக்கேந்திரம். அங்கு இறைவன் ஆற்றலைத் தேக்கி வைத்திருக்கிறான். இறைப் பேராற்றல் என்னும் அந்த சக்தி இறைவனின் குழந்தைகளான மனிதர்கள் தாங்கள் விரும்பியதை எல்லாம் அடைய, ஆழ்மனத்தின் மூலம் தகுந்த கட்டளை கொடுத்து, அவர்கள் அந்த சக்தியுடன் தொடர்பு கொண்டு கேட்கும்போது வேண்டுவது எல்லாம் கிடைக்கும்படி செய்கிறது.
எனக்கு முன்னால் இருக்கும் நண்பரைப் பார்த்து, இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் செய்து வருகிற வணிகத்தில்; தொழிலில் நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். அதற்குரிய ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. திறமை இருக்கிறது என்று நான் கூறினால், அதற்குக் கருத்தேற்றம் என்று பெயர். என்னுடைய கருத்தை அவர் மனத்தில் ஏற்றுகிறேன் என்று பொருள்.
அதே நண்பர், எனக்கு ஆற்றல் இருக்கிறது, திறமை இருக்கிறது இன்னும் 5 ஆண்டுகளில் எனது வணிகத்தில் என்னால் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறமுடியும். என்னால் சாதிக்க முடியும் என்று திரும்பத் திரும்ப சொல்வாரானால் அதற்குப் பெயர் சுயகருத்தேற்றம். இப்படி மீண்டும் மீண்டும் ஆழ்மனத்திற்கு கட்டளை கொடுக்கும்போது நம் ஆழ்மனம் அது குறித்து சிந்திக்க தொடங்குகிறது.
வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்புவோர், வெற்றிபெற விரும்புவோர், சாதிக்க விரும்புவோர் மறக்கக்கூடாத வார்த்தை சுயகருத்தேற்றம்.பெரும்பான்மையான மனிதர்கள் ஏனோதானோவென்று முடிவெடுத்து செயலில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக சில சமயங்களில் வெற்றியும், பல சமயங்களில் தோல்வியும் ஏற்படுகிறது. முடிவெடுக்கும்போது அடைந்தே தீரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு முடிவெடுத்து இறங்கிய செயல்களில் வெற்றி மட்டுமே கிடைக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
எந்தச் செயலில் இறங்கும்போதும் நடக்கும், முடியும் என்ற எண்ணத்தோடு ஈடுபடுபவர்கள் வெற்றியே பெறுகிறார்கள்.
தகுந்த உதட்டசைவோடு, உணர்ச்சிபூர்வமாய், திட்டமிட்ட சொற்களில், எதிர்பார்ப்புணர்வோடு கொடுக்கும் சுய கருத்தேற்றமும், நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைந்துவிட்டதாக மனச்சித்திரம் பார்த்து வருவதும், உரிய காலத்தில் சரியான பலனைக் கொடுக்கும்.
ஆழ்மனக் கட்டளை கொடுப்பதற்கும், மனச்சித்திரம் பார்ப்பதற்கும் சில பயிற்சிகளை நிகழ்ச்சியில் வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், வின்னர்ஸ் கிளப் தலைவர் திரு.வேணு ரமேஷ் குமார் அவர்கள் வரவேற்றார். விழா நிறைவில் நமது நம்பிக்கை வாசகர் திரு.ராஜேந்திரன் நன்றி கூறினார். உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் பங்கேற்று அரங்கை நிரப்பியிருந்த வாசகர்கள், உற்சாகத்தோடு திரும்பினர்.
Karthikeyan
Useful article.
kempraj
அருமை, மிக அருமை.
ஆழ்மனக் கட்டளை கொடுப்பபதும், மனச்சித்திரம் பார்ப்பதுவும் எப்படி?
நன்றி