நம்பிக்கைக்குப் பட்டறிவுதான் துணையிருக்கும்

திரு.வலம்புரி ஜான்

‘ஞானபாரதி’ வலம்புரிஜான், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்துக்கலை, பேச்சுக் கலை, போன்றவற்றில் தனக்கென்று தனிபாட்டை வகுத்திருக்கும் வித்தகர். நாடாளுமன்றத்தில் முழங்கிய நாவலர். உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்திருக்கும் இந்த வார்த்தைச் சித்தர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

உங்கள் இளமைப் பருவம் பற்றி…..

நெல்லை மாவட்டத்தில், ‘உவரி’ என்கிற கடலோர கிராமத்தில் நான் பிறந்தேன். அது ஏறக்குறைய, பசுமையைப் பறிகொடுத்த கேரள கிராமம் போலிருக்கும். அவர்கள் அன்பான மனிதர்கள், ஆனால், அடிக்கடி கலவரங்களில் ஈடுபடுகிறவர்கள்.

எட்டாம் வகுப்பு வரை அந்த ஊரில் உள்ள பள்ளியில் தான் பயின்றேன். முதலில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் என்னைச் சேர்த்தார்கள். அங்கிருந்த வாத்திச்சி, ‘ஒரு மரத்தில் பத்து குருவிகள் இருந்தன, வேடன் துப்பாக்கியால் சுட்டான். ஒரு குருவி செத்து விழுந்தது. மீதம் எத்தனை குருவிகள் இருக்கும்’ என்று ஒருநூற்றாண்டு காலமாய் கேட்கப்படும் அதே கேள்வியை என்னிடத்தில் கேட்டார். நான் விரல்களை மடக்கி ‘9 குருவிகள் இருக்கும்’ என்று பதில் சொன்னேன்.

துப்பாக்கிச் சத்தத்தில் ஒன்பது குருவிகள் பறந்திருக்கும் என்பது அவரது வாதம். அவை பறந்திருந்தாலும் எங்காவது இருக்கும் என்பது என்னுடைய வாதம். அந்த வாத்திச்சி, என்னை ‘முட்டாள்’ என்று திட்டினார். அந்தச் சொல் என்னைச் சோர்வடையச் செய்வதற்குப் பதிலாக ஒரு நம்பிக்கை விதையை என் மனநிலத்தில் ஆழமாக ஊன்றியது.

இன்றும், பாராட்டுக்கள் குவிகிற பொழுதெல்லாம் நான் மகிழ்ச்சி கொள்வதில்லை. ‘நான் முட்டாள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் என் வெற்றிகள் வழியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அப்படியானால் அரும்புப் பருவத்திலேயே எதிர்ப்புகளை எதிர்த்து முளை விட்டவர் நீங்கள் என்று சொல்லலாமா?

நிச்சயமாக! என்னுடைய சூழ்நிலையில் நம்பிக்கை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் ஒரு அங்குலம் கூட வளர்ந்திருக்க முடியாது. சின்ன வயதில் தாய், தந்தையரை இழந்த என்னை, எனது இரு சகோதரர்களும் மாறி மாறி வளர்த்தார்கள். சொத்தில் பங்கு கேட்க முடியாதபடி சிறு வயதிலேயே பாகப்பிரிவினை நிகழ்ந்துவிட்டதால், எனக்கு முன்னோர் உடைமைகளிலிருந்து ஒரு செப்பு காசு கூட தரப்படவில்லை. என்றாலும், அந்த கிராமத்தைவிட்டு வெளியேறினால் வாழ்க்கை நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கையோடு பாளையங்கோட்டைக்கு வந்தேன்.

எனது அண்ணன், பேராசிரியர் ஆல்பர்ட் என்னைப் படிக்க வைத்தார். முதலில் படிப்புக்கு இடம் கிடைக்காது என்றார்கள். நான் படித்த பிறகோ வேலை கிடைக்காது என்றார்கள்.

அப்போதுதான் தினமலரில் மூன்றாவது பதிப்பு திருச்சியில் தொடங்கப்பட்டது. பேராசிரியர் வளனரசு பரிந்துரையின் பேரில் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது தினமலர் நிறுவனர் திரு. டி. வி. இராமசுப்பையர் உயிரோடு இருந்தார். மார்ட்டின் லூதர்கிங் கொலையானது பற்றி அமெரிக்கப் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். அதுதான் முதல் வேலை. அப்போது மாதச் சம்பளம் 100 ரூபாய்.

ஒருநாள் தினமலர் அச்சாகிக் கொண்டிருந்தபோது உடன் பணிபுரிந்த புலவர் ஒருவர் நான் எழுதியிருந்த தலைப்புச் செய்தியில் இலக்கணப்பிழை இருப்பதாகச் சொல்லி, அச்சாகிக் கொண்டிருந்த பத்திரிகையை நிறுத்திவிட்டார். அதனால் என்னையும் பணியிலிருந்து நிறுத்திவிட்டார்கள். பயிற்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு அப்போது வேலை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திருவள்ளூர் திருத்தணிப்பாதையில் பாண்டூர் என்கிற இடத்தில் காபிள் என்கிற பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்தேன்.

அங்கு பாடம் நடத்துகிறபோது நம்பிக்கை விதைகளை விதைத்தபடி நாட்களை நகர்த்தினேன். அறிவு விளக்கேற்றும் அந்த நேரங்களில் எல்லாம் அவநம்பிக்கை இருட்டு என்னை விட்டு விலகுவதை உணர்ந்தே வந்தேன். என்னுடைய தமிழார்வம் காரணமாய் வகுப்பில் தரமான தமிழ்க் கவிதை களையும் மாணவர்களுக்குச் சொல்லுவேன். அப்படி ஒரு நாள், ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை’ என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை வகுப்பில் சொன்னேன். நீலச்சீருடையில் இருந்த மாணவிகளைத்தான் நான் மறைமுகமாகச் சொல்லுகிறேன் என்று தவறாக நினைத்த தலைமை ஆசிரியர் என் சீட்டைக் கிழித்துவிட்டார்.

அதற்குப் பிறகு சட்டம் படிக்கப்போனேன். படிப்புக்கு பணம் இல்லை. என் அண்ணி தன் வளையல்களை அடகு வைத்து என்னை அனுப்பி வைத்தார்.

அந்தப் பருவத்தில்தான் ஒரு பேச்சாளனாக என்னை வளர்த்துக்கொண்டேன் அப்போது மாணவர் தேர்தல் வந்தது. தேர்தலில் போட்டியிட்ட ஒரு மாணவர் ஒரு மழை நாள் இரவில் என்னோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். எனக்கான உதவிகளை அவர் செய்வார். அவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவேன். அந்தப் பேச்சில் நிறைய ரசிகர்களைப் பெற்றுக் கொண்டேன். தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. ஒரு வேட்பாளராக அவர் தோற்றிருந்தார். ஒரு பேச்சாளராக நான் ஜெயித்திருந்தேன்.

அந்தக் காலத்தில்தான் பயிற்சி மொழி மாநாடு நடைபெற்றது. கலைஞர், நாவலர், பேராசிரியர் எல்லாம் பங்கு பெற்றனர். அதற்குத் தலைமை தாங்கியவர் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. அனுமதிக்காவிட்டால் நானாக வந்து பேசுவேன் என்று அச்சுறுத்தினேன். அதற்குப் பிறகு ஐந்து மணித்துளிகள் பேசினேன். கலைஞர் என்னைத் தொடர்ந்து பேசச்சொன்னார். குடத்தில் இட்ட விளக்காய் உள்ளாய் தம்பி, குன்றிலிட்ட விளக்காவது எப்போது என்று கலைஞர் என்னைப் பார்த்துக் கேட்டது அந்த மேடையில்தான்.

நம்பிக்கை தழைத்து வளர்வதற்குப் பட்டறிவு துணை செய்யுமா?

நம்பிக்கைக்குப் பட்டறிவுதான் துணையிருக்கும். வாழ்க்கையில் எல்லாவற்றில் இருந்தும் பாடம் படிக்கிற நேர்த்திக்குப் பட்டறிவு என்று பெயர். ஒரு மருந்து சாப்பிடுகிற போது அது உடம்புக்குள் என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்று அறிந்து வைத்திருப்பவனைவிடவும், நமக்கு குணமாகும் என்று நம்பி சாப்பிடுபவனுக்கே நன்மைகள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு. இயற்கையின் அகராதியில் உணர்வின் ஆற்றலுக்கு உள்ள மரியாதை அறிவின் ஆற்றலுக்கு இல்லை. பூமி அதிர்ச்சி உண்டாகப் போகிறதெனில் 24 மணி நேரத்திற்கு முன்பாக பறவைகளும் விலங்குகளும் உணர்வின் உந்துதலால் உணர்ந்து கொள்கின்றன. மனிதனுக்கு அந்த மகத்துவம் இல்லை.

நீங்கள் அனைத்துத் தடைகளையும் அறிவால் அல்லவா வென்றீர்கள்?

உண்மைதான். ஆனால் நான் அறிவிலிருந்து ஞானம் நோக்கிப் பயணப்படுகிறவன். தகவல் – அறிவு – ஞானம் அந்த 3 நிலைகளுக்கும் வேறுபாடிருக்கிறது. மின்மினிப்பூச்சி, இரவில் வெளிச்சம் போடும், இது தகவல். மனிதன் ஆதி நாட்களில் இதை அறிந்து கொண்டதும், கப்பல் பயணத்தின்போது இந்தப் பூச்சிகளைக் கைப்பற்றி, களிமண்ணில் ஒட்டவைத்து இரவுக்கு விளக்காக்கினான். இது அறிவு என்று சில பேர் சொல்லலாம். ஆனால் இரவில் தான் இருக்கும் இடத்தை ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் ஒருவருக்கொருவர் தெரிவிக்க இப்படி வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன.

மனிதனின் அறிவு, இயற்கையாக நிகழும் விஷயங்களைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறது. மின்மினிப்பூச்சி வெளிச்சம் காட்டுவது மனிதனின் வெளிச்சத்துக்காக என்று நினைப்பது அறிவு. ஆனால் அது வன்முறை, பூச்சிகள் தமக்காகவே வெளிச்சம் போட்டுக் கொள்கின்றன என்று விளக்கிக் கொள்வதும் , விலகியிருப்பதும் ஞானம்.

அறிவு சுயநலத்தோடுதான் சிந்திக்கத் தூண்டும்.

ஆளில்லாக் காட்டுக்குள்ளே ஆயிரம் பூ பூக்கிறது.
ஆருமில்லை பார்ப்பதற்கு.
அப்புறம் ஏன் பூக்கிறது?’

என்று ஒரு பழைய பாடல் உண்டு.

மனிதன், தான் பாராத இடத்தில் பூக்கள் பூப்பது ஏன் என்று கேட்கிறான். இது அறிவின் ஆணவம். ஆனால் பூக்களை மனிதன் மட்டுமா பார்க்கிறான். மனிதன் பாராத இடத்திலும் பூச்சிகள் பூக்களைப் பார்க்கின்றன. பறவைகளும் நதிகளும் பார்க்கின்றன. இதனை உணர்வது ஞானம். அறிவில் ஆரம்பித்து, ஞானம் நோக்கி நகர்வதுதான் நல்லது.

அப்படியானால், மனிதனின் தனித்தன்மையே அவன் ஆறாவது அறிவுதான் என்று சொல்கிறார்களே?

ஆறாவது அறிவு என்பது மனிதனின் யூக அறிவுதான். அதனைப் பலபேர் பகுத்தறிவு என்று பிழையாகச் சொல்கிறார்கள். சில பொருட்களைக் காணுகிறான் என்றால் அதனை வைத்துக்கொண்டு காணாத பொருட்களையும் உண்டு என்று யூகித்து அறிந்துகொள்கிறானே, அதுதான் பகுத்தறிவு. புகை இருப்பதைப் பார்த்தவன் நெருப்பு இருப்பதை நம்பினால் அதற்குப் பெயர் பகுத்தறிவு’. கண்ணால் காண்பதை மட்டுமே நம்புவேன் என்று சொல்கிற ஒருவன், தன் இருப்பையே மறுதலிக்கிறான். எனவே பகுத்தறிவு என்பது யூக அறிவுதான் என்பது எனது கருத்து.

நீங்கள் விரும்பும் அறிவை வழங்கும் விதத்தில் இன்றைய கல்விமுறை இருக்கிறதா?

இன்று இருப்பதைக் கல்விமுறை என்று சொல்வதே பிழை. அது முறையே அல்லாத கல்வி என்பதுதான் முறை. இன்றைக்கு இருக்கிற பெற்றோர்களும் இதே கல்விமுறைக்கு உடன்பட்டு உட்பட்டு வந்தவர்கள் என்பதனால் அவர்களாலும் அதில் இருக்கிற குறைகளை கண்டறிய முடியவில்லை.

இன்றைய கல்விமுறை மனிதனிடத்திலிருந்து மனிதத்தை அன்னியப்படுத்துகிறது. இன்று கல்வி கற்றவர்கள் தன்னை யார் என்று உணரமுடியவில்லை. பெற்றோர்களை அவன் இழிவாகப் பார்க்கிறான். அறியாமையை அவன் களைய நினைக்கவில்லை. அநியாயங்களைப் பார்த்தால் அவன் மனது துடிக்கவில்லை. கேள்வி கேட்கவில்லை. இப்படியிருந்தால் அவன் கல்வி பெறவில்லை என்றுதான் அர்த்தம். எனவே, இன்றைய கல்வி முறை குறையோடு உள்ளது. இது வெறும் செய்திகளைச் சேகரிக்கிற ஒரு கல்வி முறையாகவே உள்ளது.

நிறைய விஷயங்களைத் தெரிந்து மனதுக்குள்ளே சுமப்பது தான் கல்வி என்று பலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நான் கவலைப்படுகிறேன். செய்திகளைத்தான் புத்தகம் சுமக்கிறதே. பையன் வேறு எதற்கு சுமக்க வேண்டும். இன்றைக்கு படிக்கிற மாணவர்கள் பொதி சுமக்கும் கூனர்களாக மாறி விட்டனர். எனவே கல்வி என்பது நிறைய தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதல்ல. அதற்கு வாசக சாலை போதும். தெரிந்த செய்திகளை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதில்தான் அறிவு இருக்கிறது.

அறிவு என்ன செய்ய வேண்டும் என்று திருவள்ளுவரைக் கேட்ட போது அவர் சொன்னார், அடுத்தவனுடைய குறையை, துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக நினைத்து அதைக் களையாவிட்டால் அதற்கு அறிவு என்று பெயரில்லை என்கிறார்.

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை’

என்கிற மனிதநேயம் சார்கிற கல்வி வந்தால் மனித சமுதாயம் உயரும்.

தத்துவார்த்தமான பார்வையில் பதில்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் இன்னொரு கேள்வி? இன்று மரணம் என்கிற விஷயம் நிலையாமை என்கிற நிஜம் மனித வாழ்வை உறுத்துகிறது என்றோ வரப் போகிற மரணம் பற்றி தத்துவ ரீதியாக சிந்தித்து சிந்தித்து மனிதன் செயல்படுவதையே நிறுத்திவிடுவானோ என்று தோன்றுகிறது. எனவே தத்துவங்கள் நம்பிக்கையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதென்று நீங்கள் கருதுகிறீர்களா?

அப்படி நான் நினைக்கவில்லை. நிலையாமை என்பது நிலையானது. எனவே செயல்பாடாக வேண்டும் என்று கருதலாம். என்ன செய்தாலும் மரணம் வருமே என்று சொல்லி இயன்ற அளவு நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். மிகச்சரியாக நாம் ஒன்றைச் சிந்தித்தால் உலகின் நினைவில் மனிதர்கள் யாரும் இன்றைக்கு இல்லை. சாக்ரடீஸ் சொன்னதையோ, அறிவியல் அறிஞர்கள் சொன்னதையோ, புத்தர் சொன்னதையோ, அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ஒட்டு மொத்தமாக உலகம் தன் உள்ளத்தில் ஒருவரை நிலைநிறுத்தி இருக்கிறதா என்றால் இல்லை. எனவே மனித விதி என்பது செயல்படுதல். நிலையாமை என்கிற ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு வாழ்க்கையில் செயல்படுவதை நிறுத்திக் கொண்டு வாழ்வானேயானால் அவன் கருவிலேயே கண்ணிலந்தவனாகி விடுகிறான். அவன் வாழ்ந்து பயனென்ன?

மனிதகுலத்தின் அத்தனை சாதனைகளுக்கும் அடிப்படையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

கற்பனை. மனிதனுடைய கற்பனை சக்திதான் மகத்தான உயரங்களுக்கு கொண்டு செல்லும். வட இங்கிலாந்தில் ஏல் பல்கலைக்கழகத்தில், லெஸ்லி வாக்கர் என்கிற மருத்துவ விஞ்ஞானி இந்த நூற்றாண்டின் மருத்துவ உலகத்திற்குத் தந்திருக்கிற வெளிச்சம் கொளுத்துகிற வெற்றிச் செய்தி இது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பெண்களுக்கு கிசிச்சை கொடுத்த லெஸ்லி வாக்கர் தங்கள் உடம்பிலுள்ள இரத்த வெள்ளை அணுக்கள், புற்றுநோய்க் கிருமிகளை அழிப்பது போல எப்போதும் கற்பனை செய்து கொண்டே இருங்கள் என்று மருந்து மாத்திரை சாப்பிடுகிற நோயாளிகளுக்கு அறிவுறுத்தினார். அப்படி தங்கள் உடம்பில் இருக்கிற அணுக்கள் புற்றுநோய் கிருமிகளை அழிப்பதாக கற்பனை செய்துகொண்டே மருந்துகளைச் சாப்பிட்ட நோயாளி களுக்கு மிக விரைவிலேயே நோய் குணமானது என்பதனை உலகுக்கு உணர்த்தினார்.

மார்க் 11, அத்தியாயத்தில் இயேசு நாதர் குறிப்பிடுகிற போது. ‘நீங்கள் கடவுள் இடத்தில் ஒன்றை கேட்கிறபோது அதை ஏற்கனவே பெற்றுக் கொண்டதாக கருதிக்கொள்ளுங்கள். அப்போது அது உங்களுக்கு அருளப்படும்’ என்று சொல்லுகிறார்.

எனவே ஒரு விஷயத்தை, உறுதியாக நாம் கிடைத்து விட்டது என்று நம்பினால் நம் வாழ்க்கையில் அது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இரண்டாவது, நம் வெற்றிகளைப் பார்த்து நாம் வியந்து கொண்டிருக்கக் கூடாது. நம் சாதனைகளை எண்ணி நாமே சமாதானம் ஆகிவிடக்கூடாது.

லிங்கன் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஆனபிறகு தனியே அமர்ந்து பத்து நிமிஷம் அழுது கொண்டிருந்தார் என்று சொல்லுவார்கள். ஏன் அழுதார் என்றால், ‘நான் இவ்வளவு காலம், சிரமப்பட்டு வளர்ந்தேன். இப்போது ஜனாதிபதி ஆகி விட்டேன். இனி என்னவாக நான் வளர்வேன். என் வளர்ச்சிக்கு ஓர் எல்லை வந்துவிட்டதே’ என்று வருத்தப்பட்டு அழுதார் என்று பார்க்கிறோம்.

மூன்றாவது, அறிவு என்று வருகிறபோது போட்டா போட்டிகள் நிறைந்த உலகத்தில் நம்மை நிலைப்படுத்திக் கொள்கிற முயற்சியில் நாம் ஈடுபட்டாக வேண்டும். சின்னச் சின்ன இழப்புகளை எல்லாம் மறந்துவிட்டு நம் பாதையில் பயணமாகிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு பறவை பறந்து கொண்டே போகிறது. பறக்கும்போது இறகுகள் அங்கங்கே உதிரத்தான் செய்யும். உடனே பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து தன் அழகான அந்த இறகுகளை கொத்திக் கொத்திச் சேகரித்துக் கொண்டு இருந்தால் பயணம் தடைபட்டுப் போகும். எனவே இழப்புகளைப் பற்றி எண்ணாமல் போய்க் கொண்டே இருக்கவேண்டும். பெரிய நதி போகிறது. தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டு போகுமே தவிர பாதை வெட்டுவதற்காக மண் வெட்டியும், கூடையும், கொண்டு போகாது. எனவே எவ்வளவு வலிமை யோடும், திறமையோடும், வேகத்தோடும் வாழ்க்கையில் நகர்கிறோம் என்பதை பொறுத்துதான் வெற்றி பெறமுடியும்.

பேட்டியின் தொடக்கத்தில் அறிவியல் தளத்திலிருந்து ஆன்மீகம் நோக்கிப் பயணப்படுவதாகச் சொன்னீர்கள். அது ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் துணைபுரியும் என்று சொல்ல முடியுமா?

அறிவின் குணம் எதையும் பிரித்துப்பார்ப்பது புத்தியின் குணக்கூறு, பிரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் திகழ்கிறது. மனிதர்களை நாட்டின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் பிரித்துப் பார்க்கிற பணியை புத்தி செய்யும். ஞானம் அனைவரையும் ஒன்றுபடுத்தும். அதைத்தான் ஆன்மீகம் என்கிறோம்.

ஆன்மீகம் என்றால் இன்றைக்கு போலியான ஒரு மதப் போர்வையில் இருக்கிற ஆன்மீகம் அல்ல. ஆன்மீகம் மதம் சார்ந்திருக்கிறது. இது நமக்கு தேவையில்லை. ஆனால் ஆன்மீகம் சில விஷயங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கிறது.

இறைவனுடைய ஆன்மத்துளிகளாக எல்லோரையும் பார்க்கிறபோது பேதங்கள் அடிபட்டுப் போகிறது. உயிரின் விளக்கம் என்ன என்று கேட்கிறபோது அறிவியல் அது அணுக்களின் திரட்சி, அணுக்களின் ஆட்டம் என்று சொல்கிறது. ஆன்மீகம் அனைத்தையும் ஒரே துளியாக பார்த்துப் பழகுகிறது. அறிவியல், ஆன்மீகம் இரண்டும் ஒரே புள்ளியில் சந்திக்கிற இடங்கள் நிறைய உண்டு.

ஆன்மீகவாதி புள்ளி வைக்கிறதை அறிவியலாளன் கோலம் போடுகிறான் என்பதுதான் சரியான புரிதலாக இருக்க முடியும்.

இன்று அமெரிக்க நாட்டில் சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் துன்பங்களை காது கொடுத்துக் கேட்பதற்காகவே ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாதச் சம்பளத்திற்கு மனிதர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தீர்வு எதுவும் சொல்ல மாட்டார்கள். பேசுவதை எல்லாம் பொறுமையாகக் கேட்பார்கள். ஆனால் ஒரு படி மேலே போய் மனிதனுடைய துன்பங்களைக் காது கொடுத்துக் கேட்டு அதற்கு மிகச்சிறந்த தீர்வுகளை தருவதாக தன் பணியை அமைத்துக் கொண்டிருக்கின்ற மதங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருக்கின்றன.

இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிபெற என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?

நம்பிக்கை உள்ள இளைஞர்கள், தடைகளைக் கண்டு தயங்கி நிற்பது கிடையாது. என்னிடத்திலே கூட ஏக்கத்தோடு வந்து சிலபேர் சொல்லுவார்கள். ‘நாங்கள் அனுப்புகிற கதைகள், கட்டுரைகள் திரும்பி வருகின்றனவே’ என்று சொல்லுகிறார்கள். நான் சிரித்துக்கொண்டே அவர்களிடம், அதைப் பார்த்து நீங்கள் வருத்தப்படாதீர்கள். பொருட்கள் புறப்பட்ட இடத்திற்கு திரும்பும் என்பது பூகோள விதி என்று சொல்லுவேன். ஏனென்றால் ரர்ழ்க்ள் ரர்ழ்ற்ட் என்கிற ஆங்கில கவிஞன் நோபல் பரிசு பெற்றபிறகு ஒரு பல்கலைக்கழகத்தின் ஆண்டு மலருக்கு அவனிடத்தில் கவிதை கேட்டிருந்தார்கள். அவன் எழுதிக் கொடுத்தான். ஆனால் அந்த ஆண்டு மலரில் அந்தக் கவிதையை அவர்கள் இடம்பெறச் செய்யவில்லை. அதற்காக Words Worth கவிஞன் இல்லை என்று ஆகிவிடாது.

தடைகளைப் பார்த்தும் தளராத முயற்சி என்பது இளைய பருவத்தில் இருந்தாக வேண்டியது அவசியம். அதுதான் மிகச் சிறந்த உயரங்களுக்கு மனிதனை இட்டுச்செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *