தேவைகள்தான் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன

திரு. சௌந்தரராஜன்
நிறுவனர் – சுகுணா பவுல்ட்ரி

சுகுணா பவுல்ட்ரி 20 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. கோழி வளர்ப்பு, கோழிகள் விற்பனை ஆகிய துறைகளில் அகில இந்திய அளவில் முத்திரை பதித்துள்ள சுகுணா பவுல்ட்ரி குழு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. சௌந்தரராஜன் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

சுகுணா நிறுவனத்தின் ஆரம்ப நாட்கள் பற்றி?

நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1986ல் ஐயாயிரம் ரூபாய் கடன் பெற்று இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். விவசாயம் சார்ந்த தொழிலேயே ஈடுபட வேண்டும் என்று விரும்பியதால் கோழிப் பண்ணை தொடங்கினோம். தொடக்க காலத்தில் நிறைய சிரமங்கள் இருந்தன. அந்த நாட்களில் விவசாயத்திலேயே நிறைய ஏற்றத் தாழ்வான சூழல்தான் அமைந்தது. தண்ணீர் இல்லை, விளை பொருளுக்கேற்ற விலை இல்லை. எங்களிடம் சில பின்புலங்கள் இருந்தன. விவசாயிகளிடம் சில பின்புலங்கள் இருந்தன. இரண்டும் ஒன்று சேரும்போது சில நன்மைகள் ஏற்படும் என்பதால், கோழி வளர்ப்பில் ஒப்பந்த முறைகளை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டோம்.

இதற்கு விவசாயிகள் மத்தியில் என்ன ஆதரவு இருந்தது?

94-95 வரை எங்களுடன் 20 பேர் வரையில் தான் இருந்தார்கள். அந்த ஒப்பந்தமுறை நன்கு செயல்படுவதைக் கண்டவுடன் அதை விரிவுபடுத்தலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. 1996 முதல் விரிவாக்கத்தில் இறங்கினோம். தமிழகத்தில் மட்டும் 2000 விவசாயிகள் எங்களுடன் இணைந்தார்கள். பிறகு மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த எண்ணினோம். பலர் அந்த முயற்சி வேண்டாம் என்றனர். எந்த ஊராக இருந்தாலும் மனிதர்கள் மனிதர்கள்தான் என்பது எங்கள் நம்பிக்கை. எனவே, 1999-ல் கர்நாடகத்தில் ஒப்பந்த முறையை நடைமுறைப்படுத்தினோம். தொடர்ந்து மஹாராஷ்ட்ரா, குஜராத், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இதனை விரிவுபடுத்தியுள்ளோம். இப்போது நாடு முழுவதும் எங்களுடன் 9000 விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள்.

விவசாயத் துறையின் எதிர்காலம் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

நம் விவசாயிகள் நிர்வாகத்தில் சிறந்தவர்கள். சரியான உள்ளீடுகளைத் தேர்ந்தெடுப்பதிலும், விளைபொருளை சந்தைப் படுத்துவதிலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. சரியான விதைகளை தேர்வு செய்வதிலும், விஞ்ஞான ரீதியான விவசாயத்துறை முன்னேற்றங்களை நடைமுறைப்படுத்துவதிலும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

தரமான விதைகள் தருவதில், வங்கிகளின் துணையோடு விவசாயிகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் தந்து ஊக்குவிப்பதில், விளைபொருட்களின் தர நிர்வாகத்தைக் கையாள வழி காட்டுவதில், பிராண்டிங், பேக்கேஜிங், மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் தனியார் நிறுவனங்கள் கைகொடுத்தால் விவசாயத்தில் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிகளைக் காண்பதோடு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆதாயத்திற்கும் நம்மால் துணை செய்ய இயலும். அறுவடை செய்து இருப்புக்கு கொண்டு வருவதற்கிடையில் ஏறக்குறைய 25% விளைபொருட்கள் கெட்டுப்போகின்றன. சரியான இருப்பு வைக்கும்முறை இல்லாததுதான் இதற்குக் காரணம்.

இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் விற்பனைக்கு வருகின்றன. அவற்றிலிருக்கும் தோட்டப் புதுமை நம்மூரிலேயே பயிராகி இரண்டொரு நாட்களிலேயே விற்பனைக்கு வருகிற காய்கறிகளிலும், கனிகளிலும் இருக்க நம்மால் உதவ முடியும். விவசாயத்தில் எவ்வளவு விளைபொருட்கள் விளைந்தாலும் அதற்கு நம் நாட்டில் தேவைகள் இருக்கின்றன. விவசாயிகளை விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தவிட்டு மற்றவற்றை முன்னணி தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்று செய்து முடிக்க வேண்டும்.

விவசாயத்துறையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட என்ன வழி?

விவசாயத்தில் வாய்ப்புகள் இருக்கும். வருமானம் இருக்கும் என்கிற உத்திரவாதம் தரப்பட்டால் இளைஞர்கள் கண்டிப்பாக ஈடுபடுவார்கள். பிறந்ததில் இருந்து தங்கள் குடும்பத்தின் விவசாய முயற்சிகள் அனைத்திலும் எப்போதும் கடன் தொல்லைகளையே கண்டு வந்துள்ளதால், விவசாயத்தில் ஈடுபட இளைஞன் தயங்குகிறான்.
கிராமங்களை விட்டு இளைஞர்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட சதவீத இளைஞர்கள் இன்றும் கிராமப்புறங்களில் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஒரிசாவில் ஒப்பந்தமுறையை நாங்கள் கிராமப்புறங்களில் கொண்டு சென்றபோது, அதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான். எனவே, விவசாயம் பற்றிய நம்பிக்கையை இளைஞர்கள் மனதில் உருவாக்குவது நிறுவனங்களின் கடமை.

பொதுவாக இன்றைய இளைஞர்களின் மனோபாவம் எப்படி இருக்கிறது?

குறுகிய காலத்தில் நிறைய பணம் பண்ணுவது என்கிற இலக்கை வைத்துக் கொண்டுதான் ஏராளமான இளைஞர்கள் இயங்கி வருகிறார்கள். அதையே அவர்கள் தொலைநோக்கோடு யோசித்து திட்டம் தீட்டினால் சமூகத்திற்கு நன்மை தருவதாகவும், தங்களுக்கு ஆதாயம் தருவதாகவும் நிறைய செய்ய முடியும்.

உதாரணமாக ஒன்று வேலைக்குப் போவது, இல்லை என்றால் ஏதாவது தொழில் தொடங்குவது என்று யோசிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை சேவைத் துறையில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கோவையையே எடுத்துக் கொள்ளுங்கள். சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ சென்றால் நாம் விமானத்தில் சென்று இறங்கியதில் இருந்து திரும்ப விமானம் ஏறும்வரை நம் பயணத் திட்டத்திற்கேற்ப எங்கே தங்குவது, எங்கெல்லாம் செல்வது என்பது உட்பட திட்டமிட்டு நம்மை அழைத்துச் செல்ல சுற்றுலா நிறுவனங்கள் உள்ளன. ஆனால், வடஇந்தியர் ஒருவர் கோவைக்கு வந்தால் அத்தகைய சேவையைத் தர நிறுவனங்கள் இல்லை. இதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். பெரிய முதலீடு தேவையில்லை. டேக்ஸி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் போதும். நான்கு இளைஞர்கள் சேர்ந்து இதனை சிறப்பாகச் செய்ய முடியும்.

புதுவிதமான சிந்தனை, சரியான அணுகுமுறை இருந்தால் இளைஞர்கள் நிச்சயம் சாதிக்கலாம். இத்தகைய புதிய முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உதவச் சென்றால் அவர்களை விவசாயிகள் நம்புகிறார்களா?

தொடக்கத்தில் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நாங்கள் ஒப்பந்த முறையைத் தொடங்கியபோது, எங்களுடன் முதலில் பத்து பேர்தான் இருந்தார்கள். பிறகு, 2005-ல் அது பத்தாயிரமாக வளர்ந்தது. எங்களைப் போல் பலர் இந்த ஒப்பந்த முறையை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களையெல்லாம் சேர்த்தால் ஏறக்குறைய 60,000 விவசாயிகள் நிறுவனங்களோடு சேர்ந்து செயல்படுகிறார்கள். எனவே, இது சாத்தியம். பழங்கள் விற்பனை செய்பவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டால் விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் பணி நாளை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள்?

எங்காவது வேலைக்குச் சென்று கொண்டிருந்தால் என் பொறுப்புகள் என் குடும்பம் என்கிற எல்லையோடு நின்றிருக்கும். இப்போது எங்களோடு இருக்கும் விவசாயிகள், விநியோகஸ்தர்கள், பணியாளர்கள் என்று 20,000த்திற்கும் அதிகமான குடும்பங்கள் எங்களுடன் இருக்கின்றன. எனவே, அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வேலை செய்கிறேன். வேலையை ஒரு சுகமாகக் கருதினால் களைப்படைய வாய்ப்பில்லை.

அதிகாலை 8 முதல் 8.30 மணிக்குள் வேலையைத் தொடங்கிவிட வேண்டும். பொதுவாக காலை 12.30 மணிக்குள் செய்து முடிக்கிற வேலைகள்தான் ஒரு நாளின் பெருமளவு வேலைகளாக இருக்கும். பயணங்கள், சந்திப்புகள் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டால் இன்னும் நல்ல முறையில் எல்லோராலும் இயங்க முடியும்.

நிறுவனங்களின் பங்கேற்பு பற்றி நிறையக் குறிப்பிட்டீர்கள். இதை வலியுறுத்துவதன் காரணமென்ன?

தனியார் நிறுவனங்கள் தனிமனித முயற்சிகளின் விளைவாகத் தோன்றியவை. தடைகள் வரும்போதுதான் புதிய புதிய யோசனைகள் வரும். கோவை மாவட்டத்தில் கூட வறண்ட பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நன்கு வளர்ந்திருக் கிறார்கள். தேவைகள் தான் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. எனவே, தனிமனித முயற்சிகளால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் சமூகத்தின் தேவையை நன்கறிந்து தங்கள் அனுபவங்களையும் தொடர்புகளையும் பயன்படுத்தி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *