திரு.கே.கே. இராமசாமி
நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை
ஷார்ப் – இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே. இராமசாமி. அவருடன் உரையாடினோம்.
உங்கள் மனதில் நிரந்தரமாய் மணம் வீசும் மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
எளியதொரு கைத்தறி நெசவுக் குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை திரு. கருப்பண்ண முதலியார் காளப்பட்டியில் பிறந்தவர். நாணயமான மனிதர் என்று பெயரெடுத்தார். காளப்பட்டி தொடக்கப் பள்ளியில் நான் ஐந்தாவது வரை படித்தவுடன் என்னை தறியில் அமர்த்த நினைத்தார். கால் எட்டாததால் இன்னொரு வருடம் ஐந்தாம் வகுப்பு படிக்கச் சொன்னார்.
அதன்பிறகு என் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.இராமசாமி ஐயர், இராமகிருஷ்ண வித்யாலயத்தில் இரண்டு மாணவர்களை நுழைவுத் தேர்வெழுத அழைத்துச் சென்றார். என்னையும் உடன் அனுப்பி வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டார். நானும் நுழைவுத் தேர்வு எழுதினேன். இடம் கிடைத்தது. அப்போதெல்லாம் பள்ளிக் கட்டணம், தங்குமிடம், உணவு எல்லாம் சேர்த்து வருடத்திற்கு 175 ரூபாய்தான் ஆகும். அங்கேயே படித்தேன்.
பிறகு, பி.எஸ்.ஜி. கலை அறிவியற் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். என் தந்தை என்னை ஆடிட்டர் ஆகுமாறு கூறினார். அதற்காக மூன்றாவது பிரிவுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், கணிதத்தில் 95 மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் முதல்வர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி முதல் பிரிவு எடுத்துப் படிக்குமாறு அறிவுறுத்தினார்.
அந்த ஆண்டில்தான் அதே கட்டிடத்தில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கினார்கள். அதற்கு விண்ணப்பித்தேன், இடமும் கிடைத்தது. வாழ்க்கையில் இப்படி நிறைய எதிர்பாராத வாய்ப்புகள் எல்லோருக்கும் வரும். சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லா இளைஞர்களையும் போல படித்துவிட்டு வேலை தேடும் படலம் உங்களுக்கும் ஏற்பட்டதா?
இல்லை. நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறபோதே சமூக சேவைப் பிரிவிற்கு செயலாளர் ஆக்கினார்கள். கல்லூரி முதல்வர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்களுடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்புக் கிடைத்தது. படித்து முடித்ததும் தெர்மல் ஸ்டேஷன், நெடுஞ்சாலைத் துறை இரண்டிலேயும் இளநிலைப் பொறியாளர் வேலை கிடைத்தது. எதில் சேரலாம் என்று ஜி.ஆர்.தாமோதரன் அவர்களிடம் ஆலோசனை கேட்கப் போனேன். “இரண்டிலும் வேண்டாம். பி.எஸ்.ஜி. தொழில் மையத்தில் இளநிலைப் பொறியாளராக வந்து சேர்ந்துவிடு” என்று அவர் சொன்னார். உடனே, பணியில் சேர்ந்தேன். மாதம் 250 ரூபாய் என் முதல் சம்பளத்திற்கு பணியில் சேர்ந்தேன்.
சொந்தமாகத் தொழில் தொடங்கியது எப்படி?
பி.எஸ்.ஜி-யில் பணிபுரிந்தபோது, ஜெர்மனியில் தொழில் பயிற்சி தருவதாக நாளிதழில் விளம்பரம் வந்தது. நானும் சில நண்பர்களும் விண்ணப்பித்தோம். டெல்லியில் நேர்முகத் தேர்வுக்கு வரச்சொன்னார்கள். சென்றோம். பயிற்சிக்கு அனுமதி கிடைத்தது.
ஜெர்மனிக்கு சென்று பயிற்சி பெற்றபோது, சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணம் வளர்ந்தது. சொல்லப்போனால் இளம் பருவத்திலேயே அந்த எண்ணம் இருந்தது. எனவே, தொழில் தொடங்குவது பற்றிய தகவல்களையும், விவரக் குறிப்புகளையும் அந்தப் பயிற்சியின் போதே சேகரித்தேன்.
1964ல் ஜெர்மனியில் இருந்து வந்தேன். என் தந்தை “உடனே தொழில் தொடங்க முடியாது. இரண்டு ஆண்டுகள் வேலைக்குப் போ” என்று சொன்னார். பி.எஸ்.ஜி-யில் வந்து ஜி.ஆர்.டி.யிடம் இந்த விபரத்தைச் சொன்னேன். அவரும் 2 ஆண்டுகள் நான் பணிபுரிய ஒப்புக் கொண்டார். 1967-ல் என் தந்தை 2000 சதுர அடி கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.
இயந்திரங்கள் வாங்க பணமில்லை. பி.எஸ்.ஜி-யில் நான் பணிபுரிந்த காலத்திற்கான கிராஜூவிட்டி தொகை ரூ.5000 வந்தது. அப்போது ஒரு லேத்தின் விலை ரூ. 10,000. இந்த 5000 ரூபாயை முன்பணமாக வைத்துக்கொண்டு லேத் தருமாறு பி.எஸ்.ஜி-யில் கேட்டேன். கொடுத்தார்கள். அவ்வப்போது அவர்களிடமிருந்து வேலைகளுக்கான ஆர்டர் பெற்று செய்து வந்தேன்.
ஷார்ப் என்ற பெயரை வைத்தது எப்படி?
நான் ஜெர்மனியில் பயிற்சி பெற்றது கட்டிங் டூல் உற்பத்தி நிறுவனம் ஒன்றில்தான். அந்தத் தொழிலை செய்ய ஷார்ப் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால், அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே, பிரபலமானதால் என் நிறுவனங் களுக்கு அந்தப் பெயரையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்.
ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு திருப்புமுனைகளாக அமையக் கூடியவை எவை?
வாய்ப்புகளும், அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளுகிற விதங்களும்தான். கொஞ்சம் தயங்கினாலும் துணிந்து முயற்சி எடுத்தால், எதிர்பாராத வெற்றிகள் சாத்தியமாகின்றன. இதற்கு என் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
என்னுடைய தம்பி திரு. இராமச்சந்திரன் பால் பண்ணை தொடங்கும் நோக்குடன் கடன் கேட்டு விண்ணப்பிக்க பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்றார். அப்போது என்னைப் பற்றியும், பி.ஈ. படிப்பு முடித்துத் தொழில் தொடங்கி நடத்துவது பற்றியும், மேலும் சில தகவல்களையும் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட வங்கி அதிகாரி திரு.முத்துகிருஷ்ணன், தம்பியிடம் ‘என்னை வந்து சந்திக்கும்படி உங்கள் அண்ணாவிடம் கூறுங்கள்’ எனக் கூறி அனுப்பினார்.
இந்த விவரத்தை தம்பி என்னிடம் கூறினார். நானோ அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன், செல்லவில்லை. அடுத்த நாள் அவரே தொலைபேசியில் அழைத்தார். அதற்கு நான் அடுத்த நாள் வந்து சந்திப்பதாகக் கூறினேன். அவரோ, “ஏன் நாளை? இன்றே வரக் கூடாதா?’ எனக் கேட்டார். அக்கேள்விக்கணை என்னில் பாய்ந்தது. ஆர்வத்தால் உந்தப் பட்டேன். உடனே சென்றேன்; கண்டேன்; பேசினோம். என் அறிவையும், தொழிலையும், நிலையையும் அறிந்த அவர் தொழில் வளர்ச்சிக்கு உதவி புரிய முன் வந்தார்… ஊக்குவித்தார். அடுத்தநாள் அவரும் திரு.குருராஜன் என்பவரும் வந்து என் தொழிலகத்தைப் பார்வையிட்டனர். பார்வையிட்ட பிறகு ‘உங்கள் கணக்கை எங்கள் வங்கிக்கு எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்’ என்றனர். உடனே நான் ‘எவ்வளவு கடன் கொடுப்பீர்கள்?’ என்று கேட்டேன். ‘எவ்வளவு கொடுப்போம் என்று சொல்ல முடியாது. ஆனால், உங்களுடைய நியாயமான கடன் தேவைகளை நிறைவு செய்வோம்’ என்றார். ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ள நண்பர்களைக் கலந்தாலோசித்தேன். என் கணக்கை வேறு வங்கியிலிருந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றினேன். அந்த வங்கிக்குச் செலுத்த வேண்டியிருந்த ரூ.27,000-க்குக் காசோலையையும் திரு.முத்து கிருஷ்ணன் கொடுத்தார்.
என் நண்பர் ஜெயசந்திரபாபு என்பவர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்கள் செய்வதாக இருந்த இயந்திரம் ஒன்றுக்கு விலைப்புள்ளி கேட்டிருந்தார். அது பெரிய நிறுவனம். நமக்கு ஆர்டர் கிடைக்காது என்று நினைத்து விலைப்புள்ளி அனுப்பவில்லை. ஆனால், என் நண்பர் வற்புறுத்தினார். அதன் விளைவாக வெறும் 2 ரூபாய் செலவில் அனுப்பிய விலைப்புள்ளி ஏற்கப்பட்டு 5000 ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது.
இன்னொரு சம்பவம். 100 டன் பிரஸ் இயந்திரம் தயாரிக்க விலைப்புள்ளி கேட்டிருந்தார்கள். அதற்குரிய வசதி என்னிடம் இல்லை. தயாரிப்புச் செலவு குறைவுதான் என்றாலும் நிராகரித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் 1 லட்சம் கூடுதலாக வைத்து விலைப்புள்ளி அனுப்பியிருந்தேன். ஆனால், வழங்கப்பட்ட விலைப் புள்ளிகளிலேயே குறைவான விலை என்பதால், அங்கீகரித்து ஆர்டரும் கொடுத்தார்கள். அவர்களிடமே 50,000 முன் பணம் பெற்றேன். வங்கியில் 20,000த்திற்கு மேல் எடுக்க முடியாது. அவர்களிடம் சூழலை விளக்கி 1 லட்ச ரூபாய் முன்பணம் பெற்றேன். இதில் 1 லட்சம் ரூபாய் லாபம் வந்தது.
வரவு பெருகப் பெருக வசதிகளும் பெருகியிருக்குமே?
இந்த விஷயத்திலும் எனக்கு சரியாக வழி காட்டியவர் ஸ்டேட் பாங்க் திரு.முத்துகிருஷ்ணன் தான். 1 லட்ச ரூபாய் லாபம் வந்த காலத்தில், என்னிடம் ஒரு ஸ்கூட்டர்தான் இருந்தது. செகண்ட் ஹாண்ட் அம்பாசிடர் கார் வாங்க நினைத்து வங்கியில் 35,000 ரூபாய் எடுக்கலாம் என்று போனேன். திரு.முத்துகிருஷ்ணன் என்னிடம் பணம் உங்களுடையதுதான். ஆனால், இப்போது கார் வாங்காதீர்கள். மாறாக, புதிய இயந்திரங்கள் வாங்குங்கள் என்று அறிவுறுத்தினார். தொழிலில் வந்த லாபத்தை எல்லாம் திரும்பத் திரும்ப தொழிலிலேயே முதலீடு செய்தோம். அதனால் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி கண்டது.
சகோதரர்கள் நான்கு பேர் இணைந்து 25 ஆண்டுகள் ஒன்றாக நிறுவனங்களை வளர்த்தோம். 10 ஆண்டுகளுக்கு முன் பிரித்துக் கொண்டோம். நிறுவனம் பெரிதாக வளர மேலே சொன்ன அணுகுமுறைதான் முக்கியக் காரணம்.
பம்ப்புகள் துறையில் வளர்ந்தது எப்படி?
சில இயந்திரங்கள் உற்பத்திக்காக துபாயில் இருந்து ஆர்டர் வந்தது. நானும், என் சகோதரர் ஜெகன்நாதனும் துபாய்க்குச் சென்றிருந்தோம். குடும்பத்தினருக்கு சில பொருட்கள் வாங்க, மார்க்கெட் சென்றிருந்தபோது சிறிய அளவிலான மோனோ பிளாக் பம்ப் ஒன்றைப் பார்த்தோம். 10 கிலோ எடை கொண்டதாக இருந்தது. கோவையில் செய்துவந்த பம்ப்புகள் 30 கிலோ எடை உள்ளதாக இருக்கும்.
எங்கள் கடைசிச் சகோதரர் இராஜன் இந்தச் தொழிலைச் செய்யலாம் என்று கருதி அந்தப் பம்ப்பை வாங்கி வந்தேன். அதே மாதிரி உற்பத்திச் செய்து 250 பம்ப்புகள் விற்ற இடத்தில் 20,000 பம்ப்புகள் வரை விற்பனை செய்கிறோம். எங்கள் போட்டியாளர்களும் 20,000 பம்ப்புகளை உற்பத்தி செய்கிறார்கள்.
உங்கள் வெற்றிக்கு காரணமென்று எதைக் கருதுகிறீர்கள்?
தரத்திற்கு முதலிடம் தருவதும், வாடிக்கையாளர் நலனுக்கு முக்கியத்துவம் தருவதும், இன்றியமையாத காரணங்கள் என்று சொல்லலாம். அதனாலேயே வித்தியாசமான புகார்களும் வருவதுண்டு. ஒரு வாடிக்கையாளர் சொன்னார் உங்கள் பம்ப் ஓசையெழுப்புவதே கிடையாது. அதனாலேயே அதை நிறுத்த மறந்து விடுகிறோம் என்று. இன்னொருவர் ஒருமுறை அழைத்து ஒரு பேரிங் போய்விட்டது என்றார். நான் மிகுந்த கவலையோடு “எப்போது வாங்கினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் 16 வருடங்கள் இருக்கும் என்று பதில் சொன்னார். எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது.
பம்ப்புகளை விற்கும்போது 100 அடிக்கு செயல்படும் என்று சொல்லி விற்கிறோம். ஆனால், எங்கள் பரிசோதனையில் 130 அடிக்கான செயல்திறன் இருப்பதை உறுதி செய்து கொண்டே விற்பனைக்கு அனுப்புகிறோம். தரம் என்பது உருவாக்கப்பட்ட பிறகு, பரிசோதிக்கப்பட வேண்டும்.
சமூகத்திடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்கிறோம். சமூகத்திற்கு எதையாவது திரும்பச் செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஐடிஐ மையம் தொடங்கியிருக்கிறோம். 200 மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் வெற்றிகரமாக உருவாக்கி வருகிறோம்.
தொழில் முனைவோர்க்கு தேவையான குணங்களாக எவற்றைச் சொல்லலாம்?
தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தணியாத தாகம் வேண்டும். தொழில் முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தைப் பெற்றிருத்தல் அவசியம். தொழிலின் தொடக்க காலத்தில் வரும் தடைகளை எதிர்கொள்ள தளராத உறுதி வேண்டும். தொடங்கும் தொழில் வெற்றி தரும் என்ற நம்பிக்கை வேண்டும். தோல்வி வந்தால் அதைக் கண்டு துவளக்கூடாது. தொழிலுக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் தலைமைத்துவம் வேண்டும். கால நேரம் பார்க்காது உழைக்கும் தன்மை, விரைவாகவும் சரியாகவும் முடிவெடுக்கும் ஆற்றல், தொழில் குறித்த விழிப்புணர்வு, தொலைநோக்குப் பார்வை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் துணிவு ஆகியன வேண்டும்.
உங்கள் வெற்றிக்கு என தனியான கொள்கைகள் வைத்திருக்கிறீர்களா?
முயற்சி திருவினை ஆக்கும், செய்வன திருந்தச் செய், வாடிக்கையாளரே தெய்வம், நேர்மை வெற்றி தரும் ஆகியவையே நான் கடைபிடித்து வரும் கொள்கைகள்.
தொழில் முனைவோர்க்கு நீங்கள் தரும் ஆலோசனை என்ன?
துணிச்சல் இன்றி இலாபம் இல்லை. துணிந்து ஒரு தொழிலில் இறங்குங்கள். ஆனால், அந்தத் தொழில் தொடர்ந்து நட்டத்தில் இயங்குமானால் அதை நிறுத்தி விடுவது அவசியம். ஒரு தொழிலை எப்போது தொடங்கவேண்டும் என்பது மட்டும் தெரிந்துகொண்டால் போதாது, அதை எப்போது மூடவேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். போதிய தொழில் அறிவும், ஆர்வமும் உள்ள தொழிலில் உங்கள் முயற்சியை தொடங்குங்கள்.
Leave a Reply