திருப்தி என்பது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்

திரு.சோம. வள்ளியப்பன்
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

திரு. சோம. வள்ளியப்பன் பிரபல தன்முனைப்புப் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் நாளும் புதுப்புது உத்திகளையும், வழிகாட்டுதல் களையும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி மனிதர் களுக்கும், குழுக்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் இருப்பவர். இன்று மிக அதிகஅளவில் விற்பனையில் இருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.

உங்கள் பிறப்பு மற்றும் வளர்ந்த சூழல் பற்றி?

சொந்த ஊர் தேவகோட்டை. பிறந்தது திருப்பாதிரிப் புலியூரில் (கடலூர்). உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும். தந்தையார் சோமையா. கடலூரில் ஐஸ் கம்பெனி மற்றும் முந்திரித் தோப்புகள் வைத்திருந்தார்கள். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ளூரிலேயே ஹாஸ்டலில் விடுமளவு குறும்பு செய்திருக்கிறேன். இயக்குநர் வஸந்த் எனது உடன் பிறந்த இளைய சகோதரர். எனக்கு 15 வயதாகியிருந்த பொழுது நான் நாடகக் கதை வசனம் எழுதுவேன். அவன் உதவி டைரக்டர். பெரியண்ணன் செந்தில் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அடுத்த அண்ணன் வீரவன் டசஆயில் பணியாற்றுகிறார். சித்ரா சுப்ரமணியமும் (பட்டிமன்ற பேச்சாளர்) சௌந்தர லட்சுமி இராமநாதனும் சகோதரிகள்.

முதலில் படித்தது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். நிறுவனத்தில் உள்ள அத்தனை ஊழியர்களின் பயிற்சி, மேம்பாடு, வளர்ச்சி முதலியவற்றில் முக்கியப் பங்காற்றும் ஊழியர் துறை மீது ஆர்வம் வந்து, அதற்கு மாறுவதற்கான வாய்ப்புகளைத் தேடினேன். மனிதவளத்துறைக்கு வந்தேன்.

ஒரு மனிதனின் ஆற்றல் வெளிப்பட என்னென்ன தடைகள் இருக்கின்றன? அவற்றைத் தாண்டி வருவது எப்படி?

1. ஆற்றலை வெளிப்படுத்தும் சூழல் அமையாதது
2. சூழல் அமைந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதது.
3. சூழல் அமையாவிட்டாலும் தானே முனைந்து அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்ளாதது.

இவை மூன்றும் தான் முக்கிய காரணங்கள். இவற்றைத் தாண்டி வந்து ஆற்றலை வெளிப்படுத்தலாம்.

– தன்னால் முடியும் என்று நம்புவது
– தன்னால் முடியவேண்டும் என்று ஆசைப்படுவது
– தோல்விகளுக்கு பயப்படாமல் முயற்சிகள் எடுப்பது
– தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வது போன்றவை ஒரு மனிதனின் ஆற்றல் வெளிப்பட உதவும்.

சில சோதனைகளே திருப்புமுனைகள் ஆவதுண்டு. உங்கள் வாழ்க்கையில் அவ்வாறு ஏதும்…?

அதனை சோதனை என்று சொல்லமுடியுமா என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது பாரத மிகுமின் நிறுவனத்தில் கேட்டரிங் துறையில் பணிசெய்து கொண்டிருந்தேன். மனித வளம் பற்றி முறையாகப் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டிருந்த சமயம்.

அப்பொழுதெல்லாம் (1980கள்) மனிதவளத்துறை என்று சொல்லமாட்டார்கள். நிறுவனங்களில் அந்தத் துறையினைச் சார்ந்தவர்களை பர்சனல் மேனேஜர் என்பார்கள். ஊழியர் துறை. அவ்வளவுதான். பின்பு 1990களில் தான் மனிதத்தை, வளமாக பார்க்க வேண்டும் என்ற யோசனை வந்தது.

பர்சனல் துறையைச் சார்ந்த ஒருவரிடம், சிலர் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். “அதிகாரியாவதற்கு என்ன படிக்கலாம்?” என்று. அவர் வேலையில் இருந்து கொண்டே படிப்பதற்கு, இரண்டு நல்ல படிப்புகள் உள்ளன. அவை ICwAமற்றும் PGDPM என்றார். ICWA என்பது, கணக்குத் துறை (Accounts Dept) அதிகாரியாவதற்கான படிப்பு. PGDPM என்பது போஸ்ட் கிராஸுவேட் டிப்ளமோ இன் பர்சனல் மேனேஜ்மெண்ட். பர்சனல் துறை அதிகாரியாவதற்கு இந்தப் படிப்பு உதவும்.

ICWAவைப் போலவே, PGDPM மும் ஒரு ‘புரபஷனல் பாடி’ யால் நடத்தப்படும் பாடத்திட்டம்.

நானும் நெருங்கி நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டேன். மற்றவர்கள் அவை பற்றி விபரங்கள் கேட்க, அவர் சொல்லிக் கொண்டிருந்தார். நான் PGDPM பற்றி விபரம் கேட்டேன். அவர், ‘அது மிகவும் கடினமான கோர்ஸ்’. வெறும் பாடத்திட்டம் தான் தருவார்கள். படிப்பதற்கு நாம்தான் பல்வேறு புத்தகங்களையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேறுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு’ என்றார்.

விடாது நான், யார் நடத்துகிறார்கள்? எப்படி விண்ணப்பம் பெறுவது போன்றவற்றைக் கேட்க, அவர் உங்களாலெல்லாம் பாஸ் பண்ண முடியாதுங்க’ என்று சீரியசாகச் சொன்னார்.

அது என்னால் முடியாது என்று அவர் சொல்லியது எனக்குள் அதை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற வேகத்தைக் கொடுத்தது. கல்கத்தாவைத் தலைமை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் NIPM (National Institute of Personnel Management ) நடத்தும் அந்த கோர்ஸில் சேர்ந்தேன்.

சென்னைக்கு அடிக்கடி போய் பல புத்தகங்களை வாங்கினேன். அவர் சொல்லியது உண்மை போலத் தெரிந்தது. இரண்டரை ஆண்டுகாலம் அந்தப் படிப்பைப் படித்துத் தேறினேன். அகில இந்திய அளவில் நடத்தப்படும் அந்தத் தேர்வில் (1987ம் ஆண்டு) இரண்டாமிடத்தைப் பிடித்தேன். எனக்கும் முதல் ரேங்க் வாங்கிய மாணவருக்கும் இடையே வித்தியாசம் 1 சதவிகிதத்திற்கும் குறைவு.

நான் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் இருந்த பலரின் பாராட்டையும் பெற்றேன்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மனிதவள மேம்பாடு அவசியம் என்பதை நிர்வாகம் உணரும் அளவு அலுவலர்கள் உணர்கிறார்களா?

சில நிர்வாகங்களே கூட இன்னும் அதனை முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது. அலுவலர்களில் பெரும்பான்மையானவர்கள் அணுகுமுறையும் இந்த விஷயத்தில் இன்னும் அதிகம் முன்னேற வேண்டியதாகவே உள்ளது.

‘வேலை முடியவேண்டும்’, ‘நாம் சொல்வதை ஊழியர்கள் செய்ய வேண்டும்’. ‘அவர்கள் கேள்விகள் கேட்கக்கூடாது’ என்றெல்லாம் நினைக்கும் அலுவலர்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல. சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு அப்படியே செய்வதற்கு.

ஆனால் அப்படியில்லாமல் மனிதர்களை வளமாகப் பார்க்கும், நடத்தும் நிறுவனங்கள் அபரிமிதமான பலன்களை அடைந்துள்ளன. மனிதவள மேம்பாடு, நிறுவன மேம்பாட்டிற் கான நிச்சய வழி என்ற புரிதல் அதிகரிக்க வேண்டும்.

சம்பளம் சரியாக வருகிற பொழுது சாதிக்கவோ, புதுமை செய்யவோ தேவையில்லை என்று சிலரது மனப்பான்மை. இதை மாற்ற என்ன வழி?

இது ஒரு மந்த நிலை. ஆபத்தானது. தன்னைவிட சிறப்பாக உயர்வாகச் செய்பவர்களைப் பார்க்க வேண்டும். அவர்களுடன் பழக வேண்டும். அப்படிப்பட்டனவற்றைப் பற்றி படிக்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். திருப்தி என்பது இந்த விஷயத்தில் வளர்ச்சியைக் கெடுத்துவிடும். மேலும் நம்மிடம் நாமே… உயர்ந்தவற்றை, சிறந்தவற்றைக் கேட்க வேண்டும். சராசரியானவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது. Demand Excellence, you will get excellence என்பார்கள்.

இந்தியச் சூழலில் மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன?

நம்மவர்களிடம் நிறைய புத்திசாலித்தனம் இருக்கிறது. நல்ல கற்பனைத்திறன், புதுமை செய்யும் திறன் (Creativity) இருக்கிறது. அதே சமயம் மேற்பார்வை கட்டாயங்கள் இல்லாத பொழுதும் சுயகட்டுப்பாட்டுடன் தொடர்ந்து பணி செய்து முடிக்கும் குணம் அதிகரிக்க வேண்டும். இதை வேண்டுமானால் ஒரு சவால் என்று சொல்லலாம்.

– இந்தத் தொழிலைப் பற்றி முழுவிபரங்கள் அறிந்து தான் செய்கிறேனா?

– இதற்கு மொத்த முதல் எவ்வளவு தேவைப்படும்.

என் பங்கு மற்றும் கடனில் எவ்வளவு?

– இந்த முதல் எவ்வளவு வருமானம் ஈட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

– எவ்வளவு காலத்திற்குள் இந்த முதலால் வருமானம் தர ஆரம்பிக்க முடியும் (Breakeven Point எங்கேயுள்ளது)

– அந்தக் காலம் வரை காத்திருக்க, உழைக்க நான் தயார் தானே..

– இந்தத் தொழிலில் அதற்குள் என்ன மாறுதல்கள், போட்டிகள் வரலாம்?

இந்தக் கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள் முக்கியமானவை.

பங்கு மார்க்கெட் என்பது ஒரு பகடையாட்டம் என்கிறார்களே! உண்மைதானா?

பங்குமார்க்கெட்டைப் பகடையாட்டமாகப் பார்ப்பவர்களும், விளையாடுபவர்களும் இருக்கிறார்கள். அதற்கான பலாபலன்கள், சிரமங்கள் நிச்சயம் உண்டு.

ஆனால் அதையே விபரம் தெரிந்தவர்கள் உதவியுடன் அந்த ஆசையின்றி செய்பவர்களும் உண்டு. அப்படிச் செய்ய அதுவும் மற்ற தொழில்கள் போல ஒரு முதலீட்டு வாய்ப்புதான்.

நம்பிக்கை சார்ந்து வெளியாகும் எழுத்துக்களுக்கும், சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இருக்கும் இடை வெளியை நிரப்புவது எப்படி?

நம்பிக்கை சார்ந்து வெளியாகும் எழுத்துக்கள், நடைமுறை வாழ்க்கை உதாரணங்களையும் சொல்ல வேண்டும். எப்படிச் செய்யலாம், செய்தார்கள் என்ற விபரங்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.

நிறைய, மிக உயர்ந்த விஷயங்களை சொல்லுவது ஒரு முறை. படிப்பார்கள், பாராட்டுவார்கள். அதன்பிறகு செயல்பாடு பழைய மாதிரியேதான் இருக்கும். ஏன்னெனில் நீங்கள் சொல்வதுபோல இடைவெளி அதிகம். வானத்து நிலாவைப் பார்ப்பதுபோல அண்ணாந்து பார்த்து வியக்கலாம், ரசிக்கலாம்.

எழுதும் பொழுது நடைமுறை சார்ந்து ஏஹய்க் ஏர்ப்க்ண்ய்ஞ் என்பார்கள். படிக்கும் வாசகரை கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போல… சாதாரண நிஜ உதாரணங்களுடன் சொல்லலாம். இடைவெளியைக் குறைக்கலாம்.

இளைஞர்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கு உங்களின் பரிந்துரைகள் என்ன?

இன்றைய உலகம் முன் எப்பொழுதையும் விட அதிக வாய்ப்புகள் உள்ளதாக இருக்கிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு. இணைய தள தொழில்நுட்பம் பல வாய்ப்புகளை நம் தேசத்துப் பக்கம் வந்து கொட்டுகிறது. இளைஞர்களுக்கு நேரடியாகவே சொல்லுகிறேன், ‘பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய நீங்கள் அந்த இரண்டு வருடங்களில் செய்யும் உழைப்பு உங்களின் வாழ்க்கை உயரத்தைத் தீர்மானிக்கிறது. 9 ம் வகுப்பு முதலே தொடங்கி விடுங்கள். மூன்றே ஆண்டுகள் முழு மூச்சாய் உங்களை மீத வாழ்க்கைக்காக தயார்படுத்திக் கொள்ளுங்கள். நன்கு கவனமாகப் படியுங்கள்.

உள்ளூர் அரசியல், சினிமா, மற்ற பொழுது போக்குகளைத் தவிருங்கள். அல்லது ஓர் அளவோடு நிறுத்துங்கள். வாசிப்பை அதிகப்படுத்துங்கள். பொருளாதாரம், மற்றும் உங்களின் மனதுக்குப் பிடித்த பயனுள்ள விஷயங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் நேரம், உங்கள் சகவாசம், உங்கள் ஆரோக்கியம் மூன்றும் முக்கியம். உங்கள் தலைமுறைக்குள் நமது தேசம் வளர்ந்த நாடாகிவிடும். அதைச் செய்யப் போகிறவர்கள் நீங்கள் தான்’.

உங்கள் வாழ்வில் நம்பிக்கை ஊட்டிய சில சம்பவங்கள் பற்றி?

மறக்க முடியாத சம்பவங்கள் ஏராளம். அவற்றில் இரண்டைப்பற்றி மட்டும் சொல்கிறேன். முதலாவது ஆஏஉக தொடர்பானது. இரண்டாவது பெப்சி தொடர்பானது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் (Central Public Sector Under takings) சிலவற்றை, அவற்றின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக நவரத்தினங்கள் என்பார்கள். அதில் ஒன்றான BHEL ல் பணியாற்றிய சமயம்.

என்ஜினியர் டிரெயினி, எக்ஸிகியூடிவ் டிரெயினி முதலிய பதவிகளுக்காக விளம்பரங்கள் கொடுப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து குவியும்.

1990களின் கடைசி சில ஆண்டுகளில் ஒன்று. அந்த ஆண்டு திருச்சி பாய்லர் ஆலைதான் அந்த ‘செலெக்ஷனை’ நடத்தியது. நானும் மனிதவளத்துறையில் பணியாற்றினேன்.

வந்து குவிந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து அறுபதாயிரத்து சொச்சம். எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் 26,000. பின்பு நேர்முகத் தேர்வு. இந்தியா மொத்தமும் இருந்த 13 யூனிட்டுகளுக்கும் சேர்த்து பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் 260.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்த விண்ணப்பங் களையும் பின்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளையும் எந்த குழப்பமும், புகாரும் இன்றி அற்புதமாக காலத்தே செய்து முடித்தது திருச்சி குழு. அதில் நானும் கலந்து கொண்டது இனிமையான மறக்கமுடியாத அனுபவம்.

மற்றொரு அனுபவம் சமீபத்தியது. பெப்சி நிறுவனத்தில் பணியாற்றிய சமயம். பிப்ரவரி 27.2000ல் ஒரு ஊழியருக்கு விளக்கம் கேட்டு (Show Cause) நோட்டீஸ் கொடுத்திருந்தோம். அதை வாபஸ் பெறச் சொல்லியும், அந்தப் புகார் கொடுத்த பொறியாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஊழியர்கள் என் அலுவலகத்தைச் சுற்றி அமர்ந்து விட்டார்கள். அன்றைக்கு பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நாள். நிறுவனத்தில் உற்பத்தி செய்து வெளியேறும் பொருட்கள் (குளிர்பானங்கள்) மீதான ‘எக்சைஸ்’ வரி மாறும் நாள். ஆகையால் மறுநாள் நாங்கள் ‘டெஸ்பாட்ச்’ செய்யமுடியாது. அதற்கும் சேர்த்து அன்றே செய்தாக வேண்டும். ஆனால் எங்கள் தொழிற்சாலையில் இப்படி ஒரு சூழ்நிலை.

உற்பத்தி நின்றுவிட்டது மட்டுமல்ல, டிஸ்பாட்ச் எனப் படும், லாரிகளில் ஏற்றி வெளிச் செல்லுதலும் நின்றுவிட்டது. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. பேசக்கூட வர மறுத்து விட்டார்கள்.

இந்த விபரங்கள் டெல்லியில் உள்ள தலைமையதிகாரி வரை போய் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடக்கூட யோசிக்கப்பட்டது. நாங்களும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பேசத் தொடங்கினோம். வெளியில் கூட்டமாய் ஊழியர்கள். காலையில் ஆறுமணி ஷிப்டுக்கு கூலித் தொழிலாளர்கள் வீடு போகாமல், மதியம் 2 மணிக்கு வந்தவர்களுடன் போராட்டத்தில் இருக்க, பின்பு பத்துமணி ஷிப்டுக்கு வந்தவர்களும் சேர்ந்து கொள்ள, வெளியில் நிலைமை தீவிரமானது.

ஒரு வழியாக பிரச்சனைகளை இரண்டு மணிநேரம் பேசி முடிவுகண்டு இரவு 11 மணிக்கு வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. பின் உற்பத்தியும், கொஞ்சம் டெஸ்பாட்சும் நடந்ததை என்னால் மறக்கவே முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *