நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்

திரு. ராஜேஷ்குமார்

திரு. ராஜேஷ்குமார் இருபத்தைந்து ஆண்டுகளாய் எழுத்துலகில் நின்று நிலைத்திருப்பவர். ஆயிரத்துக்கும் அதிகமான நாவல்களைப் படைத்திருக்கும் சாதனையாளர். இலட்சக்கணக்கான வாசகர்களின் அன்பையும் அபிமானத்தையும் தன் இதய வங்கியில், நிரந்தர வைப்புத் திட்டத்தில் நிறைத்திருப்பவர். இன்று மலர்கிரீடம் சூட்டியுள்ள இந்த ‘மெகா’ எழுத்தாளர் பயணம் செய்த பாதை மலர்ப்படுக்கையா? முள்படுக்கையா? மேகங்கள் முற்றுகையிட்டிருந்த ஒரு மாலைப்பொழுதில், அவரைச் சந்தித்தோம்.

அநேகமாக அந்த ஒரு மணி நேரம் மட்டும் தான் அவரது பேனா ஓய்வெடுத்திருக்கும். இதோ…… அந்தச் சந்திப்பில் சிதறிய முத்துக்கள்.

ஒரு எழுத்தாளராக மலர்வதற்கு உங்களுக்கு உந்து சக்தியாய் இருந்தவை என்னென்ன?

வாழ்க்கையில் நான் வரிசையாக சந்தித்த தோல்விகள்தான் என் எழுத்துலக வெற்றிக்குக் காரணம். என் வாழ்க்கையின் இலட்சியம் வேளாண்மைத்துறையில் பட்டம் பெற்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான். நான் பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. வகுப்புகள் சரிவர நடைபெறாததால் ஐந்தே மதிப்பெண்கள் போதாமல் பி.எஸ்.சி வேளாண்மை படிக்கிற வாய்ப்பை இழந்தேன்.

இயற்கை மீது இருக்கிற காதலால் பி.எஸ்.சி. பாட்டனியில் சேர்ந்தேன். அதிலும் மூன்றாவது வகுப்பில்தான் தேறினான். பேராசிரியர் ஆகிற கனவில் மண் விழுந்தது. குறைந்தது பள்ளி ஆசிரியராக ஆகலாம் என்று பி.எட் படித்தேன். பண்ருட்டி அருகில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் ஆசிரியர் வேலைக்கு அனுப்பினார்கள். போய்ப்பார்த்தால், கூரை பிய்ந்த ஒரு குடிசை தான் பள்ளிக்கூடம். சுற்றிலும் பன்றிகள், நாய்களின் ஊர்வலம். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் வந்தார். அவர் கேட்ட முதல் கேள்வியே “இங்கே ஏன் வந்தாய் ” என்பதுதான்.

அந்த கிராமத்தில் யானைக்கால் வியாதி அதிகமாம். “பேசாமல் ஊரைப்பார்த்துப்போ” என்றார். அன்றோடு ஆசிரியர் வேலை என்கிற கனவும் கலைந்தது. என் ஆசைக்காக கோவையிலுள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் மூன்று மாதங்கள் வேலை பார்த்தேன். எங்கள் குடும்பம், பரம்பரையாக புடவை உருவாக்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது.

எனவே என் தந்தை வணிகத்தில் ஈடுபடச் சொன்னார். அப்போது நான் வடமாநிலங்களுக்கு மேற்கொண்ட எண்ணற்ற பயணங்களில் மனிதர்களைப் படிக்கமுடிந்தது. அவ்வப்போது சில இதழ்களில் எனது சிறுகதைகளும் வெளிவந்து கொண்டிருந்தன.

இடையில், வணிகத்திலும் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டு 2 – 3 லட்சம் வரை இழப்பு நேர்ந்தது. அந்நாளில் அது ஒரு பெரிய தொகை. இதற்கிடையில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள். வேறு எந்தத் தொழிலும் செய்ய இயலாது என்கிற நிலையில் ஒரு முழுநேர எழுத்தாளனாக ஆனேன். இந்த ஒரு துறையில் எப்படியாவது முன்னேறிவிடுவது என்கிற முனைப்பில் என் உழைப்பையும் கவனத்தையும் இந்தத் துறையில் முழுமையாக செலுத்தி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.

ஒரு பேராசிரியர் ஆக ஆசைப்பட்டு நாவலாசிரியர் ஆகியிருக்கிறீர்கள். இந்தத் துறையில் வெற்றி பெற்று விட்டதால் பரவாயில்லை. ஆனால் அடிப்படையில் கொண்ட குறிக்கோளை எட்ட முடியவில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வேளாண்மை பல்கலைக் கழகத்தைக் கடந்துபோகும் போதெல்லாம் ஒரு ஏக்கப் பெருமூச்சு எனக்குள் எழும். எனக்கு ஆன்மீகத்தில் நிறைய நம்பிக்கை உண்டு. ஒரு நாவலாசிரியராகத் திகழ்வது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் பணி என்று கருதி ஆறுதல் அடைவேன்.

எழுத்துத் துறையில் நீங்கள் எதிர்பார்த்தது போல எளிதில் முன்னேற முடிந்ததா?

இல்லை. ஆரம்ப காலத்தில் சொல்ல முடியாத அவமானங் களுக்கு ஆளாகியிருக்கிறேன். உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் நான் எழுத்தாளன் ஆகமுடியாது என்ற அவநம்பிக்கையை ஏற்படத்த முயன்றார்கள். சில பத்திரிகை அலுவலகங்களுக்குப் போனால் வாசலோடு தடுத்து அனுப்பிவிடுவார்கள். என் நூற்றுக் கணக்கான கதைகள் திரும்பி வந்திருக்கின்றன. இதற்கெல்லாம் நான் மனம் தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். ஒரு கால கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழ் அலுவலகத்தில் என் 160 கதைகள் பரிசீலனைக்காக இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எப்படியும் ஒரு எழுத்தாளனாக வெற்றி பெறுவது என்கிற வெறியில் நான் நம்பிக்கையோடு உழைத்ததுதான் இந்த வெற்றிகளுக்குக் காரணம்.

சமூகக்கதைகள் நிறைய எழுதியிருந்தாலும் , ‘க்ரைம் நாவல்’ எழுத்தாளராகத்தான் நீங்கள் பரவலாக அறியப்படுகிறீர்கள். உங்கள் க்ரைம் கதைகள் வாசகர்கள் மனதில் நல்ல உணர்வுகளையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?

பொதுவாக ‘க்ரைம்’ நாவல் என்றால், ‘கொலை – கொள்ளை – கற்பழிப்பு’ சம்பந்தமான விஷயங்கள் என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலபேர் வன்முறை, பாலியல் சார்ந்து எழுதுவதால் எல்லா ‘க்ரைம்’ நாவல்களும் அப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை அடுத்தவர்கள் மனம் புண்படும் படியாக நடந்துகொள்வதுதான் மிகப்பெரிய ‘க்ரைம்’. மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் விஷயங்களைக் கண்டிப்பதற்கான ஒரு கருவியாகத்தான் என் நாவல்கள் உள்ளன.

மிகவும் ஆபத்தான சூழல்களில் ஒரு மனிதர், குறிப்பாகச் சொல்வதென்றால் ஒரு பெண் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து எப்படி விடுபடுவது என்கிற விஷயத்தை என் நாவல்கள் விளக்குகின்றன. சமூகத்தின் சீர்கேடுகளைத் தாக்குகிற விதமாகத்தான் என் நாவல்களை எழுதுகிறேன். ஒரு பெண், ஆபாச சுவரொட்டிகளை எதிர்த்து நடத்துகிற சமூகப் பொறுப்பு மிக்க போராட்டத்தின் கதைதான் ‘சூர்யதாகம்’ என்கிற நாவல்.

இப்போது எரியும் பிரச்சனையாக இருப்பது ‘ஈவ்டீசிங்’. அதுபற்றிய என் நாவலின் கதாநாயகன் ஒரு மருத்துவர். ஈவ்டீசிங் செய்பவர்களை அழைத்துப்போய் அவர்கள் ஆண்மையை அழித்துவிடுகிறான். இதைப் படிக்கிற வாசகர்கள் “சபாஷ்! சரியான தண்டனை” என்று பாராட்டுகிறார்கள். எனவே க்ரைம் நாவல்கள் என்கிற பெயரில் நல்ல சமூகச் சிந்தனைகளை நான் விதைத்து வருகிறேன் என்பது என் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான குணம் என்று எதனைக் கருதுகிறீர்கள்?

இன்று போதிய அளவில் நாட்டுப்பற்று இல்லை என்பது என்னுடைய கணிப்பு. காதலர் தினத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை இன்றைய இளைஞர்கள் சுதந்திர தினத்துக்குக் கொடுப்பதில்லை. நாட்டுப் பற்று எவ்வளவு முக்கியம் என்பது பற்றி, ‘இந்தியனாக இரு’, ‘தாய் மண்ணே வணக்கம்’ போன்ற எனது கதைகளில் எழுதியிருக்கிறேன். நாட்டுப் பற்று அதிகரித்தாலே பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிடும் என்பது என் நம்பிக்கை.

இன்று குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. அதில் நிறைய இளைஞர்கள் ஈடுபடுவதையும் பார்க்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைக்கு என்ன காரணம்?

பெரும்பாலும் குற்றங்கள் என்பவை ஒருவிநாடி நேர ஆத்திரத்தில் நடப்பதுதான். கொலையோ, தாக்குதலோ, திட்டமிட்டு நடைபெறுவது மிகவும் குறைவு. அவையெல்லாம், சாலை விபத்து போல நடந்துவிடுகிற அசம்பாவிதங்கள்தான். அதனால் இளைஞர்கள் மத்தியில் வன்முறை பெருகியிருப்பதாக நான் கருதவில்லை.

இன்று இளைய தலைமுறை மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும், தரமான கல்வியைப் பயிலவேண்டும் என்பது போன்ற ஆக்கபூர்வமான கனவுகள் இருக்கின்றன.

இன்று மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், செய்தித் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டதாலும் அங்கங்கே நடைபெறும் வன்முறைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே பெரும்பாலான இளைஞர்கள் தங்களையும் தங்கள் பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

உங்கள் கதைகளைப் படித்து, நம்பிக்கை மேம்பட்ட வாசகர்கள் உங்களை வந்து சந்தித்ததுண்டா?

நிறையப்பேர் வந்து பார்ப்பார்கள். நம்முடைய எழுத்துக்கள் சிலரின் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துகிறதே என்று நான் சந்தோஷம் கொள்ளும்படியாக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒருமுறை ஒரு நாவலில் ஊதாரியாக குடும்பத்துக்கு உதவாமல் இருக்கிற ஒரு இளைஞன் படிப்படியாக முன்னேறுவதை கதையாக எழுதியிருந்தேன். அந்த இளைஞன் ஒரு சைக்கிள் கடையில் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறான். பிறகு பழைய டயர்களை பெற்று வல்கனைசிங் கடை தொடங்குகிறான். சீட்டுக் கம்பெனி தொடங்குகிறான். இப்படியே கதை போகும். இதைப் படித்துவிட்டு, அது போலவே ஒவ்வொரு படிநிலையாகத் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்ட ஒரு வாசகர் வெள்ளகோவிலில் இருக்கிறார். அதுபோல் போதைப் பழக்கத்தின் கொடுமைபற்றி நான் எழுதியிருந்த நாவலைப் படித்துவிட்டு, அந்தப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த நிறையப் பேர் தாங்கள் இனி போதை மருந்துகளைத் தொடப்போவதில்லை என்று சத்தியம் செய்து இரத்தத்தால் கடிதம் எழுதியிருந்தனர். இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம்.

உங்களுக்கு ‘வெகுஜன எழுத்தாளர்’ என்று ஒரு முத்திரை குத்தப்பட்டிருக்கிறதே?

அப்படிச் சிலபேர் சொல்லலாம். ஆனால், என்னால் நாவலும் எழுத முடியும், ‘கணையாழி’ பத்திரிகையின் தரத்திற்கும் எழுத முடியும். என்னை ‘இலக்கியவாதி இல்லை’ என்று சொல்லுவதில் சில பேருக்குச் சுகம். நல்லதைச் சொல்லுவதுதான் இலக்கியம். அப்படிப் பார்த்தால் நல்ல விஷயங்களைச் சொல்லிவருகிறேன் என்கிற நிறைவு எனக்கு உண்டு. நான் இலக்கியவாதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்துக்கள் நிச்சயமாக இலக்கியம்தான்.

நம்பிக்கையோடு முன்னேறுவதற்கு, உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் வழங்குகிற செய்தி என்ன?

எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் முன்னேற ஒரே வழி, உழைப்புதான். அடுத்து யார் நம்மைத் தாழ்த்திப் பேசினாலும் அதற்கெல்லாம் மனம் தளர்ந்துவிடாமல் நம் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

நான் கல்லூரிப் பருவத்தில் உட்கார்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறபோது, ஒரு நண்பர் என்னைப் பரிகாசிப்பார். “இதெல்லாம் வேண்டாத வேலை” என்று கேலிசெய்து கொண்டிருந்தவர், நான் புகழ்பெற்ற பிறகு சென்னையில் ஒரு முறை என்னை சந்தித்து “நீ இப்படி நல்லா வருவேன்னு அப்பவே எனக்குத் தெரியும்” என்றதும் எனக்குச் சிரிப்புதான் வந்தது.

மூன்றாவதாக, நம் பணியில் நாம் சிறந்து விளங்கினால் நம்மைத்தேடி வருவார்கள். எங்கோ ஒரு சந்துக்குள் ஒரு டீக்கடை இருந்தால்கூட, அங்கு டீ நன்றாக இருக்கும் என்று தெரிந்தால் தேடிப்பிடித்தாவது மக்கள் வருவார்கள். இது எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். அதைவிட முக்கியம், ஒரு துறையில் நாம் பேரெடுத்த பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வளரும் வரையில் நம்பிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறோம். வளர்ந்த பிறகே மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் சேர்த்துக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்தக் குணங்களைப் பின்பற்றினால் யாருக்கும், எப்போதும் வெற்றி நிச்சயம் வரும்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *