மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

திரு. ஏ.கே. ஜெயக்குமார்
நிறுவனர் – கண்ணன் ஜூபிலி காபி

திரு. ஏ.கே. ஜெயக்குமார் அவர்கள் புகழ்பெற்ற கண்ணன் ஜூபிலி நிறுவனத்தின் நிறுவனர். மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பல தலைமுறை வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ள நிறுவனம். கோவையில் தொடங்கி, பல ஊர்களிலும் கோவையிலும் பல கிளைகளை பரப்பி வளர்ந்திருக்கும் இந்நிறுவனத்தின் நிறுவனரோடு நமது சந்திப்பு.

உங்கள் பூர்வீகம் பற்றி?

எங்களுக்கு சொந்த ஊர் கள்ளிக்கோட்டை அருகில் உள்ள அனந்தபுரம். என் தந்தையார் பெயர் ஏ.கே. கிருஷ்ணய்யர். காலரா நோய்க்கு பயந்து கோவைக்கு வந்த குடும்பம் எங்களுடையது. மிகவும் ஏழ்மையில் இருந்தவர்கள் நாங்கள். ஆரம்பகாலத்தில் கோனியம்மன் கோவில் பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு வாழ்வைக் கழித்தவர் எங்கள் தந்தை. பிறகு ரங்கைய கவுண்டர் வீதியில் சின்ன கேண்டீன் நடத்தினோம். கடும் உழைப்பிற்குப் பிறகு அதே இடம் எங்களுக்கு கிடைத்தது. ஹோட்டல் சீதாராம் உருவானது. 1964ல் என் தந்தை மறைந்தார். அப்போது நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. படித்தபிறகு எங்கள் ஹோட்டலிலேயே அம்மாவிற்கு உதவியாய் வேலைக்குச் சேர்ந்தேன். எங்கள் அம்மா அதற்கு சம்பளம் கொடுத்தார்கள். பிறகு 1972ல் கண்ணன் ஜூபிலி காபி நிறுவனத்தை தொடங்கினேன்.

காபி நிறுவனம் தொடங்குகிற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

அப்போதெல்லாம் காபி தொழில், காபி போர்டின் கட்டுப் பாட்டில் இருந்தது. பர்மிட் முறை நடைமுறையில் இருந்த காலம் அது. காபி போர்டில் முக்கிய மனிதராக இருந்த திரு.ஏ.என்.நாயக் எங்கள் குடும்ப நண்பர். அவர் உரிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பரிந்துரைகள் செய்து இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினார். அதற்கு முன் சென்னை ஐயங்கார் காபி உரிமையாளரிடம் கடனுக்கு 25 கிலோ ரோஸ்டர் வாங்கி இருந்தேன். காபிக் கொட்டையை வீட்டில் வைத்து அரைத்து பொட்டலம் கட்டி சைக்கிளில் கொண்டுபோய் மளிகைக் கடைகளில் போட்டுவிட்டு வருவேன்.

உங்கள் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்து?

தொழிலை விரிவுபடுத்த மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. ஆரம்ப நாட்களில் என்னை மிகவும் ஊக்குவித்தவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் இருந்த திரு.மகாதேவ ஐயர். அப்போதெல்லாம் பர்மிட் வாங்க பேங்க் கியாரண்டி ரூபாய் 10,000 தேவை. நான் தொழிலுக்கும் சேர்த்து ரூபாய் 25,000 கடன் கேட்டேன். உன்னிடம் என்ன சொத்து இருக்கிறது என்று கேட்டார். நான் இருக்கிறேன் என் நாக்கு இருக்கிறது என்று பதில் சென்னேன். கடன் கொடுத்தார். இன்றுவரை அதே வங்கியில் தான் எங்கள் கணக்கும் இருக்கிறது.

1975ல் கண்ணன் ஜூபிலி காபி கம்பெனியை பதிவு செய்தேன். பிறகு, காந்திபார்க்கில் கிளை தொடங்கினேன். 80களில் விரிவாக்கம் வளர்ந்தது. தொடக்கம் முதலே தரத்திற்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து வந்தேன்.

காபி தொழிலில் நவீன அம்சங்களை தெரிந்து கொள்வதற்காக 1986ல் ஜெர்மனியில் உள்ள ஸ்டார் பக்ஸ் காபி நிறுவனத்திற்கு சென்றேன். ஜெர்மனியில் இருந்து புதிய இயந்திரங்களை காபி உற்பத்திக்காக தருவித்தேன். பிறகு தரத்தின் மேம்பாட்டிற்காக அதிநவீன பரிசோதனைக் கூடத்தை புதிதாக நாங்கள் கட்டிய காபித் தொழிற்சாலையில் நிறுவினேன். இப்போது இன்றைய சூழலுக்கேற்ப பலூன் பேக்கிங் வரை பல புதுமைகளை செய்துள்ளோம்.

உங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் உளவியல் சார்ந்த அம்சங்களையும் எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?

காபி போடுவது போலவே காபித்தூள் உற்பத்தி செய்வதும் ஒரு கலை. நமது நாட்டில் சிக்கரி கலந்த காபி, சிக்கரி கலக்காத காபி என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் உண்டு. சைவ உணவுப் பழக்கமுள்ளவர்களின் நாவுக்கு காபியில் கசப்பு இருக்க வேண்டும். அவர்கள் சிக்கரி கலக்காத காபியையே விரும்புவார்கள். காராசாரமாக சாப்பிடுகிற பழக்கமுள்ளவர்கள் நாவில் சுவை மொட்டுகள் விரிந்திருக்கும். அப்போது காபி சாப்பிட்டால் அதன் உண்மையான சுவையை மனது உள்வாங்கி ரசிக்கும். அதனால் அசைவப் பழக்கம் உள்ளவர்களுக்கு சிக்கரி கலந்த காபி பிடிக்கும்.

பொதுவாகவே காபி பருகுவது உடல் நலத்திற்குத் தீங்கு என்று சொல்லப்படுகிறதே? இந்தத் துறையில் இருப்பவர் என்பதைத் தாண்டி தார்மீக அடிப்படையில் இதற்கு பதில் சொல்லுங்கள்?

இதுபற்றி விதம்விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒவ்வொரு ஆய்வு முடிவும் ஒவ்வொருவிதமாக இருப்பதுதான் இதில் சுவாரஸ்யம். அமெரிக்காவில் ஓர் ஆய்வு காபி உடலுக்கு நல்லது என்றும் சொல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நிறைய பால் சேர்த்து டிக்காஷன் ஊற்றி பருகுகிற பழக்கம் உள்ளது. அப்படிக் குடிக்கிற காபியில் தீமை இல்லை. எனவே, பிளாக் காபியை அதிக அளவில் அருந்துகிற அயல் நாட்டினருக்குத்தான் இந்தக் கவலை வேண்டும். இந்தியக் காபியில் தீமை இல்லை என்பதே என் கருத்து.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்கையில் எவ்வாறு உணர்கிறீர்கள்?

இது தனிமனித முயற்சியில் தொடங்கப்பட்ட நிறுவனம். கடுமையான உழைப்பு, தீவிரமான திட்டமிடுதல் ஆகியவற்றின் விளைவாகக் கண்டிருக்கும் இந்த வெற்றியை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் இதைச் செய்தது நாம்தானா என்று வியப்பாகவும் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு உழைப்பைத் தரமுடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு.

எதிர்காலத்தில் தொழில்துறை எப்படி இருக்கும்?

குடும்பத் தொழில்களில் கணவனும் மனைவியுமாக இணைந்து நிர்வகிப்பதுதான் வருங்காலத்தின் வாழ்க்கை முறையாக இருக்கும். நம்பிக்கையான வேலை ஆட்கள் அமைவதும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அதேபோல நமக்கு அடுத்த தலைமுறை தொழிலில் ஈடுபட வரும்போது வயது காரணமாகவும் அவர்கள் தலைமுறைக்கு இருக்கிற தகவல்கள் காரணமாகவும் மிகுந்த வேகத்தோடு ஈடுபடுவார்கள். அவர்களுக்கு நாம் ஊக்கம் தரவேண்டும். தேவைப்பட்ட இடங்களில் நாம் வேகத்தடையாக இருக்கலாமே தவிர அவர்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது.

வரும் காலங்களில் காபி பப் என்கிற நவீன காபி ஷாப்புகள் வெகுவேகமாக வளரும். சாக்லேட், ஸ்ட்ராபெரி போன்ற வித்தியாசமான சுவைகளில் விருப்பத்துடன் காபி பருகுவார்கள். தலைமுறை மாற்றங்களுக்கும் ரசனை மாற்றங்களுக்கும் ஈடு கொடுத்து வந்தால் காபியில் மட்டுமல்ல சேவைத் துறைகள் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.

எத்தனை
மாறினாலும்
சத்தியம்
மாறாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *