– கவிப்பேரரசு வைரமுத்து
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 98வது பிறந்தநாள் விழா ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது. அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலரும் பண்ணாரியம்மன் குழு நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
உலக சமாதானம் என்கிற கோட்பாட்டினை ஓங்கி ஒலித்து உலக சமாதான விருதினையும் கவிப்பேரரசு வைரமுத்து பெறவேண்டும் என்றார் அவர்.
விழாவுக்குத் தலைமையேற்ற பத்மபூஷண் அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் வழிபாடு என்ற தொன்மை எப்படி ஏற்பட்டது, அதில் என்னென்ன பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டன என்பன போன்ற அரிய தகவல்களைப் பட்டியலிட்டு, யோகக்கலையில் எளிமைப் படுத்தப்பட்ட வடிவினை மகரிஷி வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
விழாவில், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் சிறப்பு அஞ்சல் உறையினை மேற்கு மண்டல அஞ்சல் துறைத்தலைவர் ராமானுஜன் வெளியிட, அறிவுத்திருக்கோவில் அறங்காவலர் திரு. சின்னச்சாமி பெற்றுக்கொண்டார்.
திரு. ராமானுஜன் தனது வாழ்த்துரையில், நாஸாவில் பணிபுரிகிற விண்வெளி வீரர்கள் பிராணாயாமப் பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள். எனவேதான், விண்வெளிப்பயணம் மேற்கொள்கிற போது அவர்கள் உடல்நலனோடு ஆய்வினை மேற்கொள்ள முடிகிறது என்று தெரிவித்தார்.
நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா பேசும்போது, “விண்வெளி ஆய்வுக்கூடம் ஒன்றின் கண்காட்சியில் ஓஷோ ஒருமுறை கலந்துகொண்டார். கோள்களிலிருந்து திரட்டப்பட்ட பொருட்களும் பிரபஞ்ச வெளியின் புகைப்படங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியின் முடிவில் ஒரு வாசகம் வைக்கப்பட்டிருந்தது. “பிரபஞ்சம் முழுவதும் தேடிப் பார்த்துவிட்டோம். கடவுள் எங்கேயும் இல்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் ஓஷோ எழுதும்போது, “உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சத்தில் தேடிப்பாருங்கள். அங்கே கடவுள் கண்டிப்பாக இருப்பார்” என்று எழுதினார்.
ஒரு கவிஞர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு வேதாத்திரி மகரிஷி ஓர் இலக்கணம் வடித்திருக்கிறார். உலக மக்கள் மீது உண்மையான பற்றுள்ள கவிஞனின் கவிதை வழியே பிரபஞ்சம் தன் ரகசியங்களை வெளிப்படுத்தும் என்கிறார்.
“ஏட்டினிலே கை – எண்ணம் அகண்டாகாரம்
இயற்கை ரகசியம் மலர்ந்து எழுத்தாய் மாறும்” என்று மகரிஷி தீட்டிய இலக்கண வரிகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இலக்கியமாகத் திகழ்கிறார். ஆன்மீகம் என்பது மதங்களுக்கும் அப்பாற்பட்ட மகத்தான விஞ்ஞானம். அதன் சாரம், கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகளில் வெளிப்படுகின்றன.
ஒரு ஞானி குழந்தைபோல் இருப்பார். “சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே” என்று பட்டினத்தடிகள் எழுதுகிறார். இந்த தொனி, கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகளில் மிக இயல்பாக வடிவம் கொள்கிறது.
“முன்னோக்கி எனைநடத்தி முதுமை செய்யும் காலங்காள்!
பின்னோக்கி எனைநடத்திப் பிள்ளையாக்கக் கூடாதா!
கட்டில்கண்டு கிடந்தாலும், காதோரம் நரைத்தாலும்,
தொட்டில்கண்ட பிள்ளைமனம் தொடர்ந்து வரக்கூடாதா” என்று எழுதுகிறார்.
ஞானிகள் உடல்கடந்த நிலையில் சூட்சும சரீரத்தில் உலவுவார்கள் என்றும், விரும்பும்போது உடல்வடிவம் எடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டென்றும் ஆன்மீக மரபுகள் அறிவிக்கின்றன. இதனைக் கவிஞர் தனது கவிதையில்,
“ஆசையற்ற மனம் வாங்கி, அழிவற்ற உடல்வாங்கி
ஓசையற்ற உலகத்தில் ஒதுங்கி விடக்கூடாதா” என்கிறார்.
பலரும் ஞானோதயம் அடைந்ததுமே உடலைவிட்டு நீங்கிவிடுவார்கள் என்று சொல்லப் படுகிறது. இந்த உண்மைகூட கவிஞரின் வரிகளில் வெளிப்படுகிறது.
“சாவுக்குப் பக்கத்தில் சம்பவிக்கும் மெய்ஞானம்
வாழ்வுக்குப் பக்கத்தில் வந்தருளக் கூடாதா” என்று எழுதுகிறார்” என்று குறிப்பிட்டார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, “நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். வாழ்க்கையில் விடை தெரியாத கேள்விகள் வருகிற போதெல்லாம் அதற்கு மக்கள் கடவுள் என்கிற விடையைப் பொருத்திக்கொண்டு ஆறுதலடைந்து விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை மனிதனின் நல்ல எண்ணங்கள் கடவுள். தீய எண்ணங்கள் பேய். வேதாத்திரி மகரிஷி போரற்ற உலகத்தைக் கனவு கண்டார். மதம் பற்றிய சிந்தனைகளும் பணம் பற்றிய சிந்தனைகளும் மேலோங்குகிற போதுதான் தீவிரவாதம் உருவாகிறது. மனிதனுக்கு வறுமை பள்ளத்துக்குப் போனாலும் நெறி தவறுகிறது. செல்வம் உச்சத்துக்குப் போனாலும் நெறி தவறுகிறது.
நீர்வளம் பேணுவது பற்றி வேதாத்திரி மகரிஷி எழுதியிருப்பது என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான சிந்தனை. உலகிலுள்ள தண்ணீரில் விவசாயத்திற்கும் தொழிலகங்களுக்கும்தான் அதிக அளவு தண்ணீர் பயன்படுகிறது. மனிதன் பருகுகிற தண்ணீரின் அளவு குறைவுதான். நீர்வளத்தை பொதுச் சொத்தாக்க வேண்டும் என்ற மகரிஷியின் சிந்தனை மிக உயர்ந்த சிந்தனை.
உலகிலுள்ள தண்ணீரில் 97 சதவிகிதம், கடல்நீர், ஒரு சதவிகிதம் சிகரங்களில் பனியாக உள்ளது. ஒரு சதவிகிதம், எட்டமுடியாத ஆழங்களில் இருக்கிறது. ஒரு சதவிகிதம் தண்ணீரைத்தான் உலகம் பயன்படுத்துகிறது.
இனியொருமுறை உலகப்போர் மூளுமென்றால் அது பெட்ரோலுக்காக மூளாது. பொருளாதாரத்திற்காக நிகழாது. தண்ணீருக்கான யுத்தமாகத்தான் அது இருக்கும். அது தவிர்க்கப்பட வேண்டுமென்றால் தண்ணீர் பொதுவாக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் மனிதனின் உருவம் தொடங்கி எல்லாமே மாறப்போகிறது. ஆதிகாலத்தில் மனிதன் ஏழடி உயரமிருந்தான். வேட்டையாட, மரங்களில் தாவி அவனுக்குத் தேவையேற்பட்டபோது உடல் வளர்ந்தது. அத்தகைய தேவைகள் சுருங்கச் சுருங்க மனிதனின் உருவமும் சுருங்கிவிட்டது. வருங்காலங்களில் தலை பெரிதாகவும் உடல் சிறிதாகவும் மனித உருவம் உருமாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நேனோ தொழில் நுட்பம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஒரு கையில் ஒரு “சிப்” பொருத்தப்படும். அதில் அவன் போகிற இடங்கள், பேசுகிற பேச்சு, செய்கிற வேலைகள் எல்லாமே பதிவாகும். இன்னொரு கையில், இன்னொரு “சிப்” பொருத்தப்படும். அதில் நூறாண்டு காலம் வரப்போகிற நோய்களுக்கான மருந்துகள் இருக்கும், தேவையேற்படுகிறபோது அந்த மருந்து தானாக சுரந்துகொள்ளும்.
விண்வெளியில் போகிறவர்கள் மாத்திரை வடிவில் உணவு சாப்பிடுவதுபோல் உலகில் உள்ளவர்களும் சாப்பிடத் தொடங்குவார்கள். இந்த மாற்றங்களைக் காண வேண்டுமென்றால் பூமியைக் காப்பாற்ற வேண்டும். சொத்தைக் காப்பாற்றி வைப்பவர்கள் அடுத்த தலை முறைக்காக பூமியையும் காப்பாற்றி வைக்க வேண்டும். அன்பும் அமைதியும் நிரம்பிய உலகை, போரற்ற உலகை உருவாக்க வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள் பெரிதும் துணைபுரியும்” என்றார்.
கவிஞரை இந்நிகழ்ச்சிக்கு பலமுறை முயன்று அழைத்த ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் திரு. ஓ.நாகராஜனின் ஏற்பாடுகளைக் கவிஞர் பாராட்டினார்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் திரு. எஸ்.கே.எம். மயிலானந்தம் நன்றி நவின்றார். ஆழியாறு அறிவுத் திருக்கோயிலின் மண்டபங்கள், மகரிஷியின் பொருட்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ள காட்சியகம் ஆகியவற்றை கவிப்பேரரசு வைரமுத்து பார்வையிட்டார்.
selvakumar
super super
kesavan
very nice
kesavan
very nice speech