– இயகோகா சுப்பிரமணியன்
இரண்டு மாதங்களுக்கு முன்னால், சைனாவைச் சேர்ந்த ஒருவர் என்னைக் காண்பதற்காக அலுவலகம் வந்திருந்தார். பஞ்சாலை மற்றும் பல தொழில்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் “சைனா” நிறுவனத்தின் தென்னிந்தியப் பிரதிநிதியாகக் கோவையிலேயே தங்கிப் பணிபுரிந்து வருகின்றார்.
அதே சமயம் சைனாவில் இருக்கும் சில பஞ்சாலைகளுக்கான உதிரிப்பாகங்களை இங்கிருந்து வாங்கி ஏற்றுமதி செய்து வருகின்றார். எங்களது “டேப்”புகளையும் தன்மூலம் சைனாவுக்கு ஏற்றுமதி செய்யத் தரமுடியுமா எனக்கேட்டார். எங்களது கூட்டு நிறுவனமான சுவிட்ஜர்லாந்து “ஹெபாஸிட்” நிறுவனத்துக்கு ஹாங்காங், ‘ôங்காய் இரண்டு ஊர்களிலும் கிளை நிறுவனங்கள் இருப்பதையும், சைனா தேசத்தில் விற்பனை முகவர்கள் ஏற்கெனவே உள்ளதையும் கூறி, அவருக்கு ஏதும் உதவி செய்ய முடியாமல் உள்ள நிலைமையை எடுத்துரைத்தேன்.
அப்போது அவர், நீங்கள் எனக்கு நேரடியாகத் தரவேண்டாம், உங்கள் உள்நாட்டு முகவர்கள் யார் மூலமாகவாவது தரமுடியுமா? எனக் கேட்டார். எவ்வளவுதான் வியாபாரம், லாபம் கிடைக்குமென்றாலும் அப்படிப்பட்ட வழிகளில் நாங்கள் வியாபாரம் செய்வதில்லை; செய்யவும் கூடாது என்ற எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறி அன்போடு அவரை வழியனுப்பி வைத்தேன்.
ஒரு மாநிலத்தில் தொழிற்சாலையை வைத்துக்கொண்டு, நமது பொருள்களைப் பல மாநிலங்களில் விற்கும்போதும், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும் – சில பொருள்களைத் தவிர – முகவர்கள் இல்லாமலோ, தனிநபர்கள் சிலரது தொடர்பு இல்லாமலோ, வியாபாரம் செய்வது இயலாது, அப்படி நாம் செய்யும்போது எல்லாருடனும் ஒப்பந்தம் செய்து கையொப்பமிட்டுப் பதிவு செய்துகொள்கின்றோம். ஒரு நாட்டுக்கோ, அங்குள்ள மாநிலத்துக்கோ, அல்லது அதன் ஒரு பகுதிக்கோ ஒருவருக்கு ஒப்பந்தம் செய்து எழுதும்போது சில பொருட்களுக்கு வாடிக்கையாளர் பெயரைக் குறிப்பிட்டு செய்யலாம். அல்லது அந்தப் பகுதிக்கு எனச் செய்யலாம். அப்படி ஒப்பந்தம் செய்கின்றபோது, உதாரணமாக, ஒரு மாநிலத்தில் சுமார் நூறு வாடிக்கையாளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் நியமிக்கும் நமது முகவருக்கு அந்த நூறுபேரில் ஒரு பத்துப்பேர் நிரந்தர வாடிக்கையாளர்களாக இல்லாமல் இருக்கலாம். சில சமயம் அவர் மூலம் வாங்கலாம். வாங்காமலும் போகலாம். அந்தச் சமயத்தில் வேறொருவர் வந்து எனக்கு வேண்டியவர்கள் அந்த வாடிக்கையாளர்கள். எனவே, எனக்கும் ஏஜன்ஸி கொடுங்கள் . முகவராகச் செயல்பட்டு நான் உங்களுக்கு விற்பனை ஏற்பாடு செய்கிறேன் என்றால் என்ன செய்யலாம்?
ஒன்று, நமது முகவரிடம் சொல்லிவிட்டு, மற்றவருக்குக் கொடுக்கலாம். அல்லது, நமது முகவர் மூலமே அவரை அணுகச் சொல்லலாம். இரண்டுமே நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே, சிலபேர் முகவரிடம் தெரிவிக்காமல் ஒப்பந்தத்துக்குப் புறம்பாக மற்றவர் மூலம் விற்றுவிடுவதுண்டு. இது தவறு என்பதோடு, நிறுவனத்தின் பெயருக்கும், நிர்வகிக்கும் நபருக்கும் மிகப்பெரிய களங்கத்தை உண்டுபண்ணும். நிச்சயம் மனக்கசப்பை ஏற்படுத்துவதோடு, ஒருவித நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும். உறவுகள் கெட்டுவிடும். அதே சமயம், இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டுக்கு நாடு மாறுவதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஒரு முகவரை நாம் நியமிக்கும்போது, நமது பொருட்களை மட்டுமே மற்றவர் விற்கவேண்டும். போட்டியாளர்களின் பொருட்களையோ, அல்லது அது போன்ற மற்ற பொருட்களையோ விற்கக்கூடாது என ஒப்பந்தம் செய்யலாம். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, எந்த முகவரையும் நீங்கள் உங்கள் பொருட்களை மட்டும்தான் விற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அது சட்டப்படி செல்லாது. போட்டியாளர்களின் பொருட்களையும் அவர்கள் விற்பனை செய்யலாம். ஆனால், எந்த எந்த ஊரில், அல்லது எந்த எந்த வாடிக்கையாளருக்கு விற்கலாம் என வரையறை செய்யலாம். அங்கே ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டால் நஷ்ட ஈடு, சிறைத் தண்டனை எல்லாம் உண்டு. ஆனால், நமது நாட்டில் அப்படி மீறிச் செயல்பட்டாலும், பரஸ்பர உறவுகள் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். அல்லது ஏதாவது ஒரு வழியில் உடன்படிக்கை செய்து கொண்டுவிடலாம். அதையும் விட்டு வழக்குமன்றம் சென்றாலும் செல்லலாம்.
வழக்குமன்றம் சென்றவர்கள் இதுவரை மிகக்குறைவுதான். ஏனெனில் அதில் சம்பந்தப்பட்ட தொகை குறைவானதாகவே இருக்கும். எனவே சமாதானம் ஆகிவிடும். ஆனால், வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி நாம் செயல்பட்டால் அது நம்மை மிகவும் பாதித்துவிடும்.
திரைகடலோடித் திரவியம் தேட விரும்புகிறவர்கள், இப்படிப்பட்ட ஒப்பந்தங்களைச் செய்யும்போது, நல்ல ஆலோசகர்களைக் கலந்து ஒருமுறைக்கு இருமுறை எல்லா ‘ஷரத்துகளையும் படித்து, இருதரப்பினரின் நன்மையையும் மனதில் கொண்டு கையெழுத்திடவேண்டும். அப்படி ஒப்பந்தம் செய்த பின்னால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த ஒப்பந்தத்தை மீறாமல் செயல்படவேண்டும். மீறுவதால் சிலசமயம் தற்காலிக லாபம் கிடைக்கலாம். ஆனால், நாளடைவில் உண்மை தெரியும்போது, அது நிரந்தர இழப்பில் நம்மை ஆழ்த்திவிடும். ஏனெனில் நம்பிக்கையும், நாணயமும்தான் வெற்றியைத் கொடுக்குமே தவிர, குறுக்குவழிப்பாதைகள் கொடுக்கவே கொடுக்காது. அதேபோல மேலைநாடுகளில் காப்புரிமை அதாவது “பேடண்ட் ரைட்ஸ்” என்ற ஒன்று உண்டு.
ஒரு தனிமனிதரோ, நிறுவனமோ புதிய பொருள், புதிய தொழில்முறை புதிய மருந்து போன்றவற்றை கண்டுபிடித்தால் – அதுபற்றிய முழு விவரத்தையும் அளித்து, அந்தப் பொருளுக்கான முறைக்கான, மூலப் பொருட்களின் கலவை இரகசியங்களுக்கான “காப்புரிமை” பெறலாம்.
மிகவும் கஷ்டப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் பலகாலம் பின்னணியில் உழைத்ததற்கும் சேர்த்து இந்த உரிமை பெற்றவருக்கு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் போட்டியில்லாமல், அதைக்கொண்டு அவர் பொருள் ஈட்டலாம். குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் யார் வேண்டுமானாலும் அதைப்போல செய்தோ, முறைகளைப் பின்பற்றியோ செய்யலாம்.
இது மிகவும் சிறந்த முறை. விஞ்ஞானிகளையும், புது உத்திகளைக் கண்டுபிடிக்கும் நிறுவனங்களுக்கும் உற்சாகம் ஊட்டுவதோடு, அதன் பலன்களை அவர்களே அடையவும், மேன்மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் இந்தக் “காப்புரிமை” ஒரு வழிமுறையை அளிக்கின்றது. ஆனால், மேலைநாடுகளில் ஆவணங்கள் பலமுறை சரிபார்க்கப்பட்டு, அரசாங்கமும் பாரபட்சம், ஏமாற்றுதல், திருடுதல் இல்லாமல் ஒருமுறைக்கு நூறுமுறை பரிசீலித்துப் பின்னரே “காப்புரிமை”யை வழங்குகின்றது. “காப்புரிமை” பெற்ற பின்னர் அந்த உரிமை பல நாடுகளில் அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்பப் பதிவு செய்யப்படுகின்றது. இதை மீறுபவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனையும் அளிக்கப்படுகின்றது. மேலை நாட்டினர் இதைச் சரிவரக் கவனிப்பதோடு, சட்டத்துக்கு உட்பட்டுத் தங்கள் தொழிலைச் செய்கின்றனர்.
ஆனால், சில சமயங்களில் வேடிக்கைகளும் நடப்பதுண்டு. நமது ஊர் பாசுமதி அரிசி, வேம்பு, மஞ்சள் இவற்றுக்கெல்லாம் காப்புரிமை வாங்கி, இந்திய அரசாங்கம் விழித்துக் கொண்டபின்னர் “மூக்குடை”பட்டு “வாபஸ்” வாங்கிய “வடிவேல்” தனமாக “காமெடி”களும் அரங்கேறுவதுண்டு. அதே சமயம், “சைனா” போன்ற நாடுகளில் காப்புரிமை இல்லாததால் அதையும் “நகல்” செய்து, சில சமயம் “ஒரிஜினல்”களை விடவும் நன்றாகச் செய்து விற்பதும் உண்டு.
விளம்பர “லோகோ”க்கள், வாசகங்கள், டிசைன்கள் – போன்றவற்றிற்கும் கணிப்பொறி மென்பொருள்களுக்கும் கூடக் காப்புரிமை உண்டு. திருவள்ளுவர் இன்று உயிரோடிருந்தால், அவர் தன்னுடைய ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் காப்புரிமை பெற்றுவிடலாம். அவரது அனுமதி இல்லாமல் யாரும் அந்தக் “குறட்பாக்களை” உபயோகிக்கவோ, ஏன், மேற்கோள் காட்டவோகூட முடியாமல் போகலாம். அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் ஆகாமல் கவனமாக இருக்கின்றன. சமீபத்தில் “மியூனிச்” நகரத்தில் நடந்த “வர்த்தகக் கண்காட்சியில்” இடம்பெற்ற ஒரு இந்திய நிறுவனம், தனது தயாரிப்புகளில் பெருமையை, உயர்வை குறுந்தகடுகளில் பதிவு செய்து, தான் அமைத்துள்ள அரங்கில், தொலைக்காட்சிப் பெட்டி வழியாக வாடிக்கையாளருக்குக் காட்டிக் கவர ஏற்பாடு செய்தது.
இந்தத் தகவலைத் தெரிவித்தவுடனேயே, கண்காட்சி அமைப்பினர் அந்த நிறுவனத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள்.
“அந்தக் குறும்படம் காட்டும்போது, அதன் பின்னணியில் இசை ஒலிக்கின்றது. அந்த இசை யாருடையது? அதற்குக் காப்புரிமை பெற்றவரிடம் நீங்கள் அனுமதி வாங்கி இருக்கின்றீர்களா? அதற்குண்டான ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா?” என்பதே அது.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களில்கூட, மிகவும் சரியாக, சட்டத்தையும், ஆவணங்களையும், ஒப்பந்தங்களையும், உரிமைகளையும் மதித்து நடக்கின்றனர். இப்படிப்பட்ட விஷயங்களை நாம் அலட்சியம் செய்துவிட்டால், பின்னர் வருத்தப்படும்படியான நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. எனவே, நீங்கள் யாருடனாவது போடும் ஒப்பந்தமாகட்டும், காப்புரிமை போன்றவை ஆகட்டும், அனைத்திலும் கவனமாக இருக்கவேண்டும்.
அந்த ஒப்பந்த ‘ஷரத்துகள், பன்னாட்டுச் சட்டங்களின்படி சரியானவைதானா, நமது நாட்டு சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவைதானா, அவற்றை மீறும் பட்சத்தில் நமக்கு இழப்பு ஏற்படுமா, அதன் அளவு என்ன, நமக்குக் கிடைக்கக்கூடிய நஷ்ட ஈடுகள் என்னென்ன என்பதை நல்ல ஆடிட்டர்கள், வழக்கறிஞர்களைக் கலந்து செய்வது முக்கியம்.
நாளுக்கு நாள் மாறிவரும் சட்ட மாற்றங்கள், பன்னாட்டு உறவுகள், அரசியல் மாற்றங்கள், அவற்றால் ஏற்படும் பொருளாதாரக் குழப்பங்கள் போன்றவைகளினால் பாதிக்கப்படாமல் இருக்க, இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது.
இவை ஒருபுறம் இருந்தாலும், காலப்போக்கில் நமது உறவுகள் பலப்படும்போது இந்த ஒப்பந்தங்களும், உரிமைகளும் சம்பிரதாயம் ஆகிவிடுகின்றன. நாம் நம்பிக்கைக்கு உகந்தவர்கள், அவர்களும் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்று இருபாலருக்கும் இடையே தோன்றும் உணர்வுதான் எல்லாவற்றையும்விடத் தலையாயது.
(தொடரும்…)
Leave a Reply