சிறுவனாயிருந்த போதே லாரி விபத்தொன்றில் தன் இரண்டு கால்களையும் இழந்த நாக நரேஷ் என்ற இளைஞர், சென்னை ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த கையோடு பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் இவருக்கிருக்கும் நல்லெண்ணமும், ஆரோக்கியமான அணுகு முறையுமே, தொடர் வெற்றிகள் பலவற்றை அவருக்குப் பரிசாகத் தந்து வருகிறது. இணையத்தில் இவரைப்பற்றி ஷோபா வாரியர் எழுதியுள்ள கட்டுரை, இதைத்தான் சொல்கிறது.
விபத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் எதிரே நிகழ்ந்தபோதும்கூட அந்த மருத்துவமனை சிகிச்சை தர மறுத்துவிட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது வடிவம் குலைந்த சிறுகுடலை சீரமைக்க சிகிச்சை வழங்கப்பட்டது. காலுக்கும் கட்டுப் போடப்பட்டது.
கட்டுப்பிரித்தபோது காங்கரீன் உருவாகியிருப்பது தெரிந்தது. கால்களை அகற்றினார்கள். கிராமத்திற்குத் திரும்பிய நாக நரேஷை‘, காட்சிப் பொருள்போல் கருதி, ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது.
முதல் மலர்ச்சியாய் வந்தவர்கள் நண்பர்கள். நாக நரேஷைத் தோள்களில் தூக்கிக்கொண்டு போய் எல்லா விளையாட்டுக்களிலும் சேர்த்துக் கொண்டார்கள். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளி மாற்றம். இரண்டு வயது மூத்த சகோதரி, தம்பியைப் பார்த்துக் கொள்ள தம்பியின் வகுப்பிலேயே மீண்டும் சேர்ந்து படித்தார். அவரது அரவணைப்பும் பராமரிப்பும் ஊக்கம் கொடுத்தது. தம்பியைத் தமக்கை பள்ளிக்கு சுமந்து வருவதைப் பார்த்து தோழர்கள் எல்லாம் தோள் கொடுத்தனர். சக்கர வண்டி வந்த பிறகு அந்தச் சிரமமும் குறைந்தது.
பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவராகத் தேறினார் நாக நரேஷ். மேல்படிப்புக்கான கட்டணத்தை அடுத்து சேர்ந்த கல்வி நிலையம் ஏற்றுக்கொண்டது.
இப்படி அடுக்கடுக்காய்க் கிடைத்த ஆதரவில் அகமகிழ்ந்தார் நரேஷ். ரயில் பயணமொன்றில் சந்தித்த சுந்தர் என்பவர் கல்லூரி விடுதிச் செலவை ஏற்றார். செயற்கைக் கால் பொருத்திய மருத்துவமனையே படிப்புச் செலவை ஏற்றது. சென்னை ஐ.ஐ.டி., இவருக்காக லிப்ட் வசதி செய்து கொடுத்தது.
தன் வளர்ச்சியில் மற்றவர்கள் காட்டிய உற்சாகத்தைத் தானும் காட்டியதில் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்கிறார் நாக நரேஷ். அவரது பார்வையில் தெரியும் உலகம், நாமறிந்த உலகைவிட இன்னும் நல்ல உலகம்!!
Leave a Reply