காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன்

சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்

தேவையானவற்றை கற்றுக் கொள்ளுவதில் போகும் நேரம் என்பது “முதலீடு” போல. அது,One Time செலவு அல்ல. அது முக்கியமான Investment.

ராமநாதன் ஊழியர் துறையில் பணிபுரிபவர். அவரிடம் ஒரு புதிய பொறுப்பு ஒப்புவிக்கப்பட்டது. அவருடைய மேலதிகாரி சொன்னார், “இராமநாதன், அடுத்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களின் ஊதியத்தினையும் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்”.

“சரி”

ஏற்கனவே ஊதிய வேலையினை பார்த்து வந்தவர் அக்கவுண்ட்ஸ் துறையினைச் சேர்ந்த பிரசாத் என்பவர். நூற்றுக்கணக்கான பணியாளர்களுடைய ஊதிய வேலைகளை அவர் தவறின்றி செய்து வந்தது அவரது கம்ப்யூட்டரில் இருக்கும் “பேக்ஸ் புரோ” என்கிற ஒரு புரோகிராமினை வைத்துத் தான்.

இராமநாதன் பிரசாத்திடம் போனார். “எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுங்கள்”. இப்போது என்ன அவசரம்? மாதக் கடைசிக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கின்றனவே. அப்போது வாருங்கள் செய்து விடலாம்”. பத்து நாட்கள் ஆனதும் மீண்டும் பிரசாத்திடம் போனார் இராமனாதன்.

“செய்துவிடலாமா?” என்று கேட்டுவிட்டு, இராமநாதனையும் தன்னருகில் அமர வைத்துக் கொண்டார். “இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள்” என்று செய்ய வேண்டியதை ஒவ்வொன்றாக பிரசாத் சொல்ல, இராமநாதனும் செய்து முடித்தார். அந்த மாதம் ஊதியம் பிரச்சனை ஏதுமின்றி கொடுத்தாகி விட்டது. இராமனாதனுக்கு நல்ல பெயர்.

அடுத்த மாதம் மாதக் கடைசிவரை இராமனாதன் காத்திருந்தார். பிரசாத் அப்படித்தானே வரச் சொல்லியிருக்கிறார். பின்பு பிரசாத்திடம் சென்றார். கடந்த மாதம் போலவேதான் வேலை நடந்து முடிந்தது. அதாவது பிரசாத் சொல்லச் சொல்ல அதே போல இராமநாதன் செய்து முடித்தார். பட்டியல் தயாரானதும் வேலை முடிந்தது என்று இராமநாதன் கிளம்பி தன் இடத்திற்குப் போய்விட்டார்.

அதற்கும் அடுத்த மாதக் கடைசியில் பிரசாத் இருக்குமிடம் சென்ற இராமநாதனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பிரசாத் பத்து நாட்கள் விடுப்பாம். அவர் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று சொந்த ஊருக்குப் போய்விட்டிருந்தார். “பேக்ஸ் புரோ” புரோகிராமினை பயன்படுத்தி ஊதிய பட்டியல் ஆயத்தம் செய்துவிடலாம் என்று பிரசாத்தின் கம்ப்யூட்டரில் அமர்ந்தார் இராமநாதன். தொடங்கினார். அவரால் அதில் வேலை செய்ய முடியவில்லை.

அப்போதுதான் அந்த புரோகிராமினை எப்படி பயன்படுத்துவது என்பது தனக்குத் தெரியவில்லை என்பது அவருக்கு தெரிந்தது. “இரண்டு மாதமாக செய்கிறீர்களே! பிறகென்ன? சீக்கிரம், சீக்கிரம்” என்றார் இராமநாதனின் மேலதிகாரி. அந்த மாதம் ஊதியம் சரியான தேதியில் கொடுக்கப்படவில்லை. இராமநாதனுக்கு கெட்ட பெயர்.

இராமநாதனின் பிரச்சனை என்ன?

வீட்டில் மொபைல் போன் வாங்கி பல வருடங்கள் ஆகின்றன. அப்பாவிடம் ஒரு போன். மகன்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். “நீயும் ஒன்று வாங்கிக் கொள் அம்மா” என்று சொன்னார்கள் பிள்ளைகள். அம்மா வாங்கிக்கொள்ளவில்லை. “எனக்கு அதனை இயக்கத் தெரியாது” என்றார்கள். அழைப்பு வந்தால் எடுப்பார்கள். அதைத் தெரிந்து கொண்டாகிவிட்டது. பேசுவார்கள். மற்றபடி, எவர் பெயரையும் தேடுவது, கண்டுபிடித்து பேசுவது என்பதெல்லாம் அவர்களால் முடியவில்லை. போனில் மட்டுமில்லை அப்படி வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரை இயக்கி, அதில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவதோ வந்ததை படிப்பதோ அவர்களால் செய்ய முடிவதில்லை.

ஒவ்வொரு முறையும் வீட்டில் இருக்கும் ஒருவரை உதவிக்கு அழைக்க, “என்னம்மா நீங்கள்! இது தெரியாதா? எத்தனை முறை செய்து தருவது?” என்கிற பதில்தான் வரும்.

அந்த அம்மாள் செய்யும் தவறு என்ன?

அவருக்கு சென்னையில் ஆழ்வார் பேட்டையில் இருந்து கெல்லிஸ்க்கு போக வேண்டிய வந்தது. காரில் கிளம்பிப் போனார். எக்மோரில் ஒரு ரவுண்டானா வந்தது. பல பக்கமும் சாலைகள் பிரிந்தன. நான்கு அல்ல. ஐந்து பக்கம் போகும் வெவ்வேறு சாலைகள் கெல்லிஸ் போவதற்கு எந்தப் பக்கம் திரும்பி எந்த சாலையில் போக வேண்டும்? விசாரித்தார். ஆட்டோக்காரர் சொன்ன பாதையில் “அப்பாடா”! என்று திரும்பி வேகமாகப் போனார். அன்றைய வேலை முடிந்தது.

அடுத்த வாரமும் அவர் அதே கெல்லிஸ்சுக்கு போக வேண்டும். கிளம்பிவிட்டார். அந்த ரவுண்டானா வந்ததும்தான் அவருக்கு அந்த சந்தேகம் வந்தது. “அட! ஆமாம். எந்த சாலையில் போக வேண்டும்!” தெரியவில்லை. இந்த முறை ஒரு சைக்கிள்காரர்தான் தென்பட்டார். மெதுவாக வந்த அவருக்காக காத்திருக்க வேண்டிவந்தது. கேட்டுக் கொண்டு அவர் சொன்ன வழியில் திரும்பிப் போனார். வேலை முடிந்தது.

அடுத்தவாரமும் அவர் பிரச்சனை தீரவில்லை. அவரால் அந்த ரவுண்டானாவில் விசாரிக்காமல் போக முடியவில்லை. விடிகாலை நேரமாதலால், ஆள் நடமாட்டம் இல்லை. பின்பு அவரே, “இதுவாகத்தான் இருக்கும்” என்று முடிவு செய்து ஒரு சாலையில் போக, அது கெல்லிஸ் போகும் சாலை இல்லை. அலைச்சல் போக, போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு மிகவும் தாமதமாகத்தான் அவரால் போக முடிந்தது.

இதைக்கூடவா ஒருவரால் செய்ய முடியாது? கம்ப்யூட்டர் புரோகிராம் புரியவில்லை. உதவியில்லாமல் செய்ய முடியவில்லை என்பது புரிகிறது. மின்னஞ்சல் அனுப்புவது, மொபைல் போனில் இருக்கும் சில வசதிகள் புரியவில்லை என்பதுகூட பரவாயில்லை. வழி கூடவா ஒருவருக்கு பிரச்சனையாக இருக்க முடியும்? என்று தோன்றலாம்.

பிரச்சனைகள், பொருள் மற்றும் நிகழ்வுகள் சார்ந்ததில்லை.

மேலே பார்த்த மூவரின் சூழ்நிலைகளும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களுடைய பிரச்சனை என்னவோ ஒன்றேதான்.

கேட்டுக்கொள்ளுகிறபோது அதனை முழுமையாக உள்வாங்குவதில்லை. மனதில் பதிய வைத்துக்கொள்வதில்லை. அப்போதைய தேவை நிறைவானால் போதும். பிரச்சனை தீர்ந்தால் போதும் என்கிற மனப்பான்மையுடன், மேலோட்டமாக மட்டுமே, சொல்லப்படுவதைக் கேட்டுக் கொண்டு, அதனை மனதிற்குள் அனுப்பாமல் செய்வது. (கம்ப்யூட்டர் வழியில் சொல்வதானால் அந்த தகவலை “சேவ்” (save) செய்து வைத்துக்கொள்வதில்லை). மீண்டும் அடுத்த முறை அதே தேவை வருகிறபோது அப்போது எவர் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது. தேடுவது. அதற்காக காத்திருப்பது.

விளைவு? வேறென்ன! நேரம் வீணடிக்கப்படுவதுதான்.

ஆமாம். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அடுத்தடுத்த முறைகள் அவர்கள் சிரமப்பட்டும் கூட அவர்கள் அணுகுமுறையில் மாற்றமில்லையே. அது ஏன்?

சோம்பல் காரணமாக இருக்கலாம். “வேலைதான் யாரோ சொல்ல நடக்கிறதே! பிறகு என்ன? இப்போதைக்கு வேலை முடிந்தால் சரிதான்” என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். கற்றுக் கொள்ளுவது என்பது மனது ஊன்றி செய்ய வேண்டிய வேலை. கவனச் சிதறல் இல்லாமல் செய்ய வேண்டிய வேலை. அதைச் செய்ய சோம்பல். அதனால் வரும் “அன்றாட மனப்பான்மை”.

திருமணம் நடக்கிறது. மணமகனாக ஒருவர் அமர்ந்திருக்கிறார். மதச்சடங்குகள் “இப்படிச் செய், அப்படிச் செய்” என்கிறார்கள் பெரியவர்கள். செய்யலாம். அவை “ஒரு முறை” செய்ய வேண்டியவை. திருமணம் முடிந்தபின் கூட இல்லை, அதற்கு முன்பாகவே அந்த நிகழ்வு முடிந்ததுமே நிறைவுற்றுவிடும் செயல்கள். அவற்றின் மீது கவனமோ அதனை எப்படி செய்ய வேண்டும் என்கிற புரிதலோ தேவையில்லை.

ஆனால் சில செயல்களை வாழ்க்கையில் பலமுறை செய்ய வேண்டிவரும். அவற்றை முதல் முறையே “எப்படி?” என்று சரியாக புரிந்து கொள்ளுவது, அதன் பின் எல்லா நேரமும் எவர் உதவியையும் எதிர்பாராமல் எவருக்காகவும் காத்திருக்காமலும் செய்ய உதவும்.

முதல் முறையாக ஒரு வேலையைச் செய்ய முற்படும்போது அதை தெரிந்தவர் சொல்லுவதை புரிந்துகொள்ள முயற்சிக்காமல் அப்படியே, சொல்லச் சொல்ல, செய்ய ஆகும் நேரம் குறைவு என்று தோன்றலாம். முதல் முறைக்கு மட்டும்தான் அது சரி. அப்படிப்பட்ட எண்ணத்தில்தான் முன் பார்த்த இராமநாதன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்முறை கூடுதல் நேரம் செலவழித்திருந்தால், முயன்று கற்றுக் கொண்டிருந்தால், அதன் பின் எத்தனையோ முறைகள் நேரம் மீதமாகியிருக்கும்.

தேவையானவற்றை கற்றுக்கொள்ளுவதில் போகும் நேரம் என்பது “முதலீடு” போல. அது, One Time செலவு அல்ல. அது முக்கியமான Investment. முக்கியமானவற்றை முயன்று, நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று, செய்ய கற்றுக் கொள்ளுதலும் ஒரு சிறந்த நேர மேலாண்மை வழிதான்.

தொடர்ந்து செய்ய வேண்டிய, மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டிய எத்தனை விஷயங்களுக்கு நாம் பிறரை சார்ந்திருக்கிறோம்? யோசித்துப் பார்த்தால் சில ஆச்சர்யங்கள் காத்திருக்கலாம்Ð

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *