அறிவு நிரந்தரம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா

புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம்
புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும்
கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில்
காண்பவை எல்லாம் பதிந்துவிடும்!

எழுதாப் பலகை ஆகாயம் என
எல்லா விடியலும் சொல்கிறது
அழகிய நிலவு விண்மீன் கோள்கள்
ஆதவன் எல்லாம் தவழ்கிறது!

உள்ளம் திறக்கும் ஒவ்வொரு நொடியும்
உனக்குள் மழைவிழும் அறிவாக!
வெள்ளம் போலது வளர்ந்து பெருகி
வாழ்வை நனைக்கும் நதியாக!

படித்து முடித்தேன் என்பது மடமை
பட்டம் மட்டும் படிப்பல்ல
அடிமனதுக்குள் அனல்விடும் தேடல்
அணைந்து போகும் நெருப்பல்ல!

புலன்கள் வழியே வாழ்வைப் பருகு
புத்தியின் பசிக்கு முடிவேது?
நிலையில்லாத வாழ்விலுன் அறிவை
நிரந்தரமாக்கப் போராடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *