காலம் உங்கள் காலடியில்

தொடர் – 8

-சோம.வள்ளியப்பன்

நேர மேலாண்மை ரகசியம்

அது ஒரு மருத்துவரின் கிளினிக். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே போயிருக்கிறேன். அதே தெரு. அதே கட்டிடம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அதிக வேறுபாடு இல்லாததால் சுலபமாக கண்டுபிடித்தேன். ஆனால், வராண்டா தாண்டி உள்ளே போனதும் கண்ணில் பட்ட இடம் மிகவும் புதியதாக இருந்தது. பிரமிப்பு தந்தது.

சுவர்களில் தெரிந்த சுத்தம் மற்றும் பளபளப்பு… அங்கேயும் இங்கேயுமாக சுறுசுறுப்பாக வளைய வந்த நர்சுகள், குளுகுளுவென இருந்த ஏசிக் காற்று, மருத்துவரை பார்க்க வரும் நோயாளிகள் அமர்வதற்கு என்று போடப்பட்டிருந்த அழகிய நாற்காலிகள், மருத்துவரைத் தேடி வந்திருந்த நோயாளிகளின் எண்ணிக்கை போன்றவை மட்டுமல்ல, எனது பிரமிப்பிற்கு காரணம். அவற்றையெல்லாம்விட முக்கியமாக, முன்பு ஒரு அறை மட்டுமே இருந்த இடத்தில், இப்போது மூன்று அறைகள் இருந்தன. ஆமாம், நோயாளிகளைப் பார்க்கும் அறைகள் மட்டுமே, மூன்று இருந்ததுதான் ஆச்சரியப்பட வைத்தது.

டாக்டர் சச்சிதானந்தம் கிளினிக் தானே இது! என்று யோசித்தபடி, அந்த அறைகளின் வெளியே, வேறு எந்த மருத்துவர்களின் பெயர்களை எழுதியிருக்கிறார்களா? என்று பார்த்தேன். ஹுஹும். பெயர் ஏதும் போடவில்லை.

பக்கத்தில் அமர்ந்திருந்த நோயாளி ஒருவரிடம் மெதுவாக விசாரித்தேன். வேறு டாக்டர் எவரும் இல்லை. இங்கே அதே ஒரே மருத்துவர் மட்டும்தான் என்பதை அவர் உறுதி செய்தார்.

அடுத்து, ஒரே மருத்துவர் இவ்வளவு நோயாளிகளைப் பார்க்க முடியுமா? என்கிற கேள்வி மனதில் வந்தது. “என் முறை எப்போது வரும்? நான் எப்படி துரிதமாக மருத்துவரைப் பார்த்துவிட்டு கிளம்புவது?” என்கிற ஆதங்கங்களைவிட, “இங்கே இவ்வளவு மாறுதல்கள் வந்திருக்கின்றனவே! ஏன்? இவற்றால் என்ன பலன்?” என்று தெரிந்து கொள்ளுகிற ஆர்வமே அதிகமானது.

அப்போது மருத்துவர் சச்சிதானந்தம் முதல் அறையில் இருந்து வேகமாக வெளியேறி, அடுத்த அறைக்குள் போவதைப் பார்த்தேன். மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கலாம். மருத்துவர் அந்த அறையில் இருந்தும் வெளிப்பட்டு, மூன்றாவது அறைக்குள் வேகமாகப் போனார்.

அதே சமயம் எங்கள் வரிசையும் நகர்ந்தது. ஒவ்வொரு அறையில் இருந்து மருத்துவர் இன்னொரு அறைக்குப் போன போதெல்லாம் எங்கள் வரிசையும் நகர்ந்ததற்கு காரணம், மூன்று அறைகளிலும் அவரைப் பார்க்க வந்த நோயாளிகள் இருந்ததும், மருத்துவர் ஒவ்வொரு அறையாகப் போய் அவர்களைப் பார்ப்பதும்தான் என்று புரிந்தது.

மருத்துவர் சச்சிதானந்தத்தின் நேர மேலாண்மை ரகசியம் என்று பார்ப்பதற்கு முன்னால், அதன் பலன்களைப் பார்த்துவிடலாம்.

அவருடைய கிளினிக்கில் அவர் கொண்டு வந்திருக்கிற மாறுதல்களால், அவருடைய தனிப்பட்ட உற்பத்தி திறன் (பர்சனல் புரொடெக்டிவிட்டி), முன்பிருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு ஆகிவிட்டது. அதாவது அவர் முன்பு பார்த்து வந்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமான நோயாளிகளைப் பார்க்க, அவர்களுக்கு உதவ முடிகிறது.

அவர் அதற்காக இரண்டு மடங்கு கூடுதல் நேரம் வேலை செய்யவில்லை. அது சாத்தியமாகவும் இருக்காது. ஒரே அளவு நேரம். ஆனால் கூடுதல் பலன்!

அப்படி என்னதான் அவர் செய்கிறார்? அவர், அவர் வேலையை மட்டும் செய்கிறார். அதுதான் அவர் கொண்டுவந்த வேறுபாடு.

இதில் என்ன புதுமை! மருத்துவர் வேலைதானே செய்வார்! என்று தோன்றுகிறதா? விஷயம் இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததும் இப்போது செய்வதற்கும் என்ன வேறுபாடு? அப்போது, புறநோயாளிகளை பார்க்கும் கிளினிக் ஒன்றை ஏற்படுத்திவிட்டு, அவர் தனியாளாக நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்காக அவர் செய்தவை என்ன என்ன?

காலையில் வந்து பூட்டியிருக்கும் கதவினைத் திறப்பது. இடத்தினை (லேசாகவேனும்) தூசுதட்டி சுத்தம் செய்வது. வரும் நோயாளிகளிடம் என்ன பிரச்சனை என்று விசாரிப்பது. அவர்களுடைய எடை, ரத்த கொதிப்பு, டெம்பரேச்சர் முதலியவற்றை சோதிப்பது. அவர்களுக்கு மருந்து எழுதிக்கொடுப்பது. தேவைப்படுபவர்களுக்கு ஊசி போடுவது. சிலருடைய காயங்களுக்கு மருந்து போடுவது. அவர்களிடம் பணம் வாங்குவது. கேட்பவர்களுக்கு ரசீது எழுதிக்கொடுப்பது. இடையில் வரும் தொலைபேசி விசாரிப்புகளுக்கு பதில் சொல்லுவது..

இவையெல்லாம் அவசியமானவைதான். இவற்றைச் செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் கேள்வி இதுதான், இவற்றை மருத்துவம் படிதத மருத்துவர் தான் செய்ய வேண்டுமா?

“வேலையில் சிறியது என்று பெரியது என்று வேறுபாடுகள் கிடையாது , பார்க்கக்கூடாது” என்றெல்லாம் இங்கே நினைத்து குழப்பிக்கொள்ள தேவையில்லை. இங்கே பார்க்க வேண்டியது, இருக்கிற நேரத்தினை எப்படி செவ்வனே பயன்படுத்துவது? அவ்வளவுதான்.

அந்த கோணத்தில் இருந்து பார்த்தால், மருத்துவர் அவரது நேரத்தினை தகுந்த வேலைகளில் போக்காமல், மற்றதிலும் சிலவிடுவதால், அவர் பார்க்கக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து போகிறது.

கத்தியின் கைப்பிடி மரத்தினால் செய்ததாக இருந்தால் போதும். அற்புதமான இரும்பினைப் பயன்படுத்தி, கத்தியின் “பிளேடு” செய்யலாம். அதில் எதற்காக கைப்பிடி செய்ய வேண்டும்? அதற்கு மரம் போதுமே!

சூட்சமம் இதுதான். நாம் நம்முடைய நேரத்தில் எவ்வளவினை, நம்முடைய மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் சிலவிடுகிறோம்?

மருத்துவர் சச்சிதானந்தம் இப்போது இவற்றை எல்லாம் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் தகுந்த ஆட்களை அமர்த்தி விட்டார். அவர்கள் மேலே சொல்லப்பட்ட “முன் பின்” வேலைகளையும் பார்த்துவிடுகிறார்கள். இதுதான் அவரது நேர மேலாண்மை ரகசியம்.

மூன்று அறைகளுமே புறநோயாளிகளை (Out Patient) அவர் பார்ப்பதற்கான அறைகள் தான். அங்கே அமரவைக்கப்படும் நோயாளிகளிடம் செய்ய வேண்டிய “முன் வேலைகளை” (Pre) எல்லாம் உதவியாளர்கள் செய்துவிடுவார்கள்.

மருத்துவர், வருவார். தேவைப்படும் மேல் விபரங்கள் மட்டும் சேகரித்துக்கொண்டு, ஆலோசனை சொல்லிவிட்டு, அடுத்த அறையில் ஆயத்தமாக இருக்கும் மற்றொரு நோயாளியைப் பார்க்கப் போய்க்கொண்டே இருப்பார். மருத்துவர் நகர்ந்ததும், அந்த நோயாளிக்கு தொடர்ந்து செய்ய வேண்டிய, பின் வேலைகளை (Post), தக்கவாறு அவரது உதவியாளர்கள் செய்துவிடுவார்கள்.

மருத்துவரின் வேலையை சுற்றி முன்னும் பின்னும் (Pre and Post) சில வேலைகள் இருக்கின்றன. அவையும் முக்கியமானவைதான். ஆனால் அவற்றை மருத்துவர்தான் செய்ய முடியும் என்பதில்லை. மருத்துவம் படிக்காதவர்களே செய்யமுடியும். பிறகு அதை எதற்கு மருத்துவம் படித்தவர் செய்துகொண்டிருக்க வேண்டும்? அதுவும் அவருக்காக எத்தனையோ நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கும் போது!

அவருடைய அணுகுமுறையில் சில மாற்றங்கள் செய்தார். அதற்கு ஒப்ப, அவரது வேலையிடத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்தார். சில வேலைகளை அவர் பகிர்ந்தளித்தார் (டெலிகேஷன்). பலன்? அவரால் இரண்டு மடங்கு அதிகமான நபர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடிகிறது. பலருக்கு வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. அவருக்கும் கூடுதல் வருமானம் வருகிறது.

இந்த அணுகுமுறை மருத்துவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ன? எல்லோருக்குமே பொருந்தும். ஆக, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்.

நம்முடைய மிகச் சிறந்த திறன் என்ன? நம்முடைய நேரத்தில், எவ்வளவு அதில் போகிறது?

நம்முடைய நிறுவனத்திலோ, அலுவலகத்திலோ, வீட்டிலோ நாம் செய்துகொண்டிருக்கும் வேலைகள் எல்லாம்., நாமே செய்ய வேண்டியவைதானா? நம்மைவிட திறன், படிப்பு, ஊதியம் போன்றவற்றில் ஏதேனும் குறைவாக உள்ளவர்களால் செய்யக்கூடிய எத்தனை வேலைகளை (Tasks) நாமே செய்து கொண்டிருக்கிறோம்?

அப்படிப்பட்ட வேலைகளை அவர்களை செய்ய அனுமதிப்பதன் மூலம், அவர்களிடம் பகிர்ந்து அளிப்பதன் மூலம், நம்முடைய நேரம் நம்முடைய மிகச் சிறந்த திறனுக்காக (பெஸ்ட் டேலண்ட்) விடுவிக்கப்படுகிறது.

ஓட்டுனர், சமையல்காரர், வீட்டு வேலைகளுக்கு ஆள், அலுவலக வேலைகளுக்கு ஆள் போன்றவர்கள் நம்முடைய நேரத்தினை நமக்கே மீட்டுத் தருபவர்கள்.

மிக எளிமையான உதாரணம் சொல்லுவதென்றால், கவிஞர் கண்ணதாசன் செய்ததை பற்றி சொல்லலாம். அவர், பாடல்கள் எழுதியதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவர் எழுதவில்லை. “டிக்டேட்” செய்தார்! பாடல்களை அவர் சொல்லுவாராம். வேறு எவரோ எழுதிக்கொள்வார்களாம். பேப்பர் தேடுவது, பேனாவிற்கு மை போடுவது, எழுதியதை படி (பிரதி) எடுப்பது போன்ற வேலைகளை அவர் செய்தது இல்லை.

யந்திரங்கள், அலுவலகத்தில் உள்ள இடங்கள் (ஸ்பேஸ்) போன்றவை மட்டுமல்ல, திறமையான ஊழியர்கள் கூட சரியாக பயன்படுத்த வேண்டிய வளம்தான்.

மனித வளத்தினையும் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்றால், அவற்றின் Best Fit-ல் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

தொடரும்

2 Responses

  1. திரேஸ் அந்தோணி

    அருவினை என்ப உளவோ, கருவியாற்
    காலம் அறிந்து செயின்.
    என்னும் வள்ளுவனின் குறளைத் தங்கள் கட்டுரை நினைவுபடுத்துகிறது.
    இடம், பொருள் , ஏவல் அறிந்து செயல்படுபவரே வாழ்வில் வெற்றியடைவர்என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *