தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?

-கிருபாகரன்

சாப்பிட்ட பின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியைக் கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறு பொருள். நல்ல காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும், கெட்ட காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒரு விதமாகவும் இலையை மூடுகிறார்கள்.

இலையில் மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாப்பிடுபவர்களுக்கு இலையை மூட மனதே வராது. தாங்கள் சாப்பிட்ட அழகை, இலை புதிதாகப் போடப்பட்டது போல் இருப்பதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இலையில் மிச்சம் வைப்பவர்களோ அடுத்தவர்கள் பார்க்கக் கூடாதென்று அவசரம் அவசரமாய் மூடுவார்கள்.

உணவை வீண் செய்யக்கூடாதென்று உருவான பஃபே முறையில்கூட தட்டில் எல்லாவற்றையும் அள்ளிவைத்துக்கொண்டு, அப்புறம் அசடு வழிந்துகொண்டு எங்காவது வைத்து விட்டு நழுவி விடுபவர்கள் உண்டு.

இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, செய்ய முடியாமல் தடுமாறி, சொன்ன சொல் தவறி, தங்கள் இஷ்டத்துக்கு வேலைகளைத் தள்ளிப் போடுபவர்கள் பஃபேயில் விழிபிதுங்கும் ஆசாமிகளைப் போன்றவர்கள்தான்.

இந்த உலகத்தில் நீங்கள் என்ன வேலை செய்தாலும், அது அடுத்தவர்கள் சம்பந்தப்பட்டதுதான். உங்கள் வேலைகளை நீங்கள் எவ்வளவு குழப்பிக் கொண்டாலும், அதனால் இன்னொருவரோ, இன்னொரு நிறுவனமோ பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாது.

நீங்கள் செய்வதாக ஒத்துக்கொண்டது வருமானம் தருவதாக இருந்தாலும் சரி அல்லது உதவியாக இருந்தாலும் சரி, சொன்னதை சொன்ன நேரத்தில் செய்து முடிக்கும் அளவு உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.

கூடுதல் முக்கியம் கொண்ட வேலைகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட வேலைகள் என்று தரம் பிரித்துக் கொள்ளலாமே தவிர, செய்ய வேண்டிய வேலையையோ உதவியையோ தள்ளிப்போடுவதும் தவிர்ப்பதும், உங்கள் நம்பகத் தன்மையை கேள்விக்குரியதாக்கும். உங்களால் செய்ய முடியாத அல்லது நீங்கள் செய்ய விரும்பாத ஒரு வேலையை ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் எதை சிறப்பாகச் செய்வீர்களோ அதில்கூட மற்றவர்கள் உங்களை நம்ப மறுப்பார்கள்.

வாழ்வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் திறமையைவிட ஒரு படி கூடுதல் முக்கியத்துவம் கொண்டது, நம்பகத்தன்மை. நீங்கள் சொன்ன நேரத்தில், ஒப்புக்கொண்ட தரத்தில் ஏற்றுக்கொண்ட வேலையை செய்து முடிப்பது மட்டுமே உங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.

திட்டமிடாமை, அலட்சியம். பொறுப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே தள்ளிப்போகிற வேலைகளை இந்த உலகம் பார்க்கிறது.

எனவே தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள். வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *