விருப்பங்கள் போதாது

– மணிவண்ணன்

எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும்.

மாணவப் பருவத்தில், கல்லூரிக்குப் போகிற வழியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற கட்டிடத்தைப் பார்த்து, “இங்கே வேலைக்குப் போகவேண்டும்” என்கிற எண்ணம் முதலில் ஏற்படலாம். அது விருப்பமாக மட்டுமே இருந்தால் காலையும் மாலையும் கடந்து போகிற போது அந்த எண்ணங்கள் தலைதூக்கும். பிறகு மறந்து விடும்.

ஆனால், இந்த விருப்பம் எதிர்பார்ப்பாக மாறும்போது, நீங்களே வியப்படையும் விதத்தில் அந்த ஆசை நிறைவேறுவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் அமையத் தொடங்கும்.

விருப்பங்கள் எதிர்பார்ப்புகளாக முதிர்கின்றனவா என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு நண்பரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும். ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த எண்ணம் மேலோட்டமாக வந்து போனால் அது வெறும் விருப்பமாகத்தான் இருக்கிறது. உள்ளீடற்றதாக, கலைந்து போகக்கூடியதாக பலவீனமான எண்ணமாக அது பதிவாகிறது. இயற்கையின் நிர்வாகத்தில் இதற்கு உரிய இடம் கிடைப்பதில்லை.

நாளொன்றுக்குப் பல மணி நேரங்கள் கடுமையாக உழைத்த பிறகும்கூட, உழைப்பதற்கான பலன் கிடைக்காமல் வருந்துபவர்கள் உண்டு. சிறிது நேரம் உழைத்துவிட்டு, அதற்கு சிறந்த பலன்களை நிறைந்த மனதுடன் பெறுபவர்களும் உண்டு, எண்ணம் வலிமையாகி, எதிர்பார்ப்பதில் தீவிரம் கொள்ளும்போது, அவற்றை எளிதில் எட்ட முடிகிறது. எண்ணங்கள் எதிர்பார்ப்பாக முதிர விடாமல் தடுப்பது, “இது நம்மால் ஆகிற காரியமா” என்கிற கேள்விதான்.

ஓர் எண்ணம் நமக்குத் தோன்றுகிறது என்றாலே, அதனை நிஜமாக்கிக் காட்டக்கூடிய நிகரற்ற வலிமை நமக்கு இருப்பதாகத்தான் பொருள். எனவே, எண்ணத்தின் வீரியம் அந்தக் கேள்வியையும் தாண்டி வேர்விடுகிறபோதுதான், பாறையில் விதை விதைத்தால்கூடப் பயிராவதற்கான சாத்தியங்கள் அரும்புகின்றன.

எல்லைக்கு மீறிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதால் துன்பமல்லவா வரும் என்று சிலர் கேட்கலாம். எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்கிறீர்களோ அதே அளவு பொறுமையையும் வளர்த்துக் கொள்கிற போதுதான் வெற்றி பிறக்கிறது.

அரச மரத்தை சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்பது பழங்கால நம்பிக்கை. (இதில் சில சதவிகிதங்கள் அறிவியல் பூர்வமான உண்மையும் உண்டு). அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்ப்பது என்கிற பழமொழி, இந்த அவசரக்காரர்களைப் பற்றி எழுதப்பட்டதுதான்.

எதிர்பார்ப்பும் பொறுமையும். சரியான கலவையில் சங்கமிக்கிறபோதுதான் அது இலட்சியமாக உருவெடுக்கிறது. எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறாமல் போவதற்குக் காரணம் அவற்றைப் பாதியிலேயே நீங்கள் கைவிடுவதுதான்.

கைவிடப்படாமல் கட்டி வளர்க்கப்படுகிற இலட்சியங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடாது. எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அவற்றை எட்டுவதற்கான செய்தி மட்டும் தாமாக உருவாவதைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *