நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்.
1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா?
2. உங்களிடம் பணிபுரிபவர்கள், புதிய திறமைகளை வெளிப்படுத்தி, புதிய நுட்பங்களைக் கற்றறியாவிட்டாலும் பரவாயில்லை – சொல்கிற வேலையை சரியாகச் செய்தாலே போதும் என்று நினைக்கிறீர்களா?
3. மாறிவரும் சூழலுக்கேற்ப, முன்னேற்றம் நோக்கிய மாற்றங்களை முதலில் உங்களிடமும் – பிறகு உங்கள் பணியாளர்களிடமும் – உங்கள் ஒட்டுமொத்த சூழலிலும் உருவாக்க விரும்புகிறீர்களா?
இதிலுள்ள மூன்றாவது எண்ணத்திற்கே நீங்கள் முதலிடம் தருவதாக இருந்தால் புதுமை உங்கள் பிறப்புரிமை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பதாகப் பொருள்.
செய்வதை தக்கவைத்துக் கொள்ள முயல்வது என்பதற்குப் பச்சையான அர்த்தம் என்ன தெரியுமா? ஏற்கனவே இருக்கும் சிக்கல்களைத் தீர்க்கத் தெரியவில்லை என்பதுதான் அர்த்தம். அன்றாட நடைமுறைகளிலேயே ஆயிரம் சிக்கல்களை வைத்துக்கொண்டு தீர்க்க முடியாமல் தடுமாறுபவர்கள்தான் இருப்பதை சரியாகச் செய்தால் போதும் என்று கருதுவார்கள்.
ஒரு நிறுவனத்தில் பெரிய தலைவலியாக இருப்பது எது என்று நிச்சயம் தெரியும். நிறுவனத்தில் இருப்பவர்கள் அந்தத் தலைவலியை தினம்தினம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் என்றால், அது மிகவும் தவறான அணுகுமுறை. வலிகளோடும் சிக்கல்களோடும் வாழப் பழகுவது எந்த வளர்ச்சிக்கும் இடம் தராது.
எனவே புதுமை நோக்கிய முதல் படியே. சிக்கலற்ற- சீரான நடைமுறைகளை நிறுவனத்தில் கொண்டுவருவதுதான்.
SAP – என்ற அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமான நிறுவனங்களை ஆராய்ந்ததில் ஓர் அடிப்படையைக் கண்டறிந்திருக்கிறது – ” தங்கள் நிறுவனத்திற்கு தேவைகள் என்ன – எவற்றுக்கு முதலிடம் தரவேண்டும் – அவற்றை விரைவாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்துவது எப்படி?” இந்த மூன்று கேள்விகளுக்கும் எந்த நிறுவனத்திடம் விடைகள் உண்டோ அந்த நிறுவனம் பல புதுமைகளை உள்வாங்கிக் கொண்டு வேகமாக வளர்கிறது.
மாற்றங்களுக்கு ஈடு கொடுங்கள்:
சந்தைச் சூழலில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்குரிய வாசல்களைத் திறந்துகொள்ளும் வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கூடப் போக வேண்டாம். முதல் பூக்கடை எப்படி உருவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். முதலில் உதிரியாக பூக்களை விற்கத் தொடங்கியிருப்பார்கள். பிறகு, அவற்றைத் தலையில் சூடிக்கொள்ளவோ கடவுளுக்குச் சூட்டவோ வசதியாக சரமாகத் தொடுத்திருப்பார்கள் – அதையே பெரிய அளவில் கற்பனை செய்து மாலைகளாகக் கட்டியிருப்பார்கள். பூ என்றால் மங்கலச் சின்னம் மலர் மாலைகள் மட்டுமே தயார் செய்வோம் என்று சொல்லாமல் மலர் வளையங்களையும் விற்பனை செய்யத் தொடங்குகிறார்கள்.
புத்தம் புதிய வழக்கமான பூங்கொத்துவரை இன்று பூக்கடைகளில் கிடைக்கின்றன. பூ விற்பதிலேயே இத்தனை புதுமைகளுக்கும் மாற்றங்களுக்கும் இடம் தர வேண்டியிருக்கிறது.
சில விஷயங்களில் வளைந்து கொடுங்கள்: எல்லாவற்றிலும் பிடித்த பிடியில் பிடிவாதமாக இருக்கும் விதமாய் இன்றைய சந்தைகள் இருப்பதில்லை. பேரம் பேசுவதில் தொடங்கி குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே உங்கள் தயாரிப்பைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வரை எத்தனையோ அம்சங்கள் உங்கள் தொழில் செய்யும் முறையில் மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கக்கூடும். “கறார் விலை” கடைகளின் காலம் இனியும் தொடர்வது அபூர்வமாக சில இடங்களில் நிகழலாம். ஒரு நிறுவனத்தின் விதிமுறைகள் அனைத்துமே திருத்த முடியாத சட்டங்கள் போல் இறுகி இருக்க இயலாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது.
வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுங்கள்: உங்கள் நிறுவனத்தில் எந்த நிலையில் இருக்கும் அலுவலராலும் வாடிக்கையாளர்கள் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இன்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அளவில் உச்சம் நோக்கி மனநிறைவு என்கிற இலக்கைத் தொடுகிறபோதெல்லாம் நீங்கள் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள்.
தயாரிப்புகளின் தரத்திலும் உள்ளடக்கத்திலும், நீங்கள் அடிக்கடி கொண்டுவருகிற முன்னேற்றம் – அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற நீங்கள் மேற்கொள்கிற முயற்சி – உங்கள் துறையிலேயே நீங்கள் புதிது புதிதாய் அறிமுகம் செய்யும் தயாரிப்புகள் – வாடிக்கையாளர் வசதிக்கும் வியப்புக்கும் வாய்ப்பாக நீங்கள் செய்கிற விரிவாக்கம் – அவ்வப்போது அளிக்கிற சலுகைகள், இவையெல்லாம் வாடிக்கையாளர்களுக்காக நீங்கள் புதுமைகள் நிகழ்த்தத் தயாராயிருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தமிழகக் காவல்துறையில், புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அவர்களைத் தொடர்பு கொள்ளும் முறைகள் எளிமைப்படுத்தப்பட்டதும், முன்மாதிரி காவல் நிலையங்கள் உருவாக்கிவிட்டதும் காவல் துறையில் புதுமைகளைப் புகுத்துவதற்கான முயற்சிகள்தான். அயல்நாடுகளில் கிராஃபிட்டி என்ற பெயரில் தயாரிக்கப்படும் ரெஃப்ரிஜிரேட்டர்களில் எழுத வசதியாய் ஒரு வெள்ளைப்பலகை பொருத்தப்பட்டது. சமையலறையில் ஞாபகக் குறிப்புகளில் தொடங்கி – “உள்ளே பால் இருக்கிறது. சூடு செய்து காபி போட்டுக் கொள்ளுங்கள்” – என்று கணவனுக்குக் குறிப்பு எழுதுவதுவரை எத்தனையோ விஷயங்களுக்கு இந்தப் புதுமையான அணுகுமுறை பயன்பட்டது.
புதுமைக்கான ஆர்வத்தின் நெருப்பு அணையவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழிலில் எல்லா வெளிச்சங்களுக்கும் அதுவே வழிவகுக்கும்.
Leave a Reply