மனிதனாக இருப்பதே முக்கியம்
கோயமுத்தூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கங்களின் மிக உயரிய விருதான (ஃபார் தி ஸேக் ஆஃப் ஹானர்) பன்முகப் பெருமாண்பு விருது, நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி பல்கிவாலா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ரோட்டரி சங்கத் தலைவர் திரு.முருகன் தனது தலைமையுரையில் இளம் வயதில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதைப்பாராட்டி. இந்த உயரிய விருது வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் கோட்பாட்டை சுழற்சங்கம் கொண்டிருப்பதற்கேற்ப இந்த விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது என்றார் சுழற்சங்கங்களின் ஆளுநர் திரு.பேபிஜோசப். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பேரா.பர்வீன்சுல்தானா. மரபின்மைந்தன் முத்தையாவின் பன்முக ஆற்றல்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.
நமது நம்பிக்கை மாத இதழில் மரபின்மைந்தன் தொடர்ந்து எழுதிவரும் கடைசிப் பக்க கவிதைகளின் தொகுப்பான “வெற்றி வேட்டை” நூலை மையப்படுத்தி அவரது பேச்சு அமைந்தது. இதிலுள்ள கவிதைகள் வாசிப்பவர்களின் நரம்புகளில் நேரடியாக நம்பிக்கையை ஏற்றும் ஊசிமுனைச் சொற்களால் உருவாகியுள்ளன என்றார் அவர். கல்வியில் சராசரி மாணவராக விளங்கிய மரபின்மைந்தன். மாணவர்கள் முதுகில் சுமக்கும் பாடங்களை விட வாழ்க்கைப் பாடத்தை சரியாகக் கற்றவர் என்பதை இன்றைய பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். “மனிதர்கள்தான் உலகில் பாராட்டப்படுகிறார்கள். குயில்களுக்கோ. சிங்கங்களுக்கோ யானைகளுக்கோ பாராட்டு நடத்தப்படுவதில்லை. ஏனென்றால் அவை தம்முடைய இனத்தில் ஒன்றுபோல் இருக்கின்றன. மனிதன் தன்னுடைய தனித்தன்மையால் ஒருவனிடமிருந்து இன்னொருவன் வித்தியாசப்பட்டு நிற்கின்றான். தனித்து நிற்பவனே பாராட்டப்படுவான்.
இந்த உலகில் திறமையாளனாக வருவது எளிது. முயற்சியும், பயிற்சியும் இருந்தால் திறமைகளை வளர்த்துக் கொண்டு வெற்றி பெற்று விடலாம். ஆனால் ஒரு நல்ல மனிதனாக இருப்பதே முக்கியம். மனித நேயமேயில்லாத ஒரு விஞ்ஞானியை விட மனிதநேயம்மிக்க செருப்புத் தைக்கும் தொழிலாளி மேன்மையானவன். மரபின்மைந்தன் முத்தையா பன்முகத் திறமைகள் கொண்டவர் என்பதைப் போலவே யாருக்கும் தீங்கு செய்யாத, முடிந்தால் நன்மை செய்கிற நல்ல மனிதன் என்பதே முக்கியம். “வெற்றி வேட்டை” கவிதைத் தொகுப்பு ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் என்று குறிப்பிட்டார்.
மரபின்மைந்தன் முத்தையா தனது ஏற்புரையில், “பலவீனங்கள் எல்லோருக்கும் இருக்கும். அவற்றையே நமது பலமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் எனக்கொரு பலவீனம் இருந்தது. ஏதாவது அசம்பாவிதமான சம்பவம் பற்றி நாளிதழ்களில் படித்தால் அதைப்பற்றி எல்லோரிடமும் பேசுவேன். வீண் அரட்டையில் ஈடுபடுகிறோமோ என்றொரு நிலையில் தோன்றியது. ஏன் இப்படிச் செய்கிறோம் என்று யோசித்தேன். தெரிந்ததை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல்தான் காரணம் என்பதை உணர்ந்தேன். எனவே பயனற்ற விஷயங்களைப் படிப்பதை விட்டுவிட்டு பயன்மிக்க விஷயங்களைப் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன். அதுதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்றார். விழாவில் கோவை சசி அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் திரு.ஆர்.சுவாமிநாதன். தஞ்சை மாவட்ட வெற்றித்தமிழர் பேரவை அமைப்பாளரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளருமான திரு.சா.ஆசிஃப் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மரபின்மைந்தன் முத்தையாவின் வாழ்க்கைப் பாதையை விளக்கும் குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.
Leave a Reply