சாதனைச் சதுரங்கம்

-தேவகோட்டை ம. திருவள்ளுவர்

முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்

கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்

(நான்) நெருங்க
(நீ) விலக
(1)
(நான்) நெருங்க
(நீயும்) நெருங்க
(2)
(நான்) விலக
(நீயும்) விலக
(3)
(நான்) விலக
(நீ) நெருங்க
(4)

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி…. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல…. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.

கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து – குடும்ப உறவுகள் சிதைந்து போகவோ, நிர்வாக உறவு சீர்கேடு அடையவோ, ஒரு விளையாட்டு அணியின் செயல்வேகம் பாதிக்கப்படவோ, ஒரு இசைக்குழுவின் திறமை வெளிப்படாமல் போகவோ வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்ல – இவர்களின் இலக்குகளை எட்ட முடியாமலும் இலட்சியத்தை அடைய முடியாமலும் போவதோடு – மனித உறவுகளும் சின்னா பின்னமாகிப் போய்விடக் கூடும்.

இப்படிப்பட்ட நிலை வருமுன்னர் காப்பதுதான் – மனிதவளத்தின் மேம்பாட்டுக்கு உதவும் உயரிய செயலாகும். அதுவே நமது வாழ்நிலை மேம்பாட்டுக்கான அடிப்படைத் தேவையுமாகும்.

முதல் சதுரத்தைக் காண்போம்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரோ அல்லது இரு குழுவோ இப்படி செயல்படக்கூடும். ஒரு சாரார் (ஒருவர்) இணக்கத்தை நாடி வரும்போது மறுசாரார் (மற்றொருவர்) பிணக்கம் கொண்டு உறவை மறுக்கும் சூழ்நிலையை – இது குறிக்கிறது. ஒருவர் அனுசரிக்கும்போது மற்றவர் வீம்பு செய்து விலகிச் செல்லும் நிலை. இதைத்தான் தமிழில் “கெஞ்சினால் மிஞ்சுவது” – என்பார்கள். ஒருவர் அனுசரிக்க மற்றவர் ஆணவத்தோடு விலகும் நிலை – கருத்து வேறுபாட்டை வளர்த்து உறவின் முறிவுக்கு இட்டுச்செல்லும். இந்த அவலநிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

இரண்டாம் சதுரம்: ஒருவர் விலகிச் செல்லச் செல்ல மற்றவர் நெருங்கி நெருங்கி வந்து இணக்கத்தை உருவாக்க முயலும் நிலை. ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்நிலை நல்லது என்றாலும் இதுவும் நிலைபெறாது. பிறரை வசப்படுத்துவதுதான் சிரமமான காரியம். நாமே வம்பு செய்து கொண்டிருந்தால் – நமது கருத்து வேறுபாட்டை வேறு யார் வந்து தீர்ப்பர்? எனவே கருத்து வேறுபாட்டால் ஏற்படவிருக்கும் அவல நிலையை உணர்ந்து நாம் நமது அபரிதமான தன் முனைப்பை , ஆணவத்தை சற்றே ஒதுக்கிவிட்டுப் பிறரின் கருத்துக்குக் காது கொடுக்கத் தயாராகி விட்டாலே மனதை ஆட்டுவிக்கும் கருத்து வேறுபாடு குறையவும் – உறவுநிலை மேம்படவும் வாய்ப்பு பிரகாசமாகும். அதை விடுத்து – நமது ஆணவத்தின் காரணமாய்ப் பிறருக்குப் புத்திபுகட்ட நினைத்தால் – இழப்பு நமக்குத்தான். மாறாக விட்டுக் கொடுத்து உறவாடினால் பலன் இருவருக்கும் ஏற்படும் என்பதை மறக்கக்கூடாது. இருவருக்கும் இன்பம் உண்டாகும் நிலையே உயர்நிலை.

மூன்றாம் சதுரம்: “ஒருவர் விலகிச் செல்ல, அடுத்தவரும் விலகி செல்வது!” இந்தச் சதுரத்தில் குறிப்பிடப்படுகிறது. இருவருமே விலகிச் செல்லும் மனோபாவம் – இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அடியோடு தகர்த்துவிடும். இந்த நிலை ஒரு அணியில் முழுவதும் விரும்பத் தகாத நிலை. சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவருக்காவது நெருங்கும் விருப்பம் இருந்தால் மூன்றாம் நபரின் தலையீட்டால் இணக்கம் ஏற்படும் சூழலை உருவாக்க முடியும். ஆனால் இருவரும் விலகிச் செல்ல முற்படும்போது அதுவே முரண்பாட்டின் மொத்தமாகக் காட்சியளிக்கும். உடன்படுவதற்கான வாய்ப்பை இது முழுவதுமாகக் கெடுத்துவிடும். எனவே இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய நிலையே ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் உகந்தது.

நான்காம் சதுரமாகிய “நெருங்க….. நெருங்க….” – என்றும் நிலை மிகவும் மேம்பட்ட நிலை, உன்னத நிலை. இது இருவரின் பக்குவ நிலையைப் பறை சாற்றும் நிலையாகும். ஏதோ ஒரு சூழலால் அல்லது சந்தர்ப்பத்தால் – மனதளவில் – முரண்பாட்டுக்கு ஆளான இருவரும், பிறகு சிறு கால அவகாசத்தில், அதற்கும் மேலே ஒரு படிபோய்… “நான் நெருங்கி வருகிறேன்…” என்று இருவரும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு உறவுப் பிணைப்புக்கான – பாலத்தை உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இத்தகையவர்களால் ஒரு குடும்பமோ, நிர்வாகமோ, இயக்கமோ – தனது இலக்கை அடையும் திசையில் பீடு நடைபோட்டு மகத்தான வெற்றியடையும். அந்த அணியில் எப்போதும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.
எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.
மாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.

இந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும்!
முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே……

தொடரும்.

 1. jganesan

  sir
  the articles are interesting and vitalizing to the sagged youth of the day. the enery, power and force of our youth are either mis directed or directionless. the articles are refreshing and rejuvanating. even at the age of 60 i feel i have travelled without proper compus and got in whirlwind at times and i do hope that i may setsail in calm wind on reading your articles.
  Note:-
  Please find that numbering of the slot in this article is mistake. that can be seen from reading the comments you have posted.
  i like to subscribe to your journal and my address is as follows
  J.ganesan
  50/28-A, Nallamangudi agraharam
  nannilam 610105

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *