உள்ளும் புறமும்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம்

மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த, பெரியவர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவருக்கு எடுக்கப்பட்டிருந்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படத்தினை, அப்போது மருத்துவர் ஆய்வு செய்துகொண்டிருந்ததால் காத்திருக்க நேரிட்டது. அந்த நேரத்தில், அறிவியல் வளர்ச்சி பற்றியும் அதனால் மருத்துவத்துறை பெற்றிருக்கும் பிரம்மாண்டமான முன்னேற்றம் பற்றியும் மனம் அசைபோட்டு கொண்டிருந்தது.

உடலின் வெளியழகைப் படமாகக் காட்டும் நிழற்படமும், உடலின் உள்நிலைமையைக் காட்டும் ஊடுகதிர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலக மக்கள்தொகை இன்றைய அளவை எட்டியிருக்காதோ!

அறிவியலின் வளர்ச்சி எங்கு போய் நிற்கும்…. உடலுக்கு உள்ளே எப்படி உள்ளது என்று ஒரு படம் காட்டிவிடுவதைப்போல, மனத்தில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்றும் காட்டிவிடும் படம் வந்துவிடுமோ…. ஒருவேளை அப்படி கண்டு பிடிக்கப்பட்டால், நிலைமை என்ன ஆகும்…..

மிகச்சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரான திருவாரூர் சண்முகவடிவேல் அவர்கள், ‘சொன்னதும், சொல்ல நினைத்ததும்’ என்னும் தலைப்பில் உரையாற்றும்போது அவருக்கே உரிய பாணியில், சிரிக்கச் சிரிக்க இப்படிச் சில செய்திகளைக் கூறுவார்.
‘ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் நல்ல படம்… தொல்லையில்லாமல் பார்க்கலாம் என்று உட்காரும்போது, ‘எப்படி இருக்கீங்க’ என்று கேட்டுக் கொண்டே குடும்பமாய் உள்ளே நுழைவார்கள். ‘வாங்க…. வாங்க’ நானே வந்து பார்க்கணும்னு நினைச்சேன்…. நீங்களே வந்துட்டீங்க….’ என்று வாய் சொல்லும். ஆனால் ‘பாவி, இந்த நேரத்தில், இப்படி வந்து கெடுத்தானே….’ என்று மனம் நினைக்கும்….

சில நேரங்களில், மனத்தில் நினைப்பது ஒன்றாகவும் வெளியே சொல்வது ஒன்றாகவும் நமக்கு நிகழ்ந்துவிடுகிறது. உறவுகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, சில நேரங்களில் இப்படி நடந்துகொள்ள வேண்டியிருப்பது உண்மைதான்.

‘உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா…. உருவம் போடும் வேஷம்

உண்மையாகுமா….’ என்னும் கண்ணதாசனின் திரைப்பாடலை எண்ணிப் பாருங்கள்.
‘இப்போது மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்….’ என்று எப்போது யார் கேட்டாலும் சற்றும் தயக்கமின்றி, மனத்துக்குள் அப்போது ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை, பொய் சற்றுமின்றி வெளியே சொல்லிவிடும் அளவிற்குத் தூய்மையான மனமே உத்தமமான மனம்.

ஞானிகளுக்கே இந்த மனநிலை வாய்க்கும். சாதாரண மனிதர்களுக்கு இன்றைய நடைமுறை வாழ்வில் இதற்கான வாய்ப்பு இல்லை என்பதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், கூடுமானவரையில் உள்ளும் புறமும் ஒரே நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள நம்மால் முடியும்.

சொல்லும் செயலும் ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல் இருப்பவர்களே அடுத்தவர் களால் நேசிக்கப்படுகிறார்கள்; மதிக்கப் படுகிறார்கள். அனைத்தையும்விட, சமுதாயத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ அல்லது குடும்ப உறவுகளுக் கிடையிலோ…. நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள்; அதனாலேயே, சிறந்த வளர்ச்சியும் பெறுகிறார்கள்.

மிக முக்கியமாக, மன அமைதியுடன் வாழச் சிறந்த வழி இதுதான். ‘ஒன்றே சொல்வார்…. ஒன்றே செய்வார்…. உள்ளத்தில் உள்ளது அமைதி..’ என்னும் கண்ணதாசனின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா….

கார் நிறுவனம் ஒன்று, புதிய விற்பனை மையத்தினைத் தொடங்கியது. முதல் விற்பனையைத் தொடங்கி வைக்க, ‘கை ராசிக்காரர்… எதையும் எதிர்பார்க்காதவர்’ என்று பெயர் பெற்றிருந்த ஒருவரை அழைத்திருந்தார்கள். அவருக்கு மரியாதை செய்வதற்காகவும் தாங்கள் விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் அவருக்கு ஒரு கார் பரிசளித்தார்கள். எதையும் இலவசமாகப் பெறுவதில்லை என்று சொல்லி, அதை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் அவர்.

அவரின் பெருந்தன்மையை எண்ணி வியந்த கார் நிறுவனத்தினர், ‘ஐயா… தங்கள் மன நிறைவுக்காக, நாங்கள் தரும் காருக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்கிறோம்…’ என்றனர். ‘இதை நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்றவர், தனது பையிலிருந்து இரண்டு ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்துக்கொடுத்து, ‘அப்போ…. ரெண்டு கார்களை என் வீட்டுக்கு அனுப்பிடுங்க…’ என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

‘எண்ணிய முடிதல் வேண்டும்..’ என்று தனது கவிதையைத் தொடங்கிய பாரதி, தனது அடுத்த வரியிலேயே, ‘நல்லவே எண்ண வேண்டும்’ என்று எழுதியதைக் கவனியுங்கள். நமக்குத் தோன்றும் எண்ணங்களைப் பற்றிய கவனத்துடன் எப்போதும் நாம் இருக்க வேண்டும். ஏனெனில், நமது சொற்களை அவையே மெருகேற்றுகின்றன; செயல்களுக்கு அழகைத் தருகின்றன. நமது சொற்களும் செயல்களுமே, நம்மை உலகுக்கு அடையாளப்படுத்துகின்றன.

ஓர் அழகான ஜென் கதை உண்டு. உள்ளும் புறமும் எவ்விதப் பிறழ்ச்சியுமின்றி எல்லோரையும் நேசித்த ஒரு பெரியவர், ஓர் இரவில் தனியாகக் குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தார். யாருமற்ற ஓரிடத்தில், சாலையில் மயங்கிக் கிடந்தான் ஒருவன். மிகுந்த இரக்கமுற்ற அவர், குதிரையிலிருந்து இறங்கி அவனருகில் சென்று மயங்கி இருக்கிறானா என்று பார்த்தார். சரேலென எழுந்த அவன் பாய்ந்து குதிரையின் மீது ஏறி அதை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டான்.

அப்போதுதான் அவன் திருடன் என்பதையும் தன்னை ஏமாற்றவே மயங்கிக் கிடந்ததுபோல் நடித்தான் என்பதையும் அவர் உணர்ந்தார். சலனமின்றி நடந்த அந்தப் பெரியவர், வழியிலிருந்த சத்திரம் ஒன்றில் இரவினைக் கழித்தார். பொழுது புலர்ந்த பின்னர் எழுந்து நடந்தார்.

பக்கத்து கிராமத்தில் சந்தை நடந்து கொண்டிருந்தது. இவரிடம் குதிரையைத் திருடிக்கொண்டு ஓடியவன். அதனை விற்பதற்கு அங்கே நின்றிருந்தான். அவனருகே சென்றார் பெரியவர். அவரைக் கண்டதும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் திருடன்.

அவனிடம் சென்று, ‘சொல்லாதே…’ என்றார் பெரியவர். அவன் மேலும் விழித்தான். ‘இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள். நான் அதற்காக உன்னிடம் வரவில்லை. குதிரை என்னுடையது என்பதையும், அது எப்படி உன்னிடம் வந்தது என்பதையும் எவரிடமும் சொல்லாதே… பிறகு உண்மையிலேயே மயங்கிக் கிடப்பவருக்கு உதவக்கூட மக்கள் முன்வர மாட்டார்கள்…’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். உள்ளும் புறமும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அந்தப் பெரியவரும், அவை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அந்தத் திருடனும் உதாரணங்கள்.

மாசற்ற மனத்துடன் இருப்பதனை விடப் பெரிய அறம் ஒன்று மில்லை என்கிறான் வள்ளுவன். அற வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையில் வெற்றிக்கே, வேடம் போடாத மனம்தான் அடித்தளம்.

மிகச்சாதாரண உதாரணம்கூட பார்க்கலாம். நேர் காணலுக்குச் செல்லுகிறீர்கள். தெரியாத அல்லாத புரியாத கேள்விகளைக் கேட்பதற்கே அங்கே மூன்று பேர் உட்கார்ந்திருப்பதாகத்தான் நமக்குத் தோன்றும். அதே போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கும்போது, ‘தெரியவில்லை…’ என்று சொல்வது நல்லதா அல்லது, தெரிந்தாற்போலக் காட்டிக் கொள்ள, சுற்றிவளைத்துப் பேசுவது நல்லதா…”
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்பவர்களையே நம்பிக்கைக்குரிய வேலை யாளாக அவர்கள் பார்ப்பார்கள். வெளிப் படையாக இப்படிச் சொல்பவர்களே கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்றும் முடிவெடுப்பார்கள்.

இயல்பாக இருப்பது வேறு; இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்வது வேறு. அன்பு வேறு; அன்புடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வது வேறு. திறமை வேறு; திறமை இருப்பதாகக் காட்டிக் கொள்வது வேறு.

நாம் அனைத்தும் இருப்பவர்களாக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டுமே தவிர, இருப்ப தாகக் காட்டிக் கொள்பவராக இருக்கக்கூடாது.

வீட்டின் நுழைவு இடத்தில் குரோட்டன்ஸ் செடி இருக்கும். அழகாய் இருப்பது அதன் இயல்பு; அதில் மணம் ஏதும் இருக்காது. வீட்டின் பின்புறத்தில்தான் துளசிச்செடியை வைத்திருப்பார்கள். அதற்கு அழகு கிடையாது. ஆனால், மணம் வீசுவதும், மருத்துவ குணம் கொண்டிருப்பதும் அதன் இயல்பு.

வீட்டின் முன்பகுதியில் இருப்பதால் குரோட்டன்ஸ் செடிக்குக் கூடுதல் மதிப்பும் இல்லை. பின்புறத்தில் இருப்பதால் துளசிச் செடிக்கு மரியாதைக் குறைவும் இல்லை. அவற்றின் இயல்புக்கேற்ற முக்கியத்துவம் இரண்டுக்குமே உண்டு.

சிந்தனையும் செயலும் முரண்பாடின்றி வாழும் தைரியம் நமக்கு வேண்டும். சிந்தனையை அழகானதாக வைத்துக்கொள்ளப் பழகிவிட்டால், இந்தத் தைரியம் தானாக வந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *