– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன்
”நிகழ்வுகள் அனுபவத்தை தருகின்றது.
அனுபவம் நம்மை நமக்கே தருகின்றது”
வாழ்க்கை என்பது நம்மை நாமே கண்டெடுக்கும் ஒரு தேடல். நாம் நமக்குக் கிடைக்காதவரை உலகம் நமக்குக் கிடைக்காது. இந்தத் தேடலில்தான் வாழ்க்கை தொடங்குகிறது. போதி மரத்தடியில்தான் சித்தார்த்தன் தன்னைத் தானே கண்டெடுத்தான், புத்தனாக.
கோவை அரசு கலைக் கல்லூரிதான் எனது போதிமரம். எனக்கு வண்ணச்சிறகுகள் அங்குதான் முளைத்தன. பல்வேறு பாதைகளில் பயணப் படுவதற்கு என்னை ஆயுதப்படுத்திய பயிற்சிக் கூடமும் அதுதான். எனது பட்டப்படிப்பை அங்கு தான் முடித்தேன். பட்டுப்பட்டுப் படித்தேன். அனுபவப்பட்டுப் படித்தேன். வாழ்வியல் ஆய்வுக் கூடமாக அதைத்தான் கருதுகிறேன்.
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குமேல் வயது நிரம்பிய அக்கல்லூரியில் படித்தவர்கள் எதையும் சாதிக்க வல்லவர்களாக வருவார்கள் என்பது உண்மை. கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரி கோவையின் பழமை வாய்ந்த பெருமை.
இக்கல்லூரியில் பயின்ற பலர் வாழ்க்கையின் வெற்றிச் சிகரங்களைத் தொட்டு சமுதாயத்திற்கு பயனுடைய வாழ்க்கையை வாழ்ந்து வரலாற்றின் பக்கங்களில் ஒளிர்ந்து கொண்டுள்ளார்கள்.
அவர்களில் சிலரை இங்கு ஆராதனை செய்ய விரும்புகிறேன்.
இந்திய அரசாங்கத்தின் முதல்நிதி அமைச்சர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார். பெரிய நாயக்கன்பாளையத்திலுள்ள புகழ்பெற்ற இராம கிருஷ்ணா மிஷன் வித்யாலயா மற்றும் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்வி நிலையங்களை நிறுவிய கல்வியாளர் திரு. டி.எஸ். அவிநாசிலிங்கம் அய்யா அவர்கள். இந்தியப் பாராளுமன்றத்தின் கோவையின் குரலாக ஒலித்த அரசியல் தலைவர்கள் திரு.பி.ஆர். ராமகிருஷ்ணன், திரு. ஆர். பிரபு, திரு.சி.டி. தண்டபாணி, திரு.க.ரா.சுப்பையன், முன்னாள் அமைச்சர்கள் செ.மா. வேலுச்சாமி, திரு.ஏ.கே.செல்வராஜ், திரு.செ.அரங்கநாயகம் போன்றவர்களும் இங்குதான் பயின்றார்கள்.
கோவைக்கு சிறப்புச் சேர்த்த தொழிலதிபர்கள் எல்.ஜி.ராமமூர்த்தி, ஜி.கே. சுந்தரம், கே.ஜி.இலட்சுமிபதி போன்ற பலரும், அரசு உயரதிகாரிகளாகிய திரு.எஸ்.எஸ். கருப்பண்ணன் ஐ.அ.ந., திரு. விஜயகுமார் ஐ.ட.ந., போன்றவர்களும், திறமைமிக்க வழக்குரைஞர் களாகத் திகழும் திரு.வி.மயில்சாமி, திரு.அருணாசலம் போன்றவர்களும் இக் கல்லூரியில்தான் கற்றுள்ளார்கள்.
அத்துடன் திரையுலக நட்சத்திரங்களான சத்தியராஜ், மணிவண்ணன், ரகுவரன், ரஞ்சித் போன்றவர்கள், திரை இயக்குனர்களாகிய உதயகுமார், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, பின்னணிப் பாடகர் பிரபாகரன். கவிஞர்கள் அவை நாயகன், சமுதாயக் கவிஞர் சூரியநிலவன், ஓசை காளி தாசன், முன்னேற்ற முரளிதரன் போன்றவர்களும் அங்குதான் பயின்றார்கள்.
நான் B.A. (Political Science) படித்தேன். அரசியல் அறிவியல் துறை (Political Science) பேராசிரியர் ராஜு அவர்கள் வகுப்பில் மட்டும் தான் வாயைத் திறப்பார். யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். அவருண்டு வேலையுண்டு என்ற நோக்கில் வகுப்பிற்கு வருவார். மாணவர்கள் கவனிக்கிறார்களோ, இல்லையோ கண்டிப்பாகப் பாடம் நடத்துவார். மாணவர்களும் அவரைக் கண்டுகொள்ளாமல் தங்கள் குறும்புத்தனத்தைக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.
நான் ஆரம்பத்தில் அமைதியாகத்தான் இருந்தேன். மற்ற நண்பர்களோடு சேர்ந்து வாலிப வயதிற்கான குறும்புகளைச் செய்திருக்கிறேன். எனது நடவடிக்கைகளை கண்காணித்த பேராசிரியர் ராஜு என்னை அழைத்துப் பேசினார். எனது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார். எனக்கு சில புத்திமதிகளைச் சொன்னார்.
”நீதான் உங்களுடைய குடும்பத்தில் இருந்து முதன்முதலாகக் காலேஜுக்கு வந்திருக்கிறாய். அதை மறந்துவிட்டு வீணாகச் சுற்றாதே, ஒழுங்காக பாடத்தைப் படி, காலேஜ் முடிந்ததும் வீட்டுக்குச் செல். நீ ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேண்டும். அதுதான் எனது எதிர்பார்ப்பு” என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஆழமாக விழுந்து விட்டன.
மழைத்துளி மேலே இருந்து கீழே விழுகின்றது. அது சூடான இடத்தில் விழுந்தால் ஆவியாகிப் போகிறது. நிலத்தில் விழுந்து ஆறாக ஓடுகிறது. அதுவே சிப்பிக்குள்ளாக விழுந்தால் முத்தாக மாறுகிறது. அதுபோல ஆசிரியர்கள் சொல்கின்ற கருத்து ஒன்றுதான், அதுபோய்ச் சேரும் மனநிலைக்கேற்ப மாற்றம் பெறுகிறது.
அது போலத்தான் அவர் அன்று சொன்ன வார்த்தைகள் என்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. கண்ணீருடன் நான் நின்றேன். சிறிதுநேரத்தில் கண்ணீர் நின்றது. ஆனால் இன்னும் அவர் அறிவுரை ஈரமாகவே இருக்கிறது.
காலேஜ் முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல எனது நண்பர்கள் விடமாட்டார்கள். ஏனென்றால் நான் நண்பர்கள் என்று குறிப்பிடுவது என்னோடு படிப்பவர்களை அல்ல, எனது சீனியர்களை.
சாவடி கிருஷ்ணசாமி, பி.ஏ. வரலாறு மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதால் அவருடன்தான் நான் அதிகமாக இருப்பேன். சீனியரோடு இருந்ததால் ரேக்கிங் தொல்லை இருக்காது என்று அவர் சொன்னதோடு என்னைக் கூடவே அழைத்து வருவார். போகுமிடமெல்லாம கூடவே அழைத்துப் போவார்.
அவருடைய நண்பர்கள் குனியமுத்தூர் தர்மராஜ், அவருடைய நண்பர்கள் கிருஷ்ணசாமி, முருகேஷ், சண்முகம் ஆகியோரும் எனக்கு நண்பர்களானார்கள்.
உப்பில்லாமல் கூட
உயிர் வாழலாம் ‘ ஆனால்
நல்ல நட்பில்லாமல்
உயிர் வாழ முடியாது
என்று நான் இன்று எழுதுவதற்கு அந்த நண்பர்கள் தான் காரணமாக இருந்தார்கள்.
மின்னல் அதிர்ச்சி:
எனக்குள் இலட்சிய மின்னல் இறங்கியது. அதுதான் உடலில் மின்சாரமாக இன்றும் இருக்கிறது. எங்களுடைய துறையின் தொடக்க விழாவிற்கு, அப்பொழுது கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
அதுதான் கல்லூரி வாழ்வில் நான் கேட்கும் முதல் சொற்பொழிவு.
மனதில் அச்ச உணர்வும், என்ன பேசப் போகிறாரோ? என்ற எதிர்பார்ப்பும் நெஞ்சம் நிறைய விழித்திருந்தது. வினாக்களோடு காத்திருந்த எனக்கு எனக்குள்ளாகவே விடை இருக்கிறது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன்.
வரவேற்புரை, தொடக்கவுரை மற்றும் துறைத்தலைவர் உரை என விழாவின் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும் பேராசிரியர் இல.செ. கந்தசாமி அவர்கள் பேசத் தொடங்கினார்.
அக்னி வார்த்தைகளை அள்ளியள்ளி எங்கள்மீது வீசத் தொடங்கினார். அவருடைய முகத்தில் கோபக்கொந்தளிப்பும், சமுதாய அக்கறையில் ஆவேசமும் பொங்கி வழிந்தது.
அவருடைய ஒவ்வொரு சொல்லும் அரங்கத்தை அதிரவைத்தது. மனதின் ஆழத்தில் விழுந்து அங்கு இலட்சியத் தீயை மூட்டுவதாக இருந்தது. அவர் சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக நினைவு. அவருடைய ஒரு மணிநேரப் பேச்சில் என்னை உசுப்பிய வார்த்தை மட்டும் இன்னும் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டே இருக்கிறது.
”உங்களுடைய பெற்றோர்கள் ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகிறார்கள். கிராமப்புறங்களில் கூலி வேலை செய்கிறார்கள். வானம் பார்த்த பூமியிலும் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து உழைத்து உங்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் பொறுப்பில்லாமல், சினிமா தியேட்டர்களிலும் பஸ் ஸ்டாப்புக்களில் சுற்றித் திரிகிறீர்களே? இது வெட்கமாக இல்லையா? பதினெட்டு வயதிற்கு மேல் பெற்றோர்களின் பச்சை இரத்தத்தை குடிக்கும் பாவிகளாக இருக்க அவமானமாக இல்லையா உங்களுக்கு? காலையிலும் மாலையிலும் ஊரைச் சுற்றுவதைவிட பகுதிநேரப் பணிபுரியலாமே? என்று ஆக்ரோஷமாக பேசினார். அவர் முகம் முழுக்க வேர்த்திருந்தது. விழிகளில் கோபச்சுவாலைகள் தெரிந்தன. மாணவர்கள் யாரும் பேசவில்லை. சிறு சத்தமில்லை. எங்கும் நிசப்தம்!
அடைமழை நின்றதுபோல் ஓர் அமைதி. அசைவற்றவர்களாகவே எல்லோரும் உறைந்து போய் இருந்தோம். ஆனால் அவர் விடுவதாக இல்லை. எங்களைப் பார்த்து கேள்விகளை கேட்கத் தொடங்கினார். முதல் கேள்வியாக ”எவனுக்காவது யோக்கியதை இருந்தால், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்?” என்றார். தொடர்ந்து, ”படிக்க வேண்டிய வயதில் காதலாவது? கத்திரிக் காயாவது?” என்றார். ஒருவரும் எழவில்லை. நானும் அவர்களோடு உறைந்து போய் இருந்தேன்.
நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக அப்போது இருந்ததோடு, இதுபோன்ற சூழலில் பேசிப் பழக்கமில்லை. என்றாலும் என் மனதுக்குள் பயமும் ஆவேசமும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் சூடேறி நெஞ்சில் இருந்து வார்த்தைகள் வெடித்துச் சிதறத் துடித்துக் கொண்டிருந்தன.
திடீரென அச்சத்தையும் தாழ்வு மனப் பான்மையையும் தகர்த்து எறிந்துவிட்டு நான் எழுந்தேன்….
su.goaplswamy
Dr. Kavidasan`s autobiographical article cites that a person who inspires a man to be postively changed one is agreat teacher. The very teacher`s blief, preach and practice should be one. Dr. Kavidasan is such a great teacher. His endeavour will be fruitful to the mankind. May God bless him!
annath
very useful to my feature life.