காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன்

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவை அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். ரத்தினச் சுருக்கமாக பேசுவது, பட்டுக் கத்தரித்தது போல பேசுவது எல்லாம் கூட இதே வகையைச் சேர்ந்ததுதான்.

குறைவாக பேசுவதன் மூலம், சுருக்கமாக தெரிவிப்பதன் மூலம் என்ன நடக்கிறது? நமக்கு தெரியாதா என்ன? சிக்கனமான பேச்சு நேரத்தினை மீதம் செய்து தருகிறது. மீதமாகும் நேரம் வேறு ஒன்றிற்கு பயன்படுகிறது.

அட! இது நல்லதுதானே!

அப்படியென்றால், எல்லோருமே முயன்று, இயன்றவரை சுருக்கமாக சொல்லி விட்டுப் போகலாமா? ‘வந்தான் ராமன்’, ‘கண்டேன் சீதை’ ‘To be or Not to be?’ என்பதைப் போல ஒன்றிரெண்டு வார்த்தைகள் போதுமா? ‘அறஞ்செய விரும்பு’ ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதுபோல பொட்டில் அடித்தாற் போல, நறுக்கென்று சொன்னால் போதுமா?

ஆமாம். அதில் என்ன சந்தேகம்?

கொஞ்சம் பொறுப்போம். இதன் மறுபக்கத்தினையும் பார்ப்போம். பின் ஒரு முடிவிற்கு வருவோம்.

பல தொலைக்காட்சிகளிலும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளை காட்டுகிறார்கள். போட்டிகள். அதில் கலந்து கொள்ளுபவர்கள் வெற்றிபெற, தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு பக்கம். அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி செய்தார்கள்? என்பன குறித்து கருத்துக்கள் தெரிவிக்கிற நடுவர்கள். அவர்கள் மற்றொரு சாரார். அந்த நிகழ்ச்சிகளை சிலமுறை நான் பார்த்த போது, நான் அதிகம் கவனித்தது நடுவர்களின் பேச்சினைத்தான்.

பேச்சென்றால், நடுவர்கள் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்து சொல்லும் கருத்துக்கள். அந்த நடனப் போட்டிகளை பார்த்தபோதுதான் நடனத்தில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியவந்தது! விபரம் அறிந்த நடுவர்களின் கருத்துக்களை கேட்ட பின்தான், நடனமாடுகிறேன் என்று சிலர் கைகால்களை வீசுகிறார்கள் என்பதும், வேறு சிலர் நளினமாக தேவையான விதம் ஆடுகிறார்கள் என்பதும் புரிந்தது. ஆடுவதிலே ஒரு எழ்ஹஸ்ரீங் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அறிந்துகொள்ள முடிந்தது. பாட்டுப் போட்டிகள் மேலும் சிலவற்றையும் புரிய வைத்தது. சிறப்பாக பாடுகிற சிலரின் தொண்டைக்குள் மிக அற்புதமான வாத்தியமே இருப்பது போல உணர்ந்தேன். சங்கதிகள் என்று அவர்கள் எதனைச் சொல்லுகிறார்கள் என்பதும், பாடுகிறவர்களின் பாட்டில், எவ்வளவு விபரங்கள் (சரியாக சொல்லுவதென்றால் Details ) இருக்கிறதென்றும் உணர முடிந்தது. பாடி முடித்த பின், நடுவர்கள் சொல்லுவதை அந்தப் பிள்ளைகள் கூர்ந்தும், தலையாட்டியும் கேட்டுக் கொள்ளுவதைப் பார்த்தபோது முறையாக பாடல் கற்றுக்கொண்ட அவர்களில் சிலருக்கே, முழு அல்லது தேவையான அளவு ‘டீடெயில்ஸ்’ தெரிந்திருக்கவில்லை என்பதையும் உணர முடிந்தது.

ஆமாம். அதுதான் சரியான சொல். முக்கியமான சொல். டீடெயில்ஸ். விபரங்கள்.

வெற்றி தோல்விகளை முடிவு செய்தது அங்கேயெல்லாம் வேகமில்லை. தீர்மானம் செய்தது சுருக்கமில்லை. தேவைப்பட்டது, டீடெயில்ஸ். விபரங்கள்.

சில நடுவர்கள் பேசுவதைக் கேட்டால், ‘அட! என்னமாக, எவ்வளவு சரியாகச் சொல்லுகிறார்கள்! இன்னும் கொஞ்சம் சொல் லமாட்டார்களா?’ என்று கூடத் தோன்றவில்லை! பார்க்கிற நமக்கே போட்டியின் முடிவினால் பாதிக்கப்படப் போகாத நமக்கே இவ்வளவு தோன்றினால், அந்தப் பிள்ளைகளுக்கு எவ்வளவு தோன்றும்? தாங்கள் எப்படி ஆடினோம் அல்லது பாடினோம் என்று தெரிந்துகொள்ள முழுமையாக விபரமாக தெரிந்துகொள்ள – எவ்வளவு ஆர்வமிருக்கும்!

அவர்கள், அந்த நடுவர்கள் ‘நன்று’ என்றோ ‘சுமார்’ என்றோ ஒற்றை வார்த்தைகளில் முடித்துக்கொண்டால், அங்கே என்ன ஆகும்?

கேட்பவரின் தேவை மட்டுமல்ல. சொல்பவரின் தேவையும் நிறைவேறாது. எவ்வளவோ கவனித்து, குறிப்பெடுத்து, புரிந்துகொண்டு அவற்றைச் சொல்லாமல் விட்டால் எப்படி? நல்ல விபரமான நடுவர் என்கிற பெயரும் கிடைக்காமல் தவறிப்போகும்.

ஆக, நேர மிச்சம் என்பது எல்லா இடங்களிலும் சிறந்த மேலாண்மையாகாது. செய்வன திருந்தச் செய் என்பதும் பழமொழிதான். அப்படி சரியாக செய்யாதனவற்றை செய்வதைக் காட்டிலும் செய்யாமல் போவதே மேல்.

சிலவற்றை தேவையான அளவு நேரம் எடுத்துதான் செய்ய வேண்டும். அந்த கவனமும் முயற்சியும் அவசியம்.

நமக்கு நேரமில்லை, பற்றாக்குறை என்பதால் நாம் எவ்வளவு சொல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது?

ஒரே கேரட்தான் (காய்கறி). அதனை பச்சையாகவேயும் சாப்பிடலாம். சிலர் முழு கேரட்டினையும் சுலபமாக சாப்பிட்டு விடுவார்கள். அவர்களுக்கு பிரச்சனையில்லை. அதனால் எல்லோருக்கும் அப்படிக்கொடுக்க முடியுமா?

குழந்தைகளுக்கு கேரட்டினை வேகவைத்து, பிசைந்து கொடுக்க வேண்டும். சில வயதானவர்களுக்கு வேகவைக்க வேண்டாம். ஆனால் துருவி கொடுக்க வேண்டும். இன்னும் சிலருக்கு சிறு துண்டங்களாக வெட்டி கொடுக்க வேண்டும். சாறு எடுத்துக்கொடுக்க வேண்டிய சிலரும் இருக்கலாம்.

எவருக்கு எது சரி என்பது அவர்களின் வயது, பற்களின் உறுதி, செரிமான சக்தி போன்றவற்றைப் பொறுத்தது அல்லவா?

நாம் கொடுக்கிற தகவல்களும் அப்படித்தான். எல்லோராலும் எல்லாவற்றையும் நாம் நினைக்கும் விதம் புரிந்துகொள்ள முடியாது. ஆளுக்கு தகுந்தாற்போல தான் பேச, தெரிவிக்க வேண்டும்.

விபரம் தெரிந்தவர்களுக்கு அதிகம் விளக்கிச் சொன்னால் எரிச்சல் அடைவார்கள். தெரியாதவர்களுக்கு சுருங்கச் சொன்னால், புரியாது. நேரமிச்சம் என்று நினைத்து, தேவையான அளவு விபரங்களுடன் தெரிவிக்கா விட்டால், அதனால் குழப்பங்கள் மட்டுமல்ல இழப்புகளும் வரலாம். அதே வேலையை மீண்டும் செய்ய வேண்டி வரலாம். நேரம் மீதம் என்று நினைக்கப்போய், கூடுதல் நேரம் (Rework) சிலவழிப்பது புத்திசாலித்தனமில்லையே!

என்ன அளவு சொல்லுவது என்பது கேட்பவரின் தேவையினைப் பொறுத்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதும்கூட நேர மேலாண்மை வழிகளில் ஒன்றுதான்.

சொல்லுவது, தெரிவிப்பது போன்றவை தவிர, கற்றுக்கொள்ளுதலிலும் இந்த கவனமும் அணுகுமுறையும் தேவை. சரியாக பாட முடியாமல், ஆட முடியாமல் அதனால் தேர்வாகாமல் வெளியேறும் போட்டியாளர்களின் பிரச்சனை என்ன?

ஆட்டம் பாட்டு போன்றவற்றில் மட்டுமில்லை. கற்றுக்கொள்ள வேண்டிய எல்லாவற்றிலுமே கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று, போதிய அளவு நேரம் எடுத்துக்கொள்ளுவது. கற்றுக்கொள்ளுதலில் வேகம் முக்கியமில்லை. அங்கே நேர சிக்கனம் என்பதைவிட, முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். சரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.

கற்பது, பயிற்சி செய்வது, செயல்படுத்துவது என்று மூன்று நிலைகள் உள்ளன. முதலிரண்டினில் நேர சிக்கனம் என்பதைக் காட்டிலும், முழுமை மற்றும் தேவையான அளவு என்பன தான் முக்கியம். அவற்றை சரியாக செய்துவிட மூன்றாவதான, செயல்பாட்டினில் குறையே வராது. வெற்றிதான். அங்கே வேகம் காட்டலாம். சிக்கனம் செய்யலாம்.

ஆக, எல்லா இடங்களிலும் எல்லா வேலைகளிலும் நேர அளவு மட்டுமே பார்த்து அவசரம் காட்டுவது பயன் தரும் நேரமேலாண்மை அல்ல.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *