-சொல்வேந்தர் சுகி. சிவம்
முன்னேற விரும்புகிறவர்கள் ஒரு ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கருத்தை அநாவசியமாக எதிர்க்கிறவர்கள், கேலி பேசுகிறவர்களோடு வீணான விவாதம் செய்வதை தவிர்த்துவிட்டாலே வேகமாக முன்னேற முடியும் என்பதை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெருவாரியான மக்கள் முன்னேற முடியாததற்கான காரணம் தங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொன்று அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்று கஷ்டப்படுகிறார்கள்.
பெருவாரியான மனிதர்கள் மனைவியோடு சண்டை செய்வதில் காலத்தை செலவு செய்கிறார்கள். அதேபோல் பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை கணவனோடு பேசுவதிலேயே தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்குகிறார்கள். எந்தக் காலத்திலும் மனைவியோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது.
எப்போதும் பெண் இதயத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறாள். எப்போதும் ஆண் மூளையிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறான். இதற்காக பெண்ணுக்கு மூளை இல்லை என்று சொல்வதாக அர்த்தமில்லை. அவள், பயன்படுத்துகிற சந்தர்ப்பம் வேறு. ஆனால் அவள் கணவனோடு விவாதம் செய்கிறபோது அவளுடைய இதயம் முன்னுக்கு வந்து விடுகிறது. கணவனுக்கு இதயத்தைவிட மூளை முன்னுக்கு வந்துவிடுகிறது.
வீட்டில் கவனித்துப்பாருங்கள். மனைவி சண்டைக்கு அல்லது விவாதத்திற்கு வரும்போது ஒரு விஷயத்தைத் தொடர்ந்து பேசமாட்டாள். ஏதாவது ஒரு விஷயத்திலிருந்து பல விஷயங்களுக்கு தாவிக்கொண்டே இருப்பாள். ஆண் அப்படி கிடையாது. ஒரே விஷயத்தை பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பான்.
ஆண் அறிவுப் பூர்வமாக, தர்க்க ரீதியாக ஒரு புள்ளியில் நிற்பான். பெண்ணால் அப்படி நிற்க முடியாது. தாண்டி தாண்டி போய்க் கொண்டேயிருப்பாள். அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை இரண்டு பிரிவாக இருக்கிறது. வலது பக்க மூளை, இடது பக்க மூளைக்கும் இடையே செயல்திறனில் வேறுபாடு இருக்கிறது. வலது பக்கத்து மூளை கவித்துவமானது. தெய்வம் புராணத்தில் நம்பிக்கை உடையது. அது தவ்வி தவ்வி இயல்பாக செயல்படக்கூடியது. வலது மூளை உணர்ச்சி வசப்படக்கூடியது. இடது பக்க மூளை பைசாவிற்கும் கணக்குப் பார்க்கக்கூடியது. நமக்கு இரண்டையும் சேர்த்து இயற்கை கொடுத்திருக்கிறது. பெருவாரியான பெண்கள் வலது மூளையைப் பயன்படுத்துகிறார்கள். பெருவாரியான ஆண்கள் இடது மூளையைப் பயன்படுத்துகிறார்கள்.
எங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது வாழ்வின் மிகப்பெரிய சாமர்த்தியம். என்னிடத்தில் ஓர் இளைஞர் வந்தார். அவருக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. என்ன காரணம் என்று கேட்டபோது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவருடைய அம்மா ஒப்புக்கொள்ளவேயில்லை. அவருக்கு 30 வயதாகிவிட்டது. கவலைப்பட்டுக்கொண்டே என்னிடம் யோசனை கேட்டார். ‘அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. உன் அம்மாவைப் போலவே ஒரு பெண்ணைப் பார்த்துவிடு. தோற்றம், சாயல், நடை, உடை பாவனை, விருப்பம், சமைக்கிற முறை போன்றவற்றில் உன் அம்மாவைப் போலவே இருப்பவளைப் பார். உறவில் பார். அம்மா வழி உறவிலேயே அப்படி யாரேனும் இருப்பார்கள். உடனடியாக திருமணத்தை முடித்துவிடலாம்” என்றேன்.
இரண்டு மாதம் கழித்து, இனிப்பு கொடுத்துவிட்டு சொன்னார், ” சார், என் அம்மா போலவே ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டேன். என் அம்மாவிற்கும் பிடித்துவிட்டது. அடுத்த மாதம் நிச்சயதார்த்தம். பிரச்சனை முடிந்தது” என்றார். இரண்டு மாதம் கழித்துப் பார்த்தால் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை, நின்று போய்விட்டது. என்னவென்றால், “என் அப்பாவிற்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. உன் அம்மாவைப்போல அவள் இருக்கிறாள், நான் அனுபவிப்பது போதாதா, உன்னை அந்த நரகத்தில் தள்ள மாட்டேன்” என்று நிறுத்திவிட்டார்.
நாற்பது வருடம் இணைந்து குடும்பம் நடத்தியவர்களுக்குள்ளேயே ஒருவருடைய உணர்வை இன்னொருவர் சரியாக புரிந்து கொள்வதில்லை. ஒரு விசித்திரமான தீர்வு உங்களுக்குச் சொல்கிறேன். “யாரும் யாரையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டால், நம்முடைய வேலைகளை வெற்றிகரமாக சுலபமாக செய்யமுடியும் என்பது மிகப்பெரிய ரகசியம்.
வாழ்வின் நெளிவு சுழிவே இதுதான். மற்றவர்களை நம்பியே வாழவும் முடியாது. நம்பாமல் நாசமாகப் போகவும் கூடாது. இந்த இரண்டிற்கும் இடையில் ஆஹப்ஹய்ஸ்ரீண்ய்ஞ் செய்துகொண்டே இருக்க வேண்டும். இவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
“Let there be a space for your togetherness” இது ஓர் அருமையான சிந்தனை. கணவன் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீ வேறில்லை! நான் வேறில்லை என்று ஒருவரையொருவர் நிரம்ப நெருக்கமாக முடியாது. ஒரேயடியாக தள்ளியும் இருக்கமுடியாது.
ரயிலில் போகும்போது தண்டவாளத்தை கவனித்தேன். தண்டவாளத்துக்கு இடையில் சிறு இடைவெளி விட்டுத்தான் நட்டும் போல்ட்டும் இட்டு முடுக்கி வைத்திருக்கிறார்கள். ஏன் இடைவெளி கொடுத்து அதற்குப்பிறகு முடுக்கி இருக்கிறீர்கள் என்று கேட்டால், வெயில் காலத்தில் இரும்பு கொஞ்சம் விரிவடையும். அதற்கு கொஞ்சம் இடம் வேண்டும். பிறகு, குளிர்காலத்தில் இரும்பு கொஞ்சம் சுருங்கிவிடும். அப்படி சுருங்கி உள்ளே போவதற்கும், திரும்ப வெயில் காலத்தில் விரிவடைகிறபோது ஏற்கனவே நெருக்கமாக முடுக்கி இருந்தால், தண்டவாளம் மேலே வந்துவிடும். கொஞ்சம் இடைவெளி விட்டு முடுக்கி வைத்தால்தான் தண்டவாளம் ரயிலைக் கவிழ்க்காமல் ஓடிக் கொண்டிருக்கும் என்றார்கள்.
ரயில் ஓடுவதற்கு மட்டுமல்ல இது. நீங்கள் யாரோடும் பழகினாலும், “Let there be a space for your togetherness”. நீங்கள் அந்த இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொண்டால் இந்த இடைவெளிதான் நமக்குள் இருக்கிற பிரச்னைகளை தீர்க்கிற காற்றோட்டமான இடம். அளவிற்கு மீறி நெருங்குவதும் பிழை. அளவிற்கு மீறி விலகி நிற்பதும் பிழை. கொஞ்சம் இடைவெளி விட்டு நெருங்கி நிற்கிற கலையை கற்றுக்கொண்டுவிட்டால் துன்பமில்லாத நிலைத்த வெற்றியை வாழ்வில் சந்திக்க முடியும்.
ஒரு குரு தன் சீடனுக்கு என்ன ஏற்படுத்துகிறான் என்ற சர்ச்சை நடக்கிறது. சீடனுக்கு ஒரு குரு வாழ்வில் என்ன மாற்றத்தை நிகழ்த்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் டிஸ்கவரி சேனல் பார்த்திருக்கலாம். அதில் பறவைகள், பட்சிகள் இவற்றையெல்லாம் காட்டுவார்கள். இதில் அந்தத் தாய்ப் பறவை உணவை எடுத்துக்கொண்டு வந்து உள்ளுக்குள் இருக்கிற குஞ்சுப்பறவைகள் செக்கச்சிவந்த தன் வாயைப் பிளந்து கொண்டிருக்கும். தாய்ப்பறவை தன்னுடைய வாயிலேயே சுவைத்து, பிறகு குஞ்சுக்கு ஊட்டும். தாய்ப்பறவை பறந்து போகிறபோது, குஞ்சுப்பறவை பரிதாபமாகப் பார்க்கும். தாய் பறப்பது போல் நாம் பறக்க முடியுமா என்று சிந்தனை அதன் மனதில் ஓடும். ஆனால் பறக்காது. குஞ்சுப் பறவை கூட்டின் ஓரமாக வந்து நிற்கும். கூட்டைவிட்டு தாய்ப்பறவை பறந்து போகிறபோது பிரம்மித்துப் போய் நான் எப்படி பறப்பது என்று நினைக்கும். ஆனால் பறக்காது. தாய்ப்பறவை ஒருநாள் அந்த குஞ்சுப்பறவையை பறக்க வைக்கும்.
பலர் என்னிடம் வந்து எப்படி வாழ்வில் முன்னுக்கு வருவது. என்ன செய்வது என்று கேட்பார்கள். இதற்கான விடையை இந்த சேனலில் பார்த்தால்தான் புரியும். அந்தத் தாய்ப் பறவை ஒருநாள், குஞ்சுப்பறவையை தன் இறக்கையால் ஓர் இடி இடிக்கும். குஞ்சு கீழே விழப் போகும். ஆனால் அது கீழே விழாது. சட்டென்று தன் இறக்கையை விரித்து கீழே விழும். ஏனென்றால் அதற்கு இறக்கை இருக்கிறது என்றே இவ்வளவு நாள் தெரியவில்லை. அதற்கு இறக்கைகள் இருக்கிறது என்று எவ்வளவு சொன்னாலும் நம்பாது. ஆனால் கீழே தள்ளியவுடன், அந்த இறக்கை விரிந்துவிட்டால், வானம் வசப்பட்டுவிட்டது என்று குஞ்சுப் பறவை புரிந்து கொள்கிறது. அப்படி உங்களை வாழ்க்கையில் தள்ளாத வரை துன்பங்களை ஜெயிக்கிற கலையை கற்றுக்கொள்ள முடியாது. எழுத்து, பேச்சு எதுவும் தந்துவிட முடியாது. உங்களுக்கு அனுபவங்கள் சொல்லித்தரும் பாடத்தை உலகத்தில் எந்த ஆசிரியனும் சொல்லித்தரமுடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று உங்களுக்கும் இறக்கைகள் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதுதான் பயிலரங்குகளின் வேலை.
உங்களுக்கான இறக்கையை உருவாக்க முடியாது. ஆனால் இருக்கிறது என்று நினைவுபடுத்துகிற வேலையைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆன்மீகத்திலும் குருமார்கள் உனக்குள் கடவுள் இருக்கிறார் என்று உணர்த்துகிற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நமக்குள் இருக்கிற ஒரு பேராற்றலை ஏற்க மறுக்கிறோம். நம்ப மறுக்கிறோம். ஒரு சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை வரும்போது நாம் அதைப்பற்றி கவலைப்பட்டு மேலே வரமுடிகிறது.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள்தான் அதிகம் ஜெயிக்கிறார்கள். பிறர் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி ஒரு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நேரத்தை எப்படி நிர்வகித்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதைப்பற்றி லூகி.சீனிவாசன் சொன்னார். அதைச் சொல்வதற்கு அவர் பொருத்தமானவர். அந்தளவிற்கு சாதனைகள் செய்திருக்கிறார்.
கடிகாரத்தை காதில் வைத்துக் கேட்டால் ‘டிக், டிக்’ என்று கேட்கும். சிலபேருக்கு மட்டும் ‘குயிக், குயிக்’ என்று கேட்குமாம். ‘டிக் டிக் என்று கேட்பவர்கள் சாதாரணமானவர்கள். ‘குயிக் குயிக்’ என்று கேட்பவர்கள் சாதனையாளர்கள்.
அடுத்தது என்ன என்று யோசிக்கிறவன்தான் வாழ்வில் முன்னுக்கு வரமுடியும். பழையதை நினைத்து சிலாகித்துக்கொண்டே அமர்ந்திருந்தால், அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடியாமல் போய்விடும். விழிப்புடையவர்கள் யார் என்று கேட்டால் அடுத்தது என்று சிந்தித்தவர்கள்தான். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு போகிறார்கள். அவர்கள்தான் மிகச்சிறந்த வெற்றியினை அடையமுடிகிறது.
இந்த உலகம் பொருள்களால் ஆனது என்பது இதுநாள் வரை சொல்லப்பட்டுவந்தது. தற்போது இந்த உலகம் எண்ணங்களால் ஆனது என்கிற கோட்பாட்டை சொல்கிறார்கள்.
இந்த உலகமே எண்ணங்களால் உருவாகிறது என்கிறபோது நாம் எப்படி உருவாக வேண்டும் என்கிற எண்ணம்தான் நம்மை உருவாக்குகிறது. இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்து என்னவாக இருப்பேன் என்று நீங்கள் எந்த உருவத்தை வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கித்தான் போகிறீர்கள்.
எண்ணங்கள் சித்திரமாகி, உங்களைப் பற்றி என்ன உருவங்கள், சித்திரங்கள் வைத்திருக்கிறாயோ, அதுவாக மாறுகிறாய். இதற்கு “நங்ப்ச் ஐம்ஹஞ்ங்” என்று பெயர். தன் மனதில் என்ன ஐம்ஹஞ்ங் இருக்கிறதோ அதை நோக்கித்தான் ஒரு மனிதன் பயணப்படவேண்டும்.
உங்களைப் பற்றி உருவாக்கிக் கொள்கிற இமேஜ்தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது. Self Image -னுடைய சக்தி பிரமிக்க வைக்கக்கூடிய சக்தி. அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்பற்றி உருவம் சிறந்ததாய், மேன்மையுடையதாய், உயர்ந்ததாய் இருக்க வேண்டும். இது எடுபடுமா என்று தெரியவில்லை. இது கிடைக்குமா என்று தெரியவில்லை என்றால் கீழே போவதை தவிர்க்க முடியாது.
தன்னைப்பற்றி ஒருவன் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் வெற்றி தோல்விகளை, மான அவமானங்களை, சமூகத்தில் அவனுடைய இடம் எது என்பதை நிர்ணயிக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தபோது மாணவிகளைப் பார்த்து, “ஐஸ்வர்யா ராயை உலக அழகியாக தேர்வு செய்வதற்கு என்ன காரணம்” என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொன்னார்கள். அதில் அவர் திருப்தியடையவில்லை.
எந்த விஷயமும் அழகு கிடையாது. உங்களுக்கு பிடித்ததினால் அது அழகாகத் தெரிகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
ஒரு பெண் மட்டும், “அந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ளாததால் வேறு வழியின்றி ஐஸ்வர்யா ராயை உலக அழகியாகத் தேர்ந்தெடுத்தார்கள்” என்றார். நம்பிக்கை அப்படியிருக்க வேண்டும். குற்ற உணர்வோடு இருந்தால் எப்படி வெல்ல முடியும்.
எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எல்லை எது என்பதை அறிந்துகொள்கிற திறமையும், நமக்கு இருக்க வேண்டும். எந்த இடத்தில் அது முடிவடைகிறது என்கிற தெளிவும் அறிவும் இருக்க வேண்டும்.
மயிற் பீலியை அளவுக்கு மீறி ஏற்றுகிறபோது அச்சு முறியும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த விஷயத்திற்கும் ஓர் எல்லை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
உழைப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பலன் என்ன கிடைக்கும் என்று இருக்க முடியாது.
மனிதனைத் தகுதிப்படுத்தலாமே தவிர முடிவுகளை நாம் முடிவு செய்ய முடியாது.
பிரபஞ்சத்தின் நெடிய இயக்கம் வித்தியாசமானது. எத்தனையோ திட்டங்களை நாம் போட்டாலும்கூட மாறிப்போகும் வாய்ப்பிருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், இன்னொருவரை எடைபோட்டு பேசிக் கொண்டேயிருக்கிற வேலையை நிறுத்தவேண்டும். தேவையில்லாத தராசுகளை வைத்து நிறுத்திக் கொண்டே இருக்கக்கூடாது. அந்தத் தராசுகளை தூக்கியெறியுங்கள்.
ஒரு ஜென் துறவி அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க ஒருவர் வந்தார். புல்லாங்குழல் வித்வானைப் பற்றி பேச்சு வந்தது. கலைஞர்கள் எப்போதும் சாதாரண வாழ்க்கை வாழ்கிறவர்கள் அல்ல. வித்தியாசமாக இருப்பார்கள். “அவர் ஒரு திருடன், குடிகாரன்” என்று வந்தவர் சொன்னார். ஜென் துறவியோ புகழ்ந்து பேசினார். அப்போது அங்கு வந்த இன்னொரு சீடன் இதைக் கவனித்துவிட்டு குருவிற்கு ஆதரவாகப் பேசினான். சீடன் பக்கம் திரும்பிய குரு அப்படியா! இல்லையே! அவன் திருடன்தான் என்றார். வந்தவருக்கு விளங்கவில்லை. சீடனுக்கும் புரியவில்லை. குருவைக் கேட்டார்கள். அவர் ‘நான் தராசை சீர் செய்கிறேன்’ “அவன் அவனாகவே இருக்கட்டும். நீ நீயாகவே இருக்கட்டும்” எதற்காக அவன் குறைகளைப்பற்றி நீ பேசுகிறாய். அதனால்தான் குறை சொன்னபோது நிறை சொன்னேன். நிறை சொன்ன போது குறை சொன்னேன். எப்போதும் முள் சரியாகவே இருக்கட்டும்” என்றார்.
பிறரை எடை போடுகிற வேலை நம்முடைய வேலையல்ல.
பிறர் விமர்சனத்துக்கு பதில் சொல்வதில் நம்முடைய காலம் வீணாகிறது. விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்கள். அது போலவே பிறரை எடை போடுவதிலும் காலம் வீணாகிறது. அதைப் பற்றியும் அதிகம் கவலைப்படாதீர்கள். உறித்த கோழியையும், ஆட்டையும் எடை போடுங்கள். இன்னொரு மனிதரை தராசில் நிறுத்தி எடை போடாதீர்கள்.
முயற்சிகளைக் கைவிடக்கூடாது. பலன் என்றாவது நிச்சயம். நமக்கு முன் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கிறார் என்பதற்காக நாம் தோற்றுவிட்டதாக அர்த்தமில்லை. எனவே ஓட்டத்தை நிறுத்தாதீர்கள். காரணம் எந்த முயற்சிக்கும் நிச்சயம் பரிசு உண்டு. இதை உள்ளத்தில் வாங்கிக் கொண்டு முயற்சிகளை தொடர்பவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை.
தொகுப்பு : சீனிவாசன்.
Leave a Reply