சிறகை விரித்திடு சிட்டுக்குருவியைப் போலே

-மகேஸ்வரி சற்குரு

விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக் குருவியைப் போலே” பாரதியின் வரிகள் உற்சாகத்தையும், வெற்றிக்கான இரகசியத்தையும் சொல்கிறது. சிட்டுக்குருவி சடாரென்று பறந்துவிடும், தன்னைச் சுற்றி எந்த ஒரு தடை இருந்தாலும் உற்சாகத்துடனே இருக்கும்.

வாழ்க்கையின் சோகம் என்பது இறப்பு அல்ல; வாழ்கின்றபோதே நமக்கு உள்ளேயே, பட்ட அவமானங்களால் சிலசமயம் மடிகிறோமே அதுதான். அதிலிருந்து மீண்டு எழுவதுதான் வெற்றி. அதனை விட்டு விடுதலையாவதுதான் வெற்றி.

அவமானங்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், எதிர்பாராமல் பெற்ற தோல்விகள், சுய பச்சாதாபம், ஏக்கங்கள் இத்தனையையும் விட்டுவிட்டு ஒரு ஏவுகணையாக மேலே எழுவதில் இருக்கிறது நம் சாமர்த்தியம்.

சந்திராயன் இராக்கெட் பார்த்து ஆஹா எழுந்தது பார் என்று சந்தோஷிக்கிறோம். விண்ணில் செலுத்தப்படுகிற இராக்கெட்டுகள் நமக்கு வெற்றிக்கான ஆய்வறிக்கையைத்தான் சமர்ப்பிக்கின்றன. ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன் கவுண்ட் டவுன்தான் ஆரம்பமாகிறது. நம்முடைய தயக்கங்களையும், தடைகளையும், இடையூறுகளையும் பட்டியலிட முடியும். பட்டியலிட ஆரம்பித்துவிட்டால் நம்முடைய வெற்றி என்கின்ற இராக்கெட், விண்கலத்துடன் புறப்பட்டவுடன் நாமும் ஒவ்வொன்றாக தடைகளை கழட்டிவிட ஆரம்பித்தால் இறுதியில் வெற்றிதான் நிதர்சனம்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் சொன்னார், “என்னுடைய வெற்றிக்கான காரணமே என் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள்தான்”. இடையூறுகளை இடைவெளியின்றி செய்துவிட்டால் அதுவே நமக்கு வெற்றிக்கான ஓடுகளம். நம்மீதான தடைகளை கட்டுப்படுத்தி உற்சாகத்தை கட்டாயப் படுத்தினால் வெற்றி தொடும் தொலைவுதான்.

விளை நிலங்கள்கூட தொடர்ந்து பயிர் செய்தால், வெற்று நிலங்களாகிவிடும். திறன் என்றுமே வற்றிப் போவதில்லை. ஆர்வம், ஊக்கம், தைரியம், ஆளுமை, செயல்திறன் ஆகியவை உரங்களாக இருந்து உயர்வைத் தந்துகொண்டுதான் இருக்கும்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்று ஒரு கேள்வியை ரொம்ப நாளாக கேட்கிறோம். ஏன் சார் பருந்தாகணும்? தன்நிலைப்பாட்டை விட்டு உயரப் பறப்பதே குருவியின் மிகப்பெரிய சிறப்பு, சாதனை. எடுத்துக்காட்டாக பீஹாரின் வாட்டர்மேன் என்று அழைக்கப்படுகிற கமலேஷ்வரி ஷிங் – தன்னுடைய ஊரிலே தண்ணீர்த் தட்டுப்பாடு. அரசாங்கத்திடம் மனு கொடுத்தும் ஒரு பயனும் இல்லை. 26 வயது மகன் கலவரத்திலே கொல்லப்படுகின்றான். பெரிய மகன் சியாராம் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுகிறான். மற்றொரு மகன் ஜெய்ராம் மட்டுமே எப்பொழுதாவது வேலைக்குச் செல்வான். சற்றே ஊனம் அடைந்த மகன்தான். ஆனாலும், தந்தைக்கு சிறிதாவது ஆறுதலைத் தந்தான். குடிதண்ணீருக்கு மட்டுமல்ல விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாது பல நாள் பட்டினி. பார்த்தார் கமலேஷ்வரி ஷிங், தனி ஆளாக சாதித்தார். அவருடைய ஆயுதங்கள் ஒரு மண்வெட்டியும், வாளியும் மட்டுமே. தன் நிலத்தில் தோண்ட ஆரம்பித்தார். 1996ஆம் ஆண்டு களப்பணி ஆரம்பமானது. ஊரார் ஏளனம் செய்தனர். சிரித்தனர். இவர் கண்டு கொள்ளவில்லை. 1996ஆம் ஆண்டு ஆரம்பித்த கடின உழைப்புக்கு 2003 ஆம் ஆண்டு வெற்றி கிடைத்தது. சிரித்தவர்கள் சிந்தித்தார்கள். ‘பீஹாரின் வாட்டர் மேன்’ என்ற பட்டம் அரசாங்கத்தால் தரப்பட்டது. 60 அடி நீளம் 6- அடி அகலம் கொண்ட சதுரமான, 25 அடி ஆழமுள்ள குளத்தை தனி மனிதனாக வெட்டினார். கோடையிலும் மாணிக்பூரின் தாகம் தீர்ப்பதும், விவசாயத்திற்கு பயன்படுவதும் அந்தக் குளம்தான். கொளுத்துகின்ற கோடையிலும் 10 அடி நீர் இருக்கிறது. மக்கள் பயன்பாட்டிற்காக காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை திறந்து விடுகிறார். மின்சாரத்தை இன்றுவரை இணைக்கவில்லை. மீன் பண்ணை அமைத்துள்ளார். 40 மாமரம், 10 பலா மரம், 40 தேக்கு மரம் என்று பூத்து, காய்த்து, கனிந்தது கமலேஷ்வரின் உழைப்பு.

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் உயரச் செல்லலாம்… வென்று விடலாம். தடைகளை தகர்த்தெறியலாம். இடையூறுகளை விட்டு விலகலாம். வெற்றி அடையலாம்!

Leave a Reply

Your email address will not be published.