கொட்டிக் கிடக்கிறது வெற்றி

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் சிறப்புக் கூட்டம் 08.02.09 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு வடகோவை குஜராத் சமாஜத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி முனைவர். அப்துல்காதர் கலந்து கொண்டார். சிகரத்தின் இணை செயலர் திரு. சஜீத் வரவேற்புரை வழங்க, கவி அருவி முனைவர் அப்துல்காதர் அவர்களை, தலைவர் திரு. சௌந்தரராஜன் தனது அறிமுக உரையில் வாணியம்பாடியில் ஒரு வானம்பாடியாக கவி அருவி அப்துல்காதர் திகழ்கிறார் என குறிப்பிட்டார்.

சிகரம் உங்கள் உயரம் “மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் நிறுவனர் தலைவர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.

18.01.2009 அன்று செட்டிபாளையத்தில் உறவுகள் மேம்பட என்ற ஒருநாள் மகிழ்வரங்கம் சிகரத்தின் உறுப்பினர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களால் நடத்தப்பட்டது. அவர் தம் குடும்பத்தார் சிறப்புச் செய்யப்பட்டார்கள்.

கவியருவி வாணியம்பாடி முனைவர் அப்துல்காதர் அவர்களின் சிறப்புரையிலிருந்து…………………..

நமது நம்பிக்கை மாத இதழ் வழங்கும் சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தில் உரை நிகழ்த்துவதில் பெருமைப் படுகிறேன். சுய சிந்தனைக் கருத்துக்களையும், வாழ்வில் பிறரை முன்னேற்றவேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகவும் கொண்டுள்ள நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நமது நம்பிக்கை மாத இதழ் வழங்கும் சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கம் மிகச் சிறந்த இயக்கமாக வளரவேண்டும். 16 மொழிகளில் புலமை பெற்ற கால்டுவெல் சொல்வார், “வாழ்த்துவதற்கு தகுதிபெற்றது வண்ணத் தமிழ் மட்டுமே!” என்னுடைய வாழ்த்து நகல்படுத்த முடியாத நல்ல வாழ்த்தாக இருக்க வேண்டும். எனவே, நமது நம்பிக்கை மாத இதழ் வயது போல் வளரட்டும் என்று வாழ்த்துகிறேன். கண்ணதாசன் அவர்களால் நடத்தப்பட்ட “கடிதம்” சிற்றிதழில் நரைகள் என்கின்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது. அதில் பங்கு பெற்று முதல் பரிசு பெற்றேன். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பொறுப்பாசிரியராக இருந்தார். நரைகள் இல்லாத 22 வயதில் நரைகள் இல்லாத காரணத்தால் பரிசு பெற்றேன். முகம் தேவையில்லை. அறிமுகமும் தேவையில்லை. உள்ளடக்கம் சிறப்பாக இருந்தால் போதும் என்பதே என்னுடைய கருத்து. தேனி எனது சொந்த ஊராக இருந்தாலும் வாணியம்பாடியில் தமிழாசிரியராக வேலை கிடைத்தது. போனேன்.

இயங்குவதுதான் இயக்கம். செத்துப் போன மீன் நீரின் ஓட்டத்துடன் ஓடும். ஆனால் உயிருள்ள மீன்தான் எதிரோட்டம் கொண்டு நீச்சலடிக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். உயிரோட்டமானதாக இருக்க வேண்டும்.

மிகப்பெரிய கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். இராம இலட்சுமணர்கள் முனிவர்களின் வேள்வியை கண்ணின் இமைபோல் காத்தார் என்று மிகச் சாதாரண எடுத்துக்காட்டு சொல்லியிருக்கிறாரே ஏன்? என்று பேராசிரியர் இராதா கிருஷ்ணனிடம் கேட்டேன். அதற்கு அவர் நாளை காலையில் அதற்கான பதிலை நீயே சொல் என்றார். அடுத்த நாள் சொன்னேன், கண் இமைகளில் கீழ் இமை அசையாமல் இருக்கும் அப்படி அசையாமல் இருந்து வேள்வியைக் காத்தவன் இலட்சுமணன். மேல் இமை அசைந்து கொண்டிருக்கும். அப்படி வேள்வியைச் சுற்றி வந்து வேள்வியைக் காத்தான் இராமன். அசையும் தன்மை, அசையாத் தன்மையாகவும் இராம லட்சுமணர்கள் வேள்வியைக் காத்தனர் என்று சொன்னேன். அப்படி இந்த இயக்கமும் உழைப்புக் கருவிகளைக் கொண்டு வளர வேண்டும். ஏ.சி. தான் வெப்பத்தில் இருந்து கொண்டு அறையைக் குளிர்வு செய்கிறது. விமானமும், ஏவுகணைகளும் எரிந்து கொண்டுதான் உயரத்தில் பறக்கிறது. வெற்றி என்பது உச்சம்.

வீண் சந்தேகங்கள் நமது எதிரி எனலாம். அப்பன் கறுப்பு அம்மா கறுப்பு. பிள்ளை வெளுப்பு. இதற்கு யார் பொறுப்பு? என அபத்த கவிதைகள் வருகின்றன, பரம்பரை ஜீன்தான் அதற்கு காரணம் எனத் தெரியாமல். சிந்தனைகள் சரியானதாக இருந்தால் கேள்விகள் சரியாக இருக்கும். பாப்லோ நெருடா சொல்வார், “Question is valuable when only it is followed by right thoughts”.

சமீபத்தில் அணிவகுப்பு என்கின்ற இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படத்திற்கு தங்கத் தாமரை விருது கிடைத்தது. குடியரசு தின அணிவகுப்பை படம் பிடித்துக் கொண்டிருந்தார் அந்த நிருபர். பதிவு செய்த அந்த காட்சிகளை பார்த்தபோது ஓர் இடத்தில் வியந்தார். வியந்த காட்சியை அப்படியே பதிவு செய்து குறும்பட விருதுக்கான போட்டிக்கு அனுப்பி வைத்தார். பதிவுக்காட்சி இதுதான். தைமாத கடுங்குளிரில் காற்றின் அசைவுத் தன்மை குறைவாகத்தான் இருக்கும்.

அணிவகுப்பின்போது முன்வரிசை வீரர் பிடித்திருந்த தேசியக் கொடி அசையாமல் கீழ்நோக்கி சாய்ந்து இருந்தது. ஆனால் அணிவகுப்பு நடந்து கொண்டுதான் இருந்தது. காந்தியடிகளின் சிலை அருகே வந்தபோது தேசியக் கொடி நிமிர்ந்து அசைந்தது. தேசத் தந்தைக்கு தேசியக் கொடி வணக்கம் செய்தது போன்றிருந்தது அந்த நிகழ்வு.

எதேச்சையாக பதிவான நிகழ்வை தன்னுடைய சமயோசிதத்தால் விருதுத் தேர்வுக்கு அனுப்ப தங்கத் தாமரை விருது கிடைத்தது. சமயோசிதத் திறன் வேண்டும்.

வயது முதிர்ச்சி தேவையில்லை. அறிவு முதிர்ச்சி இருந்தால் நாம் பாராட்டப்படுவோம். காஞ்சி பெரியவரை பார்ப்பதற்காக அப்போதைய துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் வந்திருந்தார்கள். உடன் நானும் சென்றிருந்தேன். அது சமயம் பெரியவர் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். சங்கர் தயாள் சர்மா வந்திருந்ததை அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. 80 வயதான பெரியவர் பலவீனமான குரலில், அவர் தொடர்ந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டே இருந்தார். இடையே இருமல் வர, சற்றே நிறுத்த, நிறுத்திய இடத்தில் இருந்து சர்மா – தொடங்க ஆரம்பித்துவிட்டார். வியந்து போன பெரியவர் சங்கர்தயாள் சர்மாவை மனம் திறந்து வாழ்த்தினார்.

திறன், சிந்தனை செயல் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம். கொட்டிக் கிடக்கிறது வெற்றி, அள்ளிக் கொள்ள வேண்டும் நம் அட்சய பாத்திரத்தை வைத்து.

ஒரு சிலர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில் சாமர்த்தியசாலிகள். பாரதிதாசன் மேல் பற்றுகொண்ட கவிஞர் சுரதா பேசும்பொழுது கவிதையால் புகழ்ந்து பாடினார். ஒவ்வொருவரின் வெற்றியும் பற்றி புகழ்ந்து பாடினார். வரிசையாக வெற்றிகளைச் சொல்லி இறுதியில் சொன்ன வரிகளையும் பாருங்கள்:

நிருத்தத்தில் வெற்றி பெற்றான் ஆட்டனத்தி
நிதியளித்து வெற்றி பெற்றான் குமண வள்ளல்
திருத்தத்தில் வெற்றி பெற்றான் ஒட்டக்கூத்தன்
தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற்சோழன்
வருத்தத்தில் வெற்றி பெற்றார் வள்ளலார்
வாளேந்தி வெற்றி பெற்றான் சேரலாதன்
விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன்அந்த

வெற்றியினை இவர் பெற்றார் என்னைப் போலே! என்றார். கவிஞர் மட்டுமல்ல மனிதனும் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் சுய மரியாதையை இழந்து விடக்கூடாது.

கேரம் போர்டு விளையாட்டில் உலக சாம்பியன் பெற்றது ஒரு தமிழ்ப்பெண். பெயர் இளவரசி. அயோத்தி குப்பத்தில் வசிக்கிறார். பேட்டிக்காக நான் சென்றிருந்தேன். அந்தப் பெண் சொன்ன செய்தி எனக்கு மகிழ்வையும் வியப்பையும் தந்தது.

கேரம் போர்டு வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த விளையாட்டு. அதில் ஆடப்படும் காய்களுக்கு கறுப்பு காய்களுக்கு ஒரு மதிப்பெண். ஆனால் வெள்ளைக் காய்களுக்கு 2 மதிப்பெண். விளையாட்டுக்கூட வெள்ளைக்காரன் தன் இனத்தை குறைத்து மதிப்பிடுவதில்லை.

சென்னையில் ஒரு காலத்தில் கூவம் நதியாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நதியின் நிலை எப்படி உள்ளது? அன்று பச்சையப்ப முதலியார் கூவம் நதியில் தினமும் குளித்துவிட்டு திருநீறு பூசுவாராம். நம்ப முடியவில்லையே! ஜீவ நதிகளை இறைவன் படைத்தான். சாக்கடைகளை மனிதன் படைத்தான்.

ரஷ்ய அதிபர் குருசேவ் இந்தியாவிற்கு வந்தபோது, கங்கையை பார்வையிட்டார். என்ன நதி என்று கேட்க அருகிலிருந்தவர் சொன்னார் இது புண்ணிய நதி (ஹோலி ரிவர்), இதில் மூழ்கி எழுந்தால் பாவம் மறைந்துவிடும். சாக்கடை கலந்து சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிற கங்கையைப் பார்த்துச் சொன்னார், இந்த சாக்கடையில் எந்த மானமுள்ள கிருமியும் உயிர்வாழாது என்று.

இறைவனிடம் அவன் கொடுத்ததற்கே நம்மால் நன்றி சொல்ல முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். இறைவா உனக்கு என் அறியாமையையே ஆராதனையாக வைக்கிறேன் என்றார் ஓர் ஆழ்வார். இறைவனிடம் கையேந்தினால் அவன் இல்லை என்று சொல்வதில்லை.

வேர்வை சிந்தி உழைத்தால் வெற்றி நிச்சயம். வளர்ச்சி என்பது மேக மழை பொழிவதால் அல்ல. தேக மழை பொழிவால்தான். வருத்தப்பட்டவர்கள்தான் வளமைப் பட்டவர்களாக மாறமுடியும்! சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்களைக் கூறி விடைபெறுகிறேன். வணக்கம்!”

சிகரம் உங்கள் உயரம் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. கிரிபாபு நன்றி நவில விழா இனிது முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *