கவிப்பேரரசு வைரமுத்து பேருரை
முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை. ரயில் ஒரு குகைக்குள்ளே செல்கிறது. அப்போது அது இருளில் இருக்கிறது. நிச்சயமாக அது இருளை விட்டுவரும். ரயிலில் வெளிச்சம் படும் என்று சோம. வள்ளியப்பன் சொன்னார்.
குகைக்குள் போன ரயில் நிச்சயமாக வெளிச்சத்திற்கு வர வேண்டுமென்றால் ஒரே வழிதான் இருக்கிறது. வேறு வழியில்லை. அந்த ரயில் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். குகைக்குள் சென்று ப்ரேக்-டவுன் ஆகிவிட்டால் அது இருட்டில்தான் இருக்கும். இதுதான் வாழ்க்கை.
உங்கள் பிறந்த தேதியை வைத்துத்தான் உங்கள் வயது சொல்லப்படுகிறது. உங்களைவிட ஏழு மாதங்கள் மூத்தது உங்கள் இதயம். உங்கள் தாயின் கர்ப்பத்தில் மூன்றாவது மாதத்தில் துடிக்கத் தொடங்குகிறது. அது இயங்கிக் கொண்டேயிருந்ததால்தான் பிறப்பே நிகழ்ந்தது.
எதிர்கால இந்தியாவை தாங்குகிற தூண்களாக உங்களைப் பார்க்கிறேன். உங்களில் சிலர் பொருளாதார மேதைகளாகலாம். விஞ்ஞானிகளாகலாம்.
வெற்றி பெறுவதைத் தவிர மனிதனுக்கு வேறு வேலையில்லை. தோல்விக்கு இது வாழ்க்கையில்லை. வெற்றிபெற மட்டுமே பிறந்தவன் என்று கருதிக்கொண்டிருக்கிறேன். தோல்வியடைந்தால் வெற்றிக்கான பயிற்சி என்று கருதுகிறேன். தள்ளிப் போகிற வெற்றி என்று கருதுகிறேன்.
சிகரத்தை அடைவது வெற்றியல்ல. சிகரத்தைப்பற்றி சிந்திப்பதே வெற்றிதான். உங்கள் பார்வையே மேல் நோக்கி இருக்கிறதே அதுவே வெற்றியல்லவா!
இந்த குளிர்பதனமூட்டப்பட்ட அறையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதே வெற்றிதான். உங்கள் மூச்சை நீங்கள் வெளியில் விடுகிறீர்கள். மூச்சை உள்ளிழுத்து கொள்கிறீர்கள். உங்கள் மூச்சும் என்னுடைய மூச்சும் இந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல லட்சக்கணக்கான கிருமிகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அந்த கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு உங்களுடைய நுரையீரலில், ரத்தத்தில் போர்வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் நீங்களும் நானும் உயிரோடிருக்கிறோம். என்றைக்கு வெளியே இருக்கிற கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளிருக்கிற போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கிறதோ அப்போது மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இருக்கிற போர்வீரர்களின் வல்லமையை உடல் பெற்றிருக்கிற வரைக்கும், உயிர் இருக்கிறது. எனவே, உயிர் இருப்பதே உலகை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
1953ல் டென்சிங்கும், ஹிலாரியும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச தூரம்தான் சிகரத்தின் எல்லை. அப்போது ஹிலாரி சொல்கிறார் ‘இந்த விபரீத விளையாட்டு வேண்டாம். நிறுத்தி விடுவோம். திரும்பிவிடுவோம்’ என்கிறார். டென்சிங் ஏனென்று கேட்கிறார். ஹிலாரி சொல்கிறார் “ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது”. மலையில் செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறையும்.
மலையில் இருதயக் கோளாறு உள்ளவர்கள் ஜாகிங், வாக்கிங் செல்லாதீர்கள். நீங்கள் மூச்சு வாங்குகிறபோது தேவையான பிராண வாயு கிடைக்கவில்லையென்றால் இதயம் நின்றே போய்விடும்.
நடிகர் முத்துராமன் அப்படித்தான் இறந்தார். ஊட்டியில் அவர் காலையில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் நிற்கிறார். அந்த இடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது. நிறைய காற்று தேவைப்படுகிறது. கிடைக்கவில்லை. இறந்து போய்விட்டார்.
டென்சிங் சொன்னார், “ஒரு வேளை சிகரத்தின் உச்சியைத் தொடுகிறவரைக்கும் ஆக்சிஜன் இருந்தால் எவரெஸ்ட்டை வென்றவன் என்ற பெருமை எனக்குச் சேரும். ஒரு வேளை எவரெஸ்ட்டை தொட்டுவிட்டு ஆக்சிஜன் தீர்ந்து போய் அங்கேயே இறந்துவிட்டால் எவரெஸ்ட்டின் உச்சியில் இறந்த முதல் மனிதன் என்ற பெயர் கிடைக்கும்” என்று.
எப்படியாவது முதலில் இரு. இளைஞர்கள் அறிவாளிகளாக இருப்பதைப் பார்க்கிறேன். நம்மைவிட அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இளைஞர்களே! நீங்கள் ஆசிரியர்களுக்கே வழிகாட்டியாக விளங்குகிற அளவுக்கு இருக்கிறீர்கள். ஆனால், உங்களிடம் இரண்டு குணங்கள் குறைவாக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. ஒன்று சகிப்புத் தன்மை. ‘நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்’. இதை ஐஸ்வர்யா ராய் சொல்லலாம்.
எப்படிப் பூக்கும்? மெய்வருத்தமில்லாத எதற்குமே மரியாதை இல்லை. மெய்வருத்தம் வேண்டும்.
இரண்டாவது, அவமானத்தை தாங்குகிற உள்ளமே உங்களுக்கு இல்லை. அவமானம் தாங்காத எவனும் சிகரம் தொட முடியாது. இந்த உலகம் உங்களை அவமானப்படுத்தவே பிறந்திருக்கிறது.
தன்னுடைய துறையை தேர்ந்தெடுக்கவில்லையென்றால் முதலில் அவமானப்படுத்துபவர் உங்கள் தந்தைதான். முதல் அவமானம் உங்கள் அப்பா. அவருக்கு உங்களை அவமானப்படுத்துவதற்கு உரிமையிருக்கிறது.
இரண்டாவது அவமானம் தாய். மூன்றாவது அவமானம் ஆணாக இருந்தால் உங்கள் காதலி. பெண்ணாக இருந்தால் காதலன். அடுத்து உங்கள் உறவினர்கள். நண்பர்கள்.
இந்த அவமானங்களையெல்லாம் உள்ளே செரிமானம் செய்கிறவன்தான் வெற்றி பெறுகிறான். அவமானத்தில் சூம்பிப் போகிறவன் உயரம் குறைந்து போகிறான்.
வாழ்வின் உயரம், உங்கள் உயரம் என்ன தெரியுமா? உங்கள் மனசுக்கு என்ன உயரமோ அதுதான் உங்கள் உயரம். உங்கள் மனது வானத்தில் இருந்தால் விஸ்வரூபம். மனது தரையில் கிடந்தால் நீங்கள் வாமனன். எனவே இந்த வாழ்க்கையின் அளவேகூட உங்கள் மனதின் அளவுதான்.
தமிழகத்தின் மிக உச்ச நடிகர். விண்ணும் மண்ணும் வியந்து பார்த்த நடிகர். அவர் தன்னுடைய முதல் படத்தின் டைரக்டரிடம் போய் கையைக் கட்டி நிற்கிறார். ‘சார் எப்படியாவது’ என்ன…. அதுதான் சான்ஸ் கொடுத்துவிட்டேனே! ‘இந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரே ஒரு க்ளோசப்’ என்று கெஞ்சுகிறார். கோபமடைந்த அந்த இங்கிலீஷ் இயக்குநர், ‘உன்னுடைய முகத்தை நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா மேன்? பல்லு வேற எத்திக்கிட்டிருக்கு. நாடியில் பள்ளம் விழுந்திருக்கு. எப்படி க்ளோசப் போடமுடியும் போ! போ! ” என்று விரட்டினார்.
அந்த முகத்துக்காக தமிழகம் இருபது ஆண்டுகளில் ஏங்க ஆரம்பித்தது. தீப்பெட்டியில், சுவரொட்டியில் அந்த முகத்தைப் பார்க்க முடியாதா? எங்காவது அந்த முகம் தெரிந்து விடாதா என்று முப்பது நாற்பது ஆண்டுகளாக ஏங்கியது. அந்த முகத்திற்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் கேட்ட டைரக்டர் எல்லீஸ்.ஆர். டங்கன். அந்தப் படத்தின் பெயர் சதிலீலாவதி.
திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் சென்றால் ஹிந்தித் திரையுலகின் பிரபலங்கள் எல்லாம் வந்து வரவேற்பார்கள். தங்களுடன் தங்கச் சொல்வார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்காக கதாநாயகி தேர்வு நடத்தினார் ஸ்ரீதர். ஒரு பெண் வந்தார். புகைப்படத்தை வாங்கி வைத்துவிட்டு ‘போ, நான் சொல்கிறேன்’ என்றார். ஒரு வாரம் கழித்து வந்த போது, ‘நீ தலைகீழா நின்னாலும் நடிக்க முடியாதும்மா. வேண்டாம் நீ’. என்று திருப்பி அனுப்பி விட்டார். அந்தப் பெண் கடைசிவரைக்கும் தமிழ்ப்படத்தில் நடிக்கவே இல்லை. வட இந்தியாவில் கொடிகட்டிப் பறந்து விட்டு, தெற்கே திரும்பிக்கூட பார்க்கவில்லை. அந்த நடிகை ஹேமாமலினி. இந்தப் பெரிய இயக்குநர் என்னை நிராகரித்துவிட்டார் என்று கருதிக்கொண்டு தன்னை ஒதுக்கிக் கொண்டிருந்தால் என்னவாயிருக்கும்?
ஓர் உண்மை தெரியுமா உங்களுக்கு! மனிதன் தன்னுடைய மூளையில் ஐந்து சத வீதத்தைத்தான் மனிதன் பயன்படுத்துகிறான். இந்த ஐந்து சதவீதத்திலேயே பிரபஞ்சத்தின் பல பூட்டுகளைத் திறந்துவிட்டான். 95 சதவீதமும் பயன்படுத்தினால் பூமிக்கு இரண்டு நிலா கொண்டு வரமுடியுமா, முடியாதா. பார்த்தவுடன் கடல் நீர் குடிநீராகுமா ஆகாதா.
மனிதன் விவசாயம் கண்டறிந்து வெறும் ஏழாயிரம் வருடங்கள்தான் ஆகியிருக்கிறது. முப்பத்தைந்து ஆயிரம் வருடமாயிற்று குரங்கிலிருந்து மனிதன் குதித்து. நீருக்காக குளத்தை, ஆற்றை நாடிப்போன மனிதன், தன்காலுக்குக் கீழேயே தண்ணீர் இருப்பதைக் கண்டு கொண்டதே ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான். இந்தப் பூமி என்பது நீரைச் சேமித்து வைத்திருக்கிற வங்கி என்று அவனுக்குத் தெரியாது. காட்டில் வேட்டையாடிய அம்பைக் கொண்டுதான் மீனையும் வேட்டையாடி வந்திருக்கிறான். வலை என்பது புதிய தொழில் நுட்பம். பின்னால் வந்தது.
ஐம்பது ஆண்டுகளில் உலகம் இவ்வளவு வளர்ந்திருக்கிறது. இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நீங்கள் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் இந்த வாழ்வை நன்கு வாழ்ந்திருக்கிறோம் என்பீர்கள்.
ராஜ ராஜ சோழன் காலத்தில் செல்போன் கிடையாது. அக்பர் காலத்தில் இணைய தளமில்லை. இப்போது சொல்லுங்கள் இவர்களைவிட நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் இல்லையா? தாமதமாகப் பிறந்ததாலேயே இவ்வளவு வசதி என்றால் உங்களுடைய பேரன் பேத்திகளுக்கு எவ்வளவு வசதியிருக்கும்?
நேரத்தை சரியாகக் கட்டிக்காத்தால் உங்கள் மேலதிகாரிகளே உங்களுக்கு அஞ்சுவார்கள். நேரம்தான் வாழ்க்கை. நேரம்தான் பணம். அதனால் நேரத்தை கடைப்பிடியுங்கள்.
வாய்ப்பு கிடைத்தால் உங்களை நிரூபிக்கத் தயங்கிவிடாதீர்கள். சபைக்கூச்சம்., நாகரீகம். உறவுகளின் பார்வை இவைகளால் அச்சப்பட்டு,வெட்கப்பட்டு விலகிவிடாதீர்கள். வாய்ப்பு கிடைத்தால் நிரூபியுங்கள்.
‘இதுவரை நான்’ புத்தகத்தில் எழுதியிருந்தேன். “என் தலைக்கு மேலே கழுகுகள் எப்போதும் பறந்து கொண்டிருந்ததால் நான் செத்துவிடவில்லை என்று நித்தம் நித்தம் நிரூபிக்க வேண்டியதாயிற்று” என்று.
1980 மார்ச் 10ந் தேதி திரையுலகில் நுழைகிறேன். 1981ல் கவியரசர் கண்ணதாசன் காலமாகிறார். நான் உள்ளே நுழைந்த இரண்டு மாதத்தில் கவியரசருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் தங்கியிருக்கிறார். பாலச்சந்தர் அப்போது ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்கு இரண்டு பாடல்கள் கவியரசர் எழுதி ஒலிப்பதிவாகிவிட்டது. மிச்சம் இரண்டு பாடல்கள் கவியரசருடைய வருகைக்காக ஆர்மோனியத்தோடு காத்திருக்கிறது. ஆனால் படப்பிடிப்புத்தளம் காத்திருக்கவில்லை. நடிகர், நடிகைகள் தளத்திற்கு போய்விட்டார்கள். இந்த ஷெட்யூலை விட்டால் படம் நஷ்டமாகிவிடும். ஏற்கனவே கம்பெனி சரியில்லாமல் ரிஸ்க்கில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் நின்றுவிடும் என்ற பயமிருக்கிறது. பாட்டு வேண்டும்.
கவியரசர் பாடல் எழுதக்கூடிய சூழலில் இல்லை. அதற்கு அவர் உடல்நிலை இடம் தரவில்லை. பாலசந்தர் என்னைக் கூப்பிட்டார்.
கவியரசருக்கும் எம்.எஸ்.விக்கும் இருக்கும் நெருக்கம் அற்புதமானது. இரண்டு ஆண்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள். அவ்வளவு நேசம். பாசம். அந்த நட்பு வட்டத்தை விட்டு வெளியே வர இயலாமல் என்னை ஒரு மாதிரியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கவியரசர் வருகைக்காக அவர் காத்திருக்கிறார். அது தவறில்லை. டியூன் வரவில்லை என்று சொல்கிறார். என்னை நிராகரிப்பதில் நான் ஆனந்தமடைந்தது அன்றைக்குத்தான். தள்ளிப்போடப் பார்க்கிறார்கள். நான் நிராகரிக்கப்படுகிறேன் என்று தெரிகிறது.
பாடலுக்கான சூழ்நிலையை பாலசந்தர் சொல்கிறார். ஊருக்கு வெளியே மலையிலிருந்து தண்ணீர் வெட்டி கொண்டு வருகிறார்கள். அரசாங்கம் தண்ணீர் தரவில்லை. ஆனால் புறம்போக்கு நிலத்தின் வழியாக வாய்க்கால் வெட்டி மலைத்தண்ணீரை ஊருக்குள் கொண்டு வருகிறார்கள் உள்ளூர் இளைஞர்கள். அப்போது அசரீரிப் பாட்டு. மூன்று நிமிடப் பாட்டில் வாய்க்கால் வெட்டி முடிக்கப்பட வேண்டும். அந்த வேகம், உணர்ச்சி, காட்சிப்படிமம் எல்லாம் இந்தப் பாட்டிற்குள் வரவேண்டும். பாட்டைக் கேட்டால் கால்வாய் வெட்டி தண்ணீர் ஊருக்குள் வந்துவிட்டது போன்று இருக்க வேண்டும். உணர்ச்சிகரமான உத்வேகமான பாட்டு.
வேண்டா வெறுப்பாய் எம்.எஸ்.வி. ஒரு மெட்டு கொடுப்போம். எழுதுவாரா என்று பார்ப்போம் என்கிறார். மெட்டுச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கிறார். இருக்கிறேனா போய்விட்டேனா என்று. வியந்து ரசித்துக் கொண்டே இன்னுமொரு முறை வாசியுங்கள் என்றேன். முப்பது நிமிடம் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார். பிறகு பாலாஜிக்கு ‘சவால்’ என்றொரு படம் செய்கிறேன். அங்கு போகிறேன் என்று கிளம்ப எத்தனிக்கிறார் எம்.எஸ்.வி.
‘ஒரு வாரம் கழித்து பார்க்கலாம்’ என்கிறார். உடனே பாலச்சந்தர் பாட்டு வேணுமே ஷுட்டிங் போகணுமே என்கிறார். எம்.எஸ்.வி., கவிஞர் வந்து எழுதணுமே என்றபடி ஆர்மோனியத்தை மூடப் போகிறார். நான் பல்லவி சொல்லட்டுமா. உங்களை மாதிரி பாடமுடியாது. நான் பாடிக்காட்டட்டுமா என்றேன். எங்கே என்றார்.
ஒன்றுபட்ட மக்களுண்டு – இன்று
என்ன சிக்கலுண்டு
வானம் இங்கு வந்தபோதும்
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு
இந்த மண்ணில் என்ன உண்டு
கண்ணில் மட்டும் தண்ணி உண்டு
வீறு கொண்ட பாறை இங்கு
வெடித்தவுடன் கிடைத்துவிடும்
தண்ணீர்- கண்ட பின்பு
மாறும் எங்கள் கண்ணீர்”
அடுத்த நாள் காலை ஒலிப்பதிவு. அந்த இடத்தில் என்னை நிரூபிக்கவில்லையென்றால் நான் நிராகரிக்கப்பட்டிருப்பேன். இது என் பெருமைக்குச் சொல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கிறபோது நிரூபிக்கத் தவறிவிடாதீர்கள் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.
உங்களுக்கென்று அசல் முகம் தயாரிக்க முடியுமா என்று பாருங்கள். எல்லோருமே யாரையோ பார்த்து எடுத்த நகல்களாகவே இந்தியாவில் இளைஞர்கள் இருக்கிறார்கள். அப்பனின் நகல், தலைவரின் நகல், குறைந்த பட்சம் சினிமா நடிகரின் நகல்.
நகலை விட்டு வெளியேறி அசலைத் தயாரியுங்கள். உங்களுக்கென்று அசல் முகம். அசல் கையெழுத்து. அசல் லட்சியம், அசல் வாழ்க்கை. அசல் நடை, பயணம் இவைகளை உண்டாக்கினால் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் கிடைக்கும். அந்தத் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாதென்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களில் சிலர் வாழ்வில் கஷ்டப்பட்டிருக்கலாம். வறுமையுற்று இருக்கலாம். எனக்குத் தெரிந்து நான் மிகமிக பெரிய செல்வமாக நினைப்பது, இளமையில் நான் உற்ற வறுமையை. என்னால் இன்று கார் வாங்க முடியும், தோட்டம், வீடு வாங்க முடியும். என்னால் மறுபடி வறுமையை வாங்கமுடியுமா? அது சாதாரணமான விஷயமா?
வறுமை என்பது வாழ்வின் இயல்பு. வறுமை எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்கள், பணத்தைப்பற்றி, மனிதர்களைப் பற்றி, உலகத்தைப் பற்றி எனக்குச் சொல்லிக் கொடுத்த மதிப்பீடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆகவே, யாருக்கேனும் இன்று வறுமை இருந்தால் நேற்று வறுமை இருந்திருந்தால் அதைக் கொண்டாடுங்கள். வாழ்க்கை கொடுத்த மிகப்பெரிய அனுபவம். பள்ளிக்கூடம் என்று கருதுங்கள். திறவுகோல் என்று கருதுங்கள். வறுமையிடம் கற்றுக் கொள்வது மாதிரி வேறு எதனிடமும் உலகில் கற்றுக் கொள்ள முடியாது. வறுமைதான் மிகப்பெரிய ஆசான்.
அந்த வறுமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில்தான் நீங்கள் வளர்வீர்கள். வளர்ந்து கொண்டேயிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கிறதா என்று பார்த்தேன். எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான மருந்து இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு. எனவே, யாருக்கோ ஏற்பட்ட தீர்வைக் கொண்டு உங்கள் பிரச்சனையை அணுகாதீர்கள். உங்களுடைய பிரச்சனைக்கு வேறு சாவி, வேறு தீர்வு. அது உங்களால்தான் தீர்மானிக்க முடியும்.
அறிவாளர்களாகிய நாம் வன்முறைக்குப் போகக்கூடாது. வன்முறை என்பது தற்காலிகத் தீர்வு. அன்புதான் நிரந்தரமான தீர்வு.
உங்கள் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை என்பதில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? இந்தக் கல்லை எறிந்துவிட்டுப் போகிறேன். அது அலைகளைக் கிளப்பிக் கொண்டே இருக்கட்டும்.
நேற்று வரை உங்கள் வாழ்வின் முன்னுரிமை எது? சென்றஆண்டு எது? இன்று எது? அந்த முன்னுரிமைதான் உங்களை வழிநடத்திச் செல்கிறது.
முன்னுரிமைக்கு முன்னுரிமை கொடுங்கள். அதை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் யாரையும் நீங்கள் மேம்படுத்த முடியாது. உங்கள் உடல், பதவி,பொருள், உள்ளம், சுற்றம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளா விட்டால் பொதுத் தொண்டு செய்யவே முடியாது. ஆகவே உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளுங்கள். வழிகிற விஷயத்தை சமூகத்திற்கு கொடுங்கள்.
பத்து ஆண்டுகள் கழித்து உங்களைச் சந்தித்தால் அன்று சிகரத்தில் நீங்கள் பேசினீர்கள். அன்று விதைத்த விதையில் முளைத்த விருட்சம் நான் என்று நீங்கள் சொன்னால் அதுதான் எனக்கு வெற்றி.
தொகுப்பு : சீனிவாசன்
Leave a Reply