1. அன்பின் தன்மை விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிப் போதல். அன்புமயமானவன் வாழ்வை உணர்கிறான். அன்பில்லாதவன் வாழும்போதே சாகிறான். வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அன்பு அவ்வளவு முக்கியம்.
2. உங்கள் அணுகுமுறை எப்படியோ, உங்கள் உலகமும் அப்படி. உலகை அழகானதாய் ஆக்குவதும் ஆபாசமாய்க் காட்டுவதும் உங்கள் அணுகுமுறைகள்தான்! அணுகுமுறையை மாற்றுங்கள். அனைத்தும் மாறும்.
3. வாழ்க்கை அழகானதென்று நம்புங்கள். உங்களைச் சுற்றியுள்ள எல்லாமே அதனதன் வகையில் அழகானது. புனிதமானது. எல்லாவற்றையும் நேர்மறையான எண்ணங்களால் புரிந்துகொள்ள முயலுங்கள்.
4. உங்கள் உணர்வுகளை நுட்பமாகவும் துல்லியமாகவும் உருவாக்கிக் கொள்ளுங்கள். உணர்வுகளே வாழ்வின் சக்தியும் ஆதாரமும். உணர்வு சாராத அறிவு உங்களுக்கு எந்தப் பயனையும் என்றும் தராது.
5. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுட்தன்மை இருப்பதை உணர்ந்த நொடியிலிருந்தே என் பார்வையில் படும் ஒவ்வொரு மனிதனுக்கும் என் மரியாதையைச் செலுத்துகிறேன். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்கையில் என் எல்லைகள் உடைகின்றன.
6. அடுத்தவர்கள் மீது பழி சொல்லாதீர்கள். சம்பவங்கள் அனைத்திற்கும் பொறுப்பெடுக்கத் தொடங்குங்கள். உங்கள் கைகள் அரவணைக்கவும் ஆசி சொல்லவும் மட்டுமே அடுத்தவர்களை நோக்கி நீளட்டும்.
7. யாருக்காவது எந்த வகையிலாவது உதவியாய் இருந்தால் மட்டுமே உங்கள் பணத்திற்கு மதிப்புண்டு. பிறருக்குப் பயன்தராத பணம் பாவங்களின் குவியலாகவே பார்க்கப்படும்.
8. வாழ்க்கையில் போராடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும், வெற்றிக்கான உத்வேகத்தைத் தருவதும், அந்த வெற்றி சத்தியத்தின் பாற்பட்டதாக இருக்கச் செய்வதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உடனடிக் கடமை.
9. உங்கள் இயல்பான தன்மைக்கு உண்மையாய் இருப்பதே உயர்ந்த ஆன்மீகம். உங்களையே நீங்கள் நம்புவதே உண்மையான மதம்.
10. உங்கள் ஆன்மாவைப் பொறுத்தவரை அதனால் இயலாதது என்று எதுவுமில்லை. மிகப் பெரிய பாவம் எது தெரியுமா? நீங்கள் உங்களையோ மற்றவர்களையோ பலவீனமானவர்கள் என்று எடைபோடுவதுதான்.
11. இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை சக்தியும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. கண்களைக் கட்டிக்கொண்டு, எல்லாமே இருள் என்று எண்ணுவது போல உங்களை நீங்கள் சாதாரணமாக எடைபோடுகிறீர்கள்.
12. மனிதகுலத்தின் மகத்தான இலட்சியமே அறிவு பெறுவதுதான். வெளியில் இருந்து பெறுகிற அறிவைவிட, தனக்குள் இருக்கும் பேரறிவைக் கண்டறிய வேண்டிய கடமை எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது.
13. உண்மைக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யுங்கள். உண்மையை எதற்காகவும் தியாகம் செய்யாதீர்கள்.
14. வித்தியாசமான மனிதர்களிடமும் விதம் விதமான சிந்தனைப் போக்குகளிலும் ஒருமையை உணரப்பழகுங்கள். ஒருமையே பிரபஞ்ச ரகசியம்.
15. ஆன்மாவின் குரலைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஆசான்.
Leave a Reply