அட்டைப்படக் கட்டுரை

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ அது சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!!

“குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கும் வரை சிறிது காலம் மட்டும் சிரமப்பட்டேன். பிறகு அந்தத் தொகையை சாமர்த்தியமாக முதலீடு செய்தேன். முதலீடு வளர்ந்தபோது என் நிலையும் பல மடங்கு உயர்ந்தது” என்கிறார்கள்.

இதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறிவிட்டும் போகலாம். சாமர்த்தியம் என்று அடையாளம் கண்டு பின்பற்றியும் பார்க்கலாம்.

சரியாக முதலீடு செய்வதென்பது, ஒரு வலைதளம் தொடங்குவதற்குச் சமம். உங்கள் நிறுவனத்திற்கென்று ஒரு வலை தளத்தை நீங்கள் தொடங்கிவிட்டால் அதனை அவ்வப்போது பராமரித்தால் போதும். உங்களுக்காக உங்கள் வலை தளம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.

சாமர்த்தியமான முதலீடும் அப்படித்தான். உலக அளவிலான மாற்றங்களுக்கேற்ப பல சமயம் நீங்கள் எதிர்பாராத வேகத்தில் விசுவரூபமெடுத்து வளர்ந்து கொண்டிருக்கும்.

ஒரு முதலீடு வளர்வதென்பது ஆரோக்கியமானவர்களின் அங்க அவயங்கள் போன்றது. உங்கள் உடலின் அடிப்படை ஆரோக்கியத்தை மட்டும் உறுதிசெய்து கொண்டால் இருதயம், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம் என்று உள்ளே உள்ள அவயங்களும்  முறையாக இயங்குவதும் இரத்த ஓட்டம் சரியாக நிகழுவதும் எப்படி இயல்பாக நிகழ்கிறதோ அதே போல முதலீட்டின் மதிப்பும் வளர்ந்து கொண்டேவரும்.

பதினாறாவது வயதிலேயே சிறிய தொகை ஒன்றை சாமர்த்தியமாக முதலீடு செய்ய முற்பட்டு, அதன் வழியே அபார வளர்ச்சி கண்ட ஒரு சாதனையாளர், தன் முதலீட்டு அனுபவங்களை – அதில் முக்கியப்பங்கு வகித்த சமயோசிதத்தை – சாமர்த்தியத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளும்விதமாய் அருமையான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “Invest the Happionaire way” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யோகேஷ் சாப்ரியா, சாமர்த்தியமான முதலீடு பற்றிய புத்தம்புதிய பார்வைகளைப் பக்கங்கள் தோறும் பதிவு செய்கிறார்.

“தினம் உங்கள் பணம் வேலைக்குப் போகிறதா?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் யோகேஷ். “பல நிறுவனங்களின் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அந்த நிறுவனம் வேலை பார்க்கிறபோது தன்னுடைய பணமும் வேலை பார்க்கிறது” என்பது இவருடைய சித்தாந்தம்.

“பணத்துக்காக நீங்கள் வேலை பார்ப்பது போலவே பணம் உங்களுக்காக வேலை பார்க்கட்டும்” என்கிற யோகேஷ், தான் பங்கு வாங்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதன்மூலம், தன்னுடைய செலவுகளின் வழியாகக்கூட தன் முதலீடு வளர்வதற்கு வழி செய்வதாய்ச் சொல்கிறார்.

உதாரணமாக, பற்பசை தயாரிக்கும் கோல்கேட் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியிருந்தால் இவர் பயன்படுத்துவதும் அதே பற்பசைதான்.

பதினாறு வயதில் முதலீடு செய்த யோகேஷ், பன்னிரண்டு வயதில் தொழில் தொடங்கிய அனுபவம் சுவாரசியமானது. அயல்நாட்டுப் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பள்ளியில் கண்காட்சி ஒன்று நடந்தது. மாணவர்கள் விற்பனை அரங்குகள் எடுத்து தயாரிப்புகளை விற்கலாம் என்றபோது, இந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் பரபரப்படைந்தான்.

என்ன செய்யலாம் என்று எண்ண ஓட்டங்களில் இருந்தபோது இவரின் தங்கை தந்த எலுமிச்சைச்சாறு தொழில் தொடங்கும் தாகத்தைத் தணித்தது. “இந்தியன் லெமனேட் கம்பெனி” என்ற நிறுவனம் தொடங்க முடிவு செய்தான் சிறுவன். லெமனேட் தயாரிக்க, தன் சின்னத் தங்கையை சம்பளத்திற்கு நியமித்தான். அரங்க வாடகை, மூலப்பொருள் எல்லாம் சேர்த்து ரூ. 1000/- ஆனது. தன் திட்டத்தை நண்பர்களிடம் சொல்லி, பங்குகள் பெற்றான்  சிறுவன். முதலீடு ஆயிரம் ரூபாய் – ஒரு கோப்பை எலுமிச்சைச்சாறு தயாரிக்கும்  செலவு – ஒரு ரூபாய் – தயாரிப்பு அளவு – 1000 கோப்பைகள் – ஆதாயம் (முதலீடு போக) 4000/- ரூபாய்!

100 ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 500 ரூபாய் லாபம் தந்தபோது யோகேஷின் அசாத்திய ஆற்றல் அரும்புப் பருவத்திலேயே அடையாளம் காணப்பட்டது.

தன் சொந்த அனுபவத்திலிருந்தும் விரிவான தொழில் அனுபவங்களில் இருந்தும் ஏராளமான வழிகாட்டுதல்களை இந்த நூலில் யோகேஷ் வழங்குகிறார்.

ஒரு மனிதர் சாமர்த்தியமாய் முதலீடுகளைச் செய்ய பத்து முத்திரை வழிகாட்டுதல்களைப் பட்டியலிடுகிறார் யோகேஷ்.

1.  நீங்கள் புரிந்துகொண்டு – பயன்படுத்தும் சேவைகளும் வணிகங்களும் உங்களுக்குப் புரியாதவற்றை விட பலமடங்கு மேலானவை.

2.  தொழில் ஒன்று செய்தால் அதில் ஆதாயம் அவசியம்.

3.  தொழில் ஒன்று செய்தால் அதில் வளர்ச்சி அவசியம்.

4.  தொழிலை நடத்துபவர்கள் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படவேண்டும்.

5. தனித்தன்மை வாய்ந்த தொழில் நிச்சயமாய் ஆதாயம் தரும். .

6.  குறுகிய கால பரபரப்பைவிட நீண்டகாலம் நிலைக்கும் தொழிலை நிதானமாய்ச் செய்வதே நல்லது.

7.  தொழில் பற்றியும் அதன் தயாரிப்பு பற்றியும் நீங்கள் ஏற்படுத்தும் நல்லெண்ணம் மிக மிக முக்கியம்.

8.  உங்கள் தொழில் எப்படி ஆதாயம் பெற்றுத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். கடினமான நடைமுறைகளை தவிர்ப்பது முக்கியம்.

9. செய்யும் தொழில் சந்தோஷமாகவும் ரசித்துச் செய்யும் விதமாகவும் இருக்க வேண்டும்.

10. குறுகிய சிந்தனைகளை விட்டுவிட்டு எல்லாத்திட்டங்களும் நீண்ட காலத்திற்கு உரியனவாய் அமையவேண்டும்.

முதலீடு செய்யும்போது திசை திருப்புபவர்களைப் பற்றி முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும்படி குரங்குக்கதை ஒன்றைச் சொல்கிறார் யோகேஷ். ஒரு கிராமத்தில் பெரிய கார் வந்து நின்றது. குரங்கு பிடித்துக் கொடுத்தால் ஒவ்வொரு குரங்குக்கும் பத்து ரூபாய் தருவதாய் அறிவித்தார் அதில் வந்த செல்வந்தர். கிராமவாசிகள் உற்சாகமாய் பிடித்தார்கள். ஆயிரம் குரங்குகளைப் பத்தாயிரம் ரூபாய்களுக்கு வாங்கினார் செல்வந்தர்.

அடுத்த முறையும் வந்தார். குரங்குத் தட்டுப் பாடு ஏற்பட்டது. உடனே ஒரு குரங்குக்கு 20 ரூபாய் என்று அறிவித்தார். அலைந்து திரிந்தனர். சில குரங்குகள் மட்டுமே அகப்பட்டன. அதன் பின் செல்வந்தர் வந்து பலமுறை கேட்டார். குரங்குகளை கிராமவாசிகள் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அதிரடியாய் ஒரு குரங்குக்கு 50 ரூபாய் என்று அறிவித்தார் அவர்.

குரங்குகள் கிடைக்கும் வரை பொறுக்க முடியாததால், தன் உதவியாளரை விட்டுப் போனார். அந்த உதவியாளர் ஓர் ஊழல் பேர்வழி. செல்வந்தர் போனதும்., கிராமவாசிகளை அணுகி, “இதுவரை அவர் வாங்கிய குரங்குகளின் கிடங்குச் சாவி என்னிடம் உள்ளது. என்னிடம் ஒரு குரங்கு 35 ரூபாய் என்று வாங்கி அவரிடம் 50 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள். வெளியே தெரியாது” என்றார்.

கிராமவாசிகளும் வாங்கினார்கள். “குரங்குகள் தயார்” என்று சொல்லி அவரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி உதவியாளர் புறப்பட்டுப் போனார். அதன்பிறகு செல்வந்தரோ உதவியாளரோ ஊருக்குள் வரவேயில்லை.

கிராமத்தில் குரங்குகளை 20 ரூபாய்க்கு வாங்கி, அங்கேயே 35 ரூபாய்க்கு விற்றுவிட்டுப் போய்விட்டார்கள். இப்படி தவறான வழிகாட்டுதலில் விலை போகாத பங்குகளை வாங்கி வைப்பவர்களையும் எச்சரிக்கிறார்.

தன் பணத்தை சாமர்த்தியமாக முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் விதமாக வந்துள்ள இந்த நூல், முழுக்க முழுக்க இந்திய நாட்டின் நிதிச்சூழலை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டிருப்பது இதன் முக்கியமான சிறப்பம்சம்.

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *